Published:Updated:

டாக்ஸி

டாக்ஸி

 ##~##

சுற்றுலா வாகனங்களுக்கு, தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வரி விதிப்புமுறைக்கு, சாலையில் தொடங்கி சட்டசபை வரை எதிர்ப்பு! வாகன வரி விதிப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்த தமிழக அரசு, அதை உடனடியாக ஏப்ரல் முதல் தேதியில் அமல்படுத்திவிட்டது. புதிதாக அமலுக்கு வந்திருக்கும் இந்தச் சட்டத்தின்படி, தனி நபர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் வாகனங்களுக்கு ஆயுள் வரி விதிப்பதைப் போல, வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் டூரிஸ்ட் வாகனங்களுக்கும் ஆயுள் வரி கட்ட வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால், இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கத் தோன்றும். 

எந்த ஒரு தனி நபரும் தன்னுடையை காரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மாதத்தின் 30 நாட்களும் ஓட்டுவது இல்லை. அதனால், தனி நபர் வாகனத்தின் பயன்பாடு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரைகூட நீடிக்கும். ஆனால், வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் சுற்றுலா வாகனம், வாரத்துக்கு ஏழு நாட்களும் ஓடிக் கொண்டே இருப்பதால், அந்த வாகனம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே நல்ல

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டாக்ஸி

நிலையில் உழைக்கும். அதனால்தான், இதற்கு முன் இருந்த வாகன வரி விதிப்புச் சட்டத்தில், சுற்றுலா வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே சீலிங் முறையில் வரி விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது, 15 ஆண்டுகளுக்கு ஆயுள் வரி செலுத்தச் சொல்லி சுற்றுலா டாக்ஸி தொழிலையே கலகலக்க வைத்திருக்கிறது தமிழக அரசு.

சென்னை டூரிஸ்ட் கார் ஆபரேட்டர்ஸ் அசோஸியேஷனின் பொதுச் செயலாளர் பெருமாள் இது பற்றிக் கொந்தளிப்போடு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார். ''யாரிடமும் கருத்துக் கேட்காமல், தன்னிச்சையாகத் திடீரென்று இந்த வரி உயர்வை தமிழக அரசு அறிவித்து அமல்படுத்தி இருக்கிறது. புதிதாக வாங்கப்படும் டாக்ஸி கார்களுக்கு மட்டும் அல்ல, ஏற்கெனவே சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும் பழைய டூரிஸ்ட் கார்களுக்கும் இந்த வரி உயர்வு பொருந்தும். வரும் 2013 மார்ச் இறுதிக்குள் நான்கு தவணைகளில் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்போதெல்லாம் உள்ளூர் அல்லது வெளியூர் செல்லும் பயணிகள் யாரும், பழைய காரை விரும்புவதே இல்லை. வாங்கி மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட காரைத்தான் விரும்புகிறார்கள்.

டாக்ஸி

அவ்வளவு ஏன்? அரசுத் துறைகளே ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களைப் பயன்படுத்த டெண்டர் விடும் போது, 'வாகனம் வாங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கிறது. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு என்று கணக்கிட்டு ஆயுள் வரி செலுத்தச் சொல்லுவது எந்த வகையில் நியாயம்?

இது வரை டாடா இண்டிகா காருக்கு ஐந்து ஆண்டுகளுக்கான வரி 6,500 ரூபாயாக இரு­­­ந்து வந்தது. ஆனால், புதிய வரி விதிப்பு முறையின்படி 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது. டொயோட்டா இனோவா காருக்கு ஆண்டுக்கு 7,238 ரூபாய் வரி செலுத்தி வந்தோம். புதிய வரி விதிப்பின் படி இப்போது, ஆயுள் வரியாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு வாகனத்துக்கும் பல மடங்கு வரி உயர்ந்துவிட்டது.

