பிரீமியம் ஸ்டோரி
 ##~##

விபத்து... சிலரது உயிரைப் பறிக்கும்; உடல் உறுப்புகளைச் சிதைக்கும்; சிலரின் மன உறுதியைக் குலைக்கும். ஆனால், அவை அத்தனையும் வென்று வந்திருக்கிறது ஓர் அசாத்திய ஜோடி. சென்னையைச் சேர்ந்த ஹர்ஷா கோடா - பிரபா ஜோடி, 'பார்டர்லைன் டிரைவ்’ என்ற பெயரில் 24,000 கி.மீ தூரம், இந்தியாவின் வட கிழக்கு, தென் மேற்கு எல்லைகளை காரில் தொட வேண்டும் என்று திட்டமிட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புறப்பட்ட இவர்களின் பயணம், மொத்தம் 70 முதல் 80 நாட்கள் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது. 

திட்டமிட்டபடி 17,000 கி.மீ தூரத்தை வெற்றிகரமாகக் கடந்தனர். ஆனால், கொல்கத்தாவில் இருந்து ஒரிஸா செல்லும் வழியில் ஏற்பட்ட ஒரு மோசமான விபத்து, இவர்களின் பயணத்துக்கு இடைக்காலத் தடை போட்டது.

''விபத்து நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது உடம்பும், மனசும் பயணத்துக்குத் தயாராகிவிட்டது. ஜூன் மாதம் மீண்டும் விபத்து நடந்த இடத்தில் இருந்து கிளம்பி மும்பையைத் தொட வேண்டும். அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டோம்'' என்று சொல்லும் பிரபா, இந்த விபத்தில் ஆறு மாதங்களாக கை, கால்களைஅசைக்கக்கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தவர்.

அஞ்சா நெஞ்சம்!

ஹர்ஷாவிடம் பேசியபோது, ''டிரைவிங்தான் எங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய பொழுதுபோக்கு. நானும் பிரபாவும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு மீண்டும் சந்தித்து, காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். நான் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். பிரபா, பி.எஸ்.சி மேத்ஸ். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கம்பெனியை ஆரம்பித்து, வெப் டிசைன் என பல வேலைகள் ஒன்றாகச் சேர்ந்து செய்தோம்.  

முதல் தடவையாக 2000-ம் வருஷம் மாருதி 800 கார் வாங்கினோம். பிறகு மாருதி ஜென், வேகன்-ஆர், ஸ்விஃப்ட், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, இப்போது மஹிந்திரா ஸைலோ என்று பல கார்களைப் பார்த்துவிட்டோம். மும்பை, கொல்கத்தா என எங்கே மீட்டிங் இருந்தாலும், இரண்டு நாட்களுக்கு முன்பே காரில் கிளம்பிவிடுவோம். காரில் பயணம் செய்வது, எங்கள் இருவருக்கும் அவ்வளவு பிடிக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், கார் எங்களுக்கு இன்னொரு வீடு!'' என்றார் ஹர்ஷா.

அஞ்சா நெஞ்சம்!

''பயணங்களின்போது ஹர்ஷாதான் முழுக்க முழுக்க கார் ஓட்டுவார். வழி கேட்பது மட்டும்தான் என் வேலை. நான் ஒருமுறைகூட ஹர்ஷா கார் ஓட்டும்போது காருக்குள் தூங்கியது இல்லை. இமயமலைக்கு காரிலேயே சென்றது உள்பட, இது வரை காரில் 4 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்திருக்கிறோம். ஒரே ஒரு விபத்துகூட நடந்தது இல்லை. அதேபோல், கார் டயர் பஞ்சரானதோ, பயணத்தின்போது தலைவலி வருவது, வயிறு அப்செட் ஆவது என எந்தத் தொந்தரவுகளும் இருந்தது இல்லை.

ரொம்ப நாள் வேலை செய்துகொண்டே இருந்ததால், ஏதாவது ஒரு பெரிய டூர் அடிக்கலாம் என யோசித்தபோதுதான்... இந்தியாவின் எல்லா எல்லைகளையும் தொட்டுவிட்டு வரலாம் எனத் தோன்றியது. பிளான் போட ஆரம்பித்தோம். மஹிந்திரா ஸைலோவை ரெடி செய்தோம். எங்கள் திட்டத்தைக் கேள்விப்பட்டு மஹிந்திரா நிறுவனம் உதவி செய்ய முன்வந்தது. நாடு முழுக்கப் பயணம் செல்வதால், நல்ல விஷயங்களையும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக, 'ஸ்டெம் செல்’ பற்றிய விழிப்பு உணர்வுப் பிரசாரத்தையும் வழி நெடுகச் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அஞ்சா நெஞ்சம்!

ஆகஸ்ட் 15-ம் தேதி மும்பையில் ஆரம்பித்து குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மிஸோரம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மீண்டும் மும்பை இதுதான் ரூட் மேப். கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பட்ஜெட் போட்டு, பயணத்தைத் துவக்கினோம்'' என்றார் பிரபா.

''இந்தப் பயணத்தில் நிறைய ஜாலியான, அதே சமயம் த்ரில்லான அனுபவங்கள் அதிகம். 'குஜராத்தில் இருந்து ராஜஸ்தானுக்குள் நுழையும்போது, பாகிஸ்தான் எல்லை அருகே ஒரு கிராமத்தில் தன்னவுட் என்று ஒரு கோயில் இருக்கிறது. 1971-ல் இந்தியா - பாகிஸ்தான் போரில், பாகிஸ்தான் போட்ட வெடிகுண்டு அந்தக் கோயிலில் விழுந்தது. ஆனால், குண்டு வெடிக்கவில்லை. அந்த குண்டு இன்னமும் அப்படியே அந்தக் கோயிலில் இருக்கிறது. அதை மறக்காமல் பாருங்கள்’ என்று ராணுவத்தில் இருக்கும் எங்கள் உறவினர் ஒருவர் சொன்னார். நாங்களும் அந்த கிராமம் இருக்கும் இடம் அருகே சென்றோம். அங்கே ஒரு செக் போஸ்ட். இரண்டு ஜவான்கள் இருந்தார்கள். 'எங்க வந்தீங்க... எதுக்கு வந்தீங்க...’ என பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, 'நீங்கள் பார்டர் பார்க்க வேண்டுமா?’ எனக்

அஞ்சா நெஞ்சம்!

கேட்டார்கள். 'ஆமாம்’ என்று சொல்லவும், நாங்கள் இந்தியர்கள்தானா என கன்ஃபார்ம் செய்துவிட்டு, லைசென்ஸை வாங்கி வைத்துக்கொண்டு இன்னும் 40 கி.மீ உள்ளே போக வேண்டும் எனச் சொன்னார்கள். அந்த 40 கி.மீ தூரப் பயணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இரண்டு கிராமங்கள் மட்டுமே அந்தப் பகுதியில் இருந்தன. பாலைவனம், தலை மேல் பானைகளைச் சுமந்து செல்லும் ராஜஸ்தான் பெண்கள், காட்டு விலங்குகளின் கிராஸிங் என செம டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ்.

திடீரென ரோடு முடிந்துவிட்டது. ஒரு சுவர். அதற்கு அடுத்து பெரிய மின் வேலி இருந்தது. உயரமான டவரில் இரண்டு ஜவான்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். அடுத்து ஒரு த்ரில்லிங் அனுபவமும் ஏற்பட்டது.

பஞ்சாபில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் நுழையும் இடம். அந்த செக்போஸ்ட்டில் நிறைய போலீஸ்காரர்கள் காரை செக் செய்தார்கள். அப்போது ஒரு போலீஸ்காரர் சின்னப் பையனைக் காட்டி, 'இவனை 12 கி.மீ தூரம் தள்ளியிருக்கிற கிஷன்கிஞ் கிராமத்துல இறக்கிவிட்டுடுங்க’ என்று சொன்னார். காரை எடுக்கப் போகும்போது, திடீரென ஒரு சர்தார்ஜி போலீஸ்காரர் வந்து, 'இந்தப் பையன் யாரு?’ என்று கேட்டார். அங்கே இருக்கிற போலீஸ்காரர் பக்கம் கையைக் காட்டினோம். அங்கே அந்த போலீஸ் இல்லை. பையனைப் பார்த்து எந்த ஊர் எனக் கேட்டார். திடீரென அந்தப் பையன் போலீஸ் காலில் விழுந்துவிட்டான். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'நீங்கள் மதராஸா?’ எனக் கேட்ட போலீஸ், 'இது ஜம்மு காஷ்மீர். இங்கே யாருக்கும் லிஃப்ட் கொடுக்கக் கூடாது. வெடிகுண்டுகள், போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு இந்த மாதிரி சிறுவர்களைத்தான் தீவிரவாதிகள் பயன்படுத்துவாங்க. உங்க கார்ல சேஃபா ஏறி, வேற ஒரு கிராமத்துல இறங்கி குண்டுவெச்சுட்டு அந்தப் பையன் போயிடுவான். நீங்க மாட்டிப்பீங்க. இங்கே மாட்டினால் விசாரணையே கிடையாது. ஆறு மாதங்கள் ஜெயிலில்தான் இருக்கணும். சில நேரம் உங்களையே பிணைக் கைதிகளாகக் கடத்திவெச்சுப்பாங்க’ என்று அவர் சொன்னதைக் கேட்டு ஆடிப்போய்விட்டோம்'' என்ற ஹர்ஷாவிடம் விபத்து பற்றிக் கேட்டேன்.

