ஸ்பெஷல்
Published:Updated:

வி.ஐ.பி. பேட்டி: நலின் மேத்தா - நிர்வாக இயக்குநர் மஹிந்திரா நேவிஸ்டர்

ஓகே இஸ் நாட் ஓகே!

 ##~##

ம் ஊரைப் பொறுத்தவரை 'ஓகே ஓகே’ என்றால் 'ஒரு கல், ஒரு கண்ணாடி.’ டிரக் இன்டஸ்ட்ரியைப் பொறுத்தவரை 'ஓகே இஸ் நாட் ஓகே’ என்பதுதான் லேட்டஸ்ட் பஞ்ச் லைன். இந்தப் புதிய தாரக மந்திரத்தை வடிவமைத்து இருப்பது மஹிந்திரா நேவிஸ்டர். 'இருப்பதைக்கொண்டு திருப்திப்படாதே! இதைவைத்தே காலத்தை ஓட்டலாம் என்று நினைக்காதே! கடந்த நூற்றாண்டிலேயே முடங்கிக் கிடக்கும் இந்தத் தொழிலை, சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்த வேண்டும். டிரக்குகளில் இருக்கும் தொழில்நுட்பம், வசதி ஆகியவற்றை உயர்த்த வேண்டும்!’ - இதுதான் 'ஓகே இஸ் நாட் ஓகே’வுக்கு மஹிந்திரா நேவிஸ்டர் கொடுக்கும் அர்த்தம்!

 'டிரக் என்றால் பாடாவதியான சாலையோர வொர்க் ஷாப்பில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும். டிரைவர் என்றாலே லாரியின் நிழலில் தரையில் படுத்துத்தான் ஓய்வு எடுக்க வேண்டும். வசதிக்கு ஏற்ற மாதிரி அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய இருக்கைகள், டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் போன்ற வசதிகள் எல்லாம் தேவை இல்லை’ என்று லாரி மற்றும் டிரக் பற்றி சமூகத்தில் இருந்துவரும் புரிதல் மெள்ள மெள்ளக் கரைந்து வரும் இந்தச் சூழலில்தான், 'ஓகே இஸ் நாட் ஓகே’வும் இந்தக் கோட்பாட்டின் கர்த்தாவான மஹிந்திரா நேவிஸ்டர் ஆட்டோமொபைல் லிமிடெட்டும் முக்கியத்துவம் பெறுகிறது.

வி.ஐ.பி. பேட்டி: நலின் மேத்தா  - நிர்வாக இயக்குநர் மஹிந்திரா நேவிஸ்டர்

இந்த நிறுவனத்தின் 5000-வது டிரக், சக்கான் (புனே அருகே உள்ளது) தொழிற்சாலையில் உற்பத்தியான நாளில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நலின் மேத்தாவிடம் பேசினோம்.

''மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமான மஹிந்திரா அண்டு மஹிந்திராவும், அமெரிக்காவின் புகழ்பெற்ற நேவிஸ்டர் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனும் இணைந்து உருவாக்கி இருக்கும் நிறுவனம்தான் எங்களின் மஹிந்திரா நேவிஸ்டர் ஆட்டோமொபைல் லிமிடெட். புனே அருகில் இருக்கும் சக்கானில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட எங்களது தொழிற்சாலையில், 3.5 டன் வாகனத்தில் துவங்கி 49 டன் வாகனம் வரை பல வகையான சரக்கு வாகனங்கள், பேருந்துகள், பள்ளி வாகனங்கள் என சகலவிதமான வாகனங்களைத் தயாரிக்கிறோம். மேலும், புதிது புதிதாகத் தயாரிக்கவும் திட்டம் வைத்திருக்கிறோம். தொழில்நுட்பத்தை மட்டும்தான் அமெரிக்காவில் இருந்து பெறுகிறோமே தவிர, நம்ம ஊர் சாலைகளுக்கும், சீதோஷ்ணத்துக்கும் ஏற்ற வாகனங்களை இங்கே  நாங்கள் உற்பத்தி செய்கிறோம். அதனால்தான் 'மேட் இன் இந்தியா... மேட் ஃபார் இந்தியா’ என்று பெருமையாகச் சொல்கிறோம். ஆம், இது உண்மைதான் என்று ஊரும் உலகும் ஏற்றுக்கொண்டு எங்களது எம்.என்-40 வாகனத்தை, இந்த ஆண்டின் மிகச் சிறந்த கன ரக வாகனம் என்று கொண்டாடுகின்றன. விருதுகளும் பாராட்டுப் பத்திரங்களும் குவிகின்றன.

