Published:Updated:

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

Published:Updated:
நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

எம்யூவி/எஸ்யூவி கார்கள், நம் கார் மார்க்கெட்டுக்கு வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டு இருக்கின்றன. பெட்ரோல் / டீசல் விலை உயர்வால், கார்களின் விற்பனை ஒரு பக்கம் குறைந்துகொண்டே வர... எப்போதுமே குறைந்த அளவில் விற்பனையாகும் யூட்டிலிட்டி வகை கார்களின் விற்பனை முன்னோக்கிப் பறக்கிறது. கடந்த காலாண்டில் செடான் கார்களைவிட யூட்டிலிட்டி கார்களின் விற்பனைதான் அதிகம். மாருதி எர்டிகா, மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டொயோட்டா இனோவா ஆகிய கார்களின் விற்பனைதான் இப்போது டாப்! உயர்ந்துகொண்டே இருக்கும் இதில், மார்க்கெட் ஷேரைப் பிடித்துவிட எவாலியாவைக் களம் இறக்கி இருக்கிறது நிஸான்.

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்வியூ கார்களின் இந்தியாவின் நம்பர் ஒன் கார் டொயோட்டா இனோவா. நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் நிமிடத்துக்கு ஒரு இனோவாவைப் பார்க்க முடியும். இனோவாவின் விற்பனையைக் குறி வைத்தே களம் இறக்கப்பட்டு இருக்கிறது நிஸான் எவாலியா. இரண்டில் எது பெஸ்ட்?

டிசைன்

எவாலியா, இனோவா - இரண்டு கார்களில் எது அழகு? இங்கே இரண்டு கார்களின் படத்தையும் பார்த்துவிட்டு இப்படி ஒரு கேள்வியை யாருமே கேட்க முடியாது. டிசைனில் இனோவாவைவிட பல படிகள் பின்தங்கி இருக்கிறது நிஸான் எவாலியா. யூட்டிலிட்டி கார்களுக்கு அழகு முக்கியம் இல்லை என்று சப்பைக் கட்டு கட்டினாலும், வாடிக்கையாளர்களின் தேர்வில் காரின் டிசைனும் முக்கிய இடத்தில் இருக்கிறது என்பதை நிஸான் மறந்து விடக் கூடாது.

உள்ளே...

டொயோட்டா இனோவாவைவிட எவாலியாவின் இருக்கைகள் உயரமாக இருக்கின்றன. முன் பக்க இருக்கைகளில் உட்கார்பவர்கள் வசதியாக உட்கார முடியும் என்பதோடு, சாலையை முழுவதுமாகப் பார்க்கும் வகையில் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. டிரைவிங் பொசிஷன் எவாலியாவில் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் வீல் ஏதோ வேனுக்குள் இருப்பதுபோலவே செங்குத்தாக இருக்கிறது. டேஷ் போர்டு தரமாக இருப்பதோடு, ஏ.சி, மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட கன்ட்ரோல்கள் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளன.

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

இனோவாவின் கேபினும் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. காருக்குள் இருப்பது போன்ற டேஷ் போர்டு வடிவமைப்பு ஈர்க்கிறது. சென்டர் கன்ஸோல் மற்றும் கதவுகளில் ஆங்காங்கே மரப்பலகை ஊடுருவுவது சொகுசு காருக்கான ஃபீலைக் கொடுக்கிறது. பாகங்களின் தரம் மற்றும் ஃபிட் அண்டு ஃபினிஷைப் பொறுத்தவரை எவாலியாவைவிட இனோவாதான் பெஸ்ட்! முன் பக்க இருக்கைகள் நீண்ட தூரம் உட்கார்ந்து பயணிக்க வசதியாக இருப்பதோடு - டிரைவிங் பொசிஷன், ஸ்டீயரிங், கன்ட்ரோல்கள் பயன்படுத்து வதற்கு எளிதாக இருக்கின்றன. இதனால், நீண்ட தூரம் காரை ஓட்டினாலும் களைப்பு தெரியவில்லை.