''நவம்பர் 5-ம் தேதி. வங்க தேச எல்லையைப் பார்த்துவிட்டு, கொல்கத்தாவில் இருந்து ஒரிஸாவுக்குப் புறப்பட்டோம். மாநில எல்லை அருகே ஒரு செக் போஸ்ட். செக் போஸ்ட்டில் இருந்து வெளியே வந்தோம். அந்த இடத்தின் பெயர் ஜாலேஷ்வர். எங்களுக்கு முன்பு ஒரு மீன்பாடி வண்டி போய்க்கொண்டு இருந்தது. அதில் மூன்று பெண்கள் இருந்தார்கள். நான் அந்த வண்டியை ஓவர்டேக் செய்யலாம் என இடது பக்கமாக 60-70 கி.மீ வேகத்தில் சென்றேன். திடீரென அந்த மீன்பாடி வண்டி, சாலையின் இடது பக்கம் வந்துவிட்டது. நான் அந்த வண்டியின் மீது மோதிவிடக் கூடாது என சாலையைவிட்டு கீழே இறங்கிவிட்டேன். மீன்பாடி வண்டியை இடிக்கவில்லை. மீண்டும் சாலைக்கு ஏறலாம் என ஸ்டீயரிங்கைத் திருப்பினேன். சாலையின் ஓரம் என்பதால், திடீரென கார் கன்ட்ரோலை இழந்து பல்டி அடித்து 30 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. 12 முறை கார் பல்டி அடித்திருக்கும். பிரபா பக்கம் இருக்கும் கதவு திறந்துவிட்டது. என் பக்கக் கதவு திறக்கவில்லை. கார் பக்கவாட்டில் உருண்டதால், காற்றுப் பைகள் வெளியே வரவில்லை. கதவு திறந்துவிட்டதால், பிரபாவின் தலை வெளியேயும், உடல் காருக்கு உள்ளேயும் சிக்கிக்கொண்டது. தலை நாலு மடங்கு பெரிதாகி, முகம் முழுக்க கறுப்பாகிவிட்டது. என்னோட சீட் பெல்ட்டை அகற்ற முடிந்தது. ஆனால், கதவைத் திறக்க முடியவில்லை. உள்பக்கம் பின் சீட் வழியாகப் போய், பிரபாவை காருக்குள் இருந்து வெளியே கொண்டுவந்தேன். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. மஹிந்திராவுக்கு போன் செய்தேன். கூகுள் ஆல்டிட்யூடில் எங்களைப் பலரும் பார்த்துக்கொண்டே இருந்ததால், நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமே வரவில்லை. மஹிந்திராவில் இருந்து ஒரு கார் வந்தது. ஆனால், ஏதோ பண்டிகை என்பதால், ஒரிஸாவின் எந்த மருத்துவமனையிலும் டாக்டர்கள் இல்லை. அதனால், கட்டாக்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று மூளை பாதிக்கப்பட்டு இருக்கிறதா என சிடி ஸ்கேன் எடுத்தார்கள். ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். எல்லாமே உள்காயம் என்பதால், ஒரு ஆபரேஷன்கூட இல்லை. அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து, எம்.ஆர்.ஸ்கேன் செய்தோம். அதிலும் மூளையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்'' என்று முடித்தார் ஹர்ஷா.

''ஆறு மாதம் நடக்க முடியாமல், கை, கால்களை அசைக்காமல் பெட் ரெஸ்ட்டில் இருந்தேன். மே 2-ம் தேதியில் இருந்து நடக்க ஆரம்பித்துவிட்டேன். உடம்பு முழு குணமாகிவிட்டது. திரும்பவும் விபத்து நடந்த இடத்தில் இருந்து புறப்பட்டு, மும்பையை ரீச் செய்தால்தான் எங்கள் 'பார்டர் லைன் டிரைவ்’ முழுமை அடையும். ஜூன் 10-ம் தேதி போலக் கிளம்புவோம். ஆல் தி பெஸ்ட் சொல்ல நிச்சயம் வந்துவிடுங்கள்!'' என்றார் பிரபா உற்சாகமாக!

- சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு