Published:Updated:

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?
 ##~##

மாருதி ஆல்ட்டோ, ஒவ்வொரு மாதமும் நம் மோட்டார் விகடனில் கார் விற்பனைப் பட்டியலை எழுதும்போது, முதல் இடம் பிடிக்கும் கார். இதன் உற்பத்தி துவங்கிய 2000-ம் ஆண்டில் இருந்தே, இது விற்பனையில் புதிய சரித்திரங்களைப் படைத்து வந்தாலும், 2006-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த சமயங்களில்கூட முதல் இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்ட பெருமை ஆல்ட்டோவைச் சேரும். 

ஹூண்டாய் இயான் மற்றும் டாடா நானோ கார்களிடம் கடும் போட்டியைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் வேலையில்தான், ஆல்ட்டோ (எஃப்-8டி) காரை ஆல்ட்டோ-800 என்ற புதிய அஸ்திரமாக மாற்றி இருக்கிறது மாருதி.  

'புதிய ஆல்ட்டோ-800 காரும் இதே சாதனையைத் தக்க வைத்துக்கொள்ளுமா?’ என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். காரை பார்க்காமலேயே, அதன் டிசைன், மைலேஜ், பெர்ஃபாமென்ஸ் ஆகியவை எப்படி என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே, ஆல்ட்டோ-800 காரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புக் செய்து விட்டார்கள். வாடிக்கையாளர்கள் மாருதி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஆல்ட்டோ-800 காப்பாற்றுமா?

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

டிசைன் - இன்ஜினீயரிங்

ஆல்ட்டோவின் இந்த மறுபதிப்பை உருவாக்க மாருதி செலவு செய்த தொகை 420 கோடி!

'ஆல்ட்டோவின் சாயல் இருக்க வேண்டும். ஆனால், முழுக்க முழுக்கப் புதிய தோற்றத்தில் கார் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் மாருதி இதை உருவாக்கி இருக்கிறது.  காம்பேக்டான சைஸ், சற்றே உயரமான இடத்தில் இருக்கும் ஹெட் லைட்டுகள், அகலமான சி-பில்லர்... இதெல்லாம் பழைய ஆல்ட்டோவை ஞாபகப்படுத்துகின்றன. புதிய ஆல்ட்டோ-800 உருவாக்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஒவ்வொரு பேனலும் புதியது.

ஆனால், முன் பக்க கிரில்தான் ஃபோர்டு ஃபிகோவை நினைவூட்டுகிறது. காரணம், முன் பம்பரில் இருக்கும் பெரிய அறுகோண வடிவத்தில் இருக்கும் ஏர் டேம், அதற்கு மேல் இருக்கும் சின்ன குரோம் பட்டை, உயரமாக வைக்கப்பட்டுள்ள ஹெட் லைட்ஸ் என ஃபிகோவின் தாக்கம் ஏராளம். இருந்தும், ஆல்ட்டோ-800 கண்டிப்பாக சாலையில் தனித்தன்மையுடன் தெரியும். இதற்கு உதவுவது காரின் புதிய 'வேவ்ஃபார்ம்’ டிசைன்.

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

முன் பக்க வீல் ஆர்ச்சில் இருந்து ஆரம்பித்து, பின் பக்கம் வரை உயர்ந்து செல்லும் க்ரீஸ், காருக்கு ஒரு ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொடுக்கிறது. இதனால், ஜன்னல்களின் அளவு குறைந்துள்ளது. ஆனால் இது, பின்னிருக்கைவாசிகளுக்குப் பிடிக்காது. காரின் பின் பக்கம், கொஞ்சம் வளைவு நெளிவாக இருக்கும் பம்பர் பார்க்க அழகாக இருக்கிறது. டெயில் லைட்டுகளையும் சிறப்பாக வடிவமைத்திருக்கின்றனர். காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் என்பதால், சில கோணங்களில் பார்க்கும்போது கார் சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால், ஹூண்டாய் இயான் அளவுக்கு டிசைனில் சொதப்பவில்லை புதிய ஆல்ட்டோ-800.

