ஸ்பெஷல்
Published:Updated:

மஹிந்திரா ரோடியோ RZ

க்யூட்டி பியூட்டி!

 ##~##

ளம் ஜோடிகளுக்கான ஸ்கூட்டர் என ரோடியோ RZ ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கிறது மஹிந்திரா. இது, ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ரோடியோவின் 2.0 வெர்ஷன். இரு சக்கர வாகன மார்க்கெட்டில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது மஹிந்திரா. இந்த ஆண்டு துவக்கத்தில் டியூரோவில் DZ எனும் மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்த மஹிந்திராவின் இரண்டாவது ரிலீஸ் இது. 

டிசைன்

பழைய ரோடியோவைவிட புதியது கொஞ்சம் ஸ்லிம்; உயரம். கிரவுண்டு கிளியரன்ஸ் 24 மிமீ அதிகம். சீட்டின் உயரமும் 20 மிமீ அதிகரித்துள்ளது. ஹெட்லைட், பாடி கலர் மிரர், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர் என புதுமையான அம்சங்களை இதில் சேர்த்திருக்கிறது மஹிந்திரா. டயல்கள் முழுக்க முழுக்க டிஜிட்டல் மயம். இளம் பெண்களைக் கவர, டிரெஸுக்கு மேட்ச்சாக, நாளுக்கு ஒரு நிறம் என ஏழு வித வண்ணங்களை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா.

மஹிந்திரா ரோடியோ RZ

ஓடோ, டிரிப், டேக்கோ என மீட்டர்கள் அனைத்தும் டிஜிட்டலில் இருப்பதோடு, ஃப்யூல் மீட்டர், டிஜிட்டல் கடிகாரம், ஆக்ஸிலரேஷன் மீட்டர், ஓவர் ஸ்பீடு அலாரம் என பலப் பல வசதிகள். 'எம், எல், எஸ்’ என மூன்று பட்டன்கள் பேனலில் இருக்கின்றன. இதில் 'எம்’ என்பது மீட்டர் பட்டன். இதை அழுத்தினால் டிரிப், கடிகாரம், ஆக்ஸிலரேஷன் ஆகியவற்றை மாற்றலாம். கடிகாரம் அல்லது டிரிப் மீட்டரின் செட்டிங்கை மாற்ற வேண்டும் என்றால் 'எஸ்’ பட்டனை அழுத்த வேண்டும். டயலின் பேக்லைட் வண்ணத்தை மாற்றிக்கொள்ள 'எல்’ பட்டன். டயலின் இடப் பக்கத்தில் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் டயல் இருக்கிறது. இது தவிர, சைடு ஸ்டாண்ட் ஆனில் இருக்கிறது என்பதை சத்தம் போட்டு உணர்த்த பஸ்ஸரும் உண்டு.

ஸ்கூட்டர் திருடுபோவதைத் தவிர்க்க, சாவி துவாரத்தை மூடும் வசதியை ரோடியோவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. ஸ்கூட்டரை ஆன், ஆஃப் செய்யும் இடத்திலேயே பெட்ரோல் மூடியைத் திறக்கும் வசதி இருக்கிறது என்பதால், பெட்ரோல் நிரப்ப ஸ்கூட்டரைவிட்டு இறங்கத் தேவை இல்லை. இதனால், பொருட்களை வைத்துக்கொள்ளும் முன் பக்க பாக்ஸ் சுருங்கிவிட்டது. அதைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதியும் இல்லை. இக்னீஷன் அருகிலேயே மொபைல் போன் மற்றும் ஐபாட்-ஐ சார்ஜ் செய்துகொள்ள 12 வோல்ட் சார்ஜர் உண்டு. முன் பக்கம் பைகளை மாட்டிக்கொள்ள ஹூக் இருக்கிறது. சீட்டுக்கு அடியில் 22 லிட்டர் கொள்ளளவுக்கு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது. இருட்டில் பொருட்களை எடுப்பதற்கு வசதியாக சீட்டைத் திறந்தாலே உள்ளே விளக்கும் ஒளிர்கிறது. ஒரு பெரிய ஹெல்மெட்டை வைக்கும் அளவுக்கு இதில் இடம். ஆனால், இதன் வடிவமைப்பு சரியாக இல்லை என்பதால், ஹெல்மெட்டை வைத்தால் சீட்டை மூட முடியவில்லை. பின் பக்க விளக்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

மஹிந்திரா ரோடியோ RZ

இன்ஜின் தொழில்நுட்பத்தை இன்னும் தைவான் நாட்டைச் சேர்ந்த 'சிம்’ எனும் நிறுவனத்திடம் இருந்துதான் பெற்று வருகிறது மஹிந்திரா. டியூரோவில் இருக்கும் அதே 124.6 சிசி இன்ஜின்தான் ரோடியோவிலும். 7000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 10.05 bhp சக்தியை இது வெளிப்படுத்துகிறது. இதன் டார்க் 5500 ஆர்பிஎம்-ல் 0.91 kgm. 'டியூயல் கர்வ் டிஜிட்டல் இக்னீஷன் சிஸ்டம்’ எனும் புதிய தொழில்நுட்பம்கொண்டதால், சிறந்த மைலேஜ் தரும் என்கிறது மஹிந்திரா. அராய் சான்றிதழ்படி, ரோடியோ - லிட்டருக்கு 59 கி.மீ  மைலேஜ் தரும் என்கிறது மஹிந்திரா. ஆனால், நம் ஊர் சாலைகளில் இதை ஓட்டும்போது, நிச்சயம் இதைவிடக் குறைவான மைலேஜ்தான் எதிர்பார்க்க முடியும். 125 சிசி இன்ஜின் என்றாலும், பிக்-அப் பிரமாதம் இல்லை. ஆனால், இன்ஜின் செம ஸ்மூத். சத்தமோ, அதிர்வுகளோ இல்லை.

மஹிந்திரா ரோடியோ RZ

ஓட்டுதல்

ரோடியோவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பம்சம், இதன் சஸ்பென்ஷன். பைக்குகளில் இருப்பதுபோன்று முன் பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருப்பதால், மேடு பள்ளங்களை ஈஸியாகச் சமாளிக்கிறது. சீட் மிகவும் சாஃப்ட். ஆனால், நீண்ட நேரம் உட்கார்ந்து ஓட்டும்போது, பின் பக்கம் வலியை ஏற்படுத்துகிறது. இதில் 90/100, 10 இன்ச் எம்.ஆர்.எஃப் டயர்கள் என்பதால், கிரிப் நன்றாக இருக்கிறது. அதேபோல், பிரேக்குகளும் சூப்பர் ஸ்மார்ட்.

 முதல் தீர்ப்பு

இன்றைய சூழலில், சிசி அதிகமான ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில், ஹோண்டா ஆக்டிவாதான் நம்பர் ஒன். அதற்கு அடுத்தபடியாக இருக்கும் ஆக்ஸஸ், ஏவியேட்டர், டியோ என அத்தனை முன்னணி ஸ்கூட்டர்களின் வெயிட்டிங் பீரியட் 3 முதல் 4 மாதங்கள் வரை அதிகரித்து இருக்கிறது. இந்த வாய்ப்பை மஹிந்திரா அழகாகப் பயன்படுத்தலாம். ஆக்டிவா, ஆக்ஸஸுடன் போட்டி போடும் அளவுக்கு பவர்ஃபுல் ஸ்கூட்டர் இல்லை என்றாலும், மொபைல் சார்ஜர், முன் பக்க ஃப்யூல் டேங்க், டிஜிட்டல் டயல் என்பதுபோன்ற வசதிகளைக் கேட்ட உடனே பெண்களுக்குப் பிடித்துவிடும். மேலும், நகருக்குள் இரண்டு பேர் வசதியாக உட்கார்ந்து, அலுங்கல் குலுங்கல் இல்லாமல் பயன்படுத்த, சிறந்த ஸ்கூட்டராகவும் இருக்கிறது ரோடியோ.