Published:Updated:

ஏன் வந்தது தடை?

சன் கன்ட்ரோல் ஃபிலிம்!

 ##~##

'ஆள் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை இழைக்க, சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டப்பட்ட கார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், கார்களில் சன் ஃபிலிம் ஒட்டுவதைத் தடை செய்ய வேண்டும்’ என்று அவிஷேக் கோயங்கா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், உடனடியாக அனைத்து கார்களில் இருக்கும் சன் கன்ட்ரோல் ஃபிலிமை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை அடுத்து, போக்குவரத்துக் காவல் துறை மே 19-ம் தேதி முதல் இந்த உத்தரவை அமல்படுத்தி வருகிறது. 

''கொசுவை அழிக்க வீட்டைக் கொளுத்திய கதையா இருக்கு சார் இது. எங்கேயோ, யாரோ ஒரு தீவிரவாதி சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டிய காரைப் பயன்படுத்தினான் என்ற காரணத்துக்காக, ஊரில் இருக்கும் அத்தனை பேரும் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டக் கூடாது என்று போலீஸார் சொல்வது பொதுமக்களை நிச்சயம் பாதிக்கும்!'' என்று ஆதங்கத்தோடு பேசினார், சென்னை ஜி.பி சாலையில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் விற்பனையில் ஈடுபட்டுள்ள ரங்கா.

ஏன் வந்தது தடை?
ஏன் வந்தது தடை?

தன்னுடைய புதிய மஹிந்திரா ஸைலோ காருக்கு சன் ஃபிலிம் ஒட்ட வந்திருந்த சென்னையைச் சேர்ந்த வெங்கடேசனிடம் பேசியபோது, ''சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டவில்லை என்றால், ஒருவேளை விபத்தில் கார் சிக்கினால், கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து உடம்பைப் பதம் பார்த்துவிடும். அது மட்டுமல்ல, காரில் விலை உயர்ந்த பொருட்கள் எதை வைத்தாலும், வெளியில் இருந்து யார் பார்த்தாலும் தெளிவாகத் தெரியும். சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டவில்லை என்றால், அது திருடர்களுக்குத்தான் உதவியாக இருக்கும்!'' என்றார்.

மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன், ''நான் ஹோண்டா சிட்டி கார் வாங்கி நான்கு நாட்கள்தான் ஆகின்றன. கண்ணாடியில சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டக் கூடாது என்று போலீஸார் கெடுபிடி செய்வதால், ஏன் காரை வாங்கினோம் என்று இருக்கிறது. ஃபிலிம் ஒட்டாததால் வெளியே காய்கிற வெயில் காருக்குள்ளேதான் இருக்கிறது. இதனால், ஏ.சி-யின் வொர்க் லோடு அதிகரித்து, எரிபொருள் செலவு அதிகமாகிறது. மைலேஜ் குறைகிறது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இது ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வு. சொகுசாகப் பயணம் செய்வதற்குத்தான் கார் வாங்கினேன். ஆனால், இப்போது வெயிலில் வெந்துகொண்டுதான் காரில் பயணிக்க வேண்டியிருக்கிறது!'' என்று நொந்துகொண்டார்.

ஆனால், ஊட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா, மற்றொரு கோணத்தில் இருந்து பேசினார். ''சுப்ரீம் கோர்ட் உத்தரவை மனதார வரவேற்கிறேன். காரணம், இன்றைக்கு - பல பாதகச் செயல்களைச் செய்ய கார்களைப் பயன்படுத்துகிறார்கள். ஹைடெக் ஆக காருக்கு உள்ளேயே விபசாரம் நடக்கிறது என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. அதிலும் நீலகிரி போன்ற சுற்றுலாத் தலங்களில் இப்படிப்பட்ட கிரிமினல் நடவடிக்கைகள் அதிகமாக நடக்கின்றன. கோவையில் கொஞ்ச நாளுக்கு முன்பு, பள்ளிச் சிறுமியையும் அவளின் தம்பியையும் கடத்திக் கொண்டுபோய் கொலை செய்தார்களே... ஞாபகம் இருக்கிறதா? அந்த காரில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டப்பட்டு இருந்ததால்தான், குழந்தைகள் வாய் கட்டப்பட்டு துடித்தது வீதியில் இருந்தவர்களுக்குத் தெரியாமல் போனது. வெறும் கண்ணாடியாக இருந்திருந்தால், அந்த டிரைவர் அவ்வளவு தில்லாக அந்தக் குரூரத்தை நடத்தியிருக்க முடியாது. அதனால், காருக்கு சன் கன்ட்ரோல் ஃபிலிம் கூடாது!'' என்கிறார்.

ஃபிலிம் ஒட்டும் தொழிலில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

மதுரையில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டும் தொழிலில் இருக்கும் கணேசனிடம் பேசினோம். ''கார் என்பது தனியார் சொத்து. வீடும் தனியார் சொத்துதானே? அங்கு ஜன்னலை மூடிவைக்கக் கூடாது, கதவைப் பூட்டக் கூடாது என்று உத்தரவு போட முடியுமா? தப்பு செய்பவர்கள் எந்த வழிமுறையில் வேண்டுமானாலும் செய்வார்கள். கண்ணாடியே வைக்கக் கூடாது என்றால்கூட, தப்பு நடக்கத்தான் செய்யும். கார் வைத்திருப்பவர்கள் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என் தொழில் போயிடுச்சே என்ற கோபத்தில் இதைச் சொல்லவில்லை. உண்மையைச் சொல்கிறேன்'' என்கிறார்.

சென்னைப் போக்குவரத்து காவல்துறை, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி உள்ளது. 'காரில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியுள்ளவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். அகற்றாமல் இருக்கும் கார் உரிமையாளருக்கு முதல் முறை 100 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 300 ரூபாயும் அபராதம் விதிப்பதுடன், ஒட்டப்பட்டுள்ள ஃபிலிமும் அகற்றப்படும்’ என்று அறிவித்து, சொன்னதைப் போல சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டிய காரின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறது!

- எஸ்.ஷக்தி, கே.கே.மகேஷ், மோ.அருண்ரூப பிரசாந்த்

படங்கள்: வி.ராஜேஷ், பா.காளிமுத்து, ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு