Published:Updated:

ரெனோ ட்விஸி - ஈஸியான கார்..

ரெனோ ட்விஸி - ஈஸியான கார்..

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

கார்களின் பரிணாம வளர்ச்சியில், அடுத்தது என்ன என ஆராய்ந்து கொண்டே இருக்கிறது ஆட்டோமொபைல் உலகம். இதில் லேட்டஸ்ட்டாக, தனி நபர் பயன்பாட்டுக்கான காராக ரெனோ நிறுவனம் தயாரித்திருப்பதுதான் ட்விஸி. 

2009-ம் ஆண்டு கான்செப்ட் காராக ஃப்ராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ரெனோ ட்விஸி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஃபிரான்ஸில் விற்பனைக்கு வந்திருக்கிறது. பொதுவாக, ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் காண்பிக்கப்படும் இதுபோன்ற கார்கள், வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே நிறுத்தப்படும். பெரும்பாலும் விற்பனைக்கு வராது. ஆனால், அதைத் தகர்த்து மூன்றே ஆண்டுகளில் ட்விஸியை பிரான்ஸ் நாட்டில் விற்பனைக்குக் கொண்டுவந்து இருக்கிறது ரெனோ.

'டூ ப்ளஸ் ஈஸி’ என்பதைச் சேர்த்துத் தான் 'ட்விஸி’ என அழைக்கிறது ரெனோ. இரண்டு பேர் நெருக்கடி மிகுந்த நகரச் சாலையில் இதில் ஏறி ஜாலியாகப் பறக்கலாம் என்கிறார்கள்.

ரெனோ ட்விஸி  -  ஈஸியான கார்..

2 சீட்டர் காரான இதில், ஒன்றன் பின் ஒன்றாக இருவர் உட்காரலாம். 2.3 மீட்டர் நீளமும், 1.2 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்ட காம்பேக்ட் கார் இது. முழுமையான காரைப் போலவே ட்விஸியில் மேற்கூரை உண்டு. ஆனால், பக்கவாட்டில் திறந்தவெளிதான். ஆப்ஷனலாக, இரு பக்கமும் கதவுக்குக் கீழே கண்ணாடிகள் இணைக்கும் வசதி உண்டு. ஆனால், மேலே இல்லை. அதேபோல், கதவுகளுக்குக் கைப் பிடிகளும் இல்லை. உள்ளே ஏறிக் கொண்டு, வீட்டுக் கதவுக்குத் தாழ்ப்பாள் போடுவது போல ட்விஸியின் கதவுகளை மூட வேண்டும். ஆட்டோ ரிக்ஷாவை நினைவுபடுத்தும் வடிவில் இருக்கும் இந்த காரில், குட்டி ஸ்டீயரிங் வீல் துவங்கி ஏபிஎஸ், காற்றுப் பைகள் என பெரிய கார்களில் இருக்கும் வசதிகளும் உண்டு. ஆனால், ஏ.சி வசதியை மட்டும் இதில் செய்ய முடியாது.

ரெனோ ட்விஸி  -  ஈஸியான கார்..

காருக்குள் உட்கார்ந்து பட்டனைத் தட்டினால், கார் ஸ்டார்ட் ஆகி விட்டது என்பதை உணர்த்த 'பீப்’ எனச் சத்தம் எழுகிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என்பதால், 'டி’ மோடில் பட்டனைத் தட்டிவிட்டு ஓட்டத்தை ஆரம்பிக்கலாம். 'ஆர்’ பட்டனைத் தட்டினால் ரிவர்ஸ். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் பட்டன்தான் நியூட்ரல்.

ரெனோ ட்விஸி  -  ஈஸியான கார்..

எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட இந்த காரின் சக்தி 17 bhp. அதாவது 200 சிசி மோட்டார் சைக்கிளின் சக்திதான். ஆனால், பவர் குறைவில்லாமல் இருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செல்வது போல 60-70 கி.மீ வேகத்தில் டிராஃபிக் நெருக்கடியில் வளைத்து நெளித்து ஓட்டலாம். ஒரே விஷயம்... ஸ்பீடு பிரேக்கரைப் பார்த்த உடனேயே வேகத்தைக் குறைத்துவிட வேண்டும். இல்லை என்றால், ஆட்டோ ரிக்ஷா மாதிரி குலுங்கும். ட்விஸி 0-45 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் கடந்துவிடும் என்கிறது ரெனோ.  

ட்விஸியில் பவர்ஃபுல் லித்தியம் ஐயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருப்பதால், ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும். மூன்றரை மணி நேரத்தில் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ட்விஸியில் இன்னொரு புதுமையையும் செய்து இருக்கிறார்கள். 4.80 லட்ச ரூபாய் கொடுத்து நீங்கள் இந்த காரை வாங்கினாலும், காரில் உள்ள லித்தியம் ஐயான் பேட்டரிக்கு நீங்கள் சொந்தக்காரர் இல்லை. ரெனோதான் ஓனர். மாதத்துக்கு பேட்டரிக்கு எனத் தனியாக 3,500 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும்.

காரின் மொத்த எடை 475 கிலோ. சாதாரண கார்களின் எடையில் பாதி அளவுதான் ட்விஸி என்பதால் பவர் ஸ்டீயரிங், பவர்ஃபுல் பிரேக்ஸ் தேவை இயில்லை.

மொத்தத்தில், ட்விஸி உண்மையிலேயே அடுத்த தலைமுறைக்கான நகரத்து கார். டிராஃபிக் நெருக்கடியில் நொந்து நூடுல்ஸ் ஆகும் நகரப் பயணிகளுக்கு இது சிறந்த காராக இருக்கும். ஆனால், ஏ.சி இல்லை, திறந்தவெளிக் கதவுகள், எலெக்ட்ரிக் மோட்டார் என எதுவுமே இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் செட் ஆகாது!

- சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு