Published:Updated:

அப்பாச்சி இப்போ அப்கிரேட் ஆயாச்சு... BS-6 அப்பாச்சி RR310 பைக்கில் முதல் அனுபவம் #FirstRideReport

BS-6 அப்பாச்சி RR310
BS-6 அப்பாச்சி RR310

விற்பனைக்கு வந்தது முதல், இது அப்பாச்சிக்கு மூன்றாவது அப்கிரேடு. ஏற்கெனவே ஸ்லிப்பர் கிளட்ச், கவுன்ட்டர் பேலன்சர்களுடன் அப்கிரேடு ஆன அப்பாச்சி, இப்போது இன்னும் பல தொழில்நுட்பங்களோடு மேம்பட்டிருக்கிறது.

ஒரு பக்கம் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் பற்றிய கவலைகள், இன்னொரு பக்கம் நம் பொருளாதார தேவைகள், ஆசைகள். இவை இரண்டையும் பேலன்ஸ் செய்வது சவாலானது. இந்தச் சவாலைச் சரியான முறையில் கையாண்டுள்ளது டிவிஎஸ். நிறைய எதிர்பார்ப்புகள் மற்றும் ஆச்சர்யங்களோடு இந்த நிறுவனத்தின் புது அப்பாச்சி RR310 BS-6 மாடலை, சென்னை ரேஸ் டிராக்கில் டெஸ்ட் செய்தோம். BS-6 என்பதால் பல பைக்குகளில் பவர் டிராப் இருக்கிறது. ஆனால், அப்பாச்சியில் எந்த பவர் குறைபாடும் இல்லாமல் முன்பை விட தொழில்நுட்பத்திலும், ரைடிங்கிலும் மேம்பட்டிருக்கிறது.

RR310 Titanium Black color
RR310 Titanium Black color

பழசுக்கும், புதுசுக்கும் 6 வித்தியாசம்:

``தேதியை மட்டும் மாத்திட்டா நேத்து நியூஸ் பேப்பர் எது, இன்னைக்கு நியூஸ் பேப்பர் எதுனே தெரியாது " என்று ஒரு படத்தில் டயலாக் வரும். அப்பாச்சி அப்படியெல்லாம் இல்லை. பார்த்தவுடனேயே சில மாற்றங்களைச் சொல்லிவிடலாம். அதான், கலரே மாறியிருக்கே. முன்பு இருந்த மேட் கறுப்பு வண்ணம் ப்ரீமியமாக இருந்தாலும் டுகாட்டிப்போல பளிச்சென இருக்கும் சிவப்பு RR310 உடன் ஒப்பிடும்போது கொஞ்சம் சுமார்தான். இந்தக் கறுப்பு நிறத்துக்குப் பதில் இப்போது ஸ்போர்ட்டியான டைட்டேனியம் பிளாக் எனும் டூயல் டோன் வண்ணம் கொண்டுவந்துள்ளார்கள். கிரே மற்றும் பளபளப்பான கறுப்பு நிறம் அதோடு பளிச்சென்ற சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் செம ஸ்போர்ட்டி. இன்னும் சிவப்புதான் சூப்பர் என்றாலும், இந்த நிறம் நிச்சயமாகக் கவனம் ஈர்க்கத்தான் செய்கிறது.

RR310 Red
RR310 Red

இரண்டாவது வித்தியாசம் 5 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர். இதைப்பற்றிச் சொல்லவே ஒரு தனி கட்டுரையே எழுதலாம். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என்பதற்கு டிவிஎஸ் இன்ஜினீயர்கள் வைத்திருக்கும் பெயர் ரேஸ் கம்ப்யூட்டர். மொபைல் ஃபோன் போல Portrait Orientation-ல் இருக்கும் இந்த கலர் திரை ஆண்ட்ராய்டு மொபைலின் இன்ஸ்பிரேஷன். என் மொபைலை இதன்மீது வைத்துப்பார்த்தேன், இரண்டும் ஒரே நீளத்திலும், அகலத்திலும் இருந்தன. வழக்கமான எல்லா க்ளஸ்டரும் Landscape-ல் தானே இருக்கும், எர்கனாமிக் செட் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது... ரைடு முடிந்த பிறகு அந்தச் சந்தேகம் பறந்துவிட்டது. உட்கார்ந்து கொண்டு மட்டுமல்ல, நின்று, படுத்து, சாய்ந்து என எப்படி ஓட்டினாலும் திரையில் இருக்கும் எழுத்துகள் தெளிவாகத் தெரிகின்றன.

