Published:Updated:

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்
 ##~##

ந்தியாவின் முதல் எஸ்யூவி டாடா சஃபாரி. இதுவரை சின்னச் சின்ன மாற்றங்களை மட்டுமே சந்தித்து வந்த சஃபாரி, 'ஸ்டார்ம்’ என்ற பெயரில் தற்போது எடுத்திருக்கும் அவதாரம், முற்றிலும் புதுசு! கடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த காரை வெளி உலகுக்குக் காட்டிவிட்டாலும், அறிமுகம் செய்ய நீண்ட காலம் எடுத்துக் கொண்டுள்ளது டாடா. கடந்த மாதம் புனே அருகே உள்ள 'லாவாஸா’ எனும் மலைப் பிரதேசத்தில் புதிய சஃபாரி 'ஸ்டார்ம்’ஐ டெஸ்ட் டிரைவ் செய்தேன். எப்படி இருக்கிறது டாடாவின் புதிய சஃபாரி ஸ்டார்ம்? 

டிசைன்

முற்றிலும் புதுசு என்றும் சொல்லிவிட முடியாது; பழசு என்றும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால், காரின் முகப்பையும், பின் பக்கத்தையும் முழுமையாக மாற்றியுள்ளது டாடா. முகப்பை மாற்றியதால், சஃபாரிக்குப் புது தோரணையே வந்துவிட்டது. பழைய சஃபாரியுடன் ஒப்பிடும்போது கம்பீரம் இன்னும் கூடியிருக்கிறது. புத்தம் புதிய கிரில் மற்றும் ஏர் டேம் டிசைன் இந்த காரை லேண்ட் ரோவர் ரேஞ்சுக்கு உயர்த்திவிட்டது என்று சொல்லலாம். ஹெட் லைட் டிசைன், பனி விளக்குகள் என அனைத்தையும் தரம் உயர்த்தி வியக்க வைத்திருக்கிறது டாடா. 'ஸ்டார்ம்’ என எழுதப்பட்டுள்ள குரோம் பட்டை, காருடன் மிக அழகாகப் பொருந்தி இருப்பதுடன், தனித் துவத்துடன் விளங்குகிறது.

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

காரின் பக்கவாட்டில் ஃபுட் போர்டு, காரின் புதிய வடிவத்துக்கு ஏற்ப மாறியுள்ளது. ஆனால், பக்கவாட்டுக் கண்ணாடிகளில் கொடுக்கப்பட்ட குரோம் ஃபினிஷ்ஷை, கதவு கைப் பிடிகளில் கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. அவை பழைய மாதிரியே டல்லாகக் காட்சியளிக்கின்றன. அதேபோல், காரின் பக்கவாட்டுத் தோற்றத்தில் எந்த மாற்றத்தையுமே செய்யாமல் விட்டது ஏன் என்றும் தெரியவில்லை. காரின் மேலே இருக்கும் ரூஃப் ரெயில் புது வடிவம் எடுத்திருப்பதுடன் அலாய் பூசப்பட்டு இருக்கிறது. மேலும், காரின் கடைசி ஜன்னலுக்கு மேலே 'டை டவுன் பார்’ பொருத்தப்பட்டு இருப்பது வித்தியாசமாக இருக்கின்றன.

காரின் பின் பக்கம் இருந்த ஸ்பேர் வீல், காருக்குக் கீழே சென்று விட்டது. அதனால், காரை பின் பக்கமாகப் பார்க்கும் போது பழைய சஃபாரியின் சுவடே இல்லை. ஆனால், பழைய கம்பீரம் குறைந்துவிட்டது. பின் பக்கக் கண்ணாடிக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கறுப்புப் பட்டை, அதன் கீழே இருக்கும் குரோம் பிளேட், புதிய டெயில் லைட்ஸ் எனக் கவர்ச்சியாக காரின் பின் பக்கம் இருந்தாலும், ஒரு கம்பீரமான எஸ்யூவி லுக் மிஸ்ஸிங்! புதிய இரட்டை சைலன்சர் டிசைனுக்கு ஏற்ப, பின் பக்க பம்பர் புது வடிவத்துக்கு மாறியுள்ளது. மொத்தத்தில் காரின் வெளிப்பக்கத் தோற்றத்தில் முன் பக்கத்தை மட்டுமே சிறப்பாக மெருகேற்றி இருக்கிறது டாடா.

