ஸ்பெஷல்
Published:Updated:

ஹோண்டாவில் ராஸி?

ஹோண்டாவில் ராஸி?

 ##~##

ராஸி விஸ்வரூபம் எடுக்கக் களம் அமைத்துக்கொடுத்து இருக்கிறது லீ மேன்ஸ். 24 மணி நேர ரேஸ்களுக்குப் புகழ் பெற்ற, ஃபிரான்ஸில் உள்ள லீ மேன்ஸ் ரேஸ் டிராக்கில், மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே, இரண்டாவது இடம் பிடித்து இந்த ஆண்டில் முதன்முறையாக 'போடியம்’ ஏறினார் வாலன்டினோ ராஸி.

 பிரான்ஸ்

லீ மேன்ஸ் ரேஸ் டிராக்கில், மே 20-ம் தேதி மோட்டோ ஜிபியின் நான்காவது சுற்று நடைபெற்றது. லீ மேன்ஸ் ரேஸ் டிராக், ரேஸ் ஓட்ட மிக சவாலானது. குறுகிய வளைவுகள், திடீர்த் திருப்பங்கள் என ரேஸ் வீரர்களைப் பதம் பார்க்கும் டெரர் டிராக். 28 லேப்களும், 117 கி.மீ மொத்த தூரமும்கொண்ட இந்த ரேஸை, முதல் இடத்தில் இருந்து துவக்கினார் ஹோண்டாவின் குட்டிப் புயல் டேனி பெட்ரோஸா. ஹோண்டாவின் மற்றொரு வீரரான கேஸி ஸ்டோனர் இரண்டாம் இடத்தில் இருந்தும், யமஹாவின் ஆன்ட்ரி டோவிஸியோஸோ மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். 10 முறை பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவரான வாலன்டினோ ராஸி, ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

ஹோண்டாவில் ராஸி?

மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால், ஈரமான சாலையில் பயன்படுத்துவதற்கான ஸ்பெஷல் 'வெட்’ டயர்களுடன் எல்லா பைக்குகளும் களம் இறங்கின. ஸ்டோனர், பெட்ரோஸா, லாரன்சோ ஆகிய மூவருக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க... ஈரமான தரையில் ரேஸ் ஓட்டுவதில் வல்லவரான வாலன்டினோ ராஸி, முதல் இடம் நோக்கி முன்னேறியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.  

ஹோண்டாவில் ராஸி?

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ராஸி வீறுகொண்டு எழுந்தது இந்த ரேஸில்தான். முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கி இருந்தாலும், பின்னால் ரேஸ் ஓட்டுவதுபோல பெட்ரோஸா பின்னோக்கிப் போய்க்கொண்டு இருக்க, வந்தவர்கள் எல்லாம் முன்னிலை பிடித்தார்கள். யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ, யாரும் எளிதில் எட்ட முடியாத முதல் இடத்துக்கு முன்னேறிவிட, இரண்டாம் இடத்துக்கான போட்டா போட்டிதான் த்ரில்லிங். ராஸியின் டுகாட்டி, ஸ்டோனரின் ஹோண்டா, கால் க்ரட்ச்லோவின் யமஹா ஆகிய மூன்றுமே கிட்டத்தட்ட பெரிய போர் நடத்தின. இரண்டாம் இடத்துக்கான போட்டியில் ஸ்டோனர் லீடிங்கில் சென்றுகொண்டு இருந்தார். ரேஸ் முடிய சில விநாடிகளே இருந்த நிலையில், கடைசி லேப்பில் முந்திச் சென்று இரண்டாம் இடம் பிடித்தார் வாலன்டினோ ராஸி.

''ஈரமான தரையில் என்னால் சிறப்பாக ரேஸ் ஓட்ட முடியும் என்று தெரியும். அதனால், வாய்ப்பை நழுவவிடாமல் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்தேன். இறுதியில் இரண்டாம் இடம்தான் கிடைத்தது என்றாலும், எனக்குள் இன்னும் வேகம் இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கிறது இந்த ரேஸ்!' என்றார் போடியம் ஏறிய ராஸி.

கேட்டலூன்யா

ஸ்பெயினில் உள்ள கேட்டலூன்யா ரேஸ் டிராக்கில், மோட்டோ ஜிபியின் ஐந்தாவது சுற்று ஜூன் 3-ம் தேதி நடைபெற்றது. கேட்டலூன்யா, ரேஸ் வீரர்களின் திறமைகளைச் சோதித்துப் பார்க்கும் சவாலான ரேஸ் டிராக். அதனால், ரேஸைக் காண ஒரு லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, எப்படி ஓட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு த்ரில்லிங்காக இருக்கும் என்பதால் இந்தக் கூட்டம்!

ஹோண்டாவின் கேஸி ஸ்டோனர் முதல் இடத்தில் இருந்தும், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாம் இடத்தில் இருந்தும், கால் க்ரட்ச்லோ மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். வாலன்டினோ ராஸி ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

ஹோண்டாவில் ராஸி?

ரேஸ் துவங்கியதுமே... ஸ்டோனரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்துக்கு முன்னேறினார் ஹோண்டாவின் மற்றொரு வீரரான டேனி பெட்ரோஸா. மற்ற வீரர்கள் யாரும் நெருங்க முடியாதபடி பெட்ரோஸாவும், லாரன்சோவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவிட்டனர். மொத்தம் 25 லேப்புகள்கொண்ட இந்த ரேஸில், பெட்ரோஸாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மீண்டும் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார் ஜார்ஜ் லாரன்சோ. பெட்ரோஸா இரண்டாம் இடமும், யமாஹவின் டோவிஸியோஸோ மூன்றாம் இடமும் பிடித்தனர்.

சில்வர்ஸ்டோன்

மோட்டோ ஜிபியின் ஆறாவது சுற்று, ஜூன் 17-ம் தேதி இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் ஹோண்டாவின் ஆல்வரோ பாடிஸ்ட்டா வெற்றி பெற்றார். லாரன்சோ, ஸ்டோனர் உள்ளிட்ட வீரர்கள் தகுதிச் சுற்றில் மோதும்போது மழை வந்ததுதான் பாடிஸ்ட்டா முதல் இடம் பிடிக்கக் காரணம்.

நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய லாரன்சோ, மிகவும் கவனமாக ரேஸ் ஓட்டினார். ஒரு கட்டத்தில் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும், வளைவுகளில் யாரையும் முந்தாமல் நேர்கோட்டில் முந்திச்சென்று இரண்டாம் இடம் பிடித்தார் லாரன்சோ. மொத்தம் 20 லேப்புகள்கொண்ட இந்த ரேஸில் 12-வது லேப்பில் ஸ்டோனரை முந்தினார் லாரன்சோ. இருவருக்கும் 0.6 விநாடிகளே வித்தியாசம் என்பதால், ரேஸ் இறுதி வரை செம த்ரில்லிங். இறுதியில் 3 விநாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் லாரன்சோ.

மொத்தம் ஆறு சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஜார்ஜ் லாரன்சோ 140 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கேஸி ஸ்டோனர் 115 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டேனி பெட்ரோஸா 101 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

 இந்த சீஸனோடு நடப்பு சாம்பியன் கேஸி ஸ்டோனர் பைக் ரேஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பதால், அவருக்கு மாற்று வீரரைத் தேடுகிறது ஹோண்டா. யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோவைக் கோடிக்கணக்கில் கொடுத்து இழுக்கப் பார்த்தது. ஆனால், யமஹா முந்திக் கொண்டு 2014-ம் ஆண்டு வரை லாரன்சோ உடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்து இருக்கிறது. ஹோண்டாவின் அடுத்த டார்கெட்... ராஸி!

- சுரேன்