ஸ்பெஷல்
Published:Updated:

ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்!

ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்!

 ##~##

துவரை ஃபார்முலா-1 வரலாறு கண்டிராத வகையில், இதுவரை நடைபெற்ற ஏழு ரேஸ்களில் ஏழு அணியின் வீரர்கள் வெற்றிபெற்று இருக்கிறார்கள். அதனால், சாம்பியன் யார் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. கடைசியாக, கனடாவில் நடந்த ரேஸில் லூயிஸ் ஹாமில்ட்டன் வெற்றிபெற்று, இந்த ஆண்டுக்கான தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்து இருக்கிறார். கனடா ரேஸ் பார்ப்பதற்கு முன்பு, மிகவும் ஆபத்தான ரேஸ் டிராக்கான மொனாக்கோவில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம். 

மொனாக்கோ

அழகிய கடற்கரைகொண்ட நாடான மொனாக்கோவில், ஃபார்முலா-1 போட்டியின் ஆறாவது சுற்று மே 27-ம் தேதி நடைபெற்றது. முழுக்க முழுக்க சாதாரணச் சாலைகளில் நடைபெறும் ரேஸ் போட்டி என்பதால், இதற்குக் கூடுதல் கவர்ச்சி. வியாழன் முதல் ஞாயிறு வரை மக்கள் பயன்படுத்தும் சாலைகளை மூடிவிட்டு ரேஸ் நடக்கும். இந்த சாலைகள், மிகவும் குறுகலான வளைவு நெளிவுகளைக் கொண்டவை. இதனால், விபத்துகள் இங்கே சர்வசாதாரணம். அதேபோல், ஓவர்டேக் செய்வதும் மிகச் சிரமம். கில்லாடியான ரேஸ் வீரர்களால் மட்டுமே இங்கே வெற்றிக் கோட்டை எட்ட முடியும். மொனாக்கோ ரேஸில், ஒவ்வொரு ரேஸ் வீரரும் தங்களது உயிரைப் பணயம்வைத்தே ஓட்டுகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் ஆபத்தான ஆடுகளம் இது.

ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்!

தகுதிச் சுற்றில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார் மைக்கேல் ஷூமேக்கர். ஆனால், கடந்த ரேஸில் விபத்து ஏற்படக் காரணமாக இருந்தவர் என்பதால், ஐந்து இடங்கள் பின்னால் இருந்து ரேஸைத் துவக்க வேண்டும் என்பது தண்டனை. அதனால், ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார் ஷூமேக்கர். இதன் மூலம், இரண்டாம் இடத்தில் இருந்த மார்க் வெப்பருக்கு முதல் இடத்தில் இருந்து துவக்கும் வாய்ப்பு. மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் இரண்டாவது இடத்தில் இருந்தும், மெக்லாரனின் லூயிஸ் ஹாமில்ட்டன் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்!

ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே, விபத்துகளும் நடக்க ஆரம்பித்துவிட்டன. ஓவர்டேக் செய்யவே முடியாத இடத்தில், முன் அனுபவம் இல்லாதவர்போல ரேஸ் ஓட்டினார்  லோட்டஸ் ரெனோ அணியின் ரொமெய்ன் கிராஸின். ஆறாவது இடத்தில் இருந்த மைக்கேல் ஷூமேக்கரை முந்திச் செல்ல முயன்றவரின் கார், ஷூமேக்கரின் காரோடு உரச... தப்பித்தார் ஷூமேக்கர். ரெமொய்ன் கிராஸினின் கார், ரேஸ் டிராக்கைவிட்டு வெளியே போய் விழுந்தது. இதற்குள் வில்லியம்ஸ் அணியின் பாஸ்டர் மால்டொனால்டோவின் காரும் விபத்தில் சிக்கி, ரேஸில் இருந்து வெளியேறியது. ஐந்தாவது சுற்றில் சினிமாவில் வருவதுபோல கட்டுப்பாட்டை இழந்த கமுய் கொபஷாஷியின் கார் அந்தரத்தில் பறக்க... பின்னால் வந்த வீரர்கள் அதிர்ச்சியானார்கள். நல்லவேளையாக கீழே விழுந்ததும் கியர் பாக்ஸ் உடைந்ததே தவிர, கொபஷாஷிக்கு எந்தக் காயமும் இல்லை. அவரும் ரேஸைவிட்டு வெளியேறினார்.

இந்தச் சமயத்தில், ரெட்புல் அணியின் மார்க் வெப்பர் முதல் இடத்திலும், மெர்சிடீஸின் நிக்கோ ராஸ்பெர்க் தொடர்ந்து இரண்டாவது இடத்திலும் சென்றுகொண்டு இருந்தனர். ஏற்கெனவே சொன்னதுபோல, ஓவர்டேக் செய்வது இங்கே சிரமம் என்பதால், இறுதியில் எந்த விபத்திலும் சிக்காமல் வெற்றிபெற்றார் மார்க் வெப்பர். நிக்கோ ராஸ்பெர்க் இரண்டாம் இடமும், ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.

மொத்தம் 24 வீரர்கள் கலந்துகொண்ட மொனாக்கோ ரேஸில், ஒன்பது வீரர்கள் விபத்தில் சிக்கி ரேஸில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்காமல் ரேஸை கடைசியாக முடித்தவர், நம்முடைய நரேன் கார்த்திகேயன்!

ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்!

கனடா

கனடாவில் உள்ள மான்ட்ரியால் நகரில், ஃபார்முலா-1 போட்டிகளின் ஏழாவது சுற்று ஜூன் 10-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற செபாஸ்ட்டியன் வெட்டல், முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். மெக்லாரனின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாம் இடத்தில் இருந்தும், ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ரெட்புல், மெக்லாரன், ஃபெராரி ஆகிய மூன்று கார்களுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை ரேஸைக் காண கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் ரேஸ் டிராக்கில் திரண்டு இருந்தனர்.

ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்!

வெட்டல், ஹாமில்ட்டன், அலான்சோ மோதல் எதிர்பார்த்ததுபோலவே தொடர்ந்தது. மூன்று பேரும் மாறி மாறி முதல் இடத்துக்கு முந்திக்கொண்டு இருந்தனர். மொத்தம் 70 லேப்புகள்கொண்ட இந்த ரேஸின் இறுதிக் கட்டத்தில், அதாவது 50-வது லேப் ஆரம்பத்தில் முதல் இடத்தை உறுதி செய்துவிட்டதுபோல மிகவும் வேகமாக ரேஸ் ஓட்டினார் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ. அதனால், இந்த ஆண்டு முதன்முறையாக இரண்டாவது வெற்றியை அலான்சோ பெற்றுவிடுவார் என்றே எல்லோரும் எதிர்பார்க்க... 64-ஆவது லேப்பின்போது அலான்சோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்தார் ஹாமில்ட்டன். லோட்டஸ் ரெனோ அணியின் ரொமெயின் கிராஸின் இரண்டாம் இடமும், சாபர் அணியின் செர்ஜியோ பெரேஸ் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஏழாவது சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன்!

இதுவரை நடைபெற்ற ஏழு சுற்றுகளில், ஏழாவது வீரராக லூயிஸ் ஹாமில்ட்டன் வெற்றி பெற்று இருப்பதால், சாம்பியன்ஷிப் பட்டியலில் இதுவரை யாருக்குமே 'லீட்’ கிடைக்கவில்லை. 88 புள்ளிகளுடன் லூயிஸ் ஹாமில்ட்டன் முதல் இடத்திலும், 86 புள்ளிகளுடன் ஃபெர்னாண்டோ அலான்சோ இரண்டாம் இடத்திலும், 85 புள்ளிகளுடன் செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், ஃபார்முலா-1 போட்டியின் 8-வது சுற்று ஸ்பெயினில் உள்ள வேலன்சியா நகரில் ஜூன் 24-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்.

- சார்லஸ்