ஸ்பெஷல்
Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக் - சூலூர், கோவை

''பைக்கு மேல நமக்கு ஒரு காதல்ங்ணா!''

 ##~##

''எட்டாம் கிளாஸை முடிச்சுட்டு, மெக்கானிக் வேலைக்கு வந்துட்டேனுங்க. வேலைக்கு வந்த புதுசுல ஆர்வத்தைத் தவிர மெக்கானிக் அறிவுங்கிறது அஞ்சு பைசா மதிப்புக்குக்கூட எங்கிட்ட கெடையாது. ஷெட்ல உள்ளவங்களுக்கு டீ வாங்கிட்டு வர்றதுல பிள்ளையார் சுழி போட்டேன். 'டேய் பொடியா, எட்டாம் நம்பர் ஸ்பேனரை எடு, கிரீஸை நல்லாத் தடவி எடு’னு சீனியர்களோட மேற்பார்வையில படபடன்னு வளர ஆரம்பிச்சேனுங்க. கற்பூர அறிவு இருந்தா கமகமன்னு வாழ்க்கையில செட்டிலாகும் ஃபீல்டுகள்ல இதுவும் ஒண்ணு! பட்டது, தெரிஞ்சது, புரிஞ்சது எல்லாத்தையும் வெச்சு ஒரு வருஷத்துல ஒரு முழு மெக்கானிக்கா வந்து நின்னேனுங்ணா. இன்ஜின்ல சின்ன பிரச்னைனு ஸ்டார்ட்டிங் ட்ரபிளோட வந்து நின்ன ஒரு ஆர்.எக்ஸ் 100 பைக்தான் நான் சிங்கிள் மெக்கானிக்கா நின்னு சரிபண்ணின முதல் வண்டி. வேலையை முடிச்சுப் போட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி அது வ்ரூம்ம்ம்...ன்னதும் இந்தத் தொழில்ல என்னோட ஆசான்களான மூர்த்தி, ராசு, விசுவநாதன் இருக்கும் திசை நோக்கி பெரிய கும்பிடு போட்டேன் மானசீகமா!

நம்ம ஊரு மெக்கானிக் - சூலூர், கோவை

 எனக்கு அடிப்படையில் பஜாஜ் வண்டிகளை வேலை பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, ஸ்கூட்டர்னா விரும்பி உட்கார்ந்து பண்ணுவேன். ஆனா, விவசாயிங்களும், விசைத்தறி ஆளுங்களும் நெறைஞ்ச பகுதியான சூலூர்ல பஜாஜ்தான் பார்ப்பேன். அதுவும் ஸ்கூட்டர்தான் பிடிக்கும்னு சொல்லிட்டு உட்கார்ந்தா, சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்க வேண்டிய நிலை வந்துடும். அதனால, எல்லா வண்டிகளையும் தொடுறதுதான் நல்லது. ஒரு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி டிவிஎஸ்-50, சேம்ப்பும்தான் இந்த ஊருக்குள்ளே திரியும். 'ரமேஷ§, என்னா கெரகமுன்னே தெரியலை. காத்தால இருந்து வண்டி ஸ்டார்ட்டு ஆக மாட்டேங்குது கண்ணு’ அப்படின்னுட்டு, வரிசையா வண்டிகளைக் கொண்டாந்து நிப்பாட்டுவாங்க. கிராமப் பகுதிகளின் ராஜா டிவிஎஸ்தான் அப்படிங்கிற நிலையை, ஒரு கட்டத்துல அடிச்சுத் துவம்சம் பண்ணியது பஜாஜ் எம் 80. பால் வியாபாரத்துல ஆரம்பிச்சு, அத்தனை வேலைங்களுக்கும் ரொம்ப பக்காவா செட் ஆன வண்டி அது. நமக்கு பஜாஜ் வண்டிங்க மேலே பெரிய காதல் இருந்ததால, எம் 80 வந்தா இழுத்துப் போட்டு வேலை பார்ப்பேனுங்க. ஆனா, தனி ராஜ்ஜியம் படைச்ச அந்த வண்டி கால ஓட்டத்துல அழிஞ்சே போனது எனக்கெல்லாம் தனிப்பட்ட முறையில பெரிய வருத்தமுங்ணா! இப்போ மறுபடியும் டிவிஎஸ் ஆதிக்கம் வந்து ஊரெல்லாம் எக்ஸ்எல் மொபெட்டா ஓடிட்டு இருக்குது'' என்று சிரிக்கிறார்.

''ஒரு பொடியனாத் தொழில் கத்துக்கிட்ட காலங்களைக் கழிச்சுட்டுப் பார்த்தா, இந்த ஃபீல்டுக்கு வந்து குறைஞ்சது இருபது வருஷமாச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு வண்டிகளைச் சரிபண்றேன்... அப்படிப் பார்த்தா இத்தனை வருஷத்துல எத்தனை வண்டிங்களைக் கழட்டி மாட்டி இருப்பேன்னு நீங்களே கணக்குப் போட்டுக்குங்க! முன்ன மாதிரியில்லை... ஷெட்டுகள், படிச்ச மெக்கானிக்குகள்னு இந்த ஃபீல்டு ரொம்பவே மாறிப்போச்சு! ஆனாலும், தொடர்ந்து களத்துல பரபரன்னு இருக்கிறோம்னா, அதுக்குக் காரணம் பைக்குகள் மேலான காதல்தானுங்ணா! ஸ்ப்ளெண்டர், ஷைன் அது இதுன்னு ஆயிரத்தெட்டு வண்டிகளைக் காலப்போக்குல கடந்துட்டே இருக்கோம். சென்ஸார் சிஸ்டத்தோட வண்டிங்க நிறைய வர ஆரம்பிச்சுடுச்சு. இந்தப் புது மாடல் வண்டிகள்ல ஒர்க் பண்றதுக்கு புதுசாப் போய் படிச்சுட்டு எல்லாம் வர்றது இல்லை. எக்ஸ்பர்ட்டுங்க இங்கே வர்றப்ப கேட்டுப்போம். கூடவே இருக்கவே இருக்குது இன்டர்நெட் சென்டர்... அங்கே போய் உட்கார்ந்து, இந்தப் புது மாடல் வண்டிங்களைப் பத்தி நாலைஞ்சு விஷயம் கத்துக்கிறதோட ரீ-டிசைனிங் சம்பந்தமாவும் சில குறிப்புகளை எடுத்துட்டு வந்துடுவேன். 'பெட்ரோல் டேங்கை மாத்துங்ணா, சைலன்ஸர்ல மெரட்டனுங்ணா’ அப்படின்னு வந்து நிக்குற காலேஜ் பசங்களைத் திருப்திப்படுத்தனும்னா, இன்டர்நெட்டை நாம தொட்டேதான் ஆகோணும்!

தேடி வந்த உங்ககிட்டே ஒரு விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுறேன். இந்த சொஸைட்டியில கொஞ்சம் அதிரடி கோணத்துல பார்க்கப்படுற விஷயங்கள்ல, வொர்க்ஷாப் தொழிலும் ஒண்ணு! ஸ்பேனரும் டீசலுமா திரிஞ்சாலும்கூட போக்கிரித்தனமான ஆளுங்க கிடையாது நாங்க. லட்சக்கணக்குல செலவு பண்ணி ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிச்சவங்களால தீர்க்க முடியாத பிரச்னையை, ஒரு படிக்காத அனுபவசாலி மெக்கானிக் பொசுக்குன்னு தீர்த்துவெச்சுடுவான். அதனால, வெறும் அதிரடிப் பேர்வழியா பார்க்குற பார்வையை மக்கள் மாத்திக்கணும். அதே நேரத்துல, நாம என்ன கொடுக்கிறோமோ, அதேதான் நமக்குத் திருப்பிக் கிடைக்கும்கிறதை சக மெக்கானிக் தோழர்களும் புரிஞ்சுக்கணும்!'' என அனுபவம் பேசுகிறார் ரமேஷ்குமார்.

நம்ம ஊரு மெக்கானிக் - சூலூர், கோவை
நம்ம ஊரு மெக்கானிக் - சூலூர், கோவை

ஃபோர் ஸ்ட்ரோக் வண்டிகள்ல 2500 கி.மீ-க்கு ஒரு தடவை ஆயில் மாத்துறது ரொம்ப நல்லது. காலக் கணக்குல பார்த்தா, ரெண்டே முக்கால் மாசத்துக்கு ஒருதடவை ஆயிலை மாத்திடுங்க!

நம்ம ஊரு மெக்கானிக் - சூலூர், கோவை

 ஹைவேயில போறப்ப நாய்கள் அடிபட்டுக் கிடந்தாலோ, பூசணிக்காய் உடைபட்டுக் கிடந்தாலோ, ரொம்ப சர்வ சாதாரணமா அது மேலே வண்டியை ஏத்திக் கடக்காதீங்க. காரணம், வண்டி வழுக்கி விழுறதுக்கு அதிக வாய்ப்பு இருக்குது!

நம்ம ஊரு மெக்கானிக் - சூலூர், கோவை

சிலர் வண்டியில ஆயில் மாத்தி, பிரேக் செக் பண்ணி, வொயரிங்கெல்லாம் பக்காவா வெச்சிருந்தாலும், அதோட வெளித்தோற்றத்தைப் பராமரிக்குறதுல சிரத்தை காட்ட மாட்டாங்க. இது தப்புங்ணா! நாம தினமும் குளிக்கிற மாதிரி வண்டியையும் சீரான இடை வெளியில வாட்டர் சர்வீஸ் பண்ணியே ஆகோணும்!