ஸ்பெஷல்
Published:Updated:

டெல்லியில் சூப்பர் ரேஸ்!

டெல்லியில் சூப்பர் ரேஸ்!

 ##~##

ந்திய வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி, டெல்லி புத் சர்வதேச ரேஸ் டிராக்கில் இந்த ரேஸ் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லத் தயாராகிவிட்டார் ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி. 43 வயதான பியாஜியுடன் இளம் வீரர்களான ஜோனத்தன் ரியா, டாம் சைக்ஸ் ஆகிய இருவரும் சாம்பியன் பட்டத்துக்கு மோதுகிறார்கள். வெல்லப்போவது யார்?

 அமெரிக்கா

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியின் ஆறாவது சுற்று மே, 28-ம் தேதி அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில் மில்லர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 21 லேப், 103 கி.மீ தூரம்கொண்ட இந்த ரேஸ் போட்டியை, முதல் இடத்தில் இருந்து துவக்கினார் லிபர்ட்டி அணியின் ஸ்மிர்ஸ். கார்லோஸ் செக்கா இரண்டாவது இடத்தில் இருந்தும், டாம் சைக்ஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். இந்த ஆண்டு பைக் வேகமாக இருந்தாலும், ஓட்டுவதில் சொதப்பும் கவாஸாகியின் டாம் சைக்ஸ் எப்போதும்போல அமெரிக்க ரேஸிலும் சொதப்பினார். முதல் லேப்பிலேயே முதல் இடத்துக்கு முன்னேறிய டாம் சைக்ஸ், ஏழு லேப்புகள் வரை முதல் இடத்தில் இருந்தார். அதன் பிறகு பின்னால் வந்தவர்களுக்கும் வழிவிட்டு ஓரமாக ஒதுங்கியது டாம் சைக்ஸின் கவாஸாகி பைக். கவாஸாகியின் வேகம் குறையத் துவங்கியதை உணர்ந்த டுகாட்டியின் கார்லோஸ் செக்கா, விறுவிறுவென முன்னேறி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். பிஎம்டபிள்யூவின் மார்க்கோ மெலான்ட்ரி இரண்டாவது இடத்தையும், ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

டெல்லியில் சூப்பர் ரேஸ்!

ரேஸ்-2

மில்லர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கில் பெற்ற முதல் வெற்றியோடு சேர்த்து ஐந்து வெற்றிகளைப் பெற்றிருந்த கார்லோஸ் செக்கா, ஆறாவது ரேஸிலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரேஸின் ஆரம்பமும் கார்லோஸ் செக்காவின் வெற்றியை உறுதிப்படுத்துவதுபோலவே இருந்தது. ஆனால், ஆறாவது லேப்பின்போது முதல் இடத்தில் இருந்த செக்காவின் பைக் கட்டுப்பாட்டை இழந்து தரையில் புரண்டு உருள, ரேஸைவிட்டு வெளியேறினார் செக்கா. இதனால் முதல் இடத்துக்கு பிஎம்டபிள்யூவின் மெலான்ட்ரிக்கும், ஹோண்டாவின் ஜோனத்தன் ரியாவுக்கும் இடையே போட்டி தீவிரமானது. இறுதியில் வென்றது மார்க்கோ மெலான்ட்ரி.

இத்தாலி

இத்தாலியின் மிஸானோ ரேஸ் டிராக்கில், ஏழாவது சுற்று ஜூன் 10-ம் தேதி நடைபெற்றது. கவாஸாகியின் டாம் சைக்ஸ் முதல் இடத்தில் இருந்தும், ஜோனத்தன் ரியா இரண்டாம் இடத்தில் இருந்தும், பிஎம்டபிள்யூவின் படோவினி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். முன்னணி வீரர்கள் மேக்ஸ் பியாஜியும், கார்லோஸ் செக்கா 16-வது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

டெல்லியில் சூப்பர் ரேஸ்!

ரேஸ்-1

பின்னால் இருந்து ரேஸைத் துவக்கினாலும், வளைவுகளில் முன்னால் சென்ற பைக்குகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் வரிசைக்கு முன்னேறிக்கொண்டு இருந்தனர் பியாஜியும் செக்காவும். டாம் சைக்ஸ், படோவினி, ரியா என அனைவரையும் முந்திச் சென்று பியாஜி முதல் இடம் பிடித்து வெற்றி பெற, கார்லோஸ் செக்கா இரண்டாம் இடம் பிடித்தார்.

ரேஸ்-2

இரண்டாவது ரேஸிலும் பியாஜியின் அதிரடிதான். ஆனால், கார்லோஸ் செக்காவுக்கு எதிரியாக இடையில் வந்தார் மார்க்கோ மெலான்ட்ரி. ஓவர்டேக் செய்யும் முயற்சியில் செக்காவுடன் போட்டி போட்ட மெலான்ட்ரியின் பைக், செக்காவின் பைக்கைப் பின்னால் தட்டியது. இதனால், பைக்கோடு ரேஸ் டிராக்கில் இருந்து பறந்துபோய் வெளியே விழுந்தார் கார்லோஸ் செக்கா. இதனால் பியாஜி எளிதில் முதல் இடம் பிடிக்க, ஜோனத்தன் ரியா இரண்டாம் இடம் பிடித்தார். பிஎம்டபிள்யூவின் லியான் ஹஸ்லாம் மூன்றாம் இடம் பிடித்தார்.

டெல்லியில் சூப்பர் ரேஸ்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் ஏழு சுற்றுகள் முடிந்து இருக்கும் நிலையில், 210.5 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் மேக்ஸ் பியாஜி முதல் இடத்தில் இருக்கிறார். ஜோனத்தன் ரியா 172 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டாம் சைக்ஸ் 164.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இன்னும் ஏழு சுற்றுகள் மீதம் இருக்கும் நிலையில், மீண்டும் மேக்ஸ் பியாஜி சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக்கிடக்கிறது!