ஸ்பெஷல்
Published:Updated:

ரீடர்ஸ் டெஸ்ட்: ரெனோ ஃப்ளூயன்ஸ், கோவை

சலிப்பு தட்டாத ஃப்ளூயன்ஸ்!

 ##~##

ம் ஊர் சாலைகளுக்குத் தகுந்த மாதிரி வடிவமைக்கப் பட்ட, தனது முதல் செடான் காரான ஃப்ளூயன்ஸ் உடன் களத்தில் குதித்துள்ளது ரெனோ நிறுவனம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், கீ-லெஸ் ஸ்மார்ட் கார்டு, பவர் ஸ்டீயரிங், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, இரண்டு காற்றுப் பைகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம், வடிவமைப்பு போன்ற ஸ்பெஷல் அம்சங்களுடன், செடான் கார் மார்க்கெட்டில் முக்கியமான காராக இருக்கிறது ஃப்ளூயன்ஸ். மோட்டார் விகடன் கோவை வாசகர்கள் முன் ஃப்ளூயன்ஸை நிறுத்தினோம். இனி அவர்களின் டெஸ்ட் ரிப்போர்ட்.... 

மணிபாரதி (கல்லூரி மாணவர்) 

டிரைவிங் சீட் பொசிஷன் சூப்பர். அகலமான விண்ட் ஸ்கிரீனில் சாலை தெளிவாகத் தெரிகிறது. காரில் உள்ள அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் டிஜிட்டல் மீட்டரில் பளிச்சிடுகிறது. கியர் லீவர், சரியான இடத்தில் கைக்கு அடக்கமாக இருக்கிறது. ரிவர்ஸ் கியர் மாற்ற, லீவரை மேலே தூக்கி மாற்றும்படி இருப்பதைப் பழகிக்கொள்ள வேண்டும். நீளமான காராக இருந்தாலும், சிட்டியில் ஓட்ட சௌகரியமாகவே இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் இருக்க வேண்டிய ஆடியோ கன்ட்ரோல்கள் இடம் மாறி இருப்பது, முதன்முறையாக ஓட்டும்போது குழப்பங்களை உருவாக்குகிறது. அதேபோல், சென்டர் கன்ஸோலில் ஆடியோ சிஸ்டத்தின் பட்டன்கள் மிகச் சிறிதாக இருப்பதால், பயன்படுத்த எளிதாக இல்லை.

ரீடர்ஸ் டெஸ்ட்: ரெனோ ஃப்ளூயன்ஸ், கோவை

 நவீன்குமார் (கல்லூரி மாணவர்)

 எந்த அளவுக்குப் பாதுகாப்பு முக்கியமோ, அதே அளவுக்கு, சௌகரியம் மற்றும் காரின் உள்ளலங்காரங்கள் சலிப்புத் தட்டாமல் இருக்க வேண்டும். இதில் ஸ்கோர் செய்துவிடுகிறது ஃப்ளூயன்ஸ். இன்டீரியர் ஆக்சஸரீஸ் ரசிக்குப்படி இருக்கின்றன. குறிப்பாக, பின் சீட்டில் உட்காருபவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆர்ம் ரெஸ்ட் வசதியாக இருக்கிறது. ஆனால், கொஞ்சம் உயரமானவர்கள் அமர்ந்தால் கூரை இடிக்கலாம். சீட் அமைப்புகளும் விசாலமாகவும், வசதியாகவும் உள்ளன. பின் சீட்டில் மூன்று பேர் ரிலாக்ஸாக உட்கார முடியும். ஆனால், தொடைகளுக்குப் போதுமான சப்போர்ட் இல்லை. இட வசதியும், 530 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியும், நீண்ட தூரப் பயணங்களுக்கு வசதியாக இருக்கும்.

 லஷ்மி நரசிம்மன் (கல்லூரி மாணவர்)

 ஒரு ரேஸ் கார் தோற்றத்தில் வெளிவந்துள்ள அற்புதமான கார் ரெனோ ஃப்ளூயன்ஸ். கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ என்பதால், பெரிய ஸ்பீடு பிரேக்கர்களைக்கூட உரசல் இல்லாமல் கடக்கிறது. காரில் உள்ள 10 ஸ்போக்ஸ் அலாய் வீல், காரின் தோற்றத்துக்கு அழகு சேர்க்கிறது. க்ரோம் கோட்டிங்கொண்ட ஃபாக் லேம்ப்கள் மற்றும் முன் பக்க கிரில் படுகவர்ச்சியானவை. காரின் பின் பகுதி ஸ்கோடா சூப்பர்பை நினைவுபடுத்தினாலும் புதுமையாகவே காட்சி அளிக்கிறது. விலை கொஞ்சம் அடக்கமாக இருந்திருக்கலாம்.

 தீபக் கௌதம் (கல்லூரி மாணவர்)

 டீசல் காராக இருந்தாலும், அதிர்வுகள் அவ்வளவாக இல்லை. சின்ன இன்ஜின் என்றாலும் இது வெளிப்படுத்தும் வேகம் பிரம்மிப்பாக இருக்கிறது. 2000 ஆர்பிஎம் வரை கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், அதைத் தாண்டிய பிறகுதான் டர்போவின் முழு பவரை உணர முடிகிறது. அதன் பின் கார் சீறிக்கொண்டு செல்வதைப் பார்த்தால், ரேஸ் காரை ஓட்டுகிறோமோ என ஆச்சரியப்பட வைக்கிறது இந்தக் குட்டி இன்ஜின். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட டீசல் காரில், 20 கி.மீ மைலேஜ் என்ற உத்தரவாதம்தான் ஆச்சரியம்.

   தி.விஜய்