Published:Updated:

ஸ்டார் டிரைவ் - Mercedes - Benz

ஸ்டார் டிரைவ் - Mercedes - Benz

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

சொகுசு கார் சந்தையில் பிஎம்டபிள்யூ முதல் இடத்திலும், பென்ஸ் இரண்டாம் இடத்திலும் இருந்து வந்தன. இத்தனைக்கும் இந்தியாவைப் பொறுத்தவரை பென்ஸ்தான் 10 ஆண்டுகள் சீனியர். இப்போது, இரண்டாவது இடத்தில் இருந்த பென்ஸை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைப் பிடித்துவிட்டது ஆடி. இந்த நிலையில், தான் உற்பத்தி செய்யும் கார்களின் பாதுகாப்பு வசதிகள், சிறப்பம்சங்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு நேரடி விளக்கம் கொடுக்க, 'ஸ்டார் டிரைவ்’ எனும் நிகழ்ச்சியை சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில் பென்ஸ் நடத்தியது. செம த்ரில் அனுபவம் அது. 

சாகச நிகழ்ச்சியை செய்துகாட்ட இ கிளாஸ், சி கிளாஸ், ஜிஎல் கிளாஸ், எம் கிளாஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன. வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பென்ஸ் கார்களின் தொழில்நுட்பங்களை டிஜிட்டல் முறையில் விளக்கினர். பின்பு, என்னை சி கிளாஸ் காரில் ஏறி அமரவைத்து சீட் பெல்ட்டை மாட்டி அனுப்பிவைத்தனர். டிரைவர் சீட்டில் இருந்த பயிற்சியாளர், 80 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்று சட்டென்று பிரேக்கை அழுத்த... ஏபிஎஸ் உயிர்பெற்று காரை அலுங்காமல் குலுங்காமல், ரேஸ் டிராக்கின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கோன்களுக்கு முன்னதாக நிறுத்தியது.  

ஸ்டார் டிரைவ் - Mercedes - Benz

பின்பு, காரைத் திருப்பி எதிர் திசையில் ஓட்ட ஆரம்பித்த டெஸ்ட் ட்ரைவர், இஎஸ்பி (எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம்) பற்றி விளக்க ஆரம்பித்தார். ''வேகமாகச் செல்லும்போது பிரேக்கும் அடிக்க வேண்டும்; அதே சமயம், எதிரே இருக்கும் எதன் மீதும் மோதி விடாதவாறு காரையும் திருப்ப வேண்டும். இதைச் சாதாரண கார்களில் செய்தால், கார் கவிழ்ந்துவிடும். பென்ஸில் இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்'' என்று முன்கூட்டியே சொல்லிவிட்டு, பவர் விண்டோஸ் மற்றும் சன் ரூஃப் ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.

ஸ்டார் டிரைவ் - Mercedes - Benz

டிராக்கின் வலது புறத்தின் ஒரு பகுதியில், வரிசையாக கோன்கள் இருந்தன. சற்று இடைவெளிவிட்டு அதேபோல இடது பக்கமும் கோன்கள் இருந்தன. படு வேகமாக காரை ஓட்டியவர் வலதுபுறம் இருந்த கோன்களின் அருகே வந்ததும் பிரேக்கை அழுத்தி, இடதுபுறமாக ஸ்டீயரிங்கைத் திருப்ப... க்ரீச் சத்தத்துடன் பக்கவாட்டில் ஸ்பின் ஆனது கார். மீண்டும் வலதுபுறம் ஸ்டீயரிங்கைத் திருப்ப... அங்கிருந்த கோன்களைத் தட்டாமல் மீண்டும் க்ரீச் சப்தம். ஆனால், கார் அலைபாய்ந்தது போல உணர்வே வரவில்லை. சீட்டில் கச்சிதமாக அமர்ந்திருந்தேன்.

ஆனால், திறந்துவிடப்பட்ட பவர் விண்டோஸ் கண்ணாடிகளும் சன் ரூஃப்பும் 90 சதவிகிதம் வரை மூடிக்கொண்டன. ''திடீரென விபத்து ஏற்படும் சமயத்தில், காரின் கண்ணாடிகள் திறந்து இருந்தாலும் ஆபத்து; முழுக்க மூடி இருந்தாலும் ஆபத்து. திறந்திருக்கும் ஜன்னலின் வழியே ஏதாவது பொருள் பயணிகளைக் காயப்படுத்திவிடலாம். அதனால்தான் ஆபத்து சமயத்தில் கண்ணாடிகள், சன் ரூஃப் தானாவே மூடிக்கொள்கின்றன'' என்று டெஸ்ட் டிரைவர் விளக்கமும் கொடுத்துவிட்டு, ஆஃப் ரோடிங் சாகசங்களை ஆரம்பித்தார் அவர்.

எம் கிளாஸ் காருக்கு அழைத்துச் சென்றார். பக்கவாட்டில் மேடு போல 45 டிகிரி வரை சாய்வாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில், சாதாரணமாக முழுமையாக ஏறி இறங்கியது கார். அதேபோல், உயரமாக அமைக்கப்பட்ட மேட்டில் ஏறும்போது, சரியாக உச்சி மேட்டின் சற்று முன்பாக காரை நிறுத்திவிட்டு, பிரேக்கில் இருந்து காலை எடுத்துவிட... கார் அப்படியே நகராமல் நின்று ஆச்சரியப்படுத்தியது. மீண்டும் ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்து அழுத்தியதும், கொஞ்சம் கொஞ்சமாக பிரேக் ரிலீஸ் ஆகி கார் முன்னோக்கி நகர்ந்தது. உச்சிமேட்டில் இருந்து தலைகீழாக கார் இறங்கும்போதும், இதேபோல் பிரேக்கை அழுத்தி காரை நிறுத்திக் காட்டினார். டிஎஸ்ஆர் (டவுன் ஹில் ஸ்பீடு ரெகுலேஷன்) எனும் தொழில்நுட்பம், இறங்கும்போது ஆக்ஸிலரேட்டரை அதிகமாக அழுத்தினாலும், வேகமாக இறங்காமல் 6 கி.மீ வேகத்தில் மட்டுமே காரைச் செலுத்தியது. இதுபோன்ற சிறப்பம்சங்கள் எல்லாமே டேஷ்போர்டில் இருக்கின்ற பட்டன்களைத் தொடுவதன் மூலமே நிகழ்த்த முடியும் என்பதுதான் ஹைலைட்!

பென்ஸின் எல்லா சாகசங்களையும் அனுபவித்த வாடிக்கையாளர்கள் நிறைவாகப் புறப்பட்டபோது, அவர்களின் கையில் டிவிடி ஒன்றைக் கொடுத்தனர் பென்ஸ் நிறுவனத்தினர். என்ன என்று கேட்டபோது, ''காரில் நீங்கள் அமர்ந்து பயணம் செய்ததை வீடியோ எடுத்திருக்கிறோம். காரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நீங்கள் என்னென்ன ரியாக்ஷன் கொடுத்தீர்கள் என்பதை நீங்களே பார்த்தால், சுவாரஸ்யமாக இருக்கும்'' என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்! 

கா.பாலமுருகன்  கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு