ஸ்பெஷல்
Published:Updated:

மோனோ சைக்கிள் பழசா? புதுசா?

மோனோ சைக்கிள் பழசா? புதுசா?

 ##~##

ரேஸ் தொடர்பான படம் ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகும்போது, உலகில் உள்ள கார், பைக் பிரியர்களுக்கு அது தலைப்புச் செய்தியாகும். ஆனால், 'மென் இன் பிளாக் 3’ எந்த வகையிலும் ரேஸ் தொடர்பான படம் அல்ல. ஆனால், படத்தில் ஒரு சில காட்சிகளே வந்து போகும் மோனோ சைக்கிள், பைக் ரசிகர்கள் மத்தியில் பரபர பப்ளிசிட்டியை அள்ளி இருக்கிறது. 

வேற்றுக் கிரகவாசியான வில்லனை, வில் ஸ்மித் சேஸ் செய்யும் ஒரு காட்சியில்தான் 'விர்ர்ரூம்ம்ம்’ என உறுமுகிறது இந்த மோனோ சைக்கிள். ஏதோ, உலகில் இல்லாத புதுமையான ஒரு ஐடியாவை இந்தப் படக் குழு கண்டுபிடித்து விட்டதாக சினிமா ரசிகர்கள் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால், தீவிர பைக் பிரியர்களுக்கு இந்த மோனோ வீல் கான்செப்ட், கறுப்பு வெள்ளை காலத்துப் பழசு என்பது தெரியும்.

மோனோ சைக்கிள் பழசா? புதுசா?

உலகின் முதல் மோனோ சைக்கிள் உருவாக்கப்பட்டது 1930-ல். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் ஜே.ஏ.பர்வஸ் எனும் அமெரிக்கர். தான் உருவாக்கிய மோனோ சைக்கிளுக்கு, 'டைனாஸ்ஃபியர்’ என பெயரும் வைத்தார். ஸ்டீயரிங் திருப்புவதிலும் ஒற்றை வீலை பேலன்ஸ் செய்வதிலும் இருந்த சிக்கல்; ஒருவர் மட்டுமே பயணம் செய்வதில் இருந்த அசௌகரியம்; ரங்க ராட்டினம் மாதிரி இருந்த அதன் சைஸ் போன்றவை எல்லாம் சேர்த்து டைனாஸ்ஃபியரை ஃப்ளாப் ஆக்கிவிட்டது.

ஆனால், மனம் தளராத பைக் ஆர்வலர்கள், டைனாஸ்ஃபியரை அடிப்படையாக வைத்து மோனோ சைக்கிள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். ஹோண்டா நிறுவனம், 2007-ல் தன் முதல் மோனோ சைக்கிளை 'வீல் சர்ஃப்’ என்ற பெயரில் மார்க்கெட்டுக்குக் கொண்டுவந்தது. இப்போது வரை மக்களின் பயன்பாட்டுக்காகப் பெரும் அளவில் தயாரிக்கப்படும் ஒரே மோனோ சைக்கிள், வீல் சர்ஃப் மட்டுமே. அதிகப்பட்சமாக 48 கி.மீ வேகம் செல்லும் இந்த மோனோவை, அதில் பாதி அளவு வேகத்தில் ஓட்டுவதற்கே தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம், மோனோ சைக்கிளில் டிரைவிங் ரிஸ்க் அதிகம். இடத்தை அடைக்காமல் ஒரே வீலில் ஓடும் என்பதைத் தவிர, மற்ற எல்லா அம்சங்களுமே மைனஸ்தான்!

இன்றைய நிலவரப்படி, தீம் பார்க்குகளுக்கான ஒரு கேளிக்கை வாகனம் என்ற அளவில் மட்டுமே மோனோ சைக்கிளின் பயன்பாடு உள்ளது. திராட்டில் கன்ட்ரோல், பேலன்ஸ் கன்ட்ரோல் எனப் பல அம்சங்கள் மோனோ சைக்கிள் பயன்பாட்டுக்குத் தடைக் கற்களாக உள்ளன. ஆனால், தொடர்ந்து நடைபெறும் ஆராய்ச்சிகள், என்றாவது ஒருநாள் மோனோ சைக்கிளை சாத்தியம் கொண்டதாக மாற்றிவிடும்.

அதுவரை, கிராஃபிக்ஸில் சாகசங்கள் காட்டும் ஹாலிவுட் ஹீரோக்களைப் பார்த்துக் கை தட்ட வேண்டியதுதான்!

- மோ.அருண்ரூப பிரசாந்த்