ஸ்பெஷல்
Published:Updated:

டிரைவருக்கு மரியாதை!

டிரைவருக்கு மரியாதை!

 ##~##

ஞ்சாபில் விளையும் கோதுமையும், தமிழகத்தில் அறுவடையாகும் நெல்லும் - நாடு முழுவதும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்றால், அது தரைவழிப் போக்குவரத்து இல்லாமல் சாத்தியம் இல்லை. முன்பு, நம் சாலைகளின் மோசமான தரத்தால் கால விரயம், அதிகப் பராமரிப்புச் செலவு என பல்வேறு சிக்கல்களில் திணறின லாரிகள். இப்போதோ, மாநிலங்களை இணைக்கும் சாலைகள் எல்லாம் நான்கு வழிச் சாலைகள் ஆகிவிட்டன. இதனால், லாரித் தொழிலில் நல்ல வளர்ச்சி. ஆனால், 'டிரைவர்கள் பற்றாக்குறையால், லாரித் தொழில் அழியும் அபாயத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது’ என்றும் சோகக் குரல்கள். 

சேலம் மாவட்ட லாரி டிரைவர்கள் சங்கத் தலைவர் வீரமலை நொந்துபோய் பேசினார். ''நவீனத் தொழில்நுட்பங்களுடன் பன்னாட்டு நிறுவனங்களின் ட்ரக்குகள் நம் நாட்டுக்கு வந்திருக்கின்றன. நெடுஞ்சாலைகள் அகலமாகிவிட்டன. ஆனால், டிரைவர் தொழிலுக்கு விரும்பி வருவதற்கான சாதகமான அம்சங்கள் எதுவும் இதுவரை உருவாகவில்லை.

டிரைவருக்கு மரியாதை!

லைசென்ஸ் மறுப்பு

நடைமுறையில் இருக்கும் புதிய சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால்தான், கன ரக வாகனம் ஓட்ட லைசென்ஸ் பெற முடியும். இந்த முறையை பல மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இந்தச் சட்டம்தான் அமலில் இருக்கிறது. லாரித் தொழிலுக்கு வருபவர்கள், சின்ன வயதிலேயே க்ளீனராக இருந்து, தொழில் பழகி, படிப்படியாக லாரி ஓட்டக் கற்றுக்கொள்வார்கள். அனுபவம்தான் சிறந்த பாடம். படிக்காதவர்களால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாகச் சொல்லி, இந்தச் சட்டம் கொண்டுவந்தார்கள். ஆனால், படித்தவர்கள் யாரும் இந்தத் தொழிலுக்கு வருவது இல்லை. அதனால், புதிய டிரைவர்கள் உருவாகவில்லை. கடந்த தேர்தலுக்குப் பிரசாரம் செய்ய நாமக்கல் வந்த முதல்வர் ஜெயலலிதா, 'நான் ஜெயித்தால், முதல் வேலையாக எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மட்டுமே கன ரக வாகன லைசென்ஸ் என்ற சட்டத்தை நீக்குவேன்’ என்று உறுதி அளித்தார். ஆனால், ஒரு வருடம் கடந்தும் அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றவில்லை.

வருமானம் குறைவு

லாரி டிரைவர் என்றால் மக்கள் மத்தியிலும், சமுதாயத்தின் மத்தியிலும், லாரி ஓனர்கள் மத்தியிலும் மதிப்பு இல்லை. அதனால், லாரி ஓனர்கள் யாரும் டிரைவர்களுக்கு சம்பளம் என்று ஒரு ரூபாய்கூட கொடுப்பது இல்லை. படிக் காசுதான். ஒரு ரூபாய்க்கு ஐந்து பைசா, பத்து பைசா என்ற கணக்கில் படிக் காசு கொடுப்பார்கள். உதாரணத்துக்கு, வெளிமாநிலத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வாடகை மதிப்புள்ள சரக்கை டெலிவரி செய்துவிட்டு வர எட்டு நாட்கள் ஆகிறது. பத்து பைசா படிக் காசு என வைத்துக்கொண்டால், 30 ஆயிரத்துக்கு 3,000 ரூபாய் படிக் காசு டிரைவருக்குக் கிடைக்கும். திரும்பி வரும்போது லோடு கிடைத்தால், இதே படிக் காசு கிடைக்கும். ஆக மொத்தம் 6,000 ரூபாய். இதை வைத்துதான் எட்டு நாட்களும் டிரைவர் அனைத்துச் செலவுகளையும் பூர்த்தி செய்துகொண்டு மிச்சம் பிடித்து வீட்டுக்குத் தர வேண்டும். மாதம் மூன்று முறை ட்ரிப் சென்றால், மாத வருமானம் 18 ஆயிரம் ரூபாய். ஆனால், இதில் செலவு செய்தது போக, மிச்சம் பிடித்த பணத்தை வைத்துத்தான் அடுத்த ஒரு மாதம் ரெஸ்ட்டில் இருக்கும் போது குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். லாரி டிரைவர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை என்பதை யாரும் ஒப்புக்கொள்வதே இல்லை.

டிரைவருக்கு மரியாதை!

பாதுகாப்பு இல்லை

டிரைவருக்கு மரியாதை!

வெளி மாநிலத்துக்கு சரக்கு ஏற்றிச் செல்லும்போது, திருடர்களால் பொருட்கள் கொள்ளை போகும். அதைத் தடுக்க முனையும் டிரைவர்களும் தாக்கப்படுகிறார்கள். ஏன் - சில சமயம் அதில் செத்தவர்களும் உண்டு. இரு மாநிலங்களுக்கு இடையே ஏதாவது பிரச்னை என்றாலும், பந்த் நடந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது லாரிகளும், லாரி டிரைவர்களும்தான். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், விசாரணைகூட ஒழுங்காக நடப்பது இல்லை; பாதிக்கப்பட்ட டிரைவரின் குடும்பத்துக்கு அரசு கருணை காட்டுவதும் இல்லை'' என்று ஒரே மூச்சாகப் பொரிந்து தள்ளினார் வீரமலை.

மதிப்பு இல்லை

40 ஆண்டுகளாக லாரி டிரைவராக இருக்கும் அண்ணாமலை, ''லாரி டிரைவர்னு சொன்னாலே கேவலமாப் பார்க்கிறாங்க. கல்யாணத்துக்குப் பொண்ணு கொடுக்க யோசிக்கிறாங்க. குடும்பத்தெ விட்டுட்டு பத்து நாள், பதினைந்து நாள்னு இரவு பகல் பார்க்காம வேலை பார்க்கிறோம். எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. வருமானமும் குறைவு. இப்படி இருக்கும்போது புதுசா இந்தத் தொழிலுக்கு எப்படி வருவாங்க? கொத்து வேலைக்குப் போனாலே, ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளம் கிடைக்குது!'' என்று அனுபவ வலியோடு சொன்னார்.

தமிழக அரசின் கையில்:

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கப் பொருளாளர் சென்ன கேசவனிடம் பேசினோம். ''லாரி டிரைவர்கள் பற்றாக்குறையால், சேலம் மாவட்டத்தில் 30 சதவிகிதம் லாரிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதனால், பல லாரி முதலாளிகள் லாரிகளை விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள 1.75 லட்சம் சரக்கு வாகனங்களில் நாமக்கல், சேலம், ஈரோடு இந்த மூன்று மாவட்டங்களில்தான் பெரும்பான்மையான லாரிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வருமானம் அரசுக்குக் கிடைப்பது லாரிகள் மூலமாகத்தான். ஒரு லாரியின் மூலம் நேரடியாக 6 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறோம். மறைமுகமாக 20 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் நாங்கள்தான் உதவுகிறோம். அதனால், தமிழக முதல்வர் இந்தத் தொழில் மீது தனிக் கவனம் செலுத்தி, எழுதப் படிக்க தெரிந்த லாரி டிரைவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து உதவினால் மட்டுமே, இந்தத் தொழில் புத்துணர்வு பெறும். இல்லை என்றால், இந்தத் தொழிலே அழிந்துபோகும்!'' என்றார் விரக்தியுடன்.

டிரைவருக்கு மரியாதை!
டிரைவருக்கு மரியாதை!

 காத்திருக்கிறோம்!

 சமீபத்தில், சென்னை சரக்குப் போக்குவரத்து சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடந்தது. இதன் தலைவர் பி.சி.சுப்ரமணியன் பேசும்போது, ''இன்றைக்கு தொழில் துறையின் மிக முக்கியப் பிரச்னை, டிரைவர் பற்றாக்குறைதான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை என்றால், இந்தத் தொழிலின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரமே சரியும். அதனால் எங்களால் ஆன சிறு முயற்சியாக சென்னையில் உள்ள மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். இதற்காக, மாநில அரசிடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கக் கோரிக்கை விடுத்து தொடர்ந்து காத்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

-   சா.வடிவரசு, படம்: ச.இரா.ஸ்ரீதர்