Published:Updated:

எதனால் எத்தனால்..?

எதனால் எத்தனால்..?

எதனால் எத்தனால்..?
 ##~##

'பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள் தயார்!’ என்று ஒரு செய்தி வந்தால், அது எத்தனை இனிப்பான செய்தியாக இருக்க முடியும்! ஆனால், அது சாத்தியமா என்று கேட்டால், ''நிச்சயம் சாத்தியம்தான்!'' என்கிறார் விவசாயியும் வழக்கறிஞருமான நல்லசாமி. ''மாற்று எரிபொருளான எத்தனாலை நாம் உற்பத்தி செய்தால், வாகன ஓட்டத்துக்கு வளைகுடாவை நம்பி நாம் வாழும் நிலை இருக்காது!'' என்று அடித்துச் சொல்கிறார். 

ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் இருக்கும் நல்லசாமியின் பண்ணை இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். ''நம் நாட்டின் மொத்த தேவையில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டும்தான் நரிமணம், மும்பை, அஸ்ஸாம் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி தீர்க்கிறது. மீதம் 80 சதவிகிதத்தை ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதன் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய அந்நியச் செலாவணி இழப்பு ஆறு லட்சம் கோடி. இது ராணுவத்துக்குச் செய்யும் செலவைவிட இரண்டு மடங்கு அதிகம். சரி, தேவையாவது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து சதவிகிதம் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 'இந்த நிலையில், இன்னும் 25 வருடங்கள் மட்டுமே பெட்ரோல் கிடைக்கும். பிறகு, படிப்படியாக உற்பத்தி குறைந்து வற்றும் நிலை உருவாகிவிடும்’ என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

எதனால் எத்தனால்..?

மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை ஏறுகிறது. பெட்ரோல் இருப்பே காலியாகிவிடும் என வரும் தகவல்கள் ஒட்டுமொத்தமாக வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. இந்த நிலையில், மாற்று எரிபொருளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், எத்தனாலை மிகச் சிறந்த மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். பிரேசிலையும், அமெரிக்காவையும் இந்த விஷயத்தில் முன்னோடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதிகப்படியான பெட்ரோலிய இறக்குமதியால் நிதி நிலைமை மோசமாகி, உலகமெங்கும் கடன் வாங்கி, மிகப் பெரிய பொருளாதாரச் சீர்கேட்டைச் சந்தித்த பிரேசில், மாற்று எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான் மெள்ள மெள்ள வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அளவுக்கு நிதி வசதியில் உச்சம் தொடக் காரணம், எத்தனால்தான். எதிலும் தீர்க்க தரிசனத்துடன் சிந்திக்கிற அமெரிக்காவும் எத்தனால் பயன்பாட்டுக்கு மாறி விட்டது. அமெரிக்காவில் 'இ85’ என போர்டு போட்ட பங்க்குகளே இருக்கின்றன. சமீப காலமாக ஆப்பிரிக்க, கரீபிய நாடுகளும் எத்தனால் உற்பத்தியில் இறங்கி உள்ளன. சீனா, எத்தனாலை இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டது.

ஆக, இவர்கள் எல்லாம் படு புத்திசாலித்தனமாக செயல்படும் போது, நாம் மட்டும் இன்னும் கட்டியிருக்கும் கோவணத் துணியையும் விற்று, அந்தப் பணத்தில் பெட்ரோல் வாங்குவது மகா முட்டாள்தனமான விஷயம். நம் நாட்டில் இருக்கின்ற வளங்களை வைத்து, நம்மால் சிறப்பாக எத்தனால் உற்பத்தி செய்ய முடியும்'' என்று சொல்லி நிறுத்தியவர், வேலி தாண்டும் வெள்ளாடுகளை விரட்டிவிட்டு, ''எந்த ஒரு விவசாயப் பண்டத்தில் இருந்தும் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். மக்காச்சோளம், உருளைக் கிழங்கு என எதையும் பயன்படுத்தலாம். ஆனால், கரும்பில் இருந்து தயாரிப்பதுதான் எத்தனால் உற்பத்தி செய்வதற் கான செலவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

'கரும்பை எத்தனால் பயன்பாடுக்குக் கொடுத்து விட்டால் சர்க்கரைக்கு எங்கே போவது?’ என்ற கேள்வி எழலாம். இந்தியாவில் 560 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்த ஆலைகள் சர்க்கரைத் தயாரிப்பை மட்டுமே செய்யட்டும். ஆனால், இனி உருவாக்கப்படுகிற ஆலைகளை எத்தனால் உற்பத்திக்காகப் பயன்படுத்துவோமே!