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

பின்னோக்கித் தள்ளும் வகையில் ஸ்லைடிங் கதவுகளைக் கொண்டிருக்கிறது எவாலியா. இது எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே! ஆனால், மூன்றாவது வரிசை இருக்கையில் இடம் பிடிப்பதற்கு இந்த ஸ்லைடிங் கதவுகள் ஈஸியாக இருக்கின்றன. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளில் இடம் தாராளமோ தாராளம்! எவாலியாவின் மிகப் பெரிய பலமே இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளில், பெரியவர்கள்கூட வசதியாக உட்கார முடியும் என்பதே! மூன்றாவது வரிசையில் ஆட்கள் உட்கார்ந்த பிறகும், டிக்கியில் இரண்டு சூட்கேஸ்களை வைக்கும் அளவுக்கு இடம் உண்டு. ஆனால், பின் பக்கக் கண்ணாடிகளைத் திறக்க முடியாது என்பது எவாலியாவின் மிகப் பெரிய மைனஸ். பட்டர்ஃபிளை ஜன்னல்கள் என்று சொல்லப் படும் இந்த ஜன்னலை, ஒரு இன்ச் அளவுக்குத் தான் திறக்க முடியும். ஆனால், இதன் வழியாகக் காற்று உள்ளே நுழைவதுதான் கஷ்டம்.

இனோவாவில் கார் கதவுகளைத் திறப்பது போலவே, இரண்டாவது வரிசை கதவுகளைத் திறக்க முடியும். இனோவாவின் இரண்டாவது வரிசை இருக்கைகளில், எவாலியாவில் இருக்கும் அளவுக்கு இடம் இல்லை. ஆனால், இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. மூன்றாவது வரிசையில், கால்களை நீட்டி உட்கார லெக்ரூம் அதிகம் என்றாலும், ஹெட் ரூம் மிகவும் குறைவு. உயரமானவர்கள் உட்கார்ந்தால், தலையைக் குனிந்தபடிதான் உட்கார வேண்டும். டிக்கியிலும் பொருட்கள் வைக்க எவாலியா அளவுக்கு இடம் இல்லை.

சிறப்பம்சங்கள்!

நிஸான் எவாலியா நான்கு வேரியன்ட்டுகளுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. ஏபிஎஸ், பவர் ஸ்டீயரிங், மியூசிக் சிஸ்டம் ஆகிய மூன்றுமே நான்கு வேரியன்ட்டுகளிலும் இருக்கும் என அறிவித்திருக்கிறது நிஸான். இரண்டு காற்றுப் பைகள், ரிவர்ஸ் கேமரா, அலாய் வீல், கீ-லெஸ் என்ட்ரி, மூன்றாவது வரிசை இருக்கைகளில் ஏ.சி மற்றும் முன் பக்க பவர் விண்டோஸ் ஆகிய வசதிகள் விலை உயர்ந்த வேரியன்ட்டில் உண்டு. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, சீட் உயர அட்ஜஸ்ட், ஸ்டீயரிங்கிலேயே ஆடியோ கன்ட்ரோல் போன்ற வசதிகள் எந்த வேரியன்ட்டிலும் கிடையாது.

இனோவாவின் பேஸிக் (இ) வேரியன்ட்டில் ஏபிஎஸ் மற்றும் காற்றுப் பைகள் கிடையாது. விலை உயர்ந்த வேரியன்ட்டில் மட்டுமே இரட்டைக் காற்றுப் பைகள் உள்ளன. பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் (நான்கு கதவுகளுக்குமே), கீ-லெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் இரண்டாம் வேரியன்ட்டான 'ஜி’-யில் இருந்தே உண்டு. விலை உயர்ந்த விஎக்ஸ் வேரியன்ட்டில் கிளைமேட் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன், ஆடியோ சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் கேமரா வசதிகள் உண்டு.

இன்ஜின்...

