Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

பைக் காதலன்  கமல்ஹாசன்!

மோட்டார் நியூஸ்

கமல்ஹாசன் அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை முதலில் வரவேற்பது இந்த மேட்ச்லெஸ் பைக்தான். 1954-ம் ஆண்டு மாடலான இந்த பைக், கமல்ஹாசனின் ஃபேவரிட்! 'ஹே ராம்’ படத்துக்காக வின்டேஜ் பைக்குகளைத் தேடியபோதுதான் உலக நாயகன் கண்களில் இந்த பைக் சிக்கியதாம். பைக் பிறந்த ஆண்டில்தான் கமல்ஹாசனும் பிறந்தார் என்பது பைக்கின் மீது அவரது காதலை இன்னும் அதிகரித்துவிட்டதாம். படத்துக்காக மட்டுமல்லாமல், சொந்தமாகவும் இந்த பைக்கை வாங்கி விட்டார் கமல். அன்று முதல் இன்று வரை பொக்கிஷமாக இந்த பைக்கைப் பாதுகாத்து வருகிறார்!

ஃபோர்டு புதிய சாதனை!

மோட்டார் நியூஸ்

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் கார் விற்பனையை மும்மடங்காக உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது ஃபோர்டு. ஃபிகோவின் புண்ணியத்தால் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 83,887 கார்களை விற்பனை செய்திருக்கிறது ஃபோர்டு. 2009-ம் ஆண்டில் ஃபோர்டு வெறும் 29,488 கார்களை மட்டுமே விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது! இந்தியாவில் ஃபிகோவின் வெற்றியைத் தொடர்ந்து, ஃபிகோவை அடுத்த மாதம் முதல் தென் ஆப்ரிக்கா, நேபாளம் உள்ளிட்ட 48 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது ஃபோர்டு!  

மிட்சுபிஷியின் புதிய சின்ன கார்!

மிட்சுபிஷி நிறுவனம், இந்தியா உள்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் புதிய சின்ன காரின் கான்செப்ட்டை, கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. 2012-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார், 1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் இன்ஜினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. இது லிட்டருக்கு 25 கி.மீ வரை மைலேஜ் தரும் என்று சொல்கிறது மிட்சுபிஷி!

மோட்டார் நியூஸ்

 இனி இல்லை!

பஜாஜ் என்ற பெயருக்குப் பதில் டிஸ்கவர், பல்ஸர் என மோட்டார் சைக்கிள்களின் பெயரிலேயே புதிய மாடல்களை வெளியிட முடிவெடுத்திருக்கிறார் பஜாஜ் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ். ஏப்ரல் மாதம் முதல் பஜாஜ் என்ற பெயரில் மோட்டார் சைக்கிள்கள் வெளிவராது. சின்ன வகை பைக்குகளின் பெயர்களோடு டிஸ்கவரும், பெரிய வகை பைக்குகளோடு பல்ஸரும் சேர்ந்துகொள்ளும்!

பெங்களூரு ஆட்டோ ஷோ!

மோட்டார் நியூஸ்

கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்ற 'இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ 2011’ - கார், பைக் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பேலஸ் மைதானத்தில் நடந்த இந்த ஷோவில் மஹிந்திரா முதல் லேண்ட் ரோவர் - ஜாகுவார் வரை அனைத்து கார், பைக் நிறுவனங்களும் கலந்துகொண்டன. மேலும் ஆக்ஸசரீஸ் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு ஜிபிஎஸ், ஆடியோ சிஸ்டம், லெதர் சீட்ஸ் என படுமும்முரமாக விற்பனை செய்தனர். புதிதாக அறிமுகமான கார்களின் அணிவகுப்பு, ஆட்டோ ஷோவுக்கு வந்திருந்தவர்களுக்கு சோதித்துப் பார்க்க உபயோகமாக இருந்தது. மஹிந்திரா ஸ்டாலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது புத்தம் புதிய தார் ஜீப்... அலாய் வீல், ரோல் பார், ஃபாக் லேம்ப் போன்றவை பொருத்தப்பட்டு கம்பீரமாக நின்றிருந்ததைக் கண்ட ஜீப் பிரியர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்!

- பத்ரி

ராயல் என்ஃபீல்டின் புதிய தலைவர்!

மோட்டார் நியூஸ்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக இயக்குனராக வெங்கி பத்மநாபன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு முன்பு தலைமை நிர்வாக இயக்குனராக இருந்த ஆர்.எல்.ரவிச்சந்திரன் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐஷர் குழுமத்துக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்!

வருகிறது டீசல் எஸ்எக்ஸ்-4!

இறுதியாக 'எஸ்எக்ஸ்-4’ டீசல் காரை விற்பனைக்குக் கொண்டு வர தேதி குறித்துவிட்டது மாருதி. லீனியா மற்றும் இண்டிகோ மான்ஸாவில் உள்ள 1.3 லிட்டர், 90 தீலீஜீ சக்தி கொண்ட இன்ஜினுடன் இறங்குகிறது எஸ்எக்ஸ்-4 டீசல். பெட்ரோல் காரைவிட 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாக விற்பனைக்கு வருகிறது இந்த டீசல் கார்!

ஏப்ரில்லா, வெஸ்பாவுடன் களம் இறங்கும் பியாஜியோ!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் ஏப்ரில்லா சூப்பர் பைக் மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது பியாஜியோ. இத்தாலியின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ, மஹாராஷ்டிராவில் உள்ள பாராமதி நகரில் கமர்ஷியல் வாகனங்களைத் தயாரிக்கிறது. அங்கே வெஸ்பா ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கும் பியாஜியோ, வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை 2012-ம் ஆண்டு முதல் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. இதற்கிடையே ஏப்ரில்லாவின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கான ஆர்எஸ்வி-4 பைக்கை அப்படியே இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது பியாஜியோ. ஏப்ரில்லா பைக்கின் விலை 15 லட்சத்தில் இருந்து ஆரம்பம்!

நிஸானின் புதிய அஸ்திரம்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் சின்ன கார் இல்லாமல் மார்க்கெட்டைப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டது நிஸான். மைக்ரா மூலம் பிரீமியம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் புகுந்திருக்கும் நிஸான், சைலன்ட்டாக இந்தியாவுக்கென்று 2 சின்ன கார்களைத் தயாரித்து வருகிறது. 2-3 லட்ச ரூபாய் மார்க்கெட்டில் களம் இறங்க இருக்கும் இரண்டு புதிய கார்களுமே 1 லிட்டர் இன்ஜினுடன் விற்பனைக்கு வர இருக்கின்றன. நிஸானின் முதல் சின்ன கார் 2012-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு