Published:Updated:

எட்டு புதிய கார்கள் அறிமுகம்!

ஃபோர்டின் மாஸ்டர் பிளான்!

எட்டு புதிய கார்கள் அறிமுகம்!

ஃபோர்டின் மாஸ்டர் பிளான்!

Published:Updated:
 ##~##

டெட்ராய்ட்டில் உள்ள ஃபோர்டு தலைமை அலுவலகத்தின் 11-வது மாடியில் இருக்கிறது, ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆலன் முல்லாலியின் அறை. ஒவ்வொரு வியாழக் கிழமையும் தலைமையகத்தில் உள்ள தயாரிப்புப் பிரிவு மேலாளர்கள் தங்களின் ஒருவார கால செயல்பாட்டினை ஆலன் முல்லாலியிடம் விவரிப்பார்கள். 

அந்த அதிமுக்கியமான கூட்டத்தில், இந்திய மார்க்கெட்டைப் பற்றியெல்லாம் பேச நேரம் இருக்குமா என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், ஒவ்வொரு மீட்டிங்கிலும் இந்திய மார்க்கெட் பிளானைப் பற்றி விவாதிக்காமல் இருக்க மாட்டாராம் ஆலன் முல்லாலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் முதன் முதலில் கார் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய நிறுவனம் ஃபோர்டு. 1995-ம் ஆண்டு மஹிந்திராவுடன் இணைந்து 'மஹிந்திரா - ஃபோர்டு’ என்ற பெயரில் இந்தியாவுக்குள் நுழைந்ததுதான் நமக்குத் தெரியும். ஆனால், 1907-ம் ஆண்டே இந்திய மார்க்கெட்டுக்குள் நுழைந்துவிட்டது ஃபோர்டு. முதன்முதலில் மாடல் 'ஏ’ எனும் காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. 1926-ம் ஆண்டு இந்தியாவில் தொழிற்சாலையும் துவங்கப்பட்டது. பின்பு, பல்வேறு காரணங்களால் இந்தத் தொழிற்சாலை 1954-ம் ஆண்டு மூடப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேறியது ஃபோர்டு.

எட்டு புதிய கார்கள் அறிமுகம்!

இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸாக 50:50 பார்ட்னர்ஷிப்பில் துவங்கப்பட்டதுதான் மஹிந்திரா - ஃபோர்டு. 1998-ம் ஆண்டுக்குப் பின், முழுமையாக அனைத்து பங்குகளையும் தன் வசப்படுத்திக் கொண்டது ஃபோர்டு நிறுவனம். முதன்முதலாக ஃபோர்டு எஸ்கார்ட் கார்தான் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு, ஐகான் காரை சென்னை தொழிற்சாலையில் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தது.

தற்போது ஃபிகோ, ஃபியஸ்ட்டா, எண்டேவர் ஆகிய மூன்று கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்கிறது ஃபோர்டு. ஐகான், மாண்டியோ, ஃப்யூஷன் ஆகிய மூன்று கார்களும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டவை. உண்மையைச் சொல்லப் போனால், சென்னையில் தொழிற்சாலை துவங்கி முதல் 12 ஆண்டுகள் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்தது ஃபோர்டு நிறுவனம். 2009-ம் ஆண்டு அதாவது, ஃபிகோ இந்தியாவில் விற்பனைக்கு வரும் வரை ஃபோர்டின் மார்க்கெட் ஷேர் வெறும் 1.5 சதவிகிதம்தான். ஃபிகோ அறிமுகமானதும், சட்டென 4.5 சதவிகிதமாக உயர்ந்து, இப்போது மேலும் உயரத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது!

எட்டு புதிய கார்கள் அறிமுகம்!

2015-ம் ஆண்டுக்குள் எட்டு புதிய கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் ஃபோர்டின் திட்டம். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 8,500 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. சென்னையில் இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையை வைத்திருக்கும் ஃபோர்டு, ஒரே லைனிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களைத் தயாரிக்கிறது. டீசலும், பெட்ரோலும் ஒரே லைனில் தேவைக்கேற்ப தயாரித்துக்கொள்ளலாம் என்கிற ஃபோர்டின் இந்த அணுகுமுறைதான், பெட்ரோல் விலை உயர்ந்ததும் மற்ற கார் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தபோதும், ஃபோர்டை சரியாமல் காப்பாற்றியது. கடந்த ஆண்டு வரை 70 சதவிகிதம் பெட்ரோல் இன்ஜினும், 30 சதவிகிதம் டீசல் இன்ஜினும் உற்பத்தி செய்யப்பட்டு வந்த இந்த ஆலையில், இப்போது 70 சதவிகிதம் டீசல் இன்ஜின்கள் தயாரிக்கப் படுகின்றன.

தற்போது குஜராத்தின் சனந்த் பகுதியில் புதிய கார் தொழிற்சாலை அமைத்து வருகிறது ஃபோர்டு. 2014-ம் ஆண்டுவாக்கில் குஜராத் தொழிற்சாலையும் முழுமையாக செயல்படத் துவங்கினால், இந்தியாவில் ஆண்டுக்கு 4.40 லட்சம் கார்களை ஃபோர்டு தயாரிக்கும்.

விரைவில் மாற்றங்களுடன் கூடிய ஃபிகோ காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் காரான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை, ஜனவரி மாதம் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. அதன் பிறகு, ஃபியஸ்டா ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு வரும். அதனைத் தொடர்ந்து எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி காரையும் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. ஹோண்டா அக்கார்டு காருக்குப் போட்டியாக, மீண்டும் மாண்டியோவைக் களம் இறக்கத் திட்டமிட்டு வருகிறது. இந்த வரிசையில் மிக முக்கியமான ஃபிகோவை விடவும் சின்ன காராக 3-4 லட்ச ரூபாய்க்குள் புதிய காரை களம் இறக்குகிறது ஃபோர்டு.

எட்டு புதிய கார்களும் இந்தியாவில் களம் இறங்கினால், இந்திய கார் மார்க்கெட்டில் ஃபோர்டு விறுவிறுவென உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கலாம்!

>> சார்லஸ்