Published:Updated:

லாரன்சோ, பெட்ரோஸா...

சாம்பியன் பட்டத்துக்கு சொந்தம் கொண்டாடும் ஸ்பெயின்!

லாரன்சோ, பெட்ரோஸா...

சாம்பியன் பட்டத்துக்கு சொந்தம் கொண்டாடும் ஸ்பெயின்!

Published:Updated:
 ##~##

ராஸி மீண்டும் யமஹாவுக்குத் தாவிய பின், மோட்டோ ஜீபியில் தடதடக்கும் பல மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு ரேஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் நடப்பு சாம்பியன் கேஸி ஸ்டோனர், சாம்பியன் பட்டத்தோடு விடை பெறப் போராடுகிறார். யமஹாவின் லாரன்சோ, சாம்பியன் பட்டதைக் கைப்பற்றத் துடிக்கிறார். வெற்றி பெறுவது யார்? என்ற இறுதிக் கட்டத்தை நோக்கிப் பறக்கிறது மோட்டோ ஜீபி! 

அமெரிக்கா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் நகரில், ஆகஸ்ட் 19-ம் தேதி மோட்டோ ஜீபியின் 11-வது சுற்று நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார் ஹோண்டா அணியின் டேனி பெட்ரோஸா. யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், யமஹாவின் ஆண்ட்ரி டொவியிஸோஸோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ஹோண்டாவின் கேஸி ஸ்டோனர் ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். தகுதிச் சுற்றின்போது விபத்தில் சிக்கிய கேஸி ஸ்டோனருக்கு வலது காலில் பலத்த அடி. இருப்பினும், ரேஸ் ஓட்ட களம் இறங்கினார்.

லாரன்சோ, பெட்ரோஸா...

ரேஸ் துவங்கியதுமே, நான்காவது இடத்தில் இருந்து துவக்கிய பென் ஸ்பீஸ் வேகமெடுத்துப் பறக்க... பெட்ரோஸா பின்தங்கினார். ஆனால், பெட்ரோஸாவுக்கு அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இருந்தது. மூன்றாவது லேப்பின்போது இன்ஜின் கோளாறு காரணமாக பென் ஸ்பீஸ் ரேஸைவிட்டு வெளியேற, முதல் இடத்துக்கு முன்னேறினார் பெட்ரோஸா. இதற்கிடையே பெட்ரோஸாவுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தினார் ஜார்ஜ் லாரன்சோ. இருப்பினும், யார் வெற்றி பெறுவார் என த்ரில்லிங் காட்சிகளுக்கு பெட்ரோஸா இடம் கொடுக்கவில்லை. 10.8 விநாடிகள் வித்தியாசத்தில் லாரன்சோவைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார் டேனி பெட்ரோஸா. ஆண்ட்ரி டொவியிஸோஸோ மூன்றாவது இடம் பிடிக்க, வலியுடன் ரேஸ் ஓட்டிய கேஸி ஸ்டோனர் நான்காவது இடம் பிடித்தார்.

இண்டியானா போலீஸ் ரேஸ் டிராக்கில், டேனி பெட்ரோஸா பெற்றிருக்கும் இரண்டாவது வெற்றி இது என்பதோடு, மோட்டோ ஜீபி ரேஸில் பெட்ரோஸாவின் 40-வது வெற்றி இது!

செக் குடியரசு!

செக் குடியரசு நாட்டில் உள்ள ப்ருனோவில், மோட்டோ ஜீபியின் 12-வது சுற்று ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற்றது. யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார். யமஹாவின் கால் கிரட்ச்லோ இரண்டாவது இடத்தில் இருந்தும், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். வாலண்டினோ ராஸி, ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். அமெரிக்கா ரேஸில் நடந்த விபத்தால், கேஸி ஸ்டோனர் இந்த ரேஸில் கலந்து கொள்ளவில்லை.

லாரன்சோ, பெட்ரோஸா...

