ஸ்பெஷல்
Published:Updated:

800 to ஜிப்ஸி!

800 to ஜிப்ஸி!

 ##~##

டித் தேய்ந்த பழைய வாகனங்களை எடைக்குப் போடும் காலம் இது. கால மாற்றத்தால் மதிப்பிழந்து, பொலிவிழந்து ஓட்டையாகும் குறிப்பிட்ட வகை வாகனங்களைத் தேடிப் பிடித்து வாங்குகிறார் ஈரோட்டைச் சேர்ந்த நவீன். தகரமானதை வாங்கி இவர் என்ன செய்வார்? தான் விரும்பியபடி விதவிதமாக காரின் டிசைனை மாற்றி புத்தம் புதிய காராக்கி, அதில் பந்தாவாக அமர்ந்து வலம் வருவார்! 

''எனக்கு பழைய வாகனங்களை வாங்கி ஆல்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரக் காரணம் என் அப்பாதான். நான் சிறுவனாக இருந்தபோது, 1975-ம் ஆண்டு மாடல் யெஸ்டி பைக் ஒன்றை வாங்கி ஆல்டர் செய்து ஓட்டினார் அப்பா. அந்த பைக்கின் தோரணையும் சத்தமும் ஊரில் அவரைத் தனியாக அடையாளப்படுத்திக் காட்டியது. அப்பாவை 'யெஸ்டி மனோகரன்’ என்றுதான் கூப்பிடுவார்கள். அப்போது இருந்தே மோட்டார் வாகனங்கள் மீது எனக்குப் பயங்கர ஈர்ப்பு. இந்த அதீத ஆர்வம் காரணமாக, பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்கும் தொழில் செய்ய ஆரம்பித்தேன். அதன் பிறகு டிப்ளமோ படித்துவிட்டு, ஆட்டோமொபைல் கன்சல்ட்டிங் தொழிலைத் தொடங்கினேன். வெறுமனே வாங்கி விற்கும் தொழிலை மட்டும் செய்தால், மனதுக்கு எப்படித் திருப்தி ஏற்படும்? அதனால், பழைய வாகனங்களைத் தேடிப் பிடித்து வாங்கி ரீ-டிசைன் செய்வதை ஹாபியாக ஆக்கிக்கொண்டேன். என்னுடைய கற்பனைகளுக்குச் சரியாகத் தீனியிடும் வகையில் பழைய வாகனங்களின் விலை இருப்பதால், என்னால் தோன்றியவற்றைச் செய்துகொண்டே இருக்கிறேன்'' என்றார் சிரித்துக்கொண்டே!

800 to ஜிப்ஸி!

மாருதி 800 காரை ஸ்போர்ட்ஸ் காராக மாற்றுவது; கான்டஸா காரை ஃபோர்டு மஸ்டாங் காராக்குவது; மாருதி ஜிப்ஸிக்கு 'கல்விங்’ டோர் பொருத்துவது; ஜிப்ஸியில் இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்ட வில்லீஸ் ஜீப் சமாச்சாரங்களைப் பொருத்துவது; துருப்பிடித்து நிற்கும் பழைய ஜீப்புக்குப் புத்துயிர் அளிப்பது என இப்படித்தான் ஆல்டர் செய்ய வேண்டும் என எந்த வரையறையும் இல்லாமல், தனக்குத் தோன்றியபடி எல்லாம் ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார் நவீன்.  

800 to ஜிப்ஸி!

கார்களை மட்டும் அல்ல, பைக்குகளையும் விட்டுவைக்கவில்லை. ''பழைய யெஸ்டி பைக்கை 5,000 ரூபாய்க்கு வாங்கி 40,000 ரூபாய் செலவு செய்து ஆல்டர் செய்தேன். சில மாற்றங்களைச் செய்ய ஒரு மெக்கானிக்கிடம் அந்த பைக்கைவிட்டு இருந்தேன். அவர் அந்த பைக்குடன் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார். அவரைத் தேடி அலைந்து கடைசியில் சென்னையில் இருப்பதை அறிந்து பைக்கை மீட்டுக்கொண்டுவந்த கதையெல்லாம் என் அனுபவத்தில் உண்டு. புல்லட், யமஹா ஆர்.எக்ஸ்-100 என 1980 - 85 காலகட்டத்தில் வெளிவந்த எந்த பைக் கிடைத்தாலும், ஒரு கை பார்த்துவிடுவேன். ஆல்டர் செய்யும் வாகனங்களை பெரும்பாலும் என் சொந்த உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். சில சமயம் நண்பர்கள் விரும்பிக் கேட்டு வாங்கிக்கொள்வதும் உண்டு. என்னைப் பொறுத்தவரை, எந்த வாகனமாக இருந்தாலும் அதன் ஒரிஜினாலிட்டி கெட்டுவிடாமல், அதே சமயம் நவீனமாகவும் மாற்ற வேண்டும். அதில்தான் இருக்கிறது நம் ரசனைக்கு சவால்!'' என்கிறார் நவீன்.

800 to ஜிப்ஸி!