Published:Updated:

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8
 ##~##

சாலையில் வாகனப் போக்குவரத்து ரொம்பவும் குறைவாக இருக்கிறது... கையில் 100 கிலோ மீட்டருக்கு மேல் பறக்கக் கூடிய பைக் அல்லது கார் இருந்தால்... நாம் என்ன செய்வோம்? 'கிளப்புடா கைப்புள்ள’ என 100 கிலோ மீட்டருக்கு மேல் பறப்பது, ஸ்டீயரிங்கை வளைத்து நெளித்து ஓட்டி 'எப்பூடி’ என நம்மையே நாம் பாராட்டிக் கொள்வது என ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒரு துடிப்பான வாலிபன் எட்டிப் பார்ப்பான். எப்போதோ கிடைக்கும் இந்த உணர்வு, வாகனத்தை ஓட்டும் ஒவ்வொரு நொடியும் கிடைத்தால் எப்படி இருக்கும்? 

டிராஃபிக் ஜாம், சிக்னல், குறுக்குசால் ஓட்டும் ஆட்டோக்கள் அற்ற ரேஸ் டிராக்கில், 525 bhp சக்தி கொண்ட மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய சூப்பர் கார் கையில் கிடைத்தது. இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கில் நம் முன்னால் நின்றது சூப்பர் கார் ஆடி ஆர்-8.

ரோலர் கோஸ்டரில் சுற்றும்போது, அடி வயிற்றில் இருந்து பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிக்குமே... அதுபோலத்தான் இருந்தது ஆடி ஆர்-8 காரை சென்னை ரேஸ் டிராக்கில் டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவம்.

'எக்ஸ்ட்ரா பில்ட்-அப்’ கொடுப்பது, ஹைப்பை ஏற்றுவது இது இரண்டுமே இந்த காருக்குத் தேவையற்றது. காரணம், லம்போகினி கலார்டோவில் இருக்கும் அதே இன்ஜின் கொண்ட ஆடி ஆர்-8, நான்கு சொடுக்கு போடுவதற்குள் 100 கி.மீ வேகத்தைத் தாண்டிவிடும்.

சூப்பர் கார்கள் தயாரிக்கப்படுவதற்கான ஒரே குறிக்கோள், வேகம் மட்டுமே! மணிக்கு 300 கி.மீ-க்கு மேல் பறக்கக் கூடிய காருக்கு ஏற்றவாறு ஸ்டீயரிங்கையும், அந்த வேகத்தில் போகும்போது காரைக் கட்டுப்படுத்த பவர்ஃபுல் பிரேக்ஸையும், விபத்து ஏற்பட்டால் காருக்குள் இருப்பவருக்கு சின்ன அடிகூட படாமல் பாதுகாப்பு வசதிகளைக் கூட்டுவதும்தான் ஒரு சிறந்த சூப்பர் காரைத் தயாரிப்பதற்கான சவால்கள்.

அந்த சவால்களை ஆடி ஆர்-8 எப்படிச் சமாளித்துஇருக்கிறது?

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8

ஸ்டைல்

சூப்பர் கார்கள் பொதுவாக, போஸ்டரில் பார்க்கும்போதே உச்சகட்டத்தை அடைய வைத்துவிடும். ஃபெராரி, லம்போகினி எல்லாம் இதில் கை தேர்ந்தவை. 'இதுதான்யா சூப்பர் கார்’ என்று சொல்ல வைக்கும். ஆனால், ஆடி ஆர்-8 காரைப் பார்த்ததும் அப்படி எந்த உணர்வும் உங்களுக்கு ஏற்படாது. உயரம் குறைவான, 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் என்கிற வகையில், சாலையில் செல்லும்போது இந்த கார் உங்களைத் திரும்பி பார்க்க வைக்கும் என்றாலும், சில விநாடிகள் உங்கள் கண்களிலும், மனதிலும் தங்கும் காராக இருக்காது.

ஸ்டைலைக் கண்டுகொள்ளாமல், ஏரோ டைனமிக்ஸ் மற்றும் ஹை-ஸ்பீடு ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட கார் போன்று இருக்கிறது ஆடி ஆர்-8. காரின் முன் பக்கம் பட்டாம் பூச்சியின் இறகைப் போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. காரின் முன் பக்கத்தில் நான்கு வளையங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் ஆடி லோகோவின் கீழே பெரிய கிரில்லும், அதன் இரண்டு பக்கமும் ஹெட்லைட்ஸை தன்னுள்ளே கொண்ட இரண்டு கிரில்களும் ஆடிக்கே உரிய யுனிக் டிசைன்.

