ஸ்பெஷல்
Published:Updated:

பழைய கார் - சான்ட்ரோ

செலவு மிச்சம்!

 ##~##

ம் நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் ஆழமாகக் கால் பதிக்க அடித்தளம் இட்ட கார் சான்ட்ரோ. 14 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1998-ம் ஆண்டு இந்த கார் நம் நாட்டில் அறிமுகம் ஆனது. ஆனாலும், எந்தவிதமான ஸ்பீடு பிரேக்கர்களையும் சந்திக்காமல், அது தொடர்ந்து வெற்றிப் பாதையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. காலத்துக்கும், போட்டியாளர்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில், சான்ட்ரோவில் தொடர்ந்து மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கிறது ஹூண்டாய். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த எந்த மாடல் சான்ட்ரோவாக இருந்தாலும், அதை நம்பி வாங்கலாம். 

ஓட்டுதல்

சான்ட்ரோ முதன்முதலில் அறிமுகம் ஆனபோது, 1 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுத்தான் விற்பனையானது. இருந்தபோதும், வாடிக்கையாளர்களின் தேவைகளையும் சுற்றுச்சூழல் கோட்பாடுகளையும் ஏற்று, காலப்போக்கில் 1.1 லிட்டர் இன்ஜினுக்கு சான்ட்ரோ மாறியது. நகருக்குள் ஓட்டுவதற்கு இந்த இன்ஜின் திறன் போதுமானதாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் அதிக சக்தி தேவைப்படும் சில வேளைகளில், இது போதாது. அடுத்ததாக, சஸ்பென்ஷன்... கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும்போது, சான்ட்ரோவின் பயணம் சற்று சங்கடமாகவே இருக்கும். அதிலும், பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கு இது இன்னும் அசௌகரியமாக இருக்கும்.

பழைய கார்  - சான்ட்ரோ

வாங்கும்போது எதை எல்லாம் பார்க்க வேண்டும்?

நீடித்து உழைக்கும் தன்மைதான் சான்ட்ரோவின் வெற்றி ரகசியம். டேஷ் போர்டு, டோர் பேடு என காருக்குள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக்ஸ் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியவை. கட்டுறுதி மிக்க கார் என்றாலும், அதிக கிலோ மீட்டர்கள் ஓடி இருந்தால் இதன் சஸ்பென்ஷனை நிச்சயம் சோதிக்க வேண்டும். 50,000 கி.மீ ஓடிய காராக இருந்தால், முன் பக்கம் இருக்கக்கூடிய ஷாக் அப்ஸார்பர்களை (ரூ.2,600) மாற்ற வேண்டி இருக்கும். இதோடு தொடர்புடைய வேறு சில உதிரி பாகங்களையும் மாற்ற, மேலும் ரூ.2,600 ஆகும். லேபர் சார்ஜ் தனியாக ரூ.2,260 ஆகும். எக்ஸாஸ்ட் மஃப்ளர் மாற்ற வேண்டிய நிலையில் இருந்தால், அதற்கு ரூ.3,000 செலவாகும். இதற்கு லேபர் சார்ஜ் தனியாக ரூ.400.

காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும்போது, இன்ஜினில் அதிர்வுகள் தென்பட்டால், இதைச் சீர்செய்ய 1,125 ரூபாயில் இருந்து 1,600 வரை செலவாகும்.

இதுவே, நீங்கள் வாங்கப்போகும் சான்ட்ரோ 60,000 கி.மீ மேல் ஓடியிருந்தால், 2,050 ரூபாய் கொடுத்து டைமிங் பெல்ட்டை நிச்சயம் மாற்ற வேண்டி இருக்கும். இல்லையெனில், காரின் பெர்ஃபாமென்ஸ் அடிபடும்.

பழைய கார்  - சான்ட்ரோ

மைலேஜ்

நகர்ப்புறத்தில் இது 12.1 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 16.2 கி.மீ-யும் மைலேஜ் கொடுக்கும். ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கும் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டும். இதற்கு 765 ரூபாய் செலவாகும். சான்ட்ரோவின் ரெகுலர் சர்வீஸுக்கு சுமார் 1,050 ரூபாய் ஆகும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 85 ருபாய் கொடுத்து ஆயில் ஃபில்ட்டரை மாற்றிவிட வேண்டும். அதேபோல், ஒவ்வொரு 20,000 கி.மீ-க்கும் 110 ரூபாய் செலவு செய்து ஏர் ஃபில்ட்டரை மாற்றிவிட வேண்டும்.

சான்ட்ரோவின் ஒரு செட் பிரேக் பேட் (முன் பக்கம்)  ரூ.1,372. ஃப்யூல் பில்ட்டரின் விலை ரூ.200. 30,000 கி.மீ-க்கு ஒருமுறை இந்த இரண்டையும் மாற்றுவது உத்தமம்.

ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கும் ஒருமுறை வீல் அலைன்மென்ட் சரியாக இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும். இதற்கு ரூ.715 ஆகும். கிளட்ச் பெடலை அழுத்த சிரமமாக இருந்தால், பிக்-அப் குறைந்துவிடும். ரூ.6,500 செலவு செய்து கிளட்ச் அசெம்ப்ளியை மாற்றினால்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

மற்ற கார்களோடு (மாருதி தவிர) ஒப்பிட்டுப்பார்த்தால், இதன் உதிரி பாகங்களின் விலை அத்தனை அதிகம் கிடையாது. அதனால், குறைவான பராமரிப்புச் செலவு வைக்கும் கார் என்று சொல்லலாம்.

மூன்று ஆண்டுகள் ஓடிய சான்ட்ரோவின் விலை உத்தேசமாக 2.5 லட்சம் முதல் கிடைக்கிறது. இன்ஷூரன்ஸுக்குத் தனியாக சுமார் ரூ.6,000 ஆகும்.

முடிவாகச் சொல்ல வேண்டும் என்றால், சான்ட்ரோ தாராளமான, நம்பகரமான, கட்டுறுதிகொண்ட கார்!

- வேல்ஸ்