வி.ஐ.பி. பேட்டி: நலின் மேத்தா  - நிர்வாக இயக்குநர் மஹிந்திரா நேவிஸ்டர்

நாங்கள் தயாரிக்கும் கன ரக வாகனங்களுக்குக் கிடைத்து வரும் அங்கீகாரத்தைப் போலவே, எங்களின் இலகு ரக வாகனங்களும் மிகக் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்று இருக்கின்றன'' என்றவர், டிரக் தொழில் என்பது எத்தகைய நிலையில் இருந்து எந்த மாதிரி நிலைக்கு நகர்ந்துகொண்டு இருக்கிறது என்பதை, ஒரு சமூக விஞ்ஞானியைப் போல அலசி ஆராய்ந்து பேசினார்.

''உணவுப் பொருட்கள், ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் ஆகியவற்றை நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்வது லாரி டிரைவர்கள். இவர்கள் இல்லை என்றால், ஒரு பக்கம் பசியும் பஞ்சமும் தலை விரித்தாடும். இன்னொரு பக்கம், விளை பொருளுக்குத் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நொடிந்துபோவார்கள். ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு தீவாகிவிடும்; பொருளாதாரம் முடங்கிவிடும். சுருக்கமாகச் சொன்னால், நாடே ஸதம்பித்துவிடும். இருந்தாலும், லாரி டிரைவர்களையோ - இந்தத் துறையில் இருப்பவர்களையோ, அவர்களது உழைப்பையோ சமூகம் மதிப்பது இல்லை. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் காரிலோ அல்லது பைக்கிலோ போய்வரவே, நாம்  திண்டாடுகிறோம். ஆனால், இவர்கள் புயல், மழை, வெள்ளம் என்று  இயற்கைச் சீற்றங்கள்; ஆபத்து நிறைந்த சாலைகள், மண்டை காயவைக்கும் அதிகாரிகள், போலீஸ் தொல்லை என அனைத்தையும் தாண்டி, குடும்பத்தை மறந்து, வாரக் கணக்கிலும் மாதக் கணக்கிலும் ஊர் ஊராக அலைந்து தங்களது கடமைகளைச் செய்துவருகிறார்கள். ஆனாலும், இவர்களது உழைப்பை சமூகம் மதிப்பதும் இல்லை, அங்கீகரிப்பதும் இல்லை.

வி.ஐ.பி. பேட்டி: நலின் மேத்தா  - நிர்வாக இயக்குநர் மஹிந்திரா நேவிஸ்டர்

அதனால் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த கேமரா மேன் ஆகியோரை நாடு தழுவிய அளவில் தேர்ந்தெடுப்பதைப்போல, சிறந்த டிரக் டிரைவரையும் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்துக் கௌரவிக்க வேண்டும் என்று கருதினோம். அதன் அடிப்படையில் சமீபத்தில் மிகச் சிறந்த லாரி டிரைவரைத் தேர்ந்தெடுத்து கௌரவித்தோம். லாரி டிரைவரோடு நின்றுவிடாமல், மிகச் சிறந்த லாரி முதலாளி, லாரி வாங்கக் கடன் கொடுக்கும் மிகச் சிறந்த நிதி நிறுவனம், லாரி டிரைவர்களின் உடல் நலத்துக்காகச் செயலாற்றும் சேவை அமைப்பு, ஏன், மிகச் சிறந்த சாலையோர தாபாவைக்கூடத் தேர்ந்தெடுத்து விருது வழங்கினோம்'' என்று நலின் மேத்தா உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

''லாரி டிரைவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு வாகனத்தை ஓட்டும்போது பாதுகாப்பு வேண்டும். 'உன்னுடைய தேவை எதுவானாலும் சரி, என்னிடம் இருப்பது ஒரே ஒரு மாடல்தான். அதை வாங்கிக்கொண்டு போ’ என்று சொல்லக் கூடாது. அதனால், வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு பலவிதமான இலகு ரக வாகனங்களையும், கன ரக வாகனங்களையும் தயாரித்து வருகிறோம். அதனால்தான் ரிப்பீட் ஆர்டர்கள் கொடுக்கும் கஸ்டமர்கள் எங்களுக்கு அதிகமாக இருக்கிறார்கள்!'' என்கிறார் பெருமிதத்துடன்! 

பி.ஆரோக்கியவேல்