ஹேண்டில்பாரில் இருக்கும் கன்ட்ரோல் ஸ்விட்ச்கள் மாறிவிட்டன. கேடிஎம் டியூக் 390 மாடலில் இருக்கும் அதே ஸ்விட்ச்கஸ் போல இருக்கின்றன. இடதுபக்கம், பிளே ஸ்டேஷன் கன்ட்ரோலர் போல 4 ஸ்விட்சகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைப் பயன்படுத்த கொடுக்கப்பட்டுள்ளன. இதை கன்ட்ரோல் கியூப் என்கிறார்கள். பாஸ் லைட், லோபீம், ஹைபீம் மூன்றும் ஒரே பட்டனில். ஹசார்டு லைட்டுக்குத் தனி பட்டன் உண்டு. வலதுபக்கம், கில் ஸ்விட்சும், எலெக்டரிக் ஸ்டார்ட்டரும் ஒரே பட்டனில்.

டிராக் டைமிங், டாப் ஸ்பீடு, மூன்று ட்ரிப் மீட்டர், இன்ஜின் வெப்பம், நேரம் என சின்னச் சின்ன தகவல்கள் பார்த்தவுடனேயே தெரியும். செட் பட்டனை அழுத்தி உள்ளே சென்றால், வசதிகளைப் பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் போதாது. அர்பன், ரெயின், ஸ்போர்ட், ட்ராக் என நான்கு ரைடிங் மோடுகள். ஒவ்வொரு ரைடிங் மோடு செலக்ட் செய்யும்போதும் அதற்கேற்ப வரும் கிராஃபிக்ஸ் செம உற்சாகம்.

வெள்ளை ஸ்கிரீனில் Day Mode, கறுப்பு ஸ்கிரீனில் Night Mode என டிஸ்பிளேவுக்கே தனியாக இரண்டு மோடுகள். ஸ்மார்ட்ஃபோன் போல ஆட்டோமேட்டிக் பிரைட்னெஸ் உண்டு. பத்தலையா... மேனுவலாக பிரைட்னெஸ் அட்ஜஸ்ட் செய்யலாம். இருப்பதிலேயே அதிக பிரைட்னெஸ் வைத்துப்பார்த்தோம், உச்சி வெயிலிலும் செம பளிச். எப்போது கடைசியாக சர்வீஸ் செய்யப்பட்டது, எப்போது சர்வீஸ் செய்யவேண்டும் என்று தேதியோடு காட்டுகிறது இந்த கம்ப்யூட்டர்.

ஏத்தர் ஸ்கூட்டரில் இருப்பது போல கூகுள் மேப் காட்டுமா என்ற சந்தேகம் வந்தால் நீங்களும் என் தோழமையே. இப்போதைக்கு மேப் எல்லாம் கிடையாது. மற்ற அப்பாச்சிகளைப் போலவே Turn-by-Turn நேவிகேஷன் மட்டும்தான். MyTvs ஆப் மூலம் ப்ளூடூத் வழியாக மொபைலை இணைத்தால் கடைசி 5 ட்ரிப்கள், அதன் டேட்டா, ஆவரேஜ் ஸ்பீடு, ரேஸ் டிராக்கில் லேப் டைமிங்ஸ், மொபைல் சிக்னல், மொபைல் காலிங் எனப் பல தகவல்கள் கிடைக்கின்றன. இதைச் சேமித்துக்கொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் கூட முடியும்.

Apache RR310
Apache RR310

Ride-by-wire வசதி கொடுத்திருப்பதால் த்ராட்டில் முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கிறது. அதிலும், அர்பன் மற்றும் ரெயின் மோடில் ஓட்டிவிட்டு, டிராக் மற்றும் ஸ்போர்ட் மோடு வைத்தால் வித்தியாசம் நிறைய தெரிகிறது. முதல் இரண்டு மோடுகளில் 26bhp பவர் மட்டுமே கிடைக்கிறது. இதில் குறைவான வேகங்களும் மிட் ரேஞ்சும் டார்க் அதிகம். இந்த இரண்டு மோடுகளில் 25Nm டார்க் மட்டும்தான். இருந்தும் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. கடைசி இரண்டு மோடுகளில் இந்த பைக் 34bhp பவரை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துகிறது. டாப் கியரில் 10000rpm தாண்டிச் சீறுகிறது. BS-4 மாடலில் 3000 முதல் 6000 rpm-ல் கொஞ்சம் வைப்ரேஷன் தெரியும். 9000rpm தாண்டிவிட்டால் ஹேண்டில்பாரில் நன்றாகவே வைப்ரேஷன் தெரியும்.