ரேஸ் துவங்கியதுமே இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய டேனி பெட்ரோஸாவுக்கும், முதல் இடத்தில் இருந்த ஜார்ஜ் லாரன்சோவுக்கும் இடையே கடுமையான போட்டா போட்டி துவங்கியது. மொத்தம் 22 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ், ரசிகர்களுக்கு செம த்ரில்லிங் ரேஸாக அமைந்தது. ''எப்போதுமே கடுமையான ஓவர்டேக் சவால்களில் டேனி பெட்ரோஸா வெற்றி பெற்றால், அது ஆரம்பத்தில் இருந்தே லீட் எடுத்த கிளீன் வெற்றியாக இருக்கும்!'' என்பதுதான் ரேஸ் நிபுணர்களும், ரசிகர்களும் பெட்ரோஸாவின் மேல் வைத்திருக்கும் இமேஜ். அந்த இமேஜை டேமேஜ் செய்யும் வகையில், பெட்ரோஸா ரேஸ் ஓட்டி அதிர்ந்தது ரேஸ் டிராக். ரேஸின் கடைசி லேப்பில் நீயா, நானா? என ஜார்ஜ் லாரன்சோவும், பெட்ரோஸாவும் போட்டி போட... ரேஸின் இறுதி வளைவில் லாரன்சோவை முந்திச் சென்று வெற்றி பெற்றார் பெட்ரோஸா. மான்ஸ்ட்டர் யமஹாவின் கால் க்ரட்ச்லோ மூன்றாவது இடம் பிடிக்க, வாலன்டினோ ராஸி ஏழாவது இடத்தில் ரேஸை முடித்தார்.

இத்தாலி!

இத்தாலியின் மிஸானோ நகரில் உள்ள மார்க்கோ சைமன்செல்லி ரேஸ் டிராக்கில், மோட்டோ ஜீபியின் 13-வது சுற்று செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ரேஸின்போது விபத்தில் சிக்கி உயரிழந்த மார்க்கோ சைமன்செல்லியின் நினைவாக இந்த ரேஸ் டிராக்குக்குப் பெயரிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது வாலன்டினோ ராஸியின் சொந்த ஊரில் நடைபெறும் ரேஸ் என்பதால், ராஸி ரசிகர்கள் பெருமளவில் மைதானத்தில் குவிந்திருந்தனர். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று டேனி பெட்ரோஸா முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, ஜார்ஜ் லாரன்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், கார்ல் க்ரட்ச்லோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். வாலன்டினோ ராஸி ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

லாரன்சோ, பெட்ரோஸா...

மீண்டும் பெட்ரோஸா, லாரன்சோ மோதுவார்களா அல்லது சொந்த ஊரில் ராஸி உயிர்த்தெழுவாரா? என எதிர்பார்ப்புடன் ரேஸ் துவங்கியது. ஆரம்பத்திலேயே பெட்ரோஸாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹெக்டர் பார்பராவின் பைக்கோடு மோதிய பெட்ரோஸாவின் பைக், ரேஸ் டிராக்கைவிட்டு வெளியே போய் விழுந்தது. இதனால், லாரன்சோ சுலபமாக முதலிடத்துக்குப் பறந்துவிட... ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய வாலன்டினோ ராஸி வெறியோடு ரேஸ் ஓட்டினார். ராஸிக்கு ஆதரவாக ரேஸ் டிராக்கே ஆர்ப்பரிக்க... இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் ராஸி. இறுதியில் ஜார்ஜ் லாரன்சோ வெற்றி பெற, டுகாட்டியின் ராஸி இரண்டாம் இடம் பிடித்து ரசிகர்களுக்கு உற்சாகச் செய்தி சொன்னார். ஹோண்டாவின் கிரஸினி ஆல்வரோ பட்டிஸ்ட்டா மூன்றாவது இடம் பிடித்தார்.

மொத்தம் 13 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ சாம்பியன்ஷிப் பட்டியலில் 270 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா 232 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நடப்பு சாம்பியன் கேஸி ஸ்டோனர் 186 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். லாரன்சோ, பெட்ரோஸா இருவரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், கோப்பையும் சாம்பியன் பட்டமும் ஸ்பெயினுக்குத்தான் என்கிற உற்சாகத்தில் ஸ்பெயின் ரசிகர்கள் பரபரக்கின்றனர்.

வெற்றி பெறப் போவது ஹோண்டாவா, யமஹாவா? என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்!

>>சார்லஸ்