Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

4000 கோடி முதலீட்டில் சென்னையில் மஹிந்திரா தொழிற்சாலை!

மோட்டார் நியூஸ்

2011-ம் ஆண்டின் துவக்கத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, சென்னை அடுத்த செய்யாறு அருகே 1,800 கோடி ரூபாய் முதலீட்டில், கார் தயாரிப்புத் தொழிற்சாலையைத் துவக்க இருப்பதாக அறிவித்தது மஹிந்திரா. ஆனால், கடந்த மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைத் துவங்க பேச்சு வார்த்தை நடத்த வந்ததாகத் தெரிவித்தார். ''எந்த மாநிலத்தின் அரசு தொழிற்சாலை அமைக்க சலுகைகள் தருகிறதோ, அங்கே நாங்கள் தொழிற்சாலைத் துவங்குவோம்'' என பத்திரிகையாளர்களிடம் கூறினார் ஆனந்த் மஹிந்திரா. ஆனால், ஏற்கெனவே சென்னையில் ஆராய்ச்சி நிலையைத்தையும், 1,800 கோடி ரூபாய் முதலீட்டில் 400 ஏக்கர் பரப்பளவில் செய்யாறு தொழிற்சாலையையும் அமைத்து வரும் மஹிந்திரா நிறுவனம், தொடர்ந்து அதன் அருகிலேயேதான் புதிய தொழிற்சாலையை  அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் மஹிந்திரா இந்தத் தொழிற்சாலையைத் துவக்க இருக்கிறது.

ஆரஞ்சு வண்ணத்தில் XUV 500

மோட்டார் நியூஸ்

ஏகப்பட்ட டிமாண்டில் ஓடிக்கொண்டு இருக்கும் மஹிந்திரா XUV 500 காரை, தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது மஹிந்திரா. விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முடிந்துவிட்ட நிலையில், தொடர்ந்து இந்த காரை போர்வையால் மூடியே டெஸ்ட் செய்யக் காரணம், புதிய வண்ணங்களில் இந்த காரை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதுதான். சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்ட ஒரு கார் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தது. புதிய XUV 500 காரின் டிசைனில் எந்த மாற்றமும் இருக்காது. இன்ஜினில் மட்டும் சின்ன மாற்றங்கள் இருக்கலாம்!

சூர்யாவுக்கு 'ஆடி’ பரிசு!

மோட்டார் நியூஸ்

இதுவரை நடிகர் சூர்யா ஆடி க்யூ-7 கார் வைத்திருந்தார். சூர்யா, ஆடி காரைப் பயன்படுத்துவது தங்களுக்கு விளம்பரம் என நினைத்த ஆடி நிறுவனம், அவருக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஏ-7 ஸ்போர்ட்ஸ்பேக் காரைப் பரிசாகக் கொடுத்திருக்கிறது. சூர்யாவிடம் கொடுப்பதற்கு முன்பாகவே பதிவு எண் வாங்கிவிட்டதால், சூர்யாவின் கார்களில் இருக்கும் 5005 ஃபேன்ஸி நம்பர் இதில் மிஸ்ஸிங். சூர்யாவின் '5005’ ஆடி க்யூ-7 கார் இப்போது கார்த்தியிடம். எல்லாம் ஒரு விளம்பரம்தான்!

மைக்ரா வெர்ஷன் 2.0

மோட்டார் நியூஸ்

மைக்ராவைவிட நிஸான் சன்னி அதிகம் விற்பனையாகிறது. அதனால், மைக்ராவில் சின்னச் சின்ன மாற்றங்களுடன் விலையைக் குறைத்து விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது நிஸான். வெர்ஷன் 2.0 என்றாலும், இது பழைய காரைவிட வசதிகளில் குறைவான மாடலாகவே இருக்கும். விலையைக் குறைத்து விற்பனையைக் கூட்டுவதுதான் நிஸானின் நோக்கம்.

வருகிறது எலெக்ட்ரிக் மேக்ஸிமோ!

மோட்டார் நியூஸ்

ரேவா நிறுவனத்தை வாங்கிவிட்ட மஹிந்திரா நிறுவனம், எலெக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கிடையே கமர்ஷியல் வாகனமான மேக்ஸிமோவிலும் எலெக்ட்ரிக் வேரியன்ட்டை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா. பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வரும் இந்த வாகனத்தை, படம் பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் விக்னேஷ் ஜெயசீலன். அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த எலெக்ட்ரிக் மேக்ஸிமோவை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ வரை பயணம் செய்யலாம்.

சென்னையில் ஹார்லி தொழிற்சாலை?

மோட்டார் நியூஸ்

ஹார்லி பைக்குகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதோடு, மார்க்கெட்டை இன்னும் பலப்படுத்த இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது ஹார்லி. இப்போது, இந்தியாவில் டெல்லி அருகே அசெம்பிளி யூனிட் மட்டுமே வைத்திருக்கிறது. தற்போது இந்தியாவில் டிரையம்ப், பிஎம்டபிள்யூ, கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்கள் வந்துவிட்டதால், விலையைக் குறைத்து விற்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. முதல்கட்டமாக தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் தேடி வரும் ஹார்லி நிறுவனம், சென்னையை முதல் தேர்வாக வைத்திருப்பதாகத் தெரிகிறது!

தள்ளிப் போன மோட்டோ ஷோ!

மோட்டார் விகடன் மே மற்றும் ஜூன் இதழ்களில் வெளியான விளம்பரத்தின்படி, ஜூன் 22 முதல் 24-ம் தேதி வரை நடக்க இருந்த 'சென்னை மோட்டோ ஷோ’ தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. டீசல் கார்களின் விலை உயர இருக்கும் நிலையில், மோட்டோ ஷோ நடத்துவது சரியாக இருக்காது என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதுதான் இந்த தள்ளிவைப்புக்குக் காரணம். புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மோட்டார் விகடன் வாசகர்கள் மோட்டோ ஷோ நடக்கும்போது, மே மற்றும் ஜூன் இதழ்களில் இடம் பெற்ற இலவச அனுமதி கூப்பன்களையே பயன்படுத்தலாம். வாசகர்களுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்துக்கு வருந்துகிறோம்!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு