Published:Updated:

ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

 ##~##

ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்து, சாம்பியன் பட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறார் செபாஸ்ட்டியன் வெட்டல். சிங்கப்பூர், ஜப்பான், கொரியா என கடந்த மாதங்களில் நடைபெற்ற மூன்று ரேஸ்களிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தக்க வைப்பதில் தீவிரமாக இருக்கிறார் செபாஸ்ட்டியன் வெட்டல். 

இந்த ஆண்டு ஃபார்முலா-1 ரேஸில், முதல் ஏழு ரேஸ்களில் ஏழு வீரர்கள் மாறி மாறி வெற்றி பெற்றனர். இதனால், சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்ற பரபரப்பு எழுந்தது. இதற்கு அடுத்து, அதிக வெற்றி மற்றும் இரண்டாம் மூன்றாம் இடங்கள் மூலம் சாம்பியன் ஷிப் பட்டியலில் முன்னிலை பெற்றார் ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ. இப்போது ஹாட்ரிக் வெற்றி மூலம் அலான்சோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் செபாஸ்ட்டியன் வெட்டல். இருப்பினும், இருவருக்கும் வெறும் ஆறு புள்ளிகள்தான் வித்தியாசம். அதனால், பரபரப்பான கிளைமாக்ஸை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது ஃபார்முலா-1.

ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

சிங்கப்பூர்

ஃபார்முலா-1 ரேஸ்களில், கூடுதலாக சிறப்புக் கவனம் பெறும் சிங்கப்பூர் ரேஸ். காரணம், இரவில் ராட்சத விளக்குகளின் துணையுடன் நடைபெறும் ஒரே ரேஸ் இது மட்டுமே! அதுவும் மற்ற ஃபார்முலா-1 ரேஸ் டிராக்குகளைப் போல இல்லாமல், 'ஆன்ட்டி கிளாக் வைஸ்’ சுற்றில் 59 லேப்புகளைக் கொண்ட களம். இரவில் நடக்கும் ரேஸ் என்பது மட்டும் அல்ல... 23 சவாலான வளைவுகளைக் கொண்ட டிராக் இது. அதனால், விபத்துகளுக்கும் இங்கே பஞ்சம் இருக்காது!

தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார் லூயிஸ் ஹாமில்ட்டன். வில்லியம்ஸ் ரெனோ அணியின் பாஸ்டர் மால்டொனால்டோ இரண்டாவது இடத்தில் இருந்தும், ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். எதிர்பார்தது போலவே முதல் லேப்பிலேயே முட்டலும், மோதலுமாக ரேஸ் துவங்கியது. இரண்டாம் இடத்தில் இருந்த பாஸ்டர் மால் டொனால்டோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்துக்கு லூயிஸ் ஹாமில்ட்டனுடன் போட்டி போட ஆரம்பித்தார் செபாஸ்ட்டியன் வெட்டல். 23-வது லேப்பின்போது முதல் இடத்தில் இருந்த லூயிஸ் ஹாமில்ட்டன் காரின் வேகம் திடீரென குறைய, பின்னால் வந்த கார்கள் எல்லாம் முன்னோக்கிச் செல்ல... ஒரு சில நிமிடங்கள் கார் முழுவதுமாக நின்றுவிட்டது. கியர் பாக்ஸ் பிரச்னையால் முதல் இடத்தில் இருந்த லூயிஸ் ஹாமில்ட்டன் ரேஸை விட்டுப் பரிதாபமாக வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரேஸ் டிராக்கில் இருந்து விலகிய நரேன் கார்த்திகேயனின் கார், நேராக தடுப்புச் சுவரின் மீது மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. நல்லவேளையாக நரேன் கார்த்திகேயனுக்கு அடி எதுவும் இல்லை. இதற்கு அடுத்து 38-வது லேப்பின்போது எஸ்டிஆர் ஃபெராரி அணியின் வெர்ஜினின் காரும், மைக்கேல் ஷூமேக்கரின் காரும் ஒன்றோடு ஒன்று மோதி ரேஸில் இருந்து வெளியேறின. கிட்டத்தட்ட ஐந்து கார்கள் வெளியேறிவிட்ட நிலையில், முதல் இடத்துக்கான போட்டியில் வெட்டலும், ஜென்சன் பட்டனும் மோதிக்கொண்டு இருந்தனர்.  இறுதியில் வெற்றிக் கோட்டை முதலில் தொட்டு வெற்றி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். ஜென்சன் பட்டன் இரண்டாவது இடமும், ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

ஜப்பான்!