வெளியேதான் ஆல்ட்டோ-800 முற்றிலும் புதிய கார். ஆனால், டெக்னிக்கல் விஷயங்கள் சில அப்படியே பழைய ஆல்ட்டோவைப் போல்தான். காரின் ஃப்ளோர், சேஸியில் இருக்கும் லோடு பாயின்ட், வீல் பேஸ், சஸ்பென்ஷன், பிரேக்ஸ் போன்றவை பழைய ஆல்ட்டோவில் இருந்தது போலவே இருக்கின்றன. இன்ஜின் 'பே’ இப்போது காம்பேக்ட்டாக இருக்கிறது. கேபினில் மேலும் இடமளிப்பதற்காக சில வேலைகளைச் செய்திருக்கிறார்கள். காரின் ஹெட் ரூம் இப்போது 15 சதவிகிதம் கூடியிருக்கிறது. பாடி இப்போது முன்பைவிட இறுக்கமாக இருக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால், காரின் எடை ரொம்பவும் அதிகரிக்கவில்லை. காற்றுப் பை இருக்கும் விலை உயர்ந்த வேரியன்ட்கூட வெறும் 725 கிலோதான்.

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

உள்ளே...

புதிய ஆல்ட்டோ-800 காரின் டேஷ் போர்டு பார்க்க புதியதாக இருக்கிறது. சென்டர் கன்ஸோலுக்கு 'V’ வடிவில் உருவம் கொடுத்திருக்கிறார்கள். பழைய காரைவிட இது பார்க்க நன்றாக இருந்தாலும், காரின் ஏ.சி கன்ட்ரோல்கள் கண்களை உறுத்துகின்றன. காலம் காலமாக இருக்கும் அதே ஏ.சி கன்ட்ரோலை இந்த முறையும் மாற்றவில்லை. மற்றபடி காரின் உள்ளலங்காரம் கண்டிப்பாக பழைய காரைவிட பார்க்க அழகாக இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்ஸின் தரமும் உயர்ந்து இருக்கிறது. டோர் பேடுகள், கியர் லீவர், ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை மாற்றி அமைத்திருக்கிறார்கள். பழைய ஆல்ட்டோவை வைத்திருப்பவர்கள், இதில் உள்ள இன்டீரியரைப் பார்த்தால் வாயடைத்துப் போய்விடுவார்கள். ஆனாலும், இந்த விஷயத்தில் இயான் அருகே நெருங்கக்கூட முடியாது!

இருக்கைகளை ஸ்லிம்மாக அமைத்திருப்பதால், பார்ப்பதற்கு அதிகம் இடம் இருப்பது போன்று தோன்றுகிறது. ஆனாலும், ஒரு வசதியான அல்லது சொகுசான இருக்கைகள் என்று சொல்ல முடியாது. முக்கியமாக, தொடைகளுக்குச் சுத்தமாக சப்போர்ட்டே இல்லை.  ஹெட் ரெஸ்டுகள் இருக்கையுடன் இணைந்தே வருகின்றன. பின்னிருக்கைகள் கண்டிப்பாக பெரிய உருவம் உள்ளவர்களுக்கு வசதியாக இருக்காது. அதுவும் நீண்ட தூரப் பயணங்களின்போது, கொஞ்சம் பருமனாக இருப்பவர்கள் தொலைந்தார்கள்!

177 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியில் சில பைகளை வைக்கலாம். சீட்டுகளைக் கொஞ்சம் சாய்த்து வேண்டுமானால், இடத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

இன்ஜின் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

பழைய ஆல்ட்டோவில் (கே10 அல்ல) இருக்கும் அதே எஃப்-8டி 3 சிலிண்டர், 796 சிசி இன்ஜின்தான் இதிலும். ஆனால், சில சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்லெட் மேனிஃபோல்டை பிளாஸ்டிக்கில் அமைத்திருப்பதால் எடை குறைவதுடன், காற்று - எரிபொருள் கலவை தடையின்றி செல்லும். கனெக்டிங் ராடுகள், கிராங்க் ஷாஃப்ட் போன்றவற்றின் எடையைக் குறைத்திருக்கிறார்கள். குறைந்த அளவே உராயும் பிஸ்டன் - ரிங்ஸ் புதுசு! கம்ப்ரஷன் ரேஷியோ இப்போது அதிகம் என்பதால், பெர்ஃபாமென்ஸும் சிறப்பாக உள்ளது. இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் இன்ஜினின் சக்தி சிறிதளவே உயர்ந்திருக்கிறது. ஆனால், டார்க் 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

குறைந்த ஆர்பிஎம்-ல் இருக்கும் இந்த இன்ஜினின் ரெஸ்பான்ஸ், பழைய ஆல்ட்டோவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. புதிய ஆல்ட்டோவில் அது இப்போது உயர்ந்திருக்கிறது. ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதும் கார் முன்னே சீறுகிறது. இன்ஜினை பவரில் வைத்திருக்க அதிக ஆர்பிஎம்-ல் வைத்திருக்கத் தேவையில்லை. ஓவர்டேக் செய்வது முன்பை விட இப்போது ஈஸியாக உள்ளது. நெடுஞ்சாலையில் செல்லும்போது இன்ஜின் நல்ல ரெஸ்பான்ஸைத் தருகிறது.

மணிக்கு 110 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்யும்போது, ஒரு நல்ல அனுபவம் கிடைக்கிறது. கியர் பாக்ஸும் சிறப்பாக இருப்பதால், டவுன் ஷிஃப்ட் செய்வது ஈஸி. ஆனாலும், இதன் கேபிள் டைப் ஷிஃப்டர், போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது சிறந்ததாக இல்லை. சிட்டி டிராஃபிக்கில் தான் இந்த இன்ஜின் சிறப்பாகச் செயல்படுகிறது. கூடுதல் டார்க்கை கொடுப்பதால் ஓட்டுவது எளிது. பிரேக்கும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ஆக்ஸிலரேட்டரில் காலை வைத்து எடுக்கும்போது, ஒரு ஜெர்க் இருப்பது புரிகிறது. இது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்!

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?
சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

ஓட்டுதல் தரம், இந்த சைஸ் காருக்கு மிக நன்றாக இருக்கிறது. நீளமான ஸ்ப்ரிங்குகள், 80 ப்ரொஃபைல் டயர்கள் மேடு பள்ளங்களை எளிதாகச் சமாளிக்கின்றன. சஸ்பென்ஷனில் இருந்து வரும் சத்தம் வெகு குறைவுதான்! ஆனாலும், இவ்வளவு சின்ன காரை மேடு பள்ளங்கள் கொண்ட சாலையில் ஓட்டும்போது, சில அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஓட்டுதல் தரம் ரொம்ப சூப்பர் என்று சொல்ல முடியாது. கையாளுமையும் சுமார்தான். ஸ்டீயரிங், நேராகச் செல்லும்போது உயிரற்றது போல உணர்வை அளிக்கிறது. ஜாலியாக ஓட்டிச் செல்லும் ஃபீலிங் இல்லை. ஆனால், இதையெல்லாம் இந்த வகை கார்களை வாங்குபவர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. ஏன்?

காசுக்கு ஏற்ற கார்

இந்த காரில் உள்ள சில குறைகளை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால், வாங்கி வெகுநாள் பயன்படுத்த ஏற்ற கார் இது. வாங்கும்போதும் சரி, வாங்கிய பின்பும் சரி, உங்கள் வங்கி இருப்பைக் காலி பண்ணாது ஆல்ட்டோ-800. இதன் மைலேஜ் பழைய ஆல்ட்டோவை விட 15 சதவிகிதம் அதிகம். கிட்டத்தட்ட லிட்டருக்கு 22.74 கி.மீ. இது, பெட்ரோல் கார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! ஹூண்டாய் இயான் அளவுக்குத் தரமான காராக இது இல்லாவிட்டாலும், இதன் மிகப் பெரிய ப்ளஸ், விலைதான்.

மாருதி முடிந்த அளவுக்கு விலை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளது. இதன் விலை

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

2.48 லட்சம் முதல்  

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

3.03 லட்சம்  (எக்ஸ்-ஷோரூம் சென்னை). இப்போது இயான் வாங்க நினைப்பவர்களும், நானோ வாங்க இருப்பவர்களும், ஆல்ட்டோ-800 பக்கம் சரிய வாய்ப்பு உண்டு.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! 

சின்ன கார்களின் ராஜாவா ஆல்ட்டோ?

படு குறைவான விலையில் வந்திருக்கிறது ஆல்ட்டோ-800. இது கண்டிப்பாக நானோ மற்றும் இயான் கார்களுக்குப் பிரச்னையாக அமையும். இதன் இட வசதி குறைவுதான் என்பதால், குடும்பத்துடன் செல்லும் நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றது அல்ல. எனவே, நகரங்களில் வாழும் சின்ன குடும்பங்களுக்கு ஆல்ட்டோ-800 சரியான சாய்ஸ்!