ரெனோவின் 1.5 லிட்டர் கே9கே டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது நிஸான் எவாலியா. இதன் அதிகபட்ச சக்தி 84bhp. டொயோட்டா இனோவாவைவிட 1000 சிசி திறன் குறைவான கார் எவாலியா. ஆனால், அந்த பவர் குறைபாடு சுத்தமாகத் தெரியவில்லை. காரணம், இனோவாவைவிட எவாலியாவின் எடை 200 கிலோ குறைவு. இதனால், பிக்-அப் சூப்பர்! நகருக்குள் ஓட்டும் போதும் சரி, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதும் சரி... பிக்-அப் சிறப்பாக இருக்கிறது. பவர் ஒரே சீராக இருப்பதால், ஆரம்ப வேகத்தில் திணறலோ, அதிக வேகத்தில் பவர் குறைபாடோ தெரியவில்லை.

இனோவாவின் எடை அதிகம் என்றாலும், 2.5 லிட்டர், 102bhp சக்தி கொண்ட பவர்ஃபுல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஓவர்டேக் செய்வது ரொம்பவும் ஈஸி. காரில் ஏழு பேர் உட்கார்ந்த பிறகும், இன்ஜின் திணறல் எதுவும் இல்லை. ஆனால், இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தரம் டாப் கிளாஸ் என்று சொல்ல முடியாது. வேகமாகச் செல்லும்போது கியர் லீவரில் அதிர்வுகள் தெரிவதோடு, வெளிச் சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை!

ஸ்டீயரிங் லைட்டாக இருப்பதோடு, டர்னிங் சர்க்கிள் ரேடியஸும் குறைவாக இருப்பதால், ஒரு சின்ன காரை ஓட்டுவதுபோல் நகருக்குள் வளைத்துத் திருப்பி எவாலியாவை ஓட்ட முடிகிறது. டயர் கிரிப் மற்றும் ரோடு கிரிப் சிறப்பாக இருப்பதால், கையாள்வதற்கு சிறந்த யூட்டிலிட்டி வாகனமாக இருக்கிறது எவாலியா. ஸ்டெபிளிட்டியிலும் பிரச்னை இல்லை. ஆனால், சஸ்பென்ஷனில் முன்னேற்றம் வேண்டும். மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது உள்ளே உட்கார்பவர்கள் குலுங்க வேண்டியிருக்கிறது.

எவாலியாவைப் போல நகருக்குள் அவ்வளவு ஈஸியாக இனோவாவை ஓட்ட முடியாது. வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கும் அதிக மெனக்கெட வேண்டும். ஆனால், வேகம் போகப் போக ஸ்டெபிளிட்டியிலும், ரோடு கிரிப்பிலும் சிறப்பாக இருக்கிறது இனோவா. இருக்கைகளின் உயரமும் குறைவு என்பதால், 'ஃபன் டு டிரைவ்’ இனோவாவில் உண்டு. மேடு பள்ளங்களில் பயணிக்கும் போது அதிர்வுகளை உணர முடிகிறது.

நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா
நிஸான் எவாலியா Vs டொயோட்டா இனோவா

நிஸான் எவாலியாவின் ஒட்டுமொத்த பலமும் இட வசதிதான். அந்த ஏரியாவைத் தாண்டினால், பல மைனஸ்களை எவாலியாவில் பட்டியல் போடலாம். வேன் போல இருப்பதோடு, பின் பக்க கண்ணாடிகளையும் திறக்க முடியாது என்பது காருக்கான கேரக்டரையே மாற்றி விடுகிறது. ஓட்டுவதற்கு கார் போல இருந்தாலும், வெளியே இருந்து பார்க்கும்போது ஒரு வேன் போலவே இருக்கிறது எவாலியா.

கேபின் குவாலிட்டி, சொகுசான இருக்கைகள், ஓட்டுதல் மற்றும் கையாளுமை என கிட்டத்தட்ட எல்லா ஏரியாவிலும் இனோவா பெஸ்ட்! இட வசதி எவாலியா அளவுக்கு இல்லையே தவிர, குறை சொல்லும்படி இல்லை. நிஸான் எவாலியா, இனோவாவைவிட குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்தாலும், பயன்பாட்டுக்குச் சிறந்த, அழகான, பெரிய குடும்பங்களுக்கான கார், டொயோட்டா இனோவா தான்!