உள்ளே

காருக்கு உள்ளே ஏராளமான மாற்றங்கள். டேஷ் போர்டில் இருக்கும் லெதர் ஃபினிஷ் மற்றும் மர வேலைப்பாடுகள் காரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திக் காட்டுகிறது. அதேபோல், லெதர் சீட் கவர் கொண்ட இருக்கைகளும் இதை சொகுசு காராக உயர்த்துகிறது. பீஜ் வண்ண இன்டீரியர் வேலைப்பாடுகள் காரை பளிச் ஆக்குகின்றன. டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதி, டிரைவர் மற்றும் பக்கவாட்டு இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட், காரின் பக்கவாட்டு கண்ணாடிகளை பட்டன் மூலம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும் என்பதுடன், மடித்துக் கொள்ளவும் முடியும். அதேபோல், பயணிகளின் வசதிக்காக காரின் உள்ளே சின்னச் சின்ன விளக்குகள், பின் பக்க இருக்கைக்கு ரூஃப் ஏ.சி, குரோம் பூசப்பட்ட ஹேண்டில்கள் என காரின் ஒவ்வொரு விஷயத்தையும், வசதியையும் பார்த்துப் பார்த்து அழகாக உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், கப் ஹோல்டர்கள், டேஷ் போர்டின் மேலே இருக்கும் டாப் பாக்ஸ் போன்றவை இன்டீரியருக்குப் பெருமை சேர்க்கவில்லை.

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

டேஷ் போர்டில் இருக்கும் சென்டர் கன்ஸோல், பார்க்க எளிமையாக இருக்கிறது. ஏ.சி வென்ட்டின் நடுவே இருக்கும் அனலாக் கடிகாரம் அழகாகப் பொருந்தி இருக்கிறது. ஏ.சி கன்ட்ரோல் திருகுகள் பயன்படுத்த எளிதாக, குழப்பமில்லாமல் இருக்கின்றன. கியர் லீவருக்கு அருகே வைக்கப்பட்டுள்ள தேவைக்கு மாற்றிக் கொள்ள உதவும் 4 வீல், 2 வீல் டிரைவ் மோட் பட்டன் பயன்படுத்த சுலபமாகவும் அழகாவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

ஆனால், ஸ்டீயரிங்கில் இருக்க வேண்டிய ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள், ஸ்டீயரிங்குக்குக் கீழே உள்ள காம்பி சுவிட்ச்சுக்குத் தாவி இருக்கின்றன. இதைப் பயன்படுத்த கொஞ்சம் பழக வேண்டும். ஆல்பைன் ஆடியோ சிஸ்டம் ஐ-பாட், ப்ளூ-டூத், யூஎஸ்பி கனெக்டிவிட்டியுடன் அனைத்து வேரியன்ட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பார்க்க சிம்பிள்! ஓடோ மீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர் தவிர மற்றவை அனலாக் மீட்டர்கள்தான்.

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல எஸ்யூவிகளில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி உள்ளன. ஆனால், இன்னும் பார்க்கிங் சென்ஸார் மட்டுமே போதும் என நினைக்கிறது டாடா! பின் வரிசை இருக்கையில் மூன்று பேர் தாராளமாக அமரலாம். ஆனால், இருக்கையின் அளவு வழக்கத்தைவிட நீளமாக இருப்பதால், சற்று உயரம் குறைவானவர்கள் வசதியாக அமர்வது கடினம். அதேபோல், மூன்றாவது வரிசை இருக்கையில் பெரியவர்கள் உட்காருவது மிகவும் சிரமம். அவை குழந்தைகள் அமர்வதற்குத் தான் வசதியாக இருக்கும். அல்லது இருக்கைகளை மடித்துவிட்டு கூடுதல் லக்கேஜ் வைக்கப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஓட்டுதல்

பழைய சஃபாரியில் இருந்தது போலவே டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்ததும், ஒரு உயரமான வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. இதன் ஸ்டீயரிங், வழக்கம் போலவே இவ்வளவு பெரிய காருக்கு இந்த சின்ன ஸ்டீயரிங் போதுமா? என்றே எண்ண வைக்கிறது.

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

ஆனால், இன்ஜினை இயக்கி கியர் மாற்றிப் புறப்பட்டதும், அந்த சின்ன ஸ்டீயரிங்தான் காரின் கட்டுப்பாட்டை நம் கைகளுக்குக் கொண்டுவந்துவிடுகிறது. ஆரம்ப வேகத்திலும் சரி, அடுத்தடுத்து கியர் மாற்றி, ஆக்ஸிலரேட்டரை அழுத்த அழுத்த... குறைபாடே தெரியாமல், ஒரே சீராக பவர் டெலிவரி ஆகிறது. கொஞ்சம் அதிகமாக ஆக்ஸிலரேட்டரை அழுத்திவிட்டால், டர்போ சார்ஜரின் உறுமல் காருக்குள் கேட்கிறது.

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

இன்டீரியர் ஃபிட் அண்டு ஃபினிஷ் தரம் ஓரளவுக்கு மேம்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல், வெளிச் சத்தம் காருக்குள் அவ்வளவாகக் கேட்கவில்லை. கிளட்ச் பயன்படுத்த மிகவும் ஈஸியாக இருக்கிறது. அதனால், கியர் ஷிஃப்ட் சுலபமாக இருந்தாலும், மூன்றாவது கியரைத் தேடி மாற்ற வேண்டியிருக்கிறது. சமமான சாலையிலும் சரி, குண்டும் குழியுமான சாலையிலும் சரி, அலுங்கல் குலுங்கலோ, அதிர்வுகளோ காருக்குள் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆதனால், ஓட்டுதல் அனுபவத்தில் சஃபாரியின் தரம் உயர்ந்துள்ளது.

இன்ஜின்

இன்ஜின், பழைய 2.2 லிட்டர் டைகார் இன்ஜின்தான் என்றாலும், அதை சற்றே ட்யூன் செய்திருக்கிறார்கள். அதனால், இந்த இன்ஜினுக்கு இப்போது 'வெரிகோர்’ என பெயர் மாற்றி இருக்கிறார்கள். 2179 சிசி கொள்ளவு கொண்ட இன்ஜின் 4000 ஆர்பிஎம்-ல் 138 bhp சக்தியை அளிக்கிறது. இது 1700- 2700 ஆர்பிஎம்-ல் 32.63 kgm டார்க்கைக் கொடுக்கிறது.

சஃபாரி ஸ்டார்ம்-ன் டாப் வேரியன்ட்டான விஎக்ஸ் மாடலில் உள்ள 2 வீல் மற்றும் 4 வீல் ஆப்ஷன் பட்டனில், 4 வீல் லோ பட்டனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, லாவாசா மலைப் பகுதியில் ஆஃப் ரோடிங் பயணத்துக்குத் தயார் செய்தோம். சாலையே இல்லாத கல்லும் மண்ணுமாகக் கிடந்த மலைப் பாதையில், எந்தச் சலனமும் காட்டாமல் முன்னேறியது சஃபாரி ஸ்டார்ம். அதேபோல், மழையில் ஊறிக் கிடந்த சகதியில் இறக்கி ஏற்றிய போதும் எந்தத் திணறலும் இல்லை. பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களில் மட்டுமே செய்ய முடிந்த, சாலையே இல்லாத இடத்தில் சாகசம் செய்ய உதவும் பல விஷயங்களை சஃபாரி ஸ்டார்ம்மிலும் செய்ய முடிந்தது ஆச்சரியம்.

பிரேக் விஷயத்தில் மேலும் மேம்பட்டு இருக்கிறது சஃபாரி ஸ்டார்ம். மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சென்று பிரேக் அழுத்தியபோது, எந்த உதறலும் இல்லாமல் கச்சிதமாக நிற்கிறது. ஆனால், பழைய காரில் இருந்த பாடி ரோல் இதிலும் தொடர்கிறது. ஆரியாவின் லேடர் சேஸியும் சஸ்பென்ஷனும் இதில் இடம் பெயர்ந்து இருப்பதால், பழைய சஃபாரியைவிட சேஸி 35 கிலோ எடை குறைந்துள்ளது. ஆனால், பழைய காரில் உள்ள அதே வீல் பேஸ்தான். சஃபாரி ஸ்டார்ம்-ல் 2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் என இரு மாடல்களுடன் மொத்தம் நான்கு வேரியன்ட்டுகள் உள்ளன. அனைத்து வேரியன்ட்டிலுமே ஏபிஎஸ் பிரேக்ஸ், இபிடி வசதியைக் கொடுத்திருக்கிறது டாடா. ஆனால், இரண்டு ஏர் பேக்குகள் டாப் வேரியன்ட்டில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

பழைய சஃபாரியைவிட, புதிய சஃபாரி ஸ்டார்ம் 75 கிலோ எடை குறைந்துள்ளது. புதிய சஃபாரி ஸ்டார்ம் 4 வீல் டிரைவ் லிட்டருக்கு 13.2 கி.மீ-யும், 2 வீல் டிரைவ் 14 கி.மீ-யும் மைலேஜ் அளிக்கும் என்கிறது டாடா. இதை முழுமையாக ரோடு டெஸ்ட் செய்தால்தான், துல்லியமான மைலேஜ் விபரங்கள் தெரியவரும்.

மையம் கொண்டது புயல்! - டாடா சஃபாரி ஸ்டார்ம்

இந்தியாவின் முதல் எஸ்யூவியாக 1998-ம் ஆண்டு அறிமுகமான டாடா சஃபாரி, பல மாற்றங்களைச் சந்தித்து இருந்தாலும், தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மிக அதிகம். ஆனால், காரின் முன் பக்கத்தில் மட்டுமே அதிக கவனம் எடுத்து மாற்றங்கள் செய்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. போட்டிகள் நிறைந்த எஸ்யூவி மார்க்கெட்டில், 14 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு வடிவத்தை, லேசான மாற்றங்களுடன் மறு அறிமுகம் செய்வதை எஸ்யூவி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த எஸ்யூவி, கொடுக்கும் காசுக்கு ஏற்றது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!