நீளமான கதவின் பின்னால் ஏர் வென்ட்டுகள் கொண்ட கறுப்பு நிற பிளேடுகள் எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன். காரின் பின் பக்கத்திலும் இரட்டை கிரில் கான்செப்ட் தொடர்கிறது. இதில் பேக்லைட்டுகள் சேர்ந்து கொண்டுள்ளன. இரண்டு எக்ஸாஸ்ட் பைப்புகளின் முனையும் முட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே முதன்முறையாக எல்ஈடி ஹெட்லைட்டை ஆர்-8 காரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது ஆடி. இது தவிர, ஆடியின் வழக்கமான டே டைம் ரன்னிங் விளக்குகளும் உண்டு.

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8

ஆடியின் பில்டு குவாலிட்டியை கொஞ்சமும் சந்தேகப்பட முடியாது. முழுக்க அலுமினியம் ஸ்பேஸ் ஃப்ரேம் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப் பட்டுள்ளது ஆர்-8. காரின் 92 சதவிகித பாடி மற்றும் சேஸி பாகங்கள், கார்பன் ஃபைபர் உள்ளிட்ட எடை குறைவான பொருட்களால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளே

சென்னையில் நாம் டெஸ்ட் டிரைவ் செய்தது இடது பக்க ஸ்டீயரிங் கொண்ட ஆடி ஆர்-8. 1.5 கோடி ரூபாய் கார் என்று கேட்டவுடனே காரின் உள்ளே எப்படி இருக்கும் என்ற  எதிர்பார்ப்பு எகிறும். ஆனால், 'வாவ்’ என வாயடைக்க வைக்கும் அளவுக்கு காரின் உள்பக்கம் சூப்பர் இல்லை. டயல்கள் மற்றும் சுவிட்ச்சுகள் ஆடியின் விலை குறைவான கார்களில் இருப்பது போன்றே இருக்கின்றன. இரண்டு பெரிய டயல்களில் ஒன்றில் டேக்கோ மீட்டரும், மற்றொன்றில் ஸ்பீடோ மீட்டரும் அனலாக்கில் இருக்கின்றன. டேக்கோ மீட்டர் டயலுக்குள் நேரமும், நாளும் டிஜிட்டலில் ஒளிர்கிறது. ஸ்பீடோ மீட்டர் டயலில் ட்ரிப் மீட்டரும், ஓடோ மீட்டரும் டிஜிட்டல் டிஸ்ப்ளே! இரண்டு டயல்களுக்கு மேல் உள்ள சின்ன டயலில் ஃப்யூல் இண்டிகேட்டர் இடம் பெற்றுள்ளது.

ஆடியின் சின்ன டிஸ்ப்ளே திரையில் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் கேமரா டிஸ்ப்ளேவைப் பார்க்கலாம். உலகின் மிகச் சிறந்த பேங்க் அண்டு ஆலுஃப்சன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8

காரின் கதவுகள் அகலமாகத் திறப்பதால், காருக்கு உள்ளே போவது ஈஸியாக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் 'ஏ’ மற்றும் 'என்’ என இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. 'ஏ’ பக்கமாக கியர் லீவரைத் தட்டிவிட்டு, ஆக்ஸிலரேட்டரை மிதித்தால் கார் பறக்க ஆரம்பித்துவிடும். நியூட்ரலைக் குறிப்பதுதான் 'என்’. கார் ஆன்-ல் இருந்து நீண்ட நேரம் ஆக்ஸிலரேட்டரில் கால் வைக்கவில்லை என்றால், மீண்டும் நியூட்ரல் பொசிஷனுக்கே கியர் லீவர் திரும்பிவிடும்.

இட வசதியைப் பொறுத்தவரை ஆடி ஆர்-8 சூப்பர். இரண்டு சீட்டுகள் மட்டுமே கொண்ட இந்த காரில், முன் பக்கம் காலை நீட்டி மடக்கி உட்கார ஏகப்பட்ட இடம் இருக்கிறது. சீட்டுகள் உயரம் குறைவாக இருப்பது ஒரு ஃபார்முலா-1 காரில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. டிரைவர் சீட்டில் உட்கார்ந்த உடனே உங்களுக்கு மிகவும் சௌகரியமான பொசிஷனில் ஸ்டீயரிங்கும், கன்ட்ரோல்களும் கைக்கு வந்துவிடுகிறது. சீட்டுக்குப் பின்னால் கறுப்பு வலை இருக்கிறது. இதனுள் சின்னச் சின்னப் பைகளை போட்டு வைத்துக் கொள்ளலாமே தவிர, பெரிதாக எதிர்பார்க்க முடியாது. எல்லா ஸ்போர்ட்ஸ் கார்களைப் போலவே இன்ஜின் பின்னால் இருப்பதால், முன் பக்கம்தான் பொருட்கள் வைக்கலாம். இதிலும் சின்ன சின்னப் பைகளை மட்டுமே வைக்க முடியும். ஸ்போர்ட்ஸ் காரில் இதற்கு மேல் பொருட்கள் வைக்க இடம் எதிர்பார்க்க முடியாது.

