Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 200

வாசகர் டேட்டா

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

டிஎம் டியூக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது தெரிந்ததுமே, டெஸ்ட் டிரைவ்கூட செய்யாமல் பைக் வாங்க அட்வான்ஸ் புக்கிங் செய்தேன். அந்த அளவுக்கு வசீகரமாய் இருக்கிறது கேடிஎம் டியூக் 200. 'அப்ஸைட் டவுன்’ முன் பக்க சஸ்பென்ஷன், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், ரேடியல் டிஸ்க் பிரேக், அகலமான ரேடியல் டயர்கள், அலுமினியம் ஸ்விங் ஆர்ம் என ஐரோப்பிய சூப்பர் பைக்குகளில் மட்டுமே இருக்கும் தொழில்நுட்பங்களை, முதன்முறையாக மலிவான விலையில் இந்தியாவில் அறிமுகமாகிறது. வெளிநாடுகளில் மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் இந்த டியூக், இந்தியாவில் 1.3 லட்சம் ரூபாய் மட்டுமே. 

ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு இருக்கும் சந்தோஷம், வாங்கிய பிறகு நெடுநாட்கள் நீடிக்குமா என்பது பல நேரங்களில் சந்தேகம்தான். ஆனால், என்னுடைய டியூக்கை இதுவரை 2,862 கி.மீ தூரம் ஓட்டிவிட்டேன். என்னுடைய சந்தோஷம் கொஞ்சம்கூடக் குறையவில்லை.

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 200

இன்ஜின்

இன்ஜின்தான் கேடிஎம் 200 பைக்கின் முக்கிய சிறப்பு அம்சம். லிக்விட் கூல்டு, 4-வால்வு, டியூயல் ஓவர் ஹெட் கேம் ஷாஃப்ட் (DOHC),ஃப்யூல் இன்ஜெக்ஷன் என ஹை-டெக் டெக்னாலஜியால் நிறைந்திருக்கிறது கேடிஎம் 200. 25 bhp சக்தி என்பதால், பெர்ஃபாமென்ஸ் தூள் கிளப்புகிறது. திராட்டிலைக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து முறுக்கினாலே... 100 கி.மீ தாண்டிப் பறக்கிறது. அதே சமயம், ஆறாவது கியரில் குறைந்தபட்ச வேகமான 40 கி.மீ வேகத்தில் ஓட்டினால்கூட இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸில் எந்த அதிர்வுகளும் இல்லை. ஆனால், இந்த ஹை-டெக் இன்ஜினிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன. சிக்னல்களில் நிற்கும்போதும், டிராஃபிக் அதிகமான இடங்களில் குறைந்த வேகத்தில் செல்லும்போதும் இதன் ரேடியேட்டரில் இருந்து வரும் வெப்பம், கால்களைச் சுட்டெரிக்கிறது. குறைந்த வேகங்களில் மிக விரைவாக இன்ஜின் சூடாகிவிடுவதே இதற்குக் காரணம். நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் எவ்வளவு தூரம் சென்றாலும் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் சென்னை கே.கே.நகரில் இருந்து தினமும் 60 கி.மீ தொலைவில் உள்ள மஹிந்திரா சிட்டிக்குச் சென்று வருகிறேன். தாம்பரம் தாண்டி விட்டால், இன்ஜின் ஹீட் தொல்லை இல்லை. அதனால், கூடுமான வரை டிராஃபிக் நெருக்கடியில் சிக்காமல் இருப்பதே நல்லது. அதேபோல், 3000 ஆர்பிஎம்-க்குக் கீழ் ஓட்டும்போது, சில நேரங்களில் இன்ஜின் ஆஃப் ஆகிவிடுகிறது. சில நேரங்களில் விட்டு விட்டு ஜெர்க் ஆகி, பிக்-அப் எடுக்கிறது.

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 200

1,000 கி.மீ ஓடி முடிந்து முதல் சர்வீஸ் செய்யும்போது, இதைப் பற்றி புகார் செய்தேன். ஆனாலும், பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. கேடிஎம் டியூக் பைக்கை வாங்கியிருக்கும் என் நண்பர்களும் இதே பிரச்னையைச் சந்தித்து வருகிறார்கள்.

