Published:Updated:

ஹார்லி பாய்!

ஹார்லி பாய்!

மோட்டார் விகடனின் ஃபேஸ்புக் வலை தளத்தில் (http://www.facebook.com/MotorVikatan) சுல்தான் அலி என்பவர், தான் ஒரு ஹார்லி டேவிட்சன் பைக் வைத்திருப்பதாகவும், அதன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் போஸ்ட் செய்தார். உடனடியாக அவரைத் தொடர்புகொண்டேன்.

 அடுத்த நாள் மாலை, சென்னை மெரீனா கடற்கரையில் சந்திப்பதாகத் திட்டம். 'டுபு டுபு’ என வித்தியாசமாக ஒலி எழுப்பிய சிவப்புக் கலர் 'ஹார்லி டேவிட்சன் சூப்பர் லோ’ பைக்கில் வந்து இறங்கினார் சுல்தான் அலி. ஹார்லியின் படபட சத்தத்தைப் போலவே பேச ஆரம்பித்தார்.

ஹார்லி பாய்!
 ##~##

''ஹார்லி ரசிகன் என்பதைவிட ஹார்லி வெறியன் என்று என்றே என்னைச் சொல்லலாம். சின்ன வயதிலேயே க்ரூஸர் பைக்குகள் மீது அவ்வளவு காதல். கல்லூரியில் படிக்கும்போது, ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது ஆர்வம் அதிகமானது. இறக்குமதி செய்து வாங்க விருப்பமில்லை. எனவே, எப்போது இந்தியாவுக்குள் வரும்; சென்னைக்கு டீலர்ஷிப் வரும் எனக் காத்துக்கொண்டே இருந்தேன்.

சென்னைக்கு டீலர்ஷிப் வந்ததுமே, முதலில் என்னென்ன பைக்குகள் வந்திருகின்றன என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். அன்று முதல் ஹார்லிதான் என் பேச்சு மூச்சு எல்லாம்!

சூப்பர் லோவை டெலிவரி எடுத்த அந்த நாளை என்றும் மறக்க முடியாது. ஷோ ரூமில் எனக்கான பைக்கைப் பார்த்ததும் வந்த ஃபீலிங், முதல் முறை என்னுடைய ஹார்லியைத் தொட்டு ரசித்த அந்த நிமிடங்கள், ஷோ ரூமை விட்டு நான் சாலையில் ஹார்லியை ஓட்டி வந்த அந்த தருணம்... ஒவ்வொன்றும் அப்படியே ஃப்ரீஸாகி என் நினைவில் இருக்கின்றன.

இந்த பைக் என் கைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, அதை என் விருப்பதிற்கேற்ப மாற்றியமைக்கலாம் என்று முடிவெடுத்தேன். எல்லா பார்ட்ஸும் சென்னை ஷோ ரூமிலேயே ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்பதால், அலைய வேண்டிய பிரச்னை இல்லை. சென்னை டீலர் ஷிப்பும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. ஹார்லி பைக்குகளின் மெக்கானிக் உசேன், என் பைக்கில் என்ன பிரச்னை என்றாலும், உடனே சரி செய்துவிடுவார். ஸ்க்ரீமிங் ஈகிள் எக்ஸாஸ்ட்,

ஹார்லி பாய்!

ஏர் ஃபில்டர், வைஸர், ஹார்லி ஸ்கல் போன்றவற்றை என் பைக்கில் பொருத்தவும், எனக்கும் என் பைக்குக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பு இன்னும் அதிகரித்துவிட்டது (இந்தப் பாசப் பிணைப்பை அதிகரிக்க கூடுதலாக 3 லட்சம் ரூபாய் செலவானதாம்!) முக்கால்வாசி நேரம் என் சிந்தனை எல்லாம் வேறு என்னென்ன வழிகளில் பைக்கை கஸ்டமைஸ் செய்யலாம் என்பதே!

இப்போது என் இரண்டு மகன்களும் ஹார்லி பிரியர்கள் ஆகிவிட்டார்கள். சில நாட்களில் என்னை ஹார்லியில் பள்ளியில் இறக்கிவிடச் சொல்வார்கள். பள்ளிக்குச் சென்று இறங்கியதும் அவர்களின் முகத்தில் ஒரு பெருமிதம் மிளிரும். நான் சிக்னலில் நிற்கும்போதெல்லாம் பைக் பிரியர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விடுவார்கள். ஹார்லி டேவிட்சன் பைக் வைத்திருப்பவர்களின் இன்னொரு குணம், அவர்கள் அந்த பைக் மீது வைத்திருக்கும் மரியாதையும் புரிதலும்தான். க்ரூஸர் பைக் என்பதால், ரொம்பவும் வேகமாக ஓட்ட மாட்டேன். மெதுவாகச் செல்லும்போது ஏற்படும் பைக்கின் பீட்டும், தடதடப்பும்தான் ஹார்லி பைக்குகளின் டிரேட் மார்க்!

சென்னையில் உள்ள ஹார்லி டேவிட்சன் பைக் சொந்தக்காரர்கள் அத்தனை பேரையும் எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி அவ்வப்போது பயணம் செல்வோம். இந்த ஆண்டுகூட பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, அஹமதாபாத், டெல்லி, மும்பை மற்றும் புனே நகரங்களில் இருந்து வந்திருந்த ஹார்லி ஓனர்ஸ் குரூப்புடன் ஹம்பி வரை சென்று வந்தேன். அத்தனை ஹார்லி ரைடர்களும் ஒன்றாகச் செல்லும்போது, போகும் இடமெல்லாம் தடதடக்கும். நாங்களெல்லாம் ஒரே குடும்பம் போல பழகுவோம். எங்களைப் பொருத்தவரை ஹார்லி டேவிட்சன் என்பது பைக் இல்லை. ஒரு கலாசாரம்.

இதை மோட்டார் விகடனுடன் பகிர்ந்துகொள்ள ஒரு காரணம் இருக்கிறது. நானும் என் குடும்பத்தினரும் மோட்டார் விகடனை ஆரம்ப காலத்தில் இருந்தே வாசித்து வருகிறோம். என் வீட்டின் கீழ் ஒரு புத்தகக் கடையை வாடகைக்கு விட்டதே, மோட்டார் விகடன் விற்பனைக்கு வந்த உடனேயே படிக்கலாம் என்பதற்குத்தான். பெங்களூருவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய ஹார்லி டேவிட்சன் பைக் பற்றி மோட்டர் விகடனில் பகிர்ந்துகொண்டதைப் படித்ததும், நானும் அதற்கான சரியான தருணத்துக்காகக் காத்திருந்தேன்.

இப்போது மோட்டார் விகடனில் நானும் எனது ஹார்லியும்!''