Published:Updated:

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

பெப்பியான பெண்களுக்கு ஸ்கூட்டி பெப், ஸ்போர்ட்டியான இளைஞர்களுக்கு அப்பாச்சி என பெண்களையும் இளைஞர்களையும் கொள்ளை கொண்ட டிவிஎஸ் நிறுவனத்தால், அலுவலகம் - ஷாப்பிங் என்று புறநகர்களுக்குள் அலையும், அன்றாடப் போக்குவரத்துக்கு பைக்குகளைப் பயன்படுத்தும் கம்யூட்டர் ரசிகர்களின் பக்கம் நெருங்க முடியாமல் இருந்தது. இப்போது கம்யூட்டர் மார்க்கெட்டைப் பிடிக்க டிவிஎஸ் ஏவியிருக்கும் லேட்டஸ்ட் ராக்கெட் - 'ஃபீனிக்ஸ்’!

 125 சிசி மார்க்கெட்டில் தற்போது அசைக்க முடியாமல் இருக்கும் ஹோண்டா ஷைனுடன் மோத, முழு பலத்துடன் வந்திருக்கிறது ஃபீனிக்ஸ். ஓசூரில் உள்ள டிவிஎஸ்-ஸின் டெஸ்ட் டிராக்கில் ஃபீனிக்ஸை டெஸ்ட் செய்தேன். பீனிக்ஸ், ஷைனுக்குப் போட்டியாகுமா? அல்லது ஃப்ளேம் மாதிரி அணைந்து போகுமா?

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

டிசைன்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 'ரேடியான்’ என்ற பெயரில் காட்சிக்கு வைத்திருந்த பைக்கை இன்னும் கொஞ்சம் மாடர்ன் ஆக்கி, ஃபீனிக்ஸ் பைக்காக களம் இறக்கி இருக்கிறார்கள். சிவப்பு, பச்சை என இப்போதைக்கு இரண்டு வண்ணங்களில் வந்திருக்கும் ஃபீனிக்ஸின் இன்ஜின், சைலன்ஸர், 6 ஸ்போக் அலாய் வீல், செயின் கார்டு ஆகிய அனைத்தும் கறுப்பு வண்ணத்தில் மிரட்டுகிறது. டிசைனில் எப்படியாவது ஷைனைத் தூக்கியடிக்க வேண்டும் என டிவிஎஸ் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது. பேக் லைட்டாக இளம் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரிலேயே ஃப்யூல் மீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், பேட்டரி லைஃப் இண்டிகேட்டர், பைக்கின் சர்வீஸ் கால அளவை நினைவுப்படுத்தும் 'ரிமைண்டர் ஐகான்’ ஆகியவை இடம் பெற்று இருக்கின்றன.

12 லிட்டர் கொள்ளளவு கொண்ட, நீளம் குறைவான, ஆனால் அகலமான பெட்ரோல் டேங்க், பார்ப்பதற்குக் கொஞ்சம் பழைய மாடலாகத் தெரிந்தாலும், கால்களைச் சரியாக வைத்து ஓட்ட வசதியாக இருக்கிறது. டேங்க்கின் பக்கவாட்டுகளில் ஃபீனிக்ஸ் என்ற லோகோவும், 125 சிசி என்பதைக் குறிக்கும் வகையில் 125 என்ற எழுத்துக்களும் பெரிதாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருப்பது - ஃபீனிக்ஸை அழகு பைக்காகக் காட்டுகிறது. இதில் டேங்க்கின் நீளத்தைக் குறைத்து, சீட்டின் நீளத்தையும் பெரிதாக்கி இருக்கிறார்கள். இதனால், கணவன் - மனைவி - குழந்தை என்று ஒரு அளவான குடும்பம் பயணிக்க நிச்சயம் வசதியாக இருக்கும். சீட் அகலமாகவும் இருப்பதால், பருமனாக இருப்பவர்களும் சிரமம் இன்றி பயணிக்கலாம்.  சீட்டில் டபுள் டெக்ச்சர் ஃபேப்ரிக்குளைக் கொண்டு வடிவமைத்திருப்பது, கொஞ்சம் ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது.

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

இதில் பட்டன் ஸ்டார்ட் மற்றும் 'இன்ஜின் கில் சுவிட்ச்’ இருப்பதால், நகர நெருக்கடிகளில், டிராஃபிக் சிக்னல்களில் ஆஃப் செய்து, ஸ்டார்ட் செய்து பயணிக்க ஏதுவாக இருக்கிறது. கிளட்ச்சுகள் ஸ்மூத் ரகம்! ரியர்வியூ மிரர்களில் பின்னால் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஃபீனிக்ஸில், கார்களில் இருப்பதுபோல் 'ஹஸார்டு வார்னிங் சுவிட்ச்’சை அறிமுகம் செய்திருக்கிறது டிவிஎஸ். பெரிய ஹெட் லைட், ஃபீனிக்ஸை கம்பீரமாகக் காட்டுகிறது. ஆனால், இண்டிகேட்டர்களும், பின் பக்க டெயில் லைட்டும் எந்தப் புதுமையும் இல்லாமல், வழக்கம் போலவே இருக்கின்றன.

மொத்தத்தில், டிசைன் மற்றும் ஃபிட் அண்டு பினிஷ்-ல் ஃபீனிக்ஸ், சிறப்பாகவே இருக்கிறது.

இன்ஜின்

'நியூ ஈக்கோ த்ரஸ்ட்’ என்ற பெயரில் 124.5 சிசியில், சிங்கிள் சிலிண்டர் மற்றும் சிவி கார்புரேட்டரைக் கொண்டு இயங்கும் ஏர்-கூல்டு இன்ஜின், பீனிக்ஸில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

8000 ஆர்பிஎம்-ல் 10.9 bhp சக்தியும், 6000 ஆர்பிஎம்-ல் 1.1 kgm டார்க்கும் கொண்ட ஃபீனிக்ஸில் 'லோ மற்றும் மிட் ரேஞ்ச்’சில் நல்ல பவர் டெலிவரி கிடைக்கிறது. டிவிஎஸ் டெஸ்ட் டிராக்கில் இதை டெஸ்ட் செய்தபோது, 0-60 கி.மீ-யை ஃபீனிக்ஸ், 7.3 விநாடிகளில் கடந்தது. ஆனால், ஸ்பீடோ மீட்டர் முள் அறுபதைத் தாண்டி விட்டால், அதிர்வுகளால் ஆட ஆரம்பிக்கிறது. ஹை-ஸ்பீடு டெஸ்ட் டிராக்கில் நான் எவ்வளவோ முயன்றும், 100 கி.மீ வேகத்தை நெருங்க முடியவில்லை. ஃபீனிக்ஸில் நான் அதிகபட்சம் தொட்டது  மணிக்கு 96 கி.மீதான்! ஆனால், அன்றாடப் போக்குவரத்துக்கு என்று டிசைன் செய்யப்பட்ட இந்த பைக்கில், இந்த வேகம் போதும் என்கிறது டிவிஎஸ். ஷைன் போலவே, சிட்டி டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு ஏற்ப, பீனிக்ஸில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கிறது.

கையாளுமை

ஃபீனிக்ஸின் கெர்ப் வெயிட் - 116 கிலோதான் என்பதால், குறுகலான வளைவு - நெளிவுகளில்கூட சட்டென லாவகமாக 'கட்’ அடிக்கலாம். ரைடிங் பொசிஷன் சிறப்பாக இருப்பதால், நம்மை மீறி பைக் 'அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ ஆகாமல், நாம் எந்தத் திசையில் திருப்ப நினைக்கிறோமோ, அந்தத் திசைக்கு பைக்கைத் திருப்பலாம். நன்றாக நிமிர்ந்து ஓட்டக்கூடிய வகையில் இதன் ஹேண்டில் பார் பொசிஷன் இருப்பதால், தினந்தோறும் அதிக தூரம் பயணம் செய்யலாம்! மொத்தத்தில் கம்யூட்டர் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் ஃபீனிக்ஸின் கையாளுமை இருக்கிறது.

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

90/90x17 டயர்களில், ரோடு கிரிப் சிறப்பாக இருக்கிறது. முன் பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் இருப்பதால், பிரேக்கின் பெர்ஃபாமென்ஸ் சூப்பர்!

ஆனால், ஃபீனிக்ஸ் வாங்கும் போது, ஹார்ன் விஷயத்தில் நாம் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளத்தான் வேண்டும். பழைய டிவிஎஸ் பைக்கிலிருந்து கொஞ்சம் ட்யூன் செய்ததுபோல் இருக்கிறது ஹார்ன் சத்தம்!

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

கையாளுமை விஷயத்தில், நாம் ஃபீனிக்ஸின் சஸ்பென்ஷன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பின் பக்கத்தில் இரண்டு வண்ணங்களையும், 5 ஸ்டெப்புகளையும் கொண்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ஸ்பிரிங்குகள் - பெரிய குண்டு குழிகளையும் அசால்ட்டாகச் சமாளிக்கிறது. நான் இதை, மேடு பள்ளங்கள் கொண்ட டிராக்கில் டெஸ்ட் செய்தபோது, முன் பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், அனைத்தையும் சொகுசாகவே எடுத்துக்கொண்டது.

மைலேஜ்

ஃபீனிக்ஸ், லிட்டருக்கு 67 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது டிவிஎஸ். பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து ட்யூன் செய்யப்பட்ட ஈக்கோத்ரஸ்ட் இன்ஜின் என்பதால், நிச்சயம் நல்ல மைலேஜ் கிடைக்கும் என நம்பலாம்!

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?
உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?

ஹோண்டா ஷைனைப் போட்டியாகக் கொண்டு, ஃபீனிக்ஸில் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகக் கையாண்டு இருக்கிறார்கள். 'பவர்ஃபுல் பைக் தேவையில்லை; பட்ஜெட் பைக்கே போதும்’ என்று விரும்புபவர்கள் ஃபீனிக்ஸை வாங்கலாம். இதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 53,000. ஆன்-ரோடு விற்பனைக்கு வரும்போது விலை 60 ஆயிரம் ரூபாயை நெருங்கும். அப்படி விற்பனைக்கு வந்தால், ஷைனைவிட கிட்டத்தட்ட 5,000 ரூபாய் குறைவு. விலை, ஸ்மூத்தான இன்ஜின், உட்கார்ந்து பயணிக்க வசதியான இருக்கை, அதிக மைலேஜ் என தினந்தோறும் பயணிக்க சிறந்த 125 சிசி பைக்காக இருக்கிறது ஃபீனிக்ஸ்!

உயிர்த்தெழுமா ஃபீனிக்ஸ்?