Published:Updated:

வின்டேஜ் கலெக்டர்!

வின்டேஜ் கலெக்டர்!

வின்டேஜ் கலெக்டர்!

வின்டேஜ் கலெக்டர்!

Published:Updated:
 ##~##

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் 'டி.ஜெ. ஆட்டோமொபைல்’ என்ற பெயரில் வொர்க் ஷாப் வைத்திருக்கும் இன்ஜினீயர் வெங்கடேச துரையை நன்கு அறிந்தவர்களுக்குக்கூட, அவரிடம் அற்புதமான வின்டேஜ் கலெக்ஷன் இருப்பதை அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை. பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் தன்னுடைய கலைக் கூடத்தை எனக்காகத் திறந்து காட்டினார் வெங்கடேச துரை. 

அங்கு அணிவகுத்து நின்ற கார், ஜீப், பைக், ஸ்கூட்டர் என வின்டேஜ், கிளாஸிக் ரக வாகனங்கள் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தின. அவ்வளவும் அத்தனை அரிதான கலெக்ஷன். அங்கிருந்த வாகனங்களை நான் வைத்த கண் மாறாமல் பார்ப்பதைக் கண்ட வெங்கடேச துரை, ''கண் வைத்துவிடாதீர்கள்'' என்றார் சிரித்துக்கொண்டே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திருச்சியில் இப்படி ஒருவர் இருக்கும் விஷயமே எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எங்கே இருந்து இதையெல்லாம் சேகரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டீர்கள்?'' என்றேன்.

வின்டேஜ் கலெக்டர்!

''சின்ன வயசிலேருந்து பழைய காசு, நோட்டு, பழங்காலத்துப் பொருட்கள் எல்லாம் சேர்த்து வைக்கிற பழக்கம் என்கிட்ட இருந்தது. 1988-ல் ஆட்டோமொபைல் துறைக்கு வந்ததும், நம்ம பீல்டுல இருக்குற பழைய காலத்துப் பொருட்களை கலெக்ட் பண்ணலாம்னு தோணுச்சு. ஆனா, 2002-ல் இருந்துதான் கலெக்ஷன் செய்ய ஆரம்பிச்சேன். நிறைய பழைய வாகனங்கள் இருந்தாலும், 1940 - 1960 கலெக்ஷன் ஏழு மட்டும்தான் இருக்கு. இதெல்லாம் பராமரிக்கிறதும், பாதுகாக்குறதும் ரொம்ப கஷ்டம். நான் இந்த பீல்டுல இருக்கிறதால அந்தக் கஷ்டம் அவ்வளவா தெரியலை. மெக்கானிக் வேலை சம்பந்தமா போகும்போது, அங்க எதாவது பழைய வண்டிங்க இருந்தா அவங்ககிட்ட பேசி வாங்கிட்டு வந்துடுவேன். ஒவ்வொரு தடவையும் வாங்கும்போது, அந்த வீட்ல இருக்கிறவங்கள சமாதானம் பண்ணி, வண்டி ஓனர்கிட்ட பேசி சம்மதிக்க வெச்சி அப்பா...! அதான் ரொம்பப் பெரி¢ய வேலை. இப்படி வாங்கிட்டு வர வண்டியில எதாவது பிரச்னை இருந்தா, அதைச் சரி பண்ணி புதுசு மாதிரியே வெச்சிப்பேன். ஒரிஜினாலிட்டியை மாத்த மாட்டேன்!'' என்றவரிடம் வாகனப் பட்டியலைக் கேட்டோம்.

''மோட்டார் பைக்கில, பிஎஸ்ஏ 500 சிசி பைக் 1942 மாடல். இந்த பைக்கோட ஸ்பெஷல் என்னன்னா, சைக்கிள் ஸ்டாண்டு போடுற மாதிரிதான் ஸ்டாண்ட் போடணும். இதை இழுத்து நிப்பாட்டவே நாலு பேரு வேணும். ரெண்டு சைடும் இரும்புல செஞ்சது. 10 கி.மீ போனாலே உடம்பு வலிக்கும். அந்தக் காலத்து மனுசங்க எவ்வளவு வலிமையா இருந்திருப்பாங்க?'' என்றவர், அடுத்து வாகனங்களின் வரலாறு பற்றிப் பேச ஆரம்பித்தார்.

''அடுத்து ட்ரையம்ப் 1952 மாடல், இதோட ஸ்பெஷல் ஹேன்ட் கியர் கார் மாதிரியே இருக்கும். ஏஜேஎஸ் பைக் 1947, அந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி அமைச்சிருப்பாங்க. நான் முதல் தட்வையா வாங்கிட்டு வந்த வண்டி. அதனால, அது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த பைக்குங்க எல்லாம் அந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைச்சிருப்பாங்க. கார் கலெக்ஷன்ல ஹிந்துஸ்தான் 1948 மாடல் இருக்கு. இது எனக்கு ரொம்பப் பிடிச்ச கார். திருச்சியில ஒரு வொர்க் ஷாப்ல குப்பை மாதிரி கெடந்தது. 15 வருஷமா யூஸ் பண்ணாம இருந்த காரை, ஒரு வருஷமா பேசிப் பேசி வாங்கினேன். இதை ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். இப்ப நல்ல கண்டிஷன்ல இருக்கு. 40,000 கொடுத்து வாங்கின இந்த காருக்கு ரெண்டு லட்சம் செலவு ஆச்சு! பணம் முக்கியம் இல்லை. பொருள் பத்திரமா இருக்கணும். இந்த கார் தவிர, மோரீஸ் 1942 மாடல், வில்லிஸ் ஜீப் 1942 மாடல்... இப்படி ஒவ்வொன்னும் ஒவ்வொரு வகையில ஸ்பெஷல். இந்த வண்டி எல்லாம் வாங்கும்போது, பணத்தை வீணாக்குறேன்னு வீட்ல பிரச்னை நடக்கும். ஆனா, இப்போ புரிஞ்சுகிட்டாங்க. இதுக்காகவே தனியா பணம் ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க!'' என்றார் சிரித்துக் கொண்டே!

''சரி, உங்களோட எதிர்காலத் திட்டம்தான் என்ன?''

''திருச்சில ஒரு பெரிய பில்டிங் கட்டி, இதுக்குத் தனியா ஒரு மாடி ஒதுக்கணும். இன்னும் நிறைய கலெக்ட் பண்ணணும். என்னோட கனவு கார் ரோல்ஸ் ரோய்ஸ். அதை எங்கிருந்தாவது பிடிக்கணும். இதான் என்னோட ஆசை. நிறைய பேரு என்னோட கலெக்ஷன பார்த்துட்டு விலைக்குக் கேட்கிறாங்க. நான் விக்கிறதுக்காக இதெல்லாம் கலெக்ட் பண்ணலை. மனத் திருப்திக்காக மட்டும்தான் செய்கிறேன்'' என்றவரிடம் அடுத்த முறை ரோல்ஸ் ராய்ஸ் காருடன் சந்திப்போம் என்று விடை பெற்றேன்!