ஸ்பெஷல்
Published:Updated:

பயோ கேஸ் பஸ்

பயோ கேஸ் பஸ்

 ##~##

திர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை மனதில்வைத்து, மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பில் உலகமே முழுமூச்சாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில், 'பயோ-கேஸ் துணையுடன் வாகனங்களை இயக்கினால், கணிசமான எரிபொருளைச் சேமிக்க முடியும்’ என நிரூபித்துள்ளனர் நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள். இந்தக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் கண்ணன், சதீஸ்குமார், புகழேந்தி, சண்முகம், நிர்மல், சிவபிரசாத் ஆகிய ஆறு பேரும் இணைந்து, ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். 

''எங்கள் கல்லூரி முதல்வர் செல்வராஜின் கோழிப் பண்ணையில் இருந்து பெறப்படும் கழிவுகளைக்கொண்டு, பயோ - கேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை, எங்கள் கல்லூரி கேன்டீனில் பயன்படுத்துகிறார்கள். இதையே பயன்படுத்தி வாகனங்களையும் இயக்க முயற்சிக்கலாமே என்று நாங்கள் ஆறு பேரும் இணைந்து செயல்பட்டோம். எங்கள் கல்லூரி ஆட்டோவில் முதல் முயற்சியை ஆரம்பித்தோம். டீசல் டேங்க் அருகே பயோ-கேஸ் டேங்கைச் சிறிதாக அமைத்தோம். 30 சதவிகிதம் டீசல், 70 சதவிகிதம் மீத்தேன் வாயு என்ற சதவிகிதத்தில் இன்ஜினுக்குச் செல்வதுபோல வடிவமைத்து இயக்கினோம். லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ் தந்த ஆட்டோ, 50 கி.மீ மைலேஜ் தந்தது. பிறகு, மஹிந்திரா பொலேரோவிலும் இதே டெக்னாலஜியைப் பயன்படுத்தினோம். இதிலும் மைலேஜ் இரண்டு மடங்கு ஆனது.

பயோ கேஸ் பஸ்

அதன் பிறகுதான் கல்லூரிப் பேருந்தின் மேற்கூரை மீது பெரிய பலூன் டேங்கைப் பொருத்தி, அதில் பயோ-கேஸ் நிரப்பினோம். அதில் இருந்து ஒரு பைப் வழியாக பேருந்தின் இன்ஜின் அருகே உள்ள 'ஏர் இன்டேக் மேனி ஃபோல்டு’-ல் இணைவதுபோல அமைத்தோம். பேருந்தை ஓட்டிப் பார்த்தபோது இதுவரை லிட்டருக்கு 3.5 கி.மீ மைலேஜ் தந்த பேருந்து, இப்போது 10 கி.மீ மைலேஜ் தருகிறது. பேருந்தின் பெர்ஃபாமென்ஸில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், பயோ-கேஸ் தீர்ந்துவிட்டால், பஸ்ஸை மெதுவாகத்தான் இயக்க முடியும். காரணம், டீசல் பம்ப்-பில் எரிபொருள் அளவைக் கட்டுப்படுத்தி இருப்பதுதான். இதற்கு மாற்று வழி என்ன என்றும் ஆராய்ந்து வருகிறோம். அடுத்து பயோ-கேஸை மட்டுமே பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியுமா என்றும் ஆராய்ந்து வருகிறோம்'' என்றனர் நம்பிக்கையுடன்!

பயோ கேஸ் பஸ்