இந்தக் கூடுதல் வரியைச் செலுத்த 2013 மார்ச் வரை காலக்கெடு இருந்தாலும், ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு எஃப்.சி (ஃபிட்னஸ் சர்டிஃபிகேட்) புதுப்பிக்கச் சென்றால், ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு, புதிய வரியை மொத்தமாகக் கட்டும்படி அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் கட்டணம் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இன்னொரு புறம், டயர் மற்றும் உதிரி பாகங்கள் விலையுடன், கார்களின் விலையும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்ந்து விட்டது. மத்திய கலால் வரி இரண்டு சதவிகிதம் உயர்ந்து விட்டது. இவை இல்லாமல் சேவை வரி இரண்டு சதவிகிதம், தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி இரண்டு சதவிகிதமும் உண்டு. இவற்றோடு இப்போது விதிக்கப்பட்டு இருக்கும் புதிய ஆயுள் வரியையும் சேர்த்தால், காரின் விலைக்கு ஈடாக வரிகளும் வந்துவிடும்!

டாக்ஸி

இந்த நிலை தொடர்ந்தால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சுற்றுலாத் துறையும் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் நாட்டுக்கும் நிச்சயமாக அந்நியச் செலாவணி இழப்பும் ஏற்படும். தவிர, புதிய கார்களின் விற்பனையும் கடுமையாகப் பாதிக்கும்.

உதாரணத்துக்கு, டாடா நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு அந்த நிறுவனம் தமிழக அரசுக்கு சுமார் 150 கோடி ரூபாய் வரி செலுத்தி இருக்கிறது. புதிய வரி விதிப்பால் கார் விற்பனை பாதிக்கப்பட்டால், விற்பனை வரி வருவாய் இழப்பும் அரசுக்கு ஏற்படும். இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், தமிழகம் முழுவதும் இந்தத் தொழிலில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 20 லட்சம் குடும்பங்களின் வயிற்றில் தமிழக அரசு அடித்துள்ளது. விரைவில் இந்த வரி விதிப்பு முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்'' என்றார் பெருமாள்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இது பற்றிக் கேட்டால், ''10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுற்றுலா வாகனங்களுக்கு 10 சதவிகிதமும், 10 லட்சத்துக்கு மேல் மதிப்புகொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு 15 சதவிகிதமும் ஆயுள் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதே 10 லட்சம் மதிப்பிலான பழைய வாகனங்களுக்கு 8.5 சதவிகிதமும், 10 லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு 14.5 சதவிகிதமும் ஆயுள் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் வரி உயர்வு அல்ல; வரிச் சீரமைப்பு'' என்று வார்த்தையில் விளையாடினார்.

பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு... என்று ஒரே வருடத்துக்குள் பல 'உயர்வு’களைச் சந்தித்த மக்களுக்கு, இப்போது இப்படிப்பட்ட ஓர் 'உயர்’வையும் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. 'எங்களுக்கு வாக்களித்தால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்’ என்று அவர்கள் சொன்னதன் அர்த்தம் இதுதானோ!

படங்கள்: எம்.முத்துக்குமார்,   ப.சரவணக்குமார்   

எகிறியது ஃபேன்ஸி எண்! 

ஃபேன்ஸி பதிவு எண் பெறுவதற்கு ஏற்கெனவே இருந்த கட்டண விகிதங்களை இரட்டிப்பு ஆக்கி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், இரண்டு சக்கர வாகனங்களுக்கான 2,000 ரூபாய் கட்டணத்தில் கை வைக்கவில்லை. நான்கு லட்ச ரூபாய்க்கு உட்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 1,000 எண்களுக்குள் ஃபேன்ஸி எண் வாங்க, முன்பு இருந்த கட்டணம் ரூ.5,000. அது இப்போது 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. நான்கு லட்சத்துக்கு மேல் மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு முன்பு 8,000 ரூபாய். இது இப்போது, 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,000 எண்களைத் தாண்டி இயக்குநர் அலுவலகம் மற்றும் அமைச்சர் அலுவலகம் மூலமாக வாங்கப்படும் ஃபேன்ஸி எண்களுக்கான கட்டணம், 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது!

டாக்ஸி

- டி.எல்.சஞ்சீவிகுமார்