இன்ஜின்

நாம் டெஸ்ட் செய்தது 5204 சிசி, 525 bhp சக்தி, வி10 இன்ஜின் கொண்ட ஆடி ஆர்-8 மாடல். பெர்ஃபாமென்ஸ்தான் இந்த காரின் பலமே. ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்ததும் இன்ஜின் சீற ஆரம்பிக்கிறது. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் டிராக் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு சவாலான ரேஸ் டிராக். ஆனால், நேர்கோட்டுப் பாதை மிகவும் சிறிது. இதனால், காரின் டாப் ஸ்பீடை டெஸ்ட் செய்ய முடியவில்லை. சொல்லப் போனால் இங்கே 180 - 190 கி.மீ வேகத்தைத் தொடுவதே அதிகம்!

எந்த வேகத்தில் செல்லும் போதும், காருக்குள் எந்தவிதமான பயமோ, சத்தமோ இல்லை. எந்த வேகத்தில் சென்றாலும் சரி, கார் முழுக்க முழுக்க நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் கூடுகிறது.

சென்னை ரேஸ் டிராக்கில் 13 லேப்புகள் தொடர்ந்து காரை டெஸ்ட் செய்து பார்த்தோம். ஏபிஎஸ் டெஸ்ட்டிங்கும் நடந்தது. பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆடி ஆர்-8 உண்மையிலேயே சூப்பர் கார். எந்த வேகத்திலும் எப்படி பிரேக் அடித்தாலும், கார் கன்ட்ரோலை இழக்கவே இல்லை.

ஆர்-8 காரை ஓட்டும்போது, அடுத்த லேப் இன்னும் வேகமாகப் போக வேண்டும் என்கிற உணர்வு கிளம்புகிறதே தவிர, எந்தக் கட்டத்திலும் பயமாக இல்லை. மணிக்கு 160 கி.மீ வேகத்தை வெறும் 9 விநாடிகளில் தொடுகிறது ஆர்-8. அதாவது, ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்துவிட்டு சாலையைப் பார்ப்பதற்குள் நீங்கள் 160 கிமீ வேகத்தைக் கடந்திருப்பீர்கள். அதிர்வுகளோ, கடமுடா சத்தமே இல்லாமல் அமைதியான இன்ஜினாக இருக்கிறது.

கையாளுமை

கிட்டத்தட்ட 1800 கிலோ எடை கொண்ட காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வு துளியும் இல்லாமல், சின்ன ஹேட்ச்பேக் காரை ஓட்டுவதுபோல் இருக்கிறது. 'வேகப் பிசாசு’ என்று சொல்லப்படும் சூப்பர் கார்கள் சிலவற்றை கன்ட்ரோல் செய்வது ரொம்பவும் கஷ்டம். மிகவும் தேர்ந்த டிரைவர்கள்தான் சூப்பர் கார்களை ஓட்ட முடியும். ஆனால், ஆடி ஆர்-8 காரை புதிதாக டிரைவிங் லைசென்ஸ் எடுத்தவர்கள்கூட ஈஸியாக ஓட்டக் கூடிய அளவுக்கு எப்போதுமே ஓட்டுபவரின் கன்ட்ரோலுக்குள் இருக்கிறது. சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பதால், மேடு பள்ளங்கள் காருக்குள் தெரியவில்லை.

மைலேஜ்

சூப்பர் கார்களில் மைலேஜைக் கேட்கக் கூடாது. சரியான மைலேஜைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நடிகர் விக்ரமிடம் கேட்கலாம். சென்னையில் ஆடி ஆர்-8 கார் வைத்திருக்கும் ஒரு சிலரில் விக்ரமும் ஒருவர். ஆடி ஆர்-8 அதிகபட்சம் லிட்டருக்கு 5 கி.மீ மைலேஜ் தரும். ரேஸ் டிராக்கில் நாம் ஒவ்வொரு லேப் ஓட்டி முடிக்கும்போது ஃப்யூல் இண்டிகேட்டர் முள் சிவப்புப் பகுதியை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தது!

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8

சூப்பர் கார்களை ஓட்டுவது போன்று எல்லோராலும் கனவு காண முடியுமே தவிர, எல்லோராலும் வாங்க முடியாது. கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கக் கூடிய ஆடி ஆர்-8 காரின் மிகப் பெரிய பலமே விலைதான்! இதன் போட்டியாளரான லம்போகினி கலார்டோவின் விலை இரண்டரை கோடி ரூபாய். பார்ப்பதற்கு லம்போகினி, ஃபெராரி போல சூப்பர் ஸ்டைலான காராக இல்லை என்றாலும், எந்த நோக்கத்துக்காகத் தயாரிப்படுகிறதோ அதன் தேவையைப் பூர்த்தி செய்கிறது ஆர்-8. வேகம், பாதுகாப்பு, கையாளுமை மூன்றிலுமே ஆடி ஆர்-8 பெஸ்ட்!

பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8
பெர்ஃபாமென்ஸின் உச்சகட்டம்! - ஆடி ஆர் 8

ஆடி ஆர்-8 காரை சென்னை ரேஸ் டிராக்கில் டெஸ்ட் செய்தபோது, தமிழின் ஒரே ஆட்டொமொபைல் பத்திரிகையான மோட்டார் விகடனைப் பாராட்டினார் ஆடி இந்தியாவின் தலைவர் மைக்கேல் பெர்ஷ்கே.

மோட்டார் விகடன் வாசகர் ஒருவருக்கு ரேஸ் டிராக்கில் ஆடி ஆர்-8 சூப்பர் காரை இலவசமாக ஓட்டும் வாய்ப்பைத் தருகிறேன் என ஆச்சரிய அறிவிப்பை அப்போது வெளியிட்டார். ஆடி ஆர்-8 சூப்பர் காரை சென்னை ரேஸ் டிராக்கில் ஓட்டிப் பார்க்க 72,000 ரூபாய் கட்டணம். மோட்டார் விகடன் வாசகருக்கு இலவசம் என்று மைக்கேல் சொன்னதும் உடனடியாக மோட்டார் விகடன் ஃபேஸ்புக் (facebook.com/motorvikatan) தளத்தில் போட்டி ஒன்றை நடத்தினோம்.

'இந்தியாவில் விற்பனையாகும் ஆடி கார்களில், விலை குறைவான கார் எது?’ என்பதுதான் கேள்வி.

இருநூறுக்கும் மேற்பட்ட மோட்டார் விகடன் ரசிகர்கள் கலந்துகொண்டு விடை அளித்தனர். இதில், ’ஆடி ஏ-4 பிசினஸ் எடிஷன்’ என சரியான விடை எழுதி, மோட்டார் விகடன் ஆசிரியர் குழுவின் தேர்வின் படி வெற்றி பெற்றவர், சென்னையைச் சேர்ந்த பிரீத்தி நாராயணன். இனி ஓவர் டு பிரீத்தி!

''விலை குறைவான கார் எது என்ற கேள்வியைப் பார்த்ததும், நண்பர்கள், உறவினர்கள் இன்டர்நெட் என எல்லா இடங்களிலும் பேசி, தேடி 'ஆடி ஏ-4 பிசினஸ் எடிஷன்’ என எழுதினேன். அக்டோபர் 19-ம் தேதி இரவு 9 மணி இருக்கும். மோட்டார் விகடனில் இருந்து போன் வந்தது. 'போட்டியில் நீங்கள்தான் வெற்றியாளர். உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். 'ஓட்டத் தெரியுமாவா? காரில் ஸ்டன்ட்டே செய்வேன் சார்’ என்று சொன்னதும், '20-ம் தேதி காலை 8 மணிக்குள் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்குக்கு வந்துவிடுங்கள்’ என்று சொன்னார்கள்.

சரியாக பத்து மணிக்கு ஆடி ஆர்-8 காருக்குள் உட்கார்ந்தேன். அந்த நொடியை என் வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாது. ஹெல்மெட், சீட் பெல்ட் போட்டுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தவுடனே ஆடி ஆர்-8 உயிர்பெற்று எழுந்த அந்தச் சத்தம், இன்னும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரேஸ் டிராக்கில் ஆடி ஆர்-8 காரை ஓட்டினேன். அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ வேகம் வரை சென்றேன். ஒன்றரை கோடி ரூபாய் ஆடி ஆர்-8 காரை ஆசை தீர ஓட்டுவதற்கு வாய்ப்பளித்த மோட்டார் விகடனுக்கு என் நன்றிகள்'' என்ற பிரீத்தியின் கண்களில் த்ரில் கொஞ்சமும் குறையவில்லை!