ஓட்டுதல் தரம்

டியூக் ஓட்டுவதற்கு படு ஸ்போர்ட்டி. இதன் ஹேண்ட்லிங் திறன், அதாவது கையாள்வது சூப்பராக இருக்கிறது. டிராஃபிக்கில் புகுந்து செல்வதற்கு எளிதாகவும், திருப்பங்களில் வேகமாக வளைந்து செல்லவும் சரியான சாய்ஸ். ஆனால், சஸ்பென்ஷன்கள் இரண்டுமே கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதனால் கரடுமுரடான, குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும்போது, கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக்கொள்வது முதுகுக்கு நல்லது. ஹேண்டில் பார் கொஞ்சம் உயரமாக இருப்பதால், கைகள் பிடிக்க வசதியாக இருக்கிறது. அதேபோல், ஃபுட்ரெஸ்ட் கொஞ்சம் பின்னால் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது ஸ்போர்ட்டியாகவும் வசதியாகவும் இருக்கிறது. ஆனால், பின் பக்க பிரேக் பெடல் மிகவும் சிறிதாக இருப்பதால், பிரேக் லீவரை அழுத்த கால் தேடுகிறது. இது ஆஃப் ரோடு பைக்குகளுக்கு சரியான டிசைன். மேடு பள்ளங்களில் குதித்துக் குதித்துச் செல்லும்போது, தவறிப்போய் பிரேக் லீவரை அழுத்திவிடக் கூடாது என்பதற்காக, சிறிதாக டிசைன் செய்திருப்பார்கள். ஆனால், கேடிஎம் டியூக் 200 பைக்கை முழுமையான ஆஃப் ரோடு பைக் என்று சொல்ல முடியாது என்பதால், பிரேக் லீவரைக் கொஞ்சம் பெரிதாக்கலாம்.

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 200

இருக்கைகள்

பைக்கை ஓட்டுபவருக்கு சொகுசாக இருந்தாலும், பின் சீட்டில் உட்காருபவருக்கு சோதனைதான். ஆம், பின் சீட் மிகவும் உயரமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கிறது. மேலும், கைப்பிடிகள் பிடித்துக்கொள்ள வசதியாக இல்லை.

பிரேக்ஸ்

பைக்கில் எனக்குப் பிடித்த முக்கியமான அம்சம், ரேடியல் 4 பிஸ்டன் கேலிப்பர் கொண்ட முன் பக்க பிரேக்ஸ். இந்தியாவில் முதன்முறையாக டியூக்கில்தான் இது பொருத்தப்பட்டு உள்ளது. அதனால், பிரேக்ஸ் செம ஷார்ப். பிரேக் லீவரில் விரல் லேசாகப் பட்டாலே வேகம் அதிரடியாகக் குறைந்துவிடுகிறது. கொஞ்சம் அழுத்தம் கொடுத்துப் பிடித்தால், நீங்கள் பைக் ஸ்டன்ட்டர் ஆகிவிடுவீர்கள். பின் பக்க வீல் மட்டும் தனியாகத் திரும்பும். பின் பக்க பிரேக்குகளும் செம ஷார்ப். அதனால், திடீரென பிரேக் அடிக்கும்போது பின் பக்க வீல் லாக் ஆகிவிடுகிறது. அதனால், பிரேக் அடிக்கும்போது கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும். இந்த பைக்கில் டிரைவ் செயின் மற்ற பைக்குகளைவிட விரைவாகத் தளர்ந்துவிடுகிறது. இதனால், சத்தம் அதிகரிக்கிறது. செயினை அடிக்கடி டைட் செய்வது நல்லது.

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 200

ஹை-வே ரைடிங்

நெடுஞ்சாலையில் கேடிஎம் டியூக் பட்டையைக் கிளப்புகிறது. 100 மற்றும் 120 கி.மீ வேகங்களில் அசால்ட்டாக க்ரூஸ் செய்யலாம். இன்ஜினில் எந்த அடைப்பும் இல்லை; அதிர்வுகளும் இல்லை. ஆனால், அதிக வேகத்தில் செல்லும்போது காற்றின் அழுத்தம் ஓட்டுனரின் உடல் மீது அதிகமாக மோதுகிறது. இதைக் குறைக்க முன் பக்கம் ஃபேரிங் அல்லது வைஸர்களைப் பொருத்தி இருக்கலாம். சின்ன பைக்குகளே 12 லிட்டர், 15 லிட்டர் எனப் பெரிய பெட்ரோல் டேங்குகளைக்கொண்டு இருக்கும்போது, கேடிஎம் 200 டியூக்கில் இருப்பது வெறும் 10.5 லிட்டர் பெட்ரோல் டேங்க். அதனால், ஒவ்வொரு 300 கி.மீ பயணத்துக்கும் ஒருமுறை பெட்ரோல் பங்க்கைத் தேட வேண்டும். ரியர் வியூ மிரர்களும் சிறிதாக இருப்பதால், பின்னால் வரும் ஏன், பக்கத்து லேனில் வரும் வாகனங்கள்கூட சமயங்களில் தெரியாது. ஹெட்லைட் பவர்ஃபுல்லாக இருப்பதால், இரவுகளிலும் பயம் இல்லாமல் பயணம் செய்யலாம். பின் பக்கம் பொருத்தப்பட்டுள்ள எல்இடி விளக்குகளும் பிரகாசமானவை.

