Published:Updated:

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!
 ##~##

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு, எப்போதும் இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் தனி இடம் உண்டு. 50 ஆண்டுகளையும் தாண்டி இந்தியாவில் வெற்றிகரமான மோட்டார் சைக்கிள் நிறுவனமாக ராயல் என்ஃபீல்டு இருப்பதற்குக் காரணம், அதன் மீது இருக்கும் 'லைஃப் ஸ்டைல்’ இமேஜ்தான்! அன்றாடப் போக்குவரத்துக்கான பைக்குகள் சூழ்ந்திருக்கும் இந்திய மார்க்கெட்டில், தனித்துவத்தோடு தெரிய விரும்புவர்களுக்கான சாய்ஸாக தொடர்ந்து இருந்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. 

ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் நிறுவனமும், சின்னச் சின்ன மாற்றங்களுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'புத்தம் புதிய பைக்’ என்று பழைய பைக்கையே வெளியிடும். ஆனால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் அடிக்கடி மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அப்படி மாற்றங்கள் செய்கிறது என்றால், அது 'ஜஸ்ட் லைக் தட்’ மாற்றமாக இருக்காது. புத்தம் புதிய 'தண்டர்பேர்டு 500’ என்ற பெயருக்கு ஏற்றபடி, உண்மையிலேயே பெரிய மாற்றங்களுடன் புதிய பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது தண்டர்பேர்டு 500.

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!

தண்டர்பேர்டு வரலாறு

இதுவரை இரண்டு மாற்றங்களைக் கண்டிருக்கிறது தண்டர்பேர்டு. முதலில் அலுமினியம் இன்ஜினுடனும், அதனைத் தொடர்ந்து 'யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன்’ இன்ஜினுடனும் வெளிவந்திருக்கும் தண்டர்பேர்டின் தோற்றத்தில், இதுவரை பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. இப்போது தோற்றத்திலும், சிறப்பம்சங்களிலும் பல மாற்றங்கள் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு!

ஸ்டைல்

புதிய தண்டர்பேர்டைப் பார்த்தவுடனே, பெரிய மாற்றமாகத் தெரிவது பெட்ரோல் டேங்க்தான். 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாக இருக்கிறது. சின்ன புரொஜக்டர் விளக்குடன் இருக்கும் புதிய ஹெட்லைட், முன் பக்கத் தோற்றத்தை இன்னும் எடுப்பாக்கி இருக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாம் தண்டர்பேர்டு 500 பைக்கை நள்ளிரவில் டெஸ்ட் செய்தோம். உண்மையிலேயே வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்லாமல், ஹெட் லைட் பவர்ஃபுல்லாகவும் இருப்பதை உணர முடிந்தது.

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!
தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!
தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!

டயல்களைப் பொறுத்தவரை இரட்டைக் குடுவை டயல்கள். ஒன்று அனலாக். மற்றொன்று டிஜிட்டலில் இருக்கிறது. நீல வண்ணத்தில் மின்னும் டிஜிட்டல் டயலில் ஃப்யூல் இண்டிகேட்டரும், இரட்டை ட்ரிப் மீட்டரும், கடிகாரமும் இடம்பெற்று இருக்கின்றன. ஸ்பீடோ மற்றும் டேக்கோ மீட்டர்கள் அனலாக் ஆக உள்ளன. இந்திய பைக்குகளிலேயே முதன்முறையாக, இரட்டை டயல்களுக்கு நடுவே கார்களில் இருப்பதுபோல் வார்னிங் லைட் சுவிட்ச் வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவிட்சைத் தட்டினால், நான்கு இண்டிகேட்டர் விளக்குகளும் ஒரே நேரத்தில் அணைந்து அணைந்து ஒளிரும். நடு ரோட்டில் அல்லது இரவு நேரங்களில் பைக் நிற்கும்போது, இந்த விளக்குகள் மிகவும் உதவியாக இருக்கும். ரியர்வியூ கண்ணாடிகள் அகலமாகவும், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகவும் காட்டுகின்றன. சாவி மற்றும் சைடு லாக் துவாரம் ஹேண்டில் பாரிலேயே வைக்கப்பட்டு இருக்கிறது.

பின் பக்கத்தைப் பொறுத்தவரை, பின் பக்க விளக்கில் ஐந்து நீளமான கோடுகள் போன்று எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. உயரம் குறைவானவர்களும் வசதியாக உட்கார்ந்து ஓட்டும் வகையில், புதிய தண்டர்பேர்டு இருக்கையின் உயரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. பின் பக்க இருக்கையும் இதுவரை ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இல்லாத அளவுக்கு சொகுசாக இருக்கிறது. பின் பக்க இருக்கை தேவை இல்லை என்றால், அகற்றிவிட்டு பைகளை மாட்டிக் கொள்ள ஹூக் கொடுக்கப்பட்டுள்ளது. க்ரூஸர் பைக் என்பதற்கு சாட்சியாக, கால்களை வைக்க ஃபுட் ரெஸ்ட் இன்னும் முன்னால் தள்ளி வைக்கப்பட்டு இருப்பது சொகுசான ரைடிங் பொசிஷனை ஏற்படுத்தியிருக்கிறது.

இருக்கை உயரம் குறைவாக இருப்பதால், சுவிட்ச்சுகளைப் பொறுத்தவரை பெரிதாகக் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும், நாம் டெஸ்ட் செய்த பைக்கில் ஃப்ளாஷ் லைட் வேலை செய்யவில்லை. கறுப்பிலேயே மூன்று வகையான கறுப்பு நிறங்களுடன் வெளிவந்திருக்கிறது தண்டர் பேர்டு 500. இதில் மேட் ஃபினிஷ்தான் சூப்பர்!

ஒட்டுமொத்தமாக ஃபிட் அண்டு ஃபினிஷில் முன்னேற்றம் தெரிந்தாலும், கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாயை நெருங்கும் இந்த பைக்கின் தரம், சுமார் ரகம்தான்!

இன்ஜின்

கிளாஸிக் 500 பைக்கில் இருந்த அதே யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜின் கறுப்பு வண்ண மாற்றத்தைத் தவிர, பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி தண்டர்பேர்டு 500 பைக்குக்கு இடம் மாறியிருக்கிறது. 499 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 27.2 bhp சக்தியையும், 4000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 4.17 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 500 சிசி இன்ஜினுக்கு இந்த பவர் ரொம்பவும் குறைவு என்பதோடு, தண்டர்பேர்டு 350 பைக்கைவிட வெறும் 7.4 bhp சக்திதான் அதிகம். செல்ஃப் ஸ்டார்ட் பட்டனைத் தட்டினால், கிளாஸிக்கை விட அதிகமான சத்தத்துடன் உயிர்பெற்று எழுகிறது தண்டர்பேர்டு 500. ஆக்ஸிலரேட்டரைக் கொஞ்சம் வேகமாக முறுக்கினாலே, அதிர்வுகளால் ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறது. 1.75 லட்சம் ரூபாய் கொடுத்து தண்டர்பேர்டு 500 பைக்கை வாங்குபவர்களுக்கு இந்த அதிர்வுகள் இலவசமோ?

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!

வேகத்தைப் பொறுத்தவரை, ஆக்ஸிலரேட்டரை முறுக்க முறுக்க சட்டென வேகம் பிடித்து விடுகிறது தண்டர்பேர்டு 500. அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சென்றோம்.

நகருக்குள் ஓட்டும்போது, கியர்பாக்ஸ் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கியரையும் மாற்றுவதற்கு தினமும் காலையில் எக்ஸ்ட்ராவாகச் சாப்பிட வேண்டும். கியர்களில் ஏறி நின்று மிதிக்க வேண்டியிருப்பதோடு, அடிக்கடி ஃபால்ஸ் நியூட்ரலும் விழுகிறது. கியர் பாக்ஸில் முன்னேற்றம் தேவை!

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

சீட்டின் உயரம் குறைவாகவும், ஃபுட் ரெஸ்ட் முன் பக்கமாகத் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதும், ஒரு சிறந்த க்ரூஸருக்கான ரைடிங் பொசிஷனை தண்டர்பேர்டில் ஏற்படுத்தி இருக்கிறது. சீட்டும் மிகவும் சாஃப்ட்டாக இருப்பதால், நீண்ட தூரம் தொடர்ந்து ஓட்டினாலும் வலி இல்லை. பெரிய பைக்கை ஓட்டுகிறோம் என்கிற ஃபீல் இல்லை என்பது பெரிய ப்ளஸ். பழைய பைக்கைவிட வீல் பேஸ் 20 மிமீ குறைக்கப்பட்டு இருப்பதால், வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்குச் சிறப்பாக இருப்பதோடு, புதிதாகப் பொருத்தப்பட்டு இருக்கும் எம்ஆர்எஃப் டயர்களில் நல்ல கிரிப்!

இரண்டு வீல்களிலுமே டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருந்தாலும், பின் பக்க டிஸ்க் பிரேக் ஒப்புக்காக இருப்பது போலவே இருக்கிறது. முன் பக்க பிரேக்ஸ் படு ஷார்ப்!

மைலேஜ்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாம் ஓட்டிப் பார்த்தபோது, லிட்டருக்கு 29.9 கி.மீ வரை மைலேஜ் தந்தது தண்டர்பேர்டு 500. ஒருமுறை பெட்ரோல் டேங்க்கை நிரப்பினால், 600 கிமீ வரை பயணிக்கலாம்!

படங்கள்: பத்ரி

தண்டர்பேர்டு சொன்னா கேட்டுக்கணும்!

ஹீரோ, பஜாஜ், ஹோண்டா ஷோ ரூம்களுக்குள் பைக் வாங்குவதற்காகச் செல்லும் முகங்களுக்கும், ராயல் என்ஃபீல்டு ஷோ ரூம்களுக்குள் பைக் வாங்குவதற்காகச் செல்லும் முகங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அன்றாடம் அலுவலகத்துக்கும், மனைவியோடு மார்க்கெட் செல்வதற்காகவும் பைக் வாங்குபவர்களை, ராயல் என்ஃபீல்டு ஷோ ரூம்களில் பார்க்க முடியாது. ரிலாக்ஸாகப் பயணிக்க ஸ்டைலான பைக் வேண்டும் என்பவர்களின் சாய்ஸே ராயல் என்ஃபீல்டு! முன்பு இருந்த தண்டர் பேர்டு 500 பைக்கைவிட, சிறப்பான பைக்காக புதிய தண்டர்பேர்டு 500 இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெறும் தோற்றத்தில் மட்டும் அல்லாமல் இன்ஜின் தரத்திலும் சில மாற்றங்களைச் செய்திருந்தால், தண்டர்பேர்டு 500 பெஸ்ட் பைக்காக அமைந்திருக்கும்.

புல்லட், தண்டர்பேர்டு பைக்குகளை வாங்குவது என்பது ஒரு கல்யாணம் செய்வதுபோலத்தான். பைக் சொல்வதுபடி நாம் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போய் விட்டால் நமக்குப் பிரச்னை இல்லை. ஆனால், நாம் சொல்கிறபடி பைக் நடக்க வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்!