ஸ்பெஷல்
Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - ஹீரோ இம்பல்ஸ்

டார்ச்சர் பண்ணாத பைக்!

 ##~##

சென்ற ஆண்டு வரை ஹோண்டா ஆக்டிவா ஓட்டிக்கொண்டு இருந்தேன். கல்லூரி வாழ்க்கையில் நுழைந்ததுமே கியர் பைக் வாங்க ஆசை. 150 சிசியில், நல்ல மைலேஜ் தரக்கூடிய, அதே சமயம் ரொம்ப ஸ்போர்ட்டியான பைக் வேண்டும். பெரிய அலசலுக்குப் பிறகு, என் நண்பர்கள்  'ஹீரோ இம்பல்ஸ்தான் சூப்பர் சாய்ஸ்’ என்றனர். ஹோண்டாவில் இருந்து பிரிந்த பிறகு, 'ஹீரோ மோட்டோ கார்ப் அறிமுகப்படுத்திய முதல் இந்திய பைக் ஆச்சே’ என்று இம்பல்ஸை ஆச்சரியத்தோடு பார்க்கச் சென்றேன். இம்பல்ஸ் ரொம்பவுமே என்னை இம்ப்ரெஸ் செய்தது. அதனால், உடனே புக் செய்துவிட்டேன். அடுத்த சில நாட்களில் என் வீட்டு போர்டிகோவில் வந்து நின்று, என்னை அந்த ஏரியாவின் ஹீரோ ஆக்கிவிட்டது இம்பல்ஸ். 

கோவை ஆன் ரோடு 78,000 ரூபாய். 'இவ்வளவு சூப்பராக பெர்ஃபாமென்ஸ் அளிக்கும் இம்பல்ஸின் விலை மிகக் குறைவாக இருக்கிறதே!’ என்றுதான் என்னை ஒவ்வொரு ரைடும் ஆச்சரியப்படவைக்கிறது.

ரீடர்ஸ் ரிவியூ - ஹீரோ இம்பல்ஸ்
ரீடர்ஸ் ரிவியூ - ஹீரோ இம்பல்ஸ்

ஆரம்ப வேகம் செம சூப்பர். லேசாக முறுக்கினாலே சீறிப் பாய்கிறது இம்பல்ஸ். 85 - 100 கி.மீ வேகத்தில் சென்றாலும்கூட ஆட்டம், அதிர்வு, டார்ச்சரிங் சத்தங்கள் இல்லாமல் ரொம்பவும் அமைதி காக்கிறது பைக். இம்பல்ஸின் மேக்ஸிமம் பவர் 13.8 bhp. இது கொஞ்சம் குறைவுதான் என்றாலும், பிக்-அப் சிறப்பாக இருக்கிறது. ஸ்ப்ளெண்டர், பல்ஸர் போன்ற பைக்குகளை ஓட்டி இருக்கிறேன். ஆனால், அந்த பைக்குகளைவிட இம்பல்ஸின் இன்ஜின் திறன் பிரமாதம். காலேஜ் - வீடு - அப்பாவின் அலுவலகம் - ஜிம் எனத் தினமும் குறைந்தது 25 கி.மீ சந்தோஷமாகப் பயணிக்கிறேன்.

ஆனால், சைலன்ஸர் சீட்டுக்குக் கீழே இருப்பதால், சில சமயங்களில் இன்ஜினில் இருந்து வரும் சூடு காலை வாட்டி எடுக்கிறது. இது எப்பவுமே ஏற்படுவது இல்லைதான். ஆனால், அவ்வப்போது உணர முடிகிறது. இதுதான் இம்பல்ஸின் பெரிய மைனஸ்.

கியர் பொசிஷன் செம பக்கா! வளர்ந்து வரும் கோவையின் பெரிய தலைவலியே போக்குவரத்து நெரிசல்தான். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு தடவை சிக்னல், டிராஃபிக் நெரிசல். இதுபோன்ற சூழலில் கியரை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம். பைக்கில் கியர் மாற்றுவது சிரமமாக இருந்தால், பெரிய இம்சைதான். ஆனால், இம்பல்ஸில் அந்தப் பிரச்னை இல்லை!

டேங்க் கொள்ளளவு 12 லிட்டர். அதனால், நீண்ட தூரப் பயணத்துக்கு இம்பல்ஸ் பக்கா பொருத்தம். நான் எதிர்பார்த்த மாதிரியே 40-45 கி.மீ மைலேஜ் அளிக்கிறது இம்பல்ஸ். இது என்னைப் பொறுத்தவரை ஓ.கே.

ரீடர்ஸ் ரிவியூ - ஹீரோ இம்பல்ஸ்

ஆஃப் ரோடு பைக்குக்கான அத்தனை அம்சங்களும் இம்பல்ஸில் உண்டு. முன் பக்க டிஸ்க் பிரேக் அசத்தலான விஷயம். குண்டும், குழியுமான சாலைகளிலும், வழுக்கலான மண் பாதைகளிலும்கூட ஓட்டிப் பார்த்துவிட்டேன். இது வரை எந்தச் சிரமமும் இல்லை. இம்பல்ஸின் மிகப் பெரிய வரப்பிரசாதமே சஸ்பென்ஷன்தான். மோனோ ஷாக் ரியர் சஸ்பென்ஷன், காற்றில் பறப்பதுபோல ரைடிங்கை லேசாக ஆக்குகிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கில் இருக்கும் பெரிய பிரச்னையே சீட் அமைப்புதான். அசௌகரியமாகவோ, அந்தரத்தில் தொங்குவது மாதிரியான உணர்வையோ தரும். ஆனால், இம்பல்ஸில் ரைடர் சீட்டும் பில்லியன் சீட்டும் செம க்யூட்!

மழைக் காலத்தில், தேங்கி நிற்கிற நீரில் பைக்கை இறக்கினால், சைலன்ஸரில் நீர் புகுந்து இன்ஜினைக் கெடுத்துவிடும். ஆனால், இம்பல்ஸில் மிக மிக உயரமான பொசிஷனில் சைலன்ஸர் இருப்பதால், எந்த மழை வெள்ளத்திலும் கவலை இல்லாமல் பைக் ஓட்டலாம்.

கம்பீரமான, அசத்தலான தோற்றத்தில் இம்பல்ஸை அடிக்க, இந்த செக்மென்ட்டில் வேறு பைக்குகள் இல்லை. முன் பக்க வடிவமைப்பு, எல்இடி டெயில் லைட்ஸ் என எல்லாமே பைக்கின் அழகை மேலும் அழகாக்குகிறது. பைக்கில் செல்லும்போது நேரம் பார்க்க வாட்சையோ, மொபைல் போனையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல், முன் பக்கம் டைம் டிஸ்பிளே அமைத்து இருப்பது அசத்தல் ஐடியா. சர்வீஸுக்கு விட வேண்டிய நேரம் வந்ததைச் சொல்லும் இண்டிகேட்டிங் சிஸ்டமும் சூப்பர்ப்!

ரீடர்ஸ் ரிவியூ - ஹீரோ இம்பல்ஸ்