ஜப்பானில் உள்ள சுஸ¨கா ரேஸ் டிராக்கில், ஃபார்முலா-1 போட்டியின் 15-வது ரேஸ் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்றது. ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல் முதல் இடத்தில் இருந்தும், மார்க் வெப்பர் இரண்டாம் இடத்தில் இருந்தும், சாபர் அணியின் கமுய் கொபயாஷி மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். இதில் கமுய், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதோடு, ரேஸை மூன்றாம் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றதால், 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் ரேஸ் டிராக்கில் குவிந்திருந்தனர். ரேஸின் ஆரம்பத்திலேயே, இரண்டாம் இடத்தில் இருந்த வெப்பரைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் ஃபிலிப் மாஸா. வெட்டல், மாஸா, கமுய் என தொடர்ந்து மூன்று பேரும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு ரேஸ் ஓட்டினார்கள். செபாஸ்ட்டியன் வெட்டலுக்கும், மாஸாவுக்கும் யாரும் போட்டியே இல்லை. மூன்றாம் இடத்துக்கான போட்டிதான் பலமாக இருந்தது. கமுய் கொபயாஷிக்கும், ஜென்சன் பட்டனுக்கும் இடையில் நடந்த போட்டியில் கமுய் வெற்றி பெற்றார். வெட்டல் எந்த சவாலும் இல்லாமல் முதல் இடம் பிடித்து வெற்றி பெற, மாஸா இரண்டாம் இடம் பிடிக்க, சொந்த மண்ணில் மூன்றாம் இடம் பிடித்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார் கமுய்.

ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

தென்கொரியா!

ஃபார்முலா-1 ரேஸின் 16-வது சுற்று, தென்கொரியாவின் சர்வதேச ரேஸ் டிராக்கில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெற்றது. மார்க் வெப்பர் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார். தொடர்ந்து இரண்டு ரேஸ்களிலும் வெற்றி பெற்றிருந்த செபாஸ்ட்டியன் வெட்டல், தென்கொரியாவின் தகுதிச் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்து இரண்டாம் இடத்தில் இருந்தும், லூயிஸ் ஹாமில்ட்டன் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

ரேஸை கொடி அசைத்துத் துவக்க வந்திருந்தவர் ஜப்பானின் பாப் பாடகர் சை. 'கங்னம் ஸ்டைல்’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் ஹிட் அடித்த சை, ரேஸுக்கு முன்பாக வெட்டலையும், வெப்பரையும் ஆட்டம் போட வைத்தார். வெப்பரும், வெட்டலும் முதல் இரண்டு இடங்களில் முன்னேறிக் கொண்டு இருக்க... லூயிஸ் ஹாமில்ட்டனை அலான்சோவும், மாஸாவும் போட்டி போட்டுக் கொண்டு பின்னுக்குத் தள்ளினர். இதற்கிடையே வெப்பரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்துக்கு முன்னேறினார் வெட்டல். கடைசி லேப்பான 55-வது லேப்பின்போது வெட்டல் முதல் இடம் பிடித்து ஹாட்ரிக் வெற்றி பெற... வெப்பர் இரண்டாம் இடத்தையும், அலான்சோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

சாம்பியன்ஷிப் பட்டியலில் வெட்டல் 215 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அலான்சோ 209 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், கிமி ராய்க்கோனன் 167 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இன்னும் நான்கு ரேஸ்கள் மீதம் இருக்கும் நிலையில், 'சாம்பியன் பட்டம் வெட்டலுக்கா, அலான்சோவுக்கா?’ என்ற பரபர கிளைமேக்ஸ் காத்திருக்கிறது.

கடந்த ஆண்டு, முதன்முறையாக இந்தியா வின் டெல்லி புத் சர்க்யூட்டில் நடைபெற்ற ரேஸில் வெற்றி பெற்றவர் செபாஸ்ட்டியன் வெட்டல். இந்த ஆண்டும் சூப்பர் ஃபார்மில் இருக்கும் வெட்டல் இந்தியாவிலும் தொடர்ந்து நான்காவது வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன்பு அக்டோபர் 28-ம் தேதி டெல்லியில் 17-வது சுற்று நடந்து முடிந்திருக்கும்.

 குட் பை ஷூமேக்கர்!

ஹாட்ரிக் வெட்டல் - பின்தங்கும் அலான்சோ!

இந்த ஆண்டோடு ஃபார்முலா-1 ரேஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் ஏழு முறை உலக சாம்பியனான மைக்கேல் ஷூமேக்கர். 43 வயதான ஷூமேக்கர் மைல்ட் செவன் பெனட்டன், ஃபெராரி அணிகளுக்காக ரேஸ் ஓட்டி ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவர். உலகின் தலைசிறந்த ரேஸராகப் புகழப்பட்ட ஷூமேக்கர், 2006-ம் ஆண்டு ஃபார்முலா-1 ரேஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 3 ஆண்டுகள் ஓய்வில் இருந்த ஷூமேக்கர் 2010 ஆம் ஆண்டு மெர்சிடீஸ் அணிக்காக மீண்டும் களம் இறங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஷூமேக்கர் வெற்றி பெறவில்லை. '’இப்போதும் ஃபார்முலா-1 ரேஸில் பங்கேற்கும் பல ரேஸர்களைவிட நான் வேகமாக கார் ஓட்டுகிறேன். இருப்பினும் என்றோ ஒருநாள் ரேஸில் இருந்து ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும். அந்த முடிவை இப்போது எடுக்கிறேன்!' என்று சொல்லியிருக்கிறார் ஷூமேக்கர்.

- சார்லஸ்