Published:Updated:

சிங்கத்தை பீச்சுல பார்த்தது உண்டா?

சிங்கத்தை பீச்சுல பார்த்தது உண்டா?

 ##~##

சென்னையில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில், பயணம் செய்வதே ஓர் தனி அனுபவம்தான். இந்தச் சாலையின் ஒரு பக்கம் கடல், மறுபக்கம் நிலம். சவுக்குத் தோப்புகள், கூடவே வரும் வெண்மணல் பரப்பு, ஈரமான காற்று, பொழுதுபோக்கு மையங்கள், ரிஸார்ட்டுகள், ஹோட்டல்கள் என ஒவ்வொரு கணமும் கண்களுக்கு விருந்தளிக்கும் நிலக் காட்சிகள் இந்தச் சாலையில் ஏராளம். 

ஆனால், நாம் பயணம் செய்வது சாலையில்தான். அதுவே, கடற்கரை ஓரமாக மணலிலேயே சென்னையில் இருந்து புதுச்சேரி வரை பயணம் செய்தால்..? அப்படி ஒரு பயணத்தைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள் போலாரிஸ் ஏடிவி டிராக்கைச் சேர்ந்த குழுவினர்.

சிங்கத்தை பீச்சுல பார்த்தது உண்டா?

சென்னையில் தொடங்கும் ஈ.சி.ஆர் சாலையில், மாமல்லபுரத்துக்கு முன்பாக பட்டிப்புலம் என்ற இடத்தில் இருக்கிறது போலாரிஸ் ஆஃப் ரோடு ஸ்போர்ட்ஸ் டிராக். உலக அளவில் ஏடிவி வாகனத் தயாரிப்புக்கு பிரபலமான போலாரிஸ் நிறுவனம் இந்தியாவில் கால் பதித்ததைத் தொடர்ந்து, ஆஃப் ரோடிங் சாகசப் பயணத்தின் அருமை பெருமைகளைப் புரிய வைப்பதற்காகவே இங்கு ஸ்போர்ட்ஸ் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. சின்னதும் பெரியதுமாக போலாரிஸின் அத்தனை ஏடிவி வாகனங்களும், இந்த ரேஸ் டிராக்கில் 'உள்ளேன் அய்யா’ என்கின்றன. என்னதான் கல்லையும் மண்ணையும் கொட்டி, செயற்கையாக கரடுமுரடான டிராக்கை அமைத்தாலும், ஏடிவி வாகனங்களின் முழுத் திறனையும் அனுபவிக்க, அது தயாரிக்கப்பட்டதன் அர்த்தத்தை முழுமையாக்க, கட்டுப்பாடுகள் ஏதுமற்ற நிலத்தில் ஓட்டிப் பார்ப்பதுதானே சரியாக இருக்கும்? அதுதான் இந்தப் பயணத்தின் நோக்கமும்கூட!

சிங்கத்தை பீச்சுல பார்த்தது உண்டா?

அவுட் லா, ஸ்போர்ட்ஸ் மேன், ஸ்ப்ளிட் ஃப்யர், ஸ்க்ராம்ப்ளர், ட்ரயல் பாஸ்...! WWF மல்யுத்த வீரர்களின் பெயர்கள் மாதிரி இருக்கும் ஏடிவி வாகனங்களின் துணையோடு துவங்கியது இந்தப் பயணம். பட்டப் பகல்... உச்சி வெயில்... உப்புக் காற்று... எதைப் பற்றியும் கவலையில்லை. ஜெர்க்கின், ஹெல்மெட் சகிதம் ஏடிவி வாகனங்களில் வந்திறங்கிய இந்த ஆஃப் ரோடிங் 'அப்பா டக்கர்’களை ஏதோ வேற்று கிரகவாசிகள்போல பார்த்தனர் மீனவ கிராம மக்கள். இருக்காதா பின்னே? 18 ஆஃப் ரோடர்களும் சேர்ந்து எழுப்பிய ஹை-டெசிபல் சத்தம் அப்படி!

புதுச்சேரி செல்லும் பாதி வழியில், கொஞ்சமே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நின்றவர்களை ஆலிகுப்பம் கடற்கரையில் சந்தித்தேன். முன்னொரு காலத்தில், இறால் ஏற்றுமதிக்காகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று சிதிலமடைந்து அங்கே நிற்கிறது. இறால் பண்ணைகளெல்லாம் மூடப்பட்ட பின்னர், யாருக்கும் பயன்படாமல் (குடிமகன்களைத் தவிர) காலத்தின் மௌன சாட்சியாக நிற்கிறது அந்தப் பாலம்.

சிங்கத்தை பீச்சுல பார்த்தது உண்டா?
சிங்கத்தை பீச்சுல பார்த்தது உண்டா?

அத்தனை தூரம் மணலில் ஏடிவி ஓட்டிய களைப்பு உடலை வாட்டினாலும், அதையும் மீறிய உற்சாகம் வந்து இறங்கியவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பிக் கிடந்தது. அத்தனை ரைடர்களின் மனசாட்சியாகவும் ஒலித்தது ரேஸ் டிராக் உரிமையாளரான சுந்தரின் குரல்.

''டிராவல் பண்றதுக்குத்தான் ரோடு இருக்கு. ஆனா, ரோட்டுல மட்டுந்தான் டிராவல் பண்ணணும்னு எந்த ரூல்ஸும் இல்லையே? ஆஃப் ரோடருக்குன்னு சில வித்தியாசமான குணநலம் இருக்கு. இதுல இந்த மாதிரி ஏடிவி வாகனங்களை ஓட்டுவது என்பது... சிங்கத்த சர்க்கஸ்ல பாக்குறதுக்கும், காட்டுல பாக்குறதுக்குமான வித்தியாசம்!'' - சுந்தர் சொல்லி முடிக்கவும், விருட்டென்று புதுச்சேரி நோக்கி விரைந்தனர் ரைடர்கள்.

நமக்கும் அந்த ஆஃப் ரோடர் இன்ஜின்களின் சத்தம் சிங்கத்தின் உறுமல் மாதிரிதான் கேட்டது!