Published:Updated:

மலை வழியில் ஒரு கடல் பயணம்!

மலை வழியில் ஒரு கடல் பயணம்!

மலை வழியில் ஒரு கடல் பயணம்!
 ##~##

ஜெனரல் மோட்டார்ஸின் லேட்டஸ்ட் மிஸைல்... செவர்லே செயில் யுவா! இது உற்பத்தியாகும் (புனே அருகே உள்ள) தெலகான் தொழிற்சாலைக்கும் ஆம்பிவேலிக்கும் இடையே இருக்கும் தூரம் 95 கி.மீ-தான் நாம் செயிலை டெஸ்ட் செய்த பாதை. பெட்ரோல் செயில் மட்டுமின்றி, டீசல் செயிலையும் டெஸ்ட் செய்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.   

காரை டெஸ்ட் செய்வதற்கு முன்பு, செயில் யுவா எப்படித் தயாராகிறது என்பதை அதன் தொழிற்சாலைக்குச் சென்று நேரில் பார்த்தோம்.

'செயில் யுவா சீனாவின் கார் என்றாலும், அந்த காரை அப்படியே ஈ-அடிச்சான் காப்பி அடித்து இங்கு தயாரிக்கவில்லை. புது வடிவம், புதிய இன்ஜின், பெர்ஃபாமென்ஸ் டெவலப்மென்ட் என பல்வேறு விஷயங்களைச் லோக்கல் டேஸ்ட்டுக்கு ஏற்ப சேர்த்திருக்கிறோம். மொத்தத்தில் செவர்லே செயில் யுவா இந்தியர்களுக்காக, இந்தியாவில், இந்தியர்களினால் தயாரிக்கப்படும் கார். இனி, செயில் யுவாவை இந்தியாவில் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்’ என்றனர் ஜிஎம் நிறுவனத்தினர். அதேபோல், செயில் யுவாவை எவ்வாறு இந்தியாவின் சாலைகளுக்கும், பருவ நிலைக்கும் ஏற்ற மாதிரி மாற்றி அமைத்திருக்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.

பிறகு, டெஸ்ட் டிரைவுக்காகத் தயாராக நின்ற டீசல் செயில் யுவாவில் ஏறி, லோனாவாலாவைத் தாண்டி இருக்கும் ஆம்பிவேலி என்ற மலைப் பிரதேசத்தை நோக்கி பயணத்தைத் துவங்கும் முன்பு, காரை ஒரு முறை சுற்றி வந்து ரசித்தோம்.

செயில் யுவாவின் முன் பக்க கிரில் பீட் காரை நினைவுப்படுத்தினாலும் ஹெட் லைட், 'இது பீட் இல்லை’ என்று சொல்ல வைக்கிறது. பீட் போல கவர்ச்சிகரமான கார் இது இல்லை. ஆனால், 'மிகவும் சுமார்’ என்றும் இதன் டிசைனைச் சொல்ல முடியாது. ஆனால், காரின் பின் பக்கத்தைத் தாராளமாக, 'மிகவும் சுமார்’ என்று சொல்லலாம்.

மலை வழியில் ஒரு கடல் பயணம்!

பின் பக்க பம்பர் டிசைன் மீண்டும் பீட் காரை நினைவுப்படுத்துகிறது. டெயில் லைட் சாதாரணமாக இருக்கிறது. இந்த காரை பக்கவாட்டில் இருந்து பார்த்தால், ஹேட்ச்பேக்கா அல்லது செடானா என சந்தேகம் எழும். அந்த அளவுக்கு நீளமாகத் தெரிகிறது செயில் யுவா. எரிபொருள் டேங்க்கை காரின் நடுப் பகுதியில் வைத்திருப்பதால், பின் இருக்கைகள் தராளமான விசாலத்துடன் இருக்கின்றன. ஹேட்ச்பேக் கார்களில் இப்படி ஒரு இட வசதியை யாரும் எதிர்பார்க்க முடியாது. 'ஹேட்ச்பேக் காரில் பின்னருக்கை தாராளமாக இருந்தால், டிக்கி என்பதே இருக்காதே?’ என்ற சந்தேகம் வரலாம். ஆனால், மற்ற ஹேட்ச்பேக் கார்களில் இருப்பதை விட செயிலின் டிக்கி  விசாலமானதாக இருக்கிறது.

டிரைவர் சீட்டில் அமர்ந்தால் சாலையைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால், கொஞ்சம் உயரமானவர் அமர்ந்தால் ஹெட் ரூம் போதுமானதாக இல்லை. காரணம், டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பதுதான். டேஷ் போர்டு டிசைன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், டேஷ் போர்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்ஸின் தரம் மிகவும் சுமார். ஸ்டீயரிங் வீல் பிடித்து ஓட்ட சுலபமாக இருக்கிறது. ஹார்ன் பட்டன்கள் கை வைக்கும் இடத்தில் வைத்திருப்பது வசதியாகவே இருக்கிறது. ஆனால், பவர் விண்டோஸ் பட்டன்களை ஏன் கியர் லீவருக்கு அருகே வைத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அதேபோல், இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் உள்ள மீட்டர்களில் பூசப்பட்டுள்ள ஆரஞ்சு வண்ணம், கவனத்தை திசை திருப்புகிறது.

டீசல் இன்ஜின் என்பதற்கான அடையாளத்தோடு, ஸ்டார்ட் செய்ததும் லேசான அதிர்வுகள் தெரிகிறது. கியர் மாற்றி சட்டென புறப்படும்போது டர்போ லேக் தட்டுகிறது. ஆனால், ஆரம்பகட்ட வேகத்தைத் தாண்டி விட்டால் எந்த தடங்களும் இல்லாமல் சீறுகிறது 1.3 லிட்டர் இன்ஜின். 1248 சிசி கொள்ளளவு கொண்ட இந்த இன்ஜின் 6000 ஆர்பிஎம்-ல் 77 bhp சக்தியையும், 1750 ஆர்பிஎம்-ல் 20.90 kgm டார்க்கையும் அளிக்கிறது. ஆரம்பகட்டத் தயக்கத்தை தவிர, அடுத்தடுத்த கியர்களுக்குச் சுலபமாகத் தாவ முடிகிறது. ஷார்ட் ரேஷியோ கியர் செட்டிங் என்பதால், இது சுலபமாக இருக்கிறது. ஆனால், கியர் மாற்றுவதற்கு கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது.

மலை வழியில் ஒரு கடல் பயணம்!

தெலகானில் இருந்து மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையை எட்டிப் பிடித்தோம். ஆக்ஸிலரேட்டரை அழுத்த அழுத்த... எந்தச் சலனமும் இல்லாமல் அதன் போக்கிலேயே சீராக வேகம் எடுக்கிறது செயில் யுவா. அதிக மைலேஜுக்காக சீராக பவர் டெலிவரி ஆவதுபோல செட் செய்யப்பட்டு இருப்பதை உணர முடிந்தது. ஸ்டீயரிங், பயன்படுத்த ஸ்மூத்தாகவும் நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் இருக்கிறது. மணிக்கு 120 கி.மீ வேகம் வரை அலட்டல் இல்லாமல் சென்றது செயில். ஆனால், இந்த வேகத்தைத் தாண்டியதும் அதிர்வுகளும், டீசல் இன்ஜின் சத்தமும் காருக்குள் கேட்கிறது. புனே - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில், அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ வேகம் வரை செயில் யுவாவை விரட்டினோம். எக்ஸ்பிரஸ்வேயில் இருந்த ஹோட்டல் ஒன்றின் முன்பு, ஓர் பெட்ரோல் செயில் யுவா காத்திருந்தது. டீசலில் இருந்து பெட்ரோலுக்கு மாறினோம். நம்பவே முடியவில்லை! டீசல் இன்ஜின் கார் காத்த அமைதி, பெட்ரோல் காரில் மிஸ்ஸிங்! ஆனால், ஓட்டுவதற்கு ஸ்மூத்தாக இருந்தது பெட்ரோல் இன்ஜின். அதேசமயம், வேகம் எடுப்பதில் எந்த தயக்கமும் திணறலும் இல்லாமல் கில்லியாக இருந்தது பெட்ரோல். 1199 சிசி கொள்ளளவு கொண்ட இந்த இன்ஜின் 6000 ஆர்பிஎம்-ல் 85 bhp சக்தியையும், 4400 ஆர்பிஎம்-ல் 11.52 kgm டார்க்கையும் அளிக்கிறது.

எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து லோனவாலா என்ற இடத்தில் பிரிந்தது, ஆம்பிவேலி நோக்கிச் செல்லும் சாலை. சுமார் 10 கி.மீ தூரம் குண்டும் குழியுமாக கிராமச் சாலை போல இருந்தது. செயில் யுவாவில் சஸ்பென்ஷன் செட்டிங் மிக சிறப்பாகச் உருவாக்கப் பட்டு இருப்பது இந்தச் சாலையில் பயணிக்கும்போது புரிந்தது. அடுத்து 20 கி.மீ தூரம் மலைச் சாலை. கொண்டை ஊசி வளைவுகளும், சடாரென மேலேறும் சவாலான சாலையைக் கொண்டது ஆம்பிவேலி மலைச் சாலை. கியர் ரேஷியோ ஷார்ட் ஆக இருந்ததால், எந்தத் திக்கல் திணறல் இல்லாமல் ஏறியது செயில் யுவா. 'செயில்’ என்றால், கடல் பயணம் என்று அர்த்தம். கடலில் ஆடாமல் அசையாமல் செல்ல முடியாது. ஆனால், செயில் யுவா தரைப் பயணத்தில் அவ்வளவாக ஆடவில்லை!

புனேவுக்கும் மும்பைக்கும் நடுவே உள்ள ஆம்பிவேலி என்ற தனியார் ரிஸார்ட், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மிக அழகாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரிஸார்ட்டில் ஓட்டல்கள், பூங்காக்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் என்று மட்டுமல்லாமல் மருத்துவமனை, அணை, சின்ன ஏர்போர்ட் என எல்லாமே இதில் உண்டு. ஆம்பிவேலி ஏர்போர்ட்டில் இருந்த ரன்வேயில் செயில் யுவாவின் இரண்டு இன்ஜின் கொண்ட கார்களையும் ஓட்டினோம். ரன்வேயில் எந்த தடதடப்பும் இல்லாமல் விமானம் போல சீறுகிறது செயில் யுவா.

சீனாவின் கார் என்றாலும், நம் நாட்டினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிறைய மாற்றங்களைச் செய்துள்ளது ஜிஎம். ஆனால், செயில் யுவா டிசைன் அனைவரையும் ஈர்ப்பது போன்ற வடிவத்தில் இல்லை. அதேசமயம், காரின் உள்பக்கத் தரத்திலும் நிறைய சமரசங்கள் செய்துள்ளது. ஆனால், ஹேட்ச்பேக் காரில் தாராள இட வசதி, சிறப்பான இன்ஜின், ஸ்ட்ராங்கான கட்டமைப்பு என பல ப்ளஸ்களும் செவர்லே செயில் யுவாவுக்கு உண்டு. மேலும், பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 18.3 கி.மீட்டரும், டீசல் இன்ஜின் 22.1 கி.மீட்டரும் மைலேஜும் அளிக்கும் என்கிறது ஜிஎம். இவ்வளவு மைலேஜ் கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல மைலேஜ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஹேட்ச்பேக் செக்மென்டில் ஒரு புதிய பாதை அமைத்திருக்கிறது செயில் யுவா!