அப்பாச்சி RR310 First Ride
அப்பாச்சி RR310 First Ride

இப்போது எல்லாமே மாறிவிட்டது. சின்னச் சின்ன வைப்ரேஷன்களை உணர முடிந்தாலும் எந்த இடத்திலும் இவை முகம் சுழிக்கவைப்பதாக இல்லை. ரேஸ் டிராக்கில் அதிகபட்சம் 145 கி.மீ வேகம் வரை மட்டுமே எங்களால் ஓட்டமுடிந்தது. அந்த வேகத்தின்போதும் கூட பைக்கில் இன்னும் பவர் இருப்பதை உணர முடிந்தது. ஆக்ஸிலரேஷன், டீசெலரேஷன் ரெண்டுமே பீங்கான் பாத்திரத்தில் ஐஸ்கட்டி ஓடுவதுபோல செம ஸ்மூத். Ride-by-wire தொழில்நுட்பம் டிவிஎஸ் நிறுவனத்துக்கு இதுதான் முதல்முறை. ஆனாலும், சூப்பர் ஓவரே தேவைப்படாமல் மேட்ச்சை முடித்துவிட்டார்கள்.

இந்த அப்கிரேடுகளில் எனக்கு பர்செனலாக மிகவும் பிடித்த விஷயம், மிஷ்லின் ரோடு 5 டயர்ஸ். RTR பைக்குகளில் பைரெல்லி பட்டையைக் கிளப்ப, அதை விட காஸ்ட்லியான RR310-ல் மிஷ்லின் பைலட் ஸ்டிரீட் சுமாராக இருந்தது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க தாய்லாந்திலிருந்து ரோடு 5 டயர்களை இறக்கியிருக்கிறது டிவிஎஸ். இந்தியாவில் இந்த டயர்ஸுடன் வரும் முதல் பைக் RR310. Dual Compund டெக்னாலஜி கொண்ட இந்த டயர்கள் ஒவ்வொரு கார்னரிலும் க்ரிப்பை அள்ளிக்கொடுத்தன. ரேஸ் டிராக்கின் டைட்டான கார்னர்களில் பைக்கை வளைத்து வேகமாகச் செல்லும்போது, டயரின் க்ரிப்பை நன்றாகவே உணர முடிந்தது.

டயர் நமக்கு நம்பிக்கை தருவதோடு இன்னும் வேகமாகச் செல்லத்தூண்டுகிறது. இந்த டயர்களின் ட்ரெட் மழை தண்ணீரை டயர்களில் ஒட்டாமல் திசை மாற்றிவிடும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தது. பழைய பைலட் ஸ்ட்ரீட் டயர்களில் காணப்படும் ட்ரெட் பேட்டர்னை விட இதன் டிசைன் ஆழமாக இருப்பது தெரிந்தது.

Michelin Road 5 Tyre
Michelin Road 5 Tyre

நகரச் சாலைகளுக்கு பைக்கை இன்னும் ஃபிரெண்ட்லியாக்க, Glide Through Traffic (GTT+) எனும் வசதியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆட்டோமேட்டிக் கார்களில் வரும் க்ரீப் மோடு போலதான் இது. அர்பன் மற்றும் ரெயின் மோடில் பைக்கை ஓட்டும்போது ஆக்ஸிலரேட்டரைத் திருப்பாமலேயே பைக்கை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயக்கவைக்கிறது. முதல் கியரில் 10 கிலோ மீட்டர் வேகம், இரண்டாவது கியரில் 15 கி.மீ வேகம் என 6-வது கியரில் 40 கி.மீ வேகம் வரை ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்தாமலேயே செல்லலாம். க்ளட்சைப் பிடித்தால் இது ஆஃப் ஆகிவிடும், க்ளட்சை விட்டு ஆக்ஸிலரேட்டர் கொடுத்தால் மீண்டும் உயிர்பெறும். மற்ற இரண்டு மோடுகளிலும் கூட இந்த வசதி உண்டு. ஆனால் டார்க் குறைவு என்பதால், இதில் 2-வது கியர் வரை மட்டுமே இப்படி கோஸ்ட்டிங்கில் செல்லமுடியும்.

அப்பாச்சி RR310
அப்பாச்சி RR310

நோட் செய்யவேண்டிய விஷயங்கள்?

பெரிய மாற்றங்கள் இருப்பதுபோல சின்னச் சின்ன மாற்றங்களும் இருக்கின்றன. அதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது வைஸர். பழைய RR310-ல் ஹெட்லைட் பேனல்களுக்கு உள்ளே போல்ட் செய்யப்பட்டிருக்கும் வைஸர், இப்போது கழற்றுவதற்குச் சுலபமாக இருக்கும்படி வெளியே போல்ட் செய்யப்பட்டுள்ளது. வைசரின் அகலமும் கொஞ்சம் கூடியுள்ளதாகவே தெரிகிறது. இந்த மாற்றம் விண்டு பிளாஸ்ட்டை இன்னும் குறைப்பதற்காகவா என்று விசாரித்தோம். "அதெல்லாம் இல்லை, RR310 ரைடர்ஸ் கிட்ட இருந்து கொஞ்சம் ஃபீட்பேக் வந்துச்சு, அதுல முன்னாடி வைஸருக்கு உள்பக்கம் அதிகமா தூசு படியுது, அதைத் துடைக்க கஷ்டமா இருக்குனு சொன்னாங்க. அதனால்தான் கழற்ற சுலபமா இருக்க மாதிரி ரெடி பண்ணிருக்கோம்" என்றார்கள்.

அப்பாச்சி RR310 First Ride
அப்பாச்சி RR310 First Ride

முன்பை விடச் சுறுசுறுப்பான ரைடிங் கிடைத்தாலும் 0-60, 0-100கி.மீ நம்பர்களில் எந்த மாற்றமும் இல்லை. இதற்குக் காரணம், பைக்கின் எடை 5 கிலோ அதிகரித்திருப்பது. சைலென்ட் ஸ்டார்ட் வசதி இப்போது விலை குறைவான சின்ன பைக்குகளில் கூட வரத்தொடங்கிவிட்டன. RR310-ல் கொடுத்திருந்தால் முழு திருப்தி இருந்திருக்கும்.

அப்பாச்சி RR310
அப்பாச்சி RR310

சென்னைச் சூழலை வைத்து கொஞ்சம் பிராக்டிக்கலாகப் பேசுவோம். அதே பேட்டரி கெப்பாசிட்டி, ஆனால் எலெக்ட்ரானிக்ஸ் அதிகரித்திருப்பதால் பேட்டரியில் லோடு அதிகரிக்கிறது. இதனால் சீக்கிரமே பேட்டரி தீர்ந்துபோகும் பிரச்னையும் இருக்க வாய்ப்புகள் உண்டு. டெஸ்ட் ரைடு நடைபெற்ற அன்று ஷூட்டிங்குக்காகச் சாவியை ஆன் செய்தபடியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக் பேட்டரி தீர்ந்துபோய் நின்றதைப் பார்த்தோம்.

அப்பாச்சி RR310
அப்பாச்சி RR310

எல்லாமே எலெக்ட்ரானிக்ஸ் என்பதால் எலித்தொல்லை இருக்கும் அப்பார்ட்மென்ட்களில் பைக்குக்கே ரேட் ரிப்பளென்ட் வைத்தாகவேண்டும். TFT டிஸ்பிளே எந்த அளவுக்கு இம்பேக்ட்டை தாங்கும் என்பது தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், பழைய பைக் ஒன்றின் சாதாரண டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்  மரக்கிளை விழுந்து உடைந்தது நினைவிருக்கிறது.

RR310 Titanium Black
RR310 Titanium Black

விலை?

BS-6 RR310 மாடலுக்கு டிவிஎஸ் வைத்திருக்கும் விலை ரூ.2.40 லட்சம். இது பழைய மாடலின் விலையை விட ரூ.12,000 அதிகம். மிஷ்லின் ரோடு 5 டயர்களை இந்தியாவில் வாங்கவேண்டும் என்றாலே உங்களுக்கு ரூ.12,000 செலவாகும். கூடுதலாக ரைடு-பை-ஒயர், ரைடிங் மோடு, TFT டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, முன்பை விடச் சிரத்தையான ரைடு குவாலிட்டி எனப் பல விஷயங்கள் கிடைக்கின்றன. கொடுத்திருக்கும் அப்கிரேடுகளை ஒப்பிடும்போது விலையில் விழுந்த ஸ்பீடுபிரேக்கரைக் கொஞ்சமும் சலனப்படாமல் கடந்துவிடலாம். பழைய ஸ்டாக் இருக்கு, ரூ.15,000 கம்மியா தரேன் என டீலர்கள் சொன்னால் மயங்கிவிடாதீர்கள். அடுத்தடுத்த அப்கிரேடுகளோடு நிறைய அனுபவங்களையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது புது அப்பாச்சி.

அடுத்த கட்டுரைக்கு