Published:Updated:

CBR 250R - நான் ஏன் வாங்கினேன்?

CBR 250R - நான் ஏன் வாங்கினேன்?

 ##~##

ஸ்போர்ட்டியான பைக்தான் வாங்க வேண்டும் என்பது எனது ஆசை!  என் நண்பர்களிடம் ஐடியா கேட்டபோது, 'இதுல என்னடா டவுட்டு..? பல்ஸர்தான்’ என்றார்கள். 'பல்ஸரைத்தான் இப்போ எல்லாரும் வெச்சிருக்காங்களே! நான் ரோட்டுல போனா எல்லாரும் என்னைத் திரும்பி பார்க்கிற மாதிரி யூத்ஃபுல் பைக்கா இருக்கணும். அப்படி ஒரு பைக்கை சொல்லுங்க'' என்றேன். அப்போது நண்பர்கள் பலரும், 'ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் நல்ல சாய்ஸ்’ என்றனர். 

ஆனால், ஒரே செக்மென்ட்டில் இருக்கும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் மற்றும் கவாஸாகி நின்ஜா 250ஆர் ஆகிய இரண்டுமே  என்னைக் கவர்ந்தன. ஆனாலும், நண்பர்கள் சொன்னதைப் போலவே, கவாஸாகி நின்ஜாவைப் பற்றி வந்