டயல்ஸ்

டியூக்கில் எனக்குப் பிடித்த அம்சம், இதன் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே. பைக்கை ஓட்டும் விதத்தை வைத்து, தற்போதைய மைலேஜ் என்ன என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டுகிறது இது. மேலும் சராசரி வேகம், பெட்ரோல் டேங்க்கில் மீதம் இருக்கும் எரிபொருளில் அதிகபட்சம் எவ்வளவு தூரம் பயணம் செல்ல முடியும் போன்ற விவரங்கள், அடுத்த சர்வீஸுக்கு இன்னும் எவ்வளவு கி.மீ உள்ளது என்ற உஷார் தகவல்களும் இதில் பளிச்சிடுகின்றன. ஆனால், சில நேரங்களில் பெட்ரோல் டேங்க்கை நிரப்பியதும், சரியான எரிபொருள் அளவைக் காட்டுவதற்கு சற்று நேரம் எடுத்துக்கொள்கிறது.

டியூக்கின் சைலன்ஸர் பைப், இன்ஜினுக்கு இடது புறம் வளைந்தபடி பின்புறம் கீழே உள்ள சைலன்ஸருக்குச் செல்கிறது. க்ரோம் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ள இது, சில மாதங்களிலேயே துருப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். 5,000 கி.மீ இரண்டாம் சர்வீஸின்போது சர்வீஸ் ஸ்டேஷனில் இதைக் காட்ட வேண்டும்.

ஹீரோ ஸ்டேட்டஸ்

இதுவரை காணாத தோற்றம், பொதுமக்களின் கவனத்தைச் சட்டென்று இழுக்கிறது. டிராஃபிக் சிக்னலில் நின்றால் போதும், ''சார் இது இம்போர்ட்டட் பைக்கா? டாப் ஸ்பீட், மைலேஜ், விலை எவ்வளவு, சைலன்ஸர் எங்க சார் இருக்கு?' என ஏகப்பட்ட விசாரிப்புகள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் டியூக்கை ஆச்சரியத்துடன் பார்க்க, டியூக்கை ரோட்டில் ஓட்டிச் செல்லும்போது ஒரு ஹீரோ ஃபீலிங் வருகிறது. தோற்றத்துக்கு ஏற்றபடி இன்ஜின் சத்தமும் செம ஸ்போர்ட்டி.

மைலேஜ்

டியூக்கின் மைலேஜ் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முதல் 1,000 கி.மீ பொறுமையாக ஓட்டியபோது, லிட்டருக்கு 40 கி.மீ மைலேஜ் தந்தது. இப்போது வேகமாக ஓட்டத் துவங்கியதும், 32-35 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது. நெடுஞ்சாலையில் 80 - 90 கி.மீ வேகத்தில் செல்லும்போது, நிச்சயம் 42 கி.மீ-க்கு மேல் மைலேஜ் தரும். அதேசமயம், கியர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே விரட்டி விரட்டி ஓட்டினால், 25 கி.மீ-தான் மைலேஜ் தருகிறது.

ரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 200

 என் தீர்ப்பு!

 ஆஃப் ரோடு பைக்குகளின் தயாரிப்புக்குப் பெயர் பெற்ற நிறுவனம் கேடிஎம் என்பதால், என் டியூக்கை சில கரடுமுரடான சாலைகளிலும் ஓட்டிச் சென்று சோதனை செய்தேன். மோட்டோ கிராஸ் பைக்குகளைப் போல, ஃபுட்ரெஸ்ட்டின் மீது நின்றபடி ஓட்டியபோது... டியூக் பிரச்னையின்றி மேடு பள்ளங்களில் மிதந்தது. இதன் சேஸி அவ்வளவு ஸ்ட்ராங். ஆனால், மண் பாதைகளிலோ, சேற்றிலோ ஓட்டுவதற்கு இதன் ரேடியல் டயர்கள் பொருத்தமாக இல்லை.

என்னைப் பொறுத்தவரை டியூக் ஒரு நல்ல ஆல் ரவுண்டர். பைக்கை ஓட்டும்போது, நீங்கள் என்ஜாய் பண்ணி ஓட்ட வேண்டும். அந்த அனுபவத்தை தரும் விதத்தில் டியூக் 200 பைசா வசூல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு