ஸ்பெஷல்
Published:Updated:

ஃபீனிக்ஸ் பறவையாகுமா ஹோண்டா?

மார்க்கெட் ப்ளான்

 ##~##

ஹோண்டா என்றால், சூப்பர் டெக்னாலஜி என்பது அடையாளம். உலகின் மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவருகிறது. இந்தியாவில் கால் பதித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 5 லட்சம் கார்களை விற்பனை செய்து முடித்திருக்கிறது ஹோண்டா. இதே காலகட்டத்தில் சென்னையில் தொழிற்சாலையைத் துவக்கிய ஹூண்டாய், இதுவரை 20 லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்து இருப்பதோடு, வெளிநாடுகளுக்கு மட்டுமே 10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. 

இந்தியாவில் பெட்ரோலின் விலை மாதந்தோறும் உயர்ந்துகொண்டு இருக்கும் நிலையில், வெறும் பெட்ரோல் கார்களை மட்டுமே நம்பியிருக்கும் ஹோண்டாவால், இந்திய ரேஸில் முந்த முடியவில்லை. டீசல் கார் இல்லை; 2-4 லட்ச ரூபாயில் சின்ன கார் இல்லை; அதிக சர்வீஸ் மற்றும் ஷோ ரூம்கள் இல்லை; பிரீமியம் பிராண்ட் என்ற இமேஜ் - இவை எல்லாம் சேர்ந்து இந்தியாவில் ஹோண்டாவின் வளர்ச்சியைப் பதம் பார்த்துவிட்டன. ராஜஸ்தான் மாநிலம் டபுகரா மாகாணத்தில் 2008-ம் ஆண்டே புதிய தொழிற்சாலையைக் கட்டி முடித்தது ஹோண்டா. 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்தத் தொழிற்சாலையில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தயாரிப்புப் பணிகள் துவங்கவே இல்லை. காரணம், நொய்டா தொழிற்சாலையை அதனால் முழுமையாகப் பயன்படுத்த

ஃபீனிக்ஸ் பறவையாகுமா ஹோண்டா?

முடியவில்லை. ஆம், நொய்டா தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1,20,000 கார்களைத் தயாரிக்க முடியும். ஆனால், தற்போது இங்கே வெறும் 60,000 கார்கள் மட்டுமே உற்பத்தி ஆகின்றன. இப்போதைக்கு நம் நாட்டில் ஹோண்டாவின் மார்க்கெட் அவ்வளவுதான்.

இப்போது வேதனையை உதறிவிட்டு, வெற்றிப் பாதையில் பயணிக்க புது ரூட் போட்டு இருக்கிறார், ஹோண்டா இந்தியா கார் நிறுவனத்தின் புதிய தலைவர் ஹிரோனரி கனயாமா. ''இந்தியாவில் 15 ஆண்டுகளில் வெறும் 5 லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்திருக்கும் ஹோண்டா, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 5 லட்சம் கார்களை விற்பனை செய்யும்'' என்று புதிய நம்பிக்கையோடு அவர் சொல்லக் காரணம் - டீசல் கார் உற்பத்தியில் இறங்குவது என்று ஹோண்டா எடுத்த முடிவு.

டீசல் கார் இல்லை என்றால், இந்தியாவில் வளர முடியாது என்பதைத் தாமதமாக உணர்ந்த ஹோண்டா, அடுத்த ஆண்டு துவக்கத்தில் டீசல் காரை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது. இந்தியாவுக்குப் பிரத்யேகமாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைத் தயாரித்து, அதை இப்போது பரிசோதித்து வருகிறது. அடுத்த ஆண்டு பிரியோ, ஜாஸ், ஃபிரீட் உள்ளிட்ட கார்களில் இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது.

ஃபீனிக்ஸ் பறவையாகுமா ஹோண்டா?

அடுத்து, தற்போது விற்பனையில் இருக்கும் சிவிக் காரில் சில மாற்றங்களைச் செய்து, புதிய சிவிக் வெளியிடவும் ஹோண்டா திட்டமிட்டு இருக்கிறது. அதேபோல, சிஆர்-வி காரிலும் சில மாற்றங்களைச் செய்ய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து டொயோட்டா இனோவாவுக்குப் போட்டியாக ஃபீரிட் என்ற எம்பிவி காரையும் அது விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது. அதன் பிறகு, 2014 - 2015-ம் ஆண்டுவாக்கில் தனது பிரம்மாஸ்த்திரத்தை அது பயன்படுத்த இருக்கிறது. 1 லிட்டர் இன்ஜின்கொண்ட 2 - 3 லட்ச ரூபாய் விலையில் ஒரு சின்ன காரைக் களம் இறக்கப்போகிறது ஹோண்டா.

ஃபீனிக்ஸ் பறவையாகுமா ஹோண்டா?

ஹோண்டா என்ற பெயருக்காகவே வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் எனும் மனநிலையில் இருந்து, ஹோண்டா வெளியே வந்திருப்பதே ஒரு நல்ல விஷயம். புது கார் அறிமுகங்களோடு மட்டும் அல்லாமல், விளம்பர உத்திகளிலும் அதீதக் கவனம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இது தவிர, தனது டீலர்களின் சர்வீஸ் வசதி மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சிகளிலும் ஹோண்டா இறங்கி இருக்கிறது.

பெரிய மாற்றமாக, ஹோண்டா என்றால் பிரீமியம் பிராண்ட் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்டதை மாற்றத் துடிக்கிறது ஹோண்டா. முதல் கட்டமாக, கார்களின் விலையைக் குறைக்காமல் அதில் பல்வேறு புதிய சிறப்பம்சங்களைச் சேர்க்கத் திட்டமிட்டு இருக்கிறது.

ஹோண்டா கார்களில் எப்போதுமே குறை கண்டுபிடிப்பது சிரமம். இந்தியாவில் இப்போது கடைசி இடத்தில் இருந்தாலும், அது போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறினால், ஃபீனிக்ஸ் பறவையாக ஹோண்டா மீண்டும் உயிர்பெற்று எழுந்துவிடும்!

- சார்லஸ்