Published:Updated:

பஜாஜை நெறுக்கும் ஹோண்டா!

பஜாஜை நெறுக்கும் ஹோண்டா!

 ##~##

பிரீமியம் பைக் தயாரிப்பாளர் என்ற இமேஜை மறந்து, கீழே இறங்கி அடிக்கிறது ஹோண்டா. ஹீரோ நிறுவனத்துடன் இருந்த கூட்டணியை முற்றிலும் முறித்துவிட்ட ஹோண்டா, இந்தியாவின் இரண்டாவது பெரிய பைக் தயாரிப்பாளர் என்ற பெருமையை எட்டிவிட்டது. 'இல்லை... இல்லை... நாங்கள்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஹோண்டா, ஸ்கூட்டர்களின் விற்பனையையும் சேர்த்து பெருமை அடித்துக்கொள்கிறது’ என்று பஜாஜ் சமாளித்தாலும், ஹோண்டா மிக மிகத் தெளிவாக இருக்கிறது. 

கார்கள் இருக்கும் வீட்டிலும்கூட மார்க்கெட் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல... என கார்களைப் பயன்படுத்துவதைவிட மோட்டார் சைக்கிள்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். மோட்டார் சைக்கிள்களில் குறிப்பாக, கியர் இல்லாத ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள்தான் பெரும்பாலானவர்களின் சாய்ஸ். இதில், பொருட்களை வைக்க நிறைய இடம் இருக்கிறது; டிராஃபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டு சென்றுவிட முடியும்;  கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை... என்று ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் தேவைக்குக் காரணங்கள் அதிகம். மேலும், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் தேவை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. அதாவது, 7 சதவிகிதமாக இருந்த ஸ்கூட்டர்களின் விற்பனை, 14 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பஜாஜை நெறுக்கும் ஹோண்டா!
பஜாஜை நெறுக்கும் ஹோண்டா!

ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஹோண்டாதான் கில்லி. ஆக்டிவா, டியோ, ஏவியேட்டர் என மூன்று ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது அது. மூன்றுக்குமே மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகம். ஆனால், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பஜாஜின் பங்கு பூஜ்ஜியம். 'நாங்கள் ஸ்கூட்டர் தயாரிப்பாளர் என்ற இமேஜில் இருந்து வெளியே வருகிறோம். இனிமேல் பஜாஜ் ஸ்கூட்டர்களைத் தயாரிக்காது’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார் ராஜீவ் பஜாஜ். ஆனால், அவர் போட்ட கணக்கு தவறு என்பதை, ஒவ்வொரு மாதமும் ஸ்கூட்டர்களின் விற்பனை அவருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

பஜாஜை நெறுக்கும் ஹோண்டா!

இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனையான மொத்த மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 1,17,90,306. இதில், 76 சதவிகிதம் மோட்டார் சைக்கிள்கள் (இந்த மோட்டார் சைக்கிள்களில் 100 - 125 சிசி மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 71.7 சதவிகிதம்). ஸ்கூட்டர்களின் விற்பனை 17.6 சதவிகிதம். அதாவது, கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் ஸ்கூட்டர்கள் இந்தியா முழுக்க விற்பனையாகி இருக்கின்றன. இந்த மார்க்கெட்டைத்தான், 'வேண்டவே வேண்டாம்’ எனச் சொல்கிறது பஜாஜ்.

2012, மார்ச் மாத விற்பனையில், பஜாஜைவிட ஹோண்டா மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 2,000 அதிகம். ஏப்ரல் மாத விற்பனையில் ஹோண்டாவைவிட பஜாஜின் விற்பனை 7,000 அதிகம். ஏப்ரல் மாதத்தில் ஹோண்டாவைவிட பஜாஜின் விற்பனை அதிகம் என்றாலும், பஜாஜ் அதிக அளவில் மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்துக்கொண்டே இருக்கிறது. கேடிஎம், கவாஸாகி பைக்குகளைத் தவிர, பஜாஜின் எந்த மோட்டார் சைக்கிளுக்கும் வெயிட்டிங் பீரியட் இல்லை. ஆனால், ஹோண்டா போதுமான மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க முடியாமல் திணறுகிறது. ஆக்டிவா, டியோ, ஷைன், யூனிகார்ன் என ஹோண்டாவின் எந்த வாகனத்தை வாங்க வேண்டும் என்றாலும், குறைந்தது ஓரிரு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

முதன்முறையாக இப்போது 'ட்ரீம் யுகா’ எனும் அன்றாடப் பயன்பாட்டுக்கான 110 சிசி இன்ஜின் கொண்ட பைக்கை, விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா. இதன் மூலம், தன்னுடைய மார்க்கெட் வியூகத்தைத் தெளிவுபடுத்திவிட்டது ஹோண்டா. அதாவது, ஒவ்வொரு செக்மென்ட்டிலும் இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் பைக், அதேபோல் 30 வயதைக் கடந்தவர்களுக்கு இன்னொரு பைக் எனத் தனது வாகனங்களைப் பிரித்திருக்கிறது. 100 சிசி மார்க்கெட்டில் ட்ரீம் யுகா, சிபி ட்விஸ்ட்டர், 125 சிசி-யில் ஷைன், சிபிஎஃப் ஸ்டன்னர், 150 சிசி-யில் யூனிகார்ன், சிபிஆர்-150 ஆர் என பக்கா மாஸ்டர் பிளான்.

பஜாஜைப் பொறுத்த வரை, பிளாட்டினா 100, டிஸ்கவர் 100, 125, 150, பல்ஸர் 135, 150, 180, 220 என ஒரே மாதிரியான மோட்டார் சைக்கிள்களையே விற்பனை செய்கிறது. எந்த பைக்குக்கும் தனித்துவமான அடையாளம் இல்லை.

ஹோண்டா மட்டும் அல்ல, சுஸ¨கி, யமாஹா நிறுவனங்களும் புதிய பலத்துடன் இந்தியாவில் போட்டி போட இருக்கின்றன. யமஹா 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 4 லட்சம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க, சென்னையில் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது. இது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். 2018-ம் ஆண்டின் முடிவில், ஆண்டுக்கு 18 லட்சம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறது யமஹா. நடிகர் சல்மான்கானை பிராண்ட் அம்பாசிடராக அறிவித்திருக்கும் சுஸ¨கி, ஹரியானாவில் 5.5 லட்சம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க புதிய தொழிற்சாலையை அமைத்துவருகிறது.

ஹோண்டா, யமஹா, சுஸ¨கி ஆகிய ஜப்பான் நிறுவனங்களின் மிரட்டலைச் சமாளிக்க, 'யார் நம்பர் 2’ என்ற போட்டியை விட்டுவிட்டு, மக்களுக்குத் தேவையான சரியான மோட்டார் சைக்கிள்களை பஜாஜ் விற்பனைக்குக் கொண்டுவந்தால், வெற்றி நிச்சயம்! 

சார்லஸ்