Published:Updated:

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்
 ##~##

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து பல்ஸரை மெருகேற்றி வந்த பஜாஜ், இப்போது அதிரடியாக முழுக்க முழுக்க புத்தம் புதிய பல்ஸரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உண்மையிலேயே பழைய பல்ஸருக்கும், புதிய பல்ஸர் 200 என்எஸ் பைக்குக்கும் தோற்றத்தில் எந்த ஒற்றுமையும் இல்லை. 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பல்ஸர் விற்பனைக்கு வந்தபோது 150 சிசி, 180 சிசி மார்க்கெட்டில் பெரிய போட்டியாளர்கள் யாரும் இல்லை. ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என மூன்றிலுமே ஃபுல் பெர்ஃபாமென்ஸைக் காட்டியதால், நம்பர் ஒன் பைக்காக உருவெடுத்தது. ஆனால், இன்று நிலைமையே வேறு. ஹோண்டா சிபிஆர் - 250ஆர், யமஹா ஆர்-15 என வெளியே மட்டும் அல்ல... கவாஸாகி நின்ஜா 250ஆர், கேடிஎம் 200 என உள்ளேயும் போட்டிகள் அதிகம்! இந்தப் போட்டிகளைச் சமாளிக்க பஜாஜ் எந்த அளவுக்கு வேறுபட்ட பல்ஸரைத் தயாரித்து இருக்கிறது?

புதிய பல்ஸரை எடுத்துக் கொண்டு, சென்னையின் சந்து பொந்து முதல் கிழக்குக் கடற்கரைச் சாலை வரை கிட்டத்தட்ட 350 கி.மீ தூரம் டெஸ்ட் செய்தேன்!

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்

டிசைன்

பெட்ரோல் டேங்க், பைக்கின் பின் பக்கம் மிக அழகாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. நேக்கட் பைக்குகளுக்கே உரித்தான பெரிய ஹெட்லைட் உடன் வெளிப்படையாக இருக்கிறது. டிஜிட்டல் டயல்களில் எச்சரிக்கை ஃப்ளாஷ் லைட், அனலாக் டேக்கோ மீட்டர் என எல்லாமே தெளிவாகத் தெரியும் வகையில் உள்ளன. அனலாக் டேக்கோ மீட்டர் டயலின் உள்ளேயே டிஜிட்டல் பெட்ரோல் இண்டிகேட்டர் இடம் பிடித்துள்ளது.

ஆனால், பைக்கின் அடியில் ஏகப்பட்ட வண்ணங்கள், தேவையற்ற பாகங்கள் என 'கொசகொச’வென்று இருக்கிறது. உயரமானவர்கள் மட்டுமே இந்த பைக்கை ஓட்ட முடியும் என்பது இதன் மைனஸ். என்னுடைய உயரம் 5 அடி 8 அங்குலம். எனக்கே இந்த பைக்கை ஓட்டுவதற்குக் கஷ்டமாக இருந்தது. இந்தியர்களின் சராசரி உயரம் 5 அடி 5 அங்குலம்தான். ஆனால், யாரை மனதில் வைத்து சீட்டின் உயரத்தை இந்த அளவுக்கு பஜாஜ் உயர்த்தியது எனத் தெரியவில்லை.

கிரிப்புகள் சிறப்பாக இருக்கின்றன. இதனால், நீண்ட தூரம் ஓட்டினாலும் கைகளில் வலி தெரியவில்லை. ஆனால், பழைய பல்ஸரில் இருந்த செல்ஃப் கேன்சலிங் இண்டிகேட்டர் (ஸ்டீயரிங் நேரானவுடன் தானாக அணைந்துவிடும் இண்டிகேட்டர்)  இதில் இல்லை. ஸ்ப்ளிட் சீட், பின் பக்க இரட்டை எல்ஈடி விளக்குகள், அலாய் நம்பர் பிளேட் என புதிய வசதிகளும் இங்கே இடம் பிடித்திருக்கின்றன.

தேடினாலும் கிடைக்காது என்ற வகையில், சைலன்ஸரை ரொம்ப ரொம்ப குட்டியாக பைக்கின் அடியில் சொருகி இருக்கிறார்கள். ஆனால், இது எந்த வகையிலும் பைக்கின் பிரம்மாண்டத்தைக் கூட்டவோ, குறைக்கவோ இல்லை. டயல்கள் தெளிவாகத் தெரிகின்றன. சர்வீஸ் எப்போது செய்ய வேண்டும் என்கிற இண்டிகேட்டரும் உண்டு. ஆனால், டேக்கோ மீட்டர் இன்னும் கொஞ்சம் பிரைட்டாக இருந்திருக்கலாம். பின் பக்க சஸ்பென்ஷன் மோனோ ஷாக் என்பது புதிய பல்ஸரின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று.

ஸ்ப்ளிட் கைப்பிடி (கிராப் ரெயில்) ஓகே. ஆனால், எதற்காக ஸ்ப்ளிட் மட்கார்டு எனத் தெரியவில்லை. மழை நேரத்தில் சேறு ஏகத்துக்கும் பின்னால் அடிக்கிறது. புஷ் கேன்சலிங் இண்டிகேட்டர் வசதியைப் பொறுத்தவரை நீங்கள் எந்தப் பக்கம் இண்டிகேட்டர் சுவிட்ச்சைத் தட்டினாலும், மீண்டும் அதை ஒருமுறை அழுத்தினால் இண்டிகேட்டர் வார்னிங் நின்றுவிடும். ஆனால், புதிய பல்ஸரில் மீண்டும் புஷ் கேன்சலிங் பட்டனுக்கு நடுவில் அழுத்தினால்தான் பைக் நிற்கிறது.

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்

இன்ஜின்

199.5 சிசி, லிக்விட் கூல்டு, 4 வால்வு, 3-ஸ்பார்க் பிளக் என்று டெக்னிக்கல் டீடெய்ல்ஸில் பல புதுமைகள் தெரிகின்றன. இதன் அதிகபட்ச சக்தி 9500 ஆர்பிஎம்-ல் 23.2 bhp. அதேபோல், அதிகபட்ச டார்க் 8000 ஆர்பிஎம்-ல் 1.86 kgm  . மூன்று ஸ்பார்க் பிளக்குகளும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயங்குகின்றன. வேகத்தைப் பொறுத்தவரை புதிய பல்ஸரில் குறை ஒன்றும் இல்லை. இது 0-60 கி.மீ வேகத்தை 4.11 விநாடிகளில் கடக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை அடைய 11.28 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 124 கி.மீ.

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்

புதிய பல்ஸரின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பயன்படுத்துவதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. கியர்களைத் தட்டத் தட்ட சரியாக மாறுகிறது. ஃபால்ஸ் நியூட்ரல், அதாவது கியர்களை மாற்றிய பிறகும் மாறாமல் தடுமாறும் பிரச்னை இல்லை. இதுவரை வந்த பைக்குகளில் பஜாஜின் மிகச் சிறந்த இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கொண்ட பைக் பல்ஸர் 200 என்எஸ் என்பதைத் தெளிவாகச் சொல்லலாம். ஆனால், அதிர்வுகள் குறைந்தபாடில்லை. அதேபோல், இன்ஜின் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறது.

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்

கையாளுமை

கையாளுமையில் சிறப்பான பைக்காக இருக்கிறது பல்ஸர் 200என் எஸ். நம் கைகள் எந்தத் திசையில் பைக்கைத் திருப்புகிறதோ, அந்தத் திசையில் துல்லியமாகத் திரும்புகிறது. அவுட் ஆஃப் கன்ட்ரோல் போகாது என்ற தைரியத்துடன் வளைவுகளில் சட்டென கட் அடித்துத் திரும்பலாம். ஆனால், திடீரென முன் பக்க பிரேக்கை மட்டும் பிடித்தால், பைக்கின் ஒட்டுமொத்த எடையும் வந்து முன் பக்கத்தில் சேருவதால், கன்ட்ரோல் இழந்து தடுமாற வேண்டி இருக்கிறது. பல்ஸரில் எம்.ஆர்.எஃப் டயர்கள் இல்லை. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் 'யுரோகிரிப்’ டயர்களில் கிரிப் போதுமானதாக இல்லை என்றே சொல்லலாம். சேறுகள் கொண்ட பாதைகளில் ரொம்பவே ஸ்லிப் ஆகிறது!

மைலேஜ்

பல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்

மைலேஜைப் பொருத்தவரை நகருக்குள் 35.9 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 41.1. கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.

பல்ஸர் 200என்எஸ், நிச்சயமாக பைக் மார்க்கெட்டில் தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விலையைப் பொறுத்த வரை 1 லட்ச ரூபாய்க்குக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே குறைவு! 180சிசிக்கு மேலான எல்லா பைக்குகளுமே கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாயை நெருங்கி விட்டதால், அதிக விலை என்று சொல்ல முடியாது. 

பவர்ஃபுல் பைக்காக இருப்பதால், இளைஞர்களுக்கு ஏற்ற வேகமான பைக் பல்ஸர் 200 என்எஸ் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், போதுமான கிரிப் இல்லாத டயர்கள், அதிக உயரம், சஸ்பென்ஷன் மூன்றிலும் சில முன்னேற்றங்களைச் செய்தால், பல்ஸர் 200 என்எஸ் விற்பனையில் ஏறி அடிக்கும்!

அடுத்த கட்டுரைக்கு