ஸ்பெஷல்
Published:Updated:

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை
 ##~##

ஃப்ளூயிடிக் டிசைனில் புது வடிவம் எடுத்து வந்திருக்கும் ஹூண்டாய் ஐ20 காரின் வெளித்தோற்றம் அனைவருக்குமே பிடிக்கும். ஹூண்டாயின் வெற்றிகரமான இந்த டிசைன், ஐ20 காருக்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது. பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களுடன் விற்பனையாகும் இந்த காரில், ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டும் உண்டு. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார், பெரும்பாலும் சிட்டி டிரைவிங் செய்ய சிறப்பாக இருக்கும். ஆனால், நெடுஞ்சாலை மற்றும் மலைப் பாதைப் பயணத்துக்கு எப்படி இருக்கும்? டெஸ்ட் செய்ய முடிவெடுத்தோம்.

 சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்குச் செல்லத் தீர்மானித்தோம். கொல்லிமலை, வரலாற்றுச் சிறப்புமிக்க மலைத் தொடர். சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த மலையைப் பற்றி புறநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் குறிப்புகள் உண்டு. சென்னையில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், இராசிபுரம், காளப்பநாயக்கன்பட்டி வழியாக கொல்லிமலையை அடையத் திட்டம்.

நாம் டெஸ்ட் டிரைவ் செய்த ஹூண்டாய் ஐ20 1.4 ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் காரில், சிறப்பம்சங்களுக்குப் பஞ்சமே இல்லை. ஏபிஎஸ், ஏர் பேக், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, பவர் விண்டோஸ், ரிவர்ஸ் கேமரா, பவர்டு சைடு மிரர்ஸ், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், ப்ளூ-டூத் கனெக்டிவிட்டி என ஒரு சொகுசு காரில் உள்ள அத்தனை வசதிகளும் இருந்தன. இன்ஜினை ஸ்டார்ட் செய்து பிரேக்கில் கால் வைத்துக்கொண்டு, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸின் லீவரை பார்க்கிங் மோடில் இருந்து டிரைவ் மோடுக்கு மாற்றி, பிரேக்கை ரிலீஸ் செய்ததும் ஐடிலிங்கில் கார் நகர்கிறது. ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதும் சட்டென வேகம் எடுக்கிறது.

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை

சென்னையில் காலை 10 மணிக்குப் புறப்பட்டோம். கிளட்ச் மிதித்து கியர் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய தொல்லை இல்லாததால், நகரப் போக்குவரத்து நெருக்கடியில் ரிலாக்ஸ் ஆக ஓட்டுவதற்குத் ஈஸியாக இருக்கிறது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ். தாம்பரம் கடந்து திருச்சி நோக்கிச் செல்லும் நான்கு வழிச் சாலையில் நுழைந்ததும் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி பிடிக்க... நம் ஆர்வத்தை சட்டை செய்யாமல், படிப்படியாகவே வேகமெடுக்கிறது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ். அதேபோல், குறிப்பிட்ட வேகம் கடந்ததும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் கியர் மாறும்போது ஏற்படும் துள்ளலையும் (ஜெர்க்) நன்றாக உணர முடிகிறது.

ஆட்டமோ அதிர்வுகளோ இல்லாமல், நான்கு வழிச் சாலையில் ஒரே சீராகப் பயணிக்க சிறப்பாக இருக்கிறது ஐ20. ஆனால், முன்னால் செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்ய சீரான வேகத்தில் சென்றுதான் முந்த வேண்டும். வேகத்தைக் குறைத்து விட்டு முந்த முயன்றால், தோல்விதான். கியர் பாக்ஸ் தன் கடமையைத் திட்டமிட்டபடிதான் செய்யும். 'பவர் தருகிறேன் பேர்வழி’ என்று ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், வெறும் உறுமல் சத்தம் மட்டும்தான் கேட்கும். எனவே, இந்த காரில் நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வது கவனமாகச் செய்ய வேண்டிய வேலை. அதேசமயம், சீரான வேகத்தில் படிப்படியாக வேகமெடுப்பதிலும், குறைந்த வேகத்தில் சட்டென வேகமெடுப்பதிலும் சிறப்பாக இருக்கிறது. மேலும், பவர் ஸ்டீயரிங் பிடித்து ஓட்டுவதற்கு மிகச் சுலபமாக இருக்கிறது. பிரேக்கின் செயல்பாடும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆனால், கிளட்ச் இல்லாததால் ஒரு காலுக்கு வேலையே இல்லாமல் போரடிக்கிறது.

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை

திண்டிவனம், விழுப்புரம் கடந்து உளுந்தூர்பேட்டையை எட்டினோம். இங்கிருந்து சேலம் வரை நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் முடிந்துவிட்டன. அதாவது, ஆத்தூரில் இருந்து சேலம் வரை மட்டும் பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இருவழிச் சாலையாக இருந்தபோது தியாகதுர்க்கம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒவ்வோர் ஊரைக் கடப்பதற்குள்ளும் தாவு தீர்ந்துவிடும். அந்த ஊர்களை எல்லாம், பைபாஸில் பெயர்ப் பலகைகளாக மட்டுமே காண முடிகிறது. ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சாலையில் மிக விரைவாகவே இந்த ஊர்களைக் கடந்துவிட முடிகிறது. ஆனால், நான்கு வழிச் சாலையாக ஆரம்பிக்கும் இந்தச் சாலை, திடீரென இரு வழிச் சாலையாக சில இடங்களில் அமைக்கப்பட்டதன் காரணம் புரியவில்லை. அதற்கான எந்த அறிவிப்புப் பலகைகளோ, எச்சரிக்கைச் சின்னங்களோ இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில், நான்கு வழிச் சாலையில் வலதுபுற லேனில்தான் விரைவாகச் செல்லும் வாகனங்கள் செல்லும். அதே மனநிலையோடு திடீரென இரு வழியாக மாறும் சாலையில் செல்ல நேர்ந்துவிட்டால், ஆபத்தில்தான் முடியும்.

ஆத்தூர் பைபாஸில் இருந்து ஊருக்குள் நுழைந்து ராசிபுரம் செல்லும் சாலையைப் பிடித்தோம். இரு வழிச் சாலையான இதில் ஏராளமான வளைவு நெளிவுகள். ஆனால், தரமான சாலை. ராசிபுரம் எல்லையில் இடதுபுறம் திரும்பிய சாலையில் பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி வழியாக கொல்லிமலைச் சாலையைப் பிடித்தோம். காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது கொல்லிமலை அடிவாரம். அங்கு காரவள்ளி என்ற ஊர். அங்கிருந்து 22 கி.மீ தூரம்தான் கொல்லிமலையின் முக்கிய ஊரான செம்மேடு. அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள செம்மேடு வரை 70 கொண்டை ஊசி வளைவுகள். மிக மிகக் கவனமாகப் பயணிக்க வேண்டிய மலைச் சாலை. எதிரே வரும் வாகனம் எளிதில் தெரியாத அளவுக்கு வளைவு நெளிவுகள். ஆனால், சாலை மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை

செங்குத்தாக ஏறும் மலைப் பாதையில் ஐ20 காரின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என்ன பாடுபடப்போகிறதோ என்று நினைத்தோம். ஆனால், நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தது இதன் செயல்பாடு. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் லீவரில் பார்க்கிங், ரிவர்ஸ், நியூட்ரல், டிரைவ், 2, எல் என 6 மோடுகள் உள்ளன. இதில் '2’ மோடுக்கு மாற்றினால், இரண்டாவது கியருக்கேற்ற வேகத்தில் செல்லும். அதேபோல், 'எல்’ மோடுக்கு மாற்றினால், முதல் கியருக்கான வேகத்தில் மட்டுமே செல்லும். ஆனால், இந்த இரண்டு ஆப்ஷன்களையும் பயன்படுத்த அவசியம் இல்லாமல், டிரைவ் மோடிலேயே மிக அழகாக ஏறியது ஐ20. மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரைப் பட்டெனக் குறைத்து பவரைக் கூட்டி ஓட்டும் நம்மை சோம்பேறி ஆக்குகிறது எனலாம். நடுகோம்பை, சோளப்பேடு என இரண்டு இடங்களைக் கடந்ததும் வருகிறது செம்மேடு. சென்னையில் இருந்து 380 கி.மீ பயணம் செய்து கொல்லிமலையை அடையவும் இருட்டத் துவங்கி இருந்தது. அதனால், தனியார் விடுதியில் தங்கினோம்.

கொல்லிமலையில் பயப்படவைக்கும் பள்ளத்தாக்குகள் இல்லை; மிரளவைக்கும் காட்டு விலங்குகளும் இல்லை. ஆனால், அத்தனையும் பசுமை. கடல் மட்டத்தில் இருந்து 1,300 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் செம்மேடுதான் கொல்லிமலையின் தலைநகரம் போல. காவல் நிலையம், பஸ் ஸ்டாண்ட், உணவகங்கள், விடுதிகள் என எல்லாம் இந்த ஊரை ஒட்டியே அமைந்திருக்கின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவராகப் போற்றப்படும் வல்வில் ஓரி எனும் மன்னனால், கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த கடைச் சங்க காலமான கி.பி 200 ஆண்டுக்கு முன்பு ஆளப்பட்ட நிலப் பகுதி கொல்லிமலை என்கிறது வரலாறு. வல்வில் ஓரி மன்னனுக்கு செம்மேட்டில் சிலையும் உண்டு.

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை

அதிகாலையிலேயே கொல்லிமலையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். சிலுசிலுவென்று மிதமாக வீசிய காற்று, மரங்களைத் தாலாட்டியபடி இருக்க, எங்கும் பறவைகள் எழுப்பும் ஒலிகள். அடிவாரத்தில் இருந்து மலை மீது ஏறுவதற்குத்தான் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் என்றால், கொல்லிமலையில் இருக்கும் ஒவ்வோர் இடத்துக்கும் செல்ல வேண்டுமென்றாலும் சில பல கொண்டை ஊசி வளைவுகளைச் சந்திக்க வேண்டும். ஆனாலும், இந்த மலைப் பாதையின் அத்தனை சாலைகளும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தன. அதனால், ஐ20 காருக்கு எந்த சிரமமோ, சவால்களோ இல்லை. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என்பதால், பெட்ரோல் கொஞ்சம் தண்ணீராகச் செலவழிந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நகர நெருக்கடியில் ஓட்டுவதற்கும், பெண்கள் ஓட்டுவதற்கும் இந்த கார் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.  

சுற்றுலாவுக்குப் பிரபலமாகாத கொல்லிமலைக்கு, மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக வளர்வதற்கான அத்தனை தகுதிகளும் உண்டு. அருவிகள், கோயில்கள், படகு குழாம், தாவரவியல் பூங்கா, வியூ பாயின்ட் என எல்லாமே அழகு. மேலும், கோடை வெப்பம் தரைப் பகுதியில் 100 டிகிரியையும் தாண்டிக் கொளுத்தும் சமயத்தில், வெயிலிலும் வியர்க்காத இதமான சூழல் நிலவுகிறது. இரவில் இறங்கிய குளிர், கம்பளியைத் தேட வைக்கிறது. ஆனால், நவம்பர் முதல் மார்ச் வரை சீஸன் இன்னும் நன்றாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். வறட்சியான மாவட்டமான நாமக்கல்லில், எப்போதும் பசுமை பூத்துக்கிடக்கும் கொல்லிமலை ஒரு வரப்பிரசாதம். மலைப் பகுதி முழுவதும் பசுமை போர்த்தி அடர்ந்து நிற்கின்றன விதவிதமான மரங்கள். பலா, மிளகு, வாழை, பைனாப்பிள், குச்சிக் கிழங்கு, நெல் என மலைப் பகுதி முழுக்க விவசாயம் செழித்து நிற்கிறது.

கொல்லிமலையில் இருக்கும் அரப்பளீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தம். செம்மேட்டில் இருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கும் இந்தக் கோயில், 12-ம் நூற்றாண்டில் உருவானதாம். இந்தக் கோயிலில் இருந்து சுமார் 1,000 படிக்கட்டுகள் கீழே இறங்கினால்.... ஆகாச கங்கை அருவி பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. மாசில்லா அருவி, சந்தன அருவி, நம்ம அருவி என மேலும் மூன்று அருவிகள் கொல்லிமலையில் உள்ளன. பழைமையான சிவன் கோயில், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் என மலையில் சுற்றுலாப் பயணிகளைவிட பக்தர்களின் எண்ணிக்கையே அதிகம்.

செம்மேட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் வியூ பாயின்ட் அருமையான இடம். குதிரை லாடம்போல அமைந்த மலைத் தொடரின் நடுவே உள்ள முகட்டில் அமைந்திருக்கிறது வியூ பாயின்ட். இதன் தரைப் பகுதியில் இருந்து மேல் நோக்கி எழும் காற்று உச்சி வெயிலிலும் சில்லென உடலில் அறைவது சுகமான அனுபவம். மூலிகைப் பண்ணை, தொலை நோக்கி மையம் போன்ற சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. தனியார் விடுதிகள், இளைஞர் விடுதி, அரசு விடுதி என நல்ல வசதிகள். சுற்றுலாவுக்குப் பிரபலமாகாததால் வாகன இரைச்சல் குறைவு. அதனால், மாசும் குறைவு.

கொல்லிமலையின் பிரதான இடங்களை அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, மாலையில் கீழே இறங்கத் தொடங்கினோம். 70 கொண்டை ஊசி வளைவுகளிலும் ஐ20 காரின் பவர் ஸ்டீயரிங் மிகச் சுலபமாக கடக்க உதவியது. சென்னையில் இருந்து வந்த வழியே திரும்பாமல், காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து இடது பக்கம் நாமக்கல் செல்லும் சாலையில் திரும்பி புதன் சந்தை என்ற ஊர் வழியாக சேலம் நான்கு வழிச் சாலையைப் பிடித்து சென்னை நோக்கிச் சீறியது ஹூண்டாய் ஐ20.  

கிரேட் எஸ்கேப்: சென்னை to கொல்லிமலை