ஸ்பெஷல்
Published:Updated:

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?

முழுமையான ரிப்போர்ட்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?
 ##~##

ந்திய கார் மார்க்கெட்டின் தற்போதைய சர்ப்ரைஸ் ஸ்டார், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். பிரம்மாண்டமான எஸ்யூவி தோற்றம், அசத்தலான சிறப்பம்சங்கள், பவர்ஃபுல் ஈக்கோபூஸ்ட் இன்ஜின் என எல்லாவற்றையும் சேர்த்து, பத்து லட்ச ரூபாய்க்குள் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக அறிவித்தது ஃபோர்டு. இதுதான் ஈக்கோஸ்போர்ட்டின் உலக கவனத்துக்குக் காரணம். உலகிலேயே முதன்முதலில் இந்தியாவில் இந்த காரை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு, கடந்த மாதம் இந்த காரை போர்வைகள் எதையும் போர்த்தி மறைக்காமல், செங்கல்பட்டு அருகே டெஸ்ட் செய்தது. அந்த காரை அப்படியே உலகிலேயே முதன்முறையாகப் படம் பிடித்தது மோட்டார் விகடன்.

 காரை, போர்வைகள் போர்த்தி எதையும் மறைக்காமல் டெஸ்ட் செய்யக் காரணம், மைலேஜ் டெஸ்ட்டிங்தான். கூடுதல் உபகரணங்களைப் பொருத்தினால் மைலேஜ் குறையும். அதனால், உண்மையான மைலேஜைத் தெரிந்துகொள்ள காரை மூடாமல் டெஸ்ட் செய்தது ஃபோர்டு. சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, தினசரி நான்கு கார்களை திண்டிவனம் வரை அனுப்பி மைலேஜ் டெஸ்ட் செய்தது. அப்போது ரகசியமாக எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை அனைத்தும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?

டிசைன்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், முதன்முறையாக ஈக்கோஸ்போர்ட் காரைக் காட்சிக்கு வைத்தது ஃபோர்டு. கிட்டத்தட்ட 95 சதவிகிதம் கான்செப்ட் காரில் என்ன இருந்ததோ, அதை அப்படியே தயாரித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதுவரை எந்த எஸ்யூவியிலும் இல்லாத வகையில், முன் பக்கத்தை முற்றிலுமாக புதிய வடிவமைப்புடன் உருவாக்கி இருக்கிறது ஃபோர்டு. ஆடி கார்களில் இருக்கும் 'டே டைம் ரன்னிங்’ விளக்குகள் போல நீளமான சின்ன ஹெட்லைட்ஸ் பவர்ஃபுல்லாக இருக்கிறது. ஈக்கோஸ்போர்ட்டை இந்தியாவின் நகரத்துக்கான முதல் எஸ்யூவி என்கிறது ஃபோர்டு. அதற்கு ஏற்றபடி, காரை நான்கு மீட்டருக்குள் சுருக்கி இருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காரின் பின் பக்கம் நீண்டு இருக்கும். சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்ட காரைப் பார்த்தபோது, பின் பக்கம் சுருக்கப்பட்டு இருப்பது நன்றாகத் தெரிந்தது. இதுவரை இந்தியாவில் 4 மீட்டருக்குள்ளான எஸ்யூவி இல்லை என்பது ஈக்கோஸ்போர்ட்டின் மிகப் பெரிய பலம்.

பக்கவாட்டுக் கண்ணாடிகளிலேயே இண்டிகேட்டர் விளக்குகள், பொருட்களை வைத்துக்கொள்ள மேற்கூரையில் ரூஃப் ரெயில், பின் பக்கம் அசத்தலான டெயில் விளக்குகள், ஆஃப் ரோடு கார் போன்று பிரம்மாண்டத்தைக் கூட்டும் பின் பக்க ஸ்பேர் வீல் என டிசைனில் அதிரடியான காராக இருக்கிறது ஈக்கோஸ்போர்ட். நகருக்குள் பயன்படுத்தப்போகும் எஸ்யூவி என்றாலும், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ உயரம். இதனால், எவ்வளவு பெரிய ஸ்பீடு பிரேக்கர் இருந்தாலும் இன்ஜின் அடிபடுமோ என பயப்பட வேண்டாம். 550 மிமீ உயரத்துக்கு, சேற்றுக்குள் சிக்கினாலும் லாவகமாக வெளியே வரமுடியும் என்கிறது ஃபோர்டு.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?

உள்ளே

காரின் டேஷ் போர்டு, அப்படியே ஃபோர்டு ஃபியஸ்ட்டாதான். ஃபியஸ்ட்டாவின் சென்டர் கன்ஸோலில் மேலே ஆரஞ்சு வண்ண விளக்குகள் இருக்க, ஈக்கோஸ்போர்ட்டில் நீல வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ப்ளூ-டூத் மூலம் போனையும், மியூசிக் சிஸ்டத்தையும் இணைக்கும் 'சிங்க்’ தொழில்நுட்பமும் இதில் இருக்கிறது. குரல் மூலமாகவே மியூசிக் சிஸ்டத்தை இயக்க முடியும். போனில் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், காரைவிட்டு வெளியே வர வேண்டும் என்றால், போனை காரின் ப்ளூ-டூத்தில் இருந்து துண்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 'சிங்க்’ தொழில்நுட்பம் ஆட்டோமேட்டிக்காகவே ஆஃப் ஆகிவிடும். அதேபோல், காருக்குள் திரும்பவும் நுழையும்போது ஆட்டோமேட்டிக்காகவே காரின் 'சிங்க்’ தொழில்நுட்பத்துடன் இணைந்துகொள்ளும்.

தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்கள் வைக்க மொத்தம் 20 கப் ஹோல்டர்கள் காருக்குள் உள்ளன. க்ளோவ் பாக்ஸில் பாட்டில்களை வைத்துவிட்டால், சில்லென வைக்கும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் வசதியும் இதில் உண்டு. முன் பக்க சீட்டுக்கு அடியில் ட்ரே ஒன்று உள்ளது. நகை, பணம் என முக்கியமான விஷயங்களை இதற்குள் வைத்துவிட்டால், ட்ரே யார் கண்ணிலும் படாமல் சீட்டுக்கு அடியில் தள்ளி விடலாம். சிறப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்யும் கீ-லெஸ் என்ட்ரி சிஸ்டம் உண்டு. ஈக்கோஸ்போர்ட்டில் 'ஹில் லான்ச் அசிஸ்ட்’ எனும் தொழில்நுட்பம் இருப்பதால், மலைப் பாதை அல்லது மேடான சாலைகளில் செல்லும்போது, பிரேக்கில் இருந்து கால் எடுத்துவிட்டால் கார் பின்னால் போகாது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?

இன்ஜின்

1 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் இன்ஜினை இதில் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. வெறும் 1000 சிசி மட்டுமே திறன்கொண்ட இந்த 3 சிலிண்டர் இன்ஜினின் பவர் 120 bhp என்பதுதான் சூப்பர் ஸ்பெஷல். பவர் அதிகம். அதே சமயம், 1 லிட்டர் சின்ன இன்ஜின் என்பதால், லிட்டருக்கு 16 கி.மீ வரை மைலேஜ் தரும் என்கிறது ஃபோர்டு. பெட்ரோல் இன்ஜின் தவிர, டீசல் இன்ஜின்கொண்ட மாடலும் ஈக்கோ ஸ்போர்ட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்ட நான்கு மாடல்களில் இரண்டு கார்கள் பெட்ரோல். இரண்டு டீசல் கார்கள்.

5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸோடு, 6-ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் தொழில்நுட்பம் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலையும் விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஃபோர்டு. ஆனால், சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்ட நான்கு கார்களுமே மேனுவல் கியர் பாக்ஸைக் கொண்டிருந்ததால், இப்போதைக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் வராது என்றே தெரிகிறது.

விலை

விலையைப் பொறுத்தவரை 10 லட்ச ரூபாய்க்குள் பெட்ரோல் மாடலை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது ஃபோர்டு. டீசல் மாடலின் விலை 12 லட்ச ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?

எப்போது?!

முதலில், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஈக்கோஸ்போர்ட்டின் அறிமுகத்தை, அடுத்த ஆண்டு துவக்கத்துக்குத் தள்ளி வைத்துவிட்டது ஃபோர்டு. காரணம், டீசல் மாடல்தான் அதிக அளவில் விற்பனையாகும் என ஃபோர்டு எதிர்பார்ப்பதுதான். இதனால், டீசல் இன்ஜின்களின் தயாரிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும், காரை அறிமுகப்படுத்திவிட்டு வெயிட்டிங் பீரியட் கொடுத்து வாடிக்கையாளர்களை டென்ஷனாக்க விரும்பவில்லை ஃபோர்டு. ஈக்கோஸ்போர்ட்டின் உற்பத்தியையும் அதிகப்படுத்திவிட்டு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் முழு பலத்தோடு களம் இறங்க ஃபோர்டு ரெடி!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - என்ன ஸ்பெஷல்?