சரி, அந்த ஆலைகளின் பயன்பாடுக்கான கரும்புக்கு எங்கே போவது? இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு. அதனால், இங்கே மூன்று போகமும் வேளாண்மை செய்ய முடியும். நம் நாட்டில் இருக்கிற பல கோடிக்கணக்கான வானம் பார்த்த பூமியில், இந்த ஆலைகளின் தேவைக்கான கரும்பை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்திக்கான தண்ணீரும் நம் கைவசம் இருக்கிறது. ஆண்டு தோறும் நமக்குக் கிடைக்கும் நீர்வளம் எழுபதாயிரம் டி.எம்.சி. ஆனால், இதில், பயன்பாடு போக இருபதாயிரம் டி.எம்.சி நீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி, ஆங்காங்கே நதிகளை ஒரு இணைப்பின் கீழே கொண்டு வந்து நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்தாலே, கரும்பை கோடிக்கணக்கான டன்களில் உற்பத்தி செய்து, அதில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம்!'' என்றார்.

''சரி, எத்தனாலைத் தயாரிப்பது எப்படி?''

''இதில் பெரிய தொழில்நுட்பம் எல்லாம் கிடையாது. நொதித்த கரும்புச் சாற்றை 80 டிகிரி சென்டி கிரேடில் சூடேற்ற வேண்டும். அப்போது 78 டிகிரி சென்டி கிரேடில் ஈத்தேல் ஆல்கஹால் கிடைக்கும். இதை அப்படியே வடிய வைத்துச் சேமித்தால், அதுதான் ஆல்கஹால். இதோடு தண்ணீரைக் கலந்தால், அது குடி சாராயம் ஆகிவிடும் ஜாக்கிரதை!'' என்று சொல்லிச் சிரித்தவர், ''டீசலுக்கு மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்த முடியாது. பெட்ரோலுக்குப் பதிலாக முழுக்க முழுக்க எத்தனாலைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டலாம். ஆனால், தொடக்க காலத்தில் 75% பெட்ரோலும், 25% எத்தனாலும் பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 2000-வது ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் இன்ஜின்

எதனால் எத்தனால்..?

கொண்ட வாகனங்களில் இந்தப் பயன்பாடு சாத்தியம். பெட்ரோல் விலையில் பாதிதான் கரும்பு மூலமாக உருவாக்கப்படும் எத்தனாலின் விலை இருக்கும். ஒரு லிட்டரில் 250 மில்லி மட்டும் எத்தனாலைப் பயன்படுத்துவதால், எவ்வளவு பணம் மிச்சமாகி விடப் போகிறது? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படக்கூடிய பல லட்சம் லிட்டர்களில், எத்தனால் மூலமாகச் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பை யோசித்துப் பாருங்கள்.

அதேபோல், எத்தனால் பயன் படுத்தினால், வாகனத்தின் பிக்-அப் குறையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற நவீன தொழில்நுட்பத்தில் விரைவாகவே இந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியும். எத்தனால், ஒரு புதுப்பிக்கக் கூடிய சக்தி. சூரிய ஒளி, காற்று, நீர், நிலம் என இந்த உலகம் இருக்கும் வரை எத்தனாலும் இருக்கும். பெட்ரோல் போல் வற்றிப் போகும் அவலம் வராது. கூடவே பெட்ரோல், டீசல் போல சுற்றுச் சூழலை அதிகமாக மாசுபடுத்துவதும் இல்லை'' என்றவர் இறுதியாக, ''அறச்சலூரில் ஆடு விரட்டிக் கொண்டு இருப்பவனுக்குத் தெரிந்திருக்கும் இந்த எத்தனால் மகத்துவம், இந்தியாவை ஆள்பவர்களுக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயம் தெரியும்! ஆனால், நம் நாட்டில் பெட்ரோல் லாபி அப்படி! பெட்ரோலை இறக்குமதி செய்யும்போது கணிசமான பர்சன்டேஜ் பணம் சில முதலைகளுக்குக் கிடைக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பெட்ரோலில் 5 % எத்தனால் கலந்து பரிசோதனை முயற்சியாக விற்பனை செய்து பார்த்தார்கள். ஆதரவு இருக்கத்தான் செய்தது. ஆனால், காலப்போக்கில் அந்தத் திட்டம் அப்படியே காணாமல் போய் விட்டது. அதனால், பர்சன்டேஜுக்காக அலையும் இந்த முதலைகளின் லாபியைத் தகர்த்தால்தான், நமது நாட்டில் எத்தனால் உற்பத்தி சாத்தியம்!'' என்று நிறுத்தினார் நறுக் வார்த்தைகளில்!

எத்தனால் பயன்பாடு சாத்தியம்தானா என்று கோவை வேளாண்மை பல்கலையின் உயிர் ஆற்றல் துறையின் தலைவரான வெங்கடாசலத்திடம் பேசியபோது, ''பிரேசில் நாட்டில் எத்தனால் பயன்பாடு ஆச்சரியம் ஏற்படுத்துகிற வகையில் இருக்கிறது. வேளாண் தேசமான இந்தியாவிலும் எத்தனால் உற்பத்தியும், பயன்பாடும் சாத்தியமே! ஆனால், இங்கு நம் அரசாங்கத்தின் கொள்கைகள் அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது அவசியம். கரும்பு விவசாயத்தில் இருந்து ஏகத்துக்கும் எத்தனாலைத் தயாரிக்க முடியும். ஆனால், சர்க்கரைத் தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் மொலாசஸ¨க்கு அரசாங்கம் தர முன்வரும் பணம் குறைவாக இருப்பதாக ஆலை முதலாளிகள் நினைக்கிறார்கள். எத்தனாலுக்குக் கொடுப்பதைவிட குடி சாராயத்துக்குக் கொடுப்பது லாபம் என்பது அவர்களின் கணக்கு. எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டும். பெட்ரோலைவிட எத்தனாலின் விலை நிச்சயம் கணிசமான அளவு குறைவாக இருக்கும் என்பதோடு, பெட்ரோல் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு கேட்டை விட எத்தனால் பயன் பாட்டால் அடைவது மிக குறைவாக இருக்கும். இதை யெல்லாம் தாண்டி, பல காரணங்களால் மெள்ள அழிந்து கொண்டு இருக்கும் இந்திய விவசாயச் சூழல், எத்தனால் தயாரிப்பின் மூலம் நிச்சயம் செழிக்கும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

எதனால் எத்தனால்..?

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை தலைவரான கணேஷ் முரளி, ''எத்தனால் நிச்சயம் நம்பிக்கையான மாற்று எரிபொருள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நூறு சதவிகிதம் எத்தனாலை மட்டும் பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் சூழல் இப்போதைக்கு இல்லை. பத்து, இருபது, இருபத்தைந்து என்று சில சதவிகிதங்களில் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துவதுதான் இப்போதைக்கு சாத்தியம்.

எத்தனால் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் பிக்-அப் குறைகிறது என்பது பொதுவான புகார். ஆனால், ஆட்டொமொபைல் துறையின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்படும்போது இதைச் சுலபமாகச் சரி செய்துவிட முடியும். பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து பயன்படுத்த ஆட்டோமொபைல் உலகம் ஆர்வமாக இருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்துவதில் உள்ள சின்னச் சின்ன சிக்கல்களை சரிசெய்து, நடைமுறைப்படுத்தும் லகான் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது'' என்கிறார்.

அரசு, இனியும் எத்தனால் விஷயத்தில் மெத்தனம் காட்டாமல் இருக்க வேண்டும்!

எதனால் எத்தனால்..?
அடுத்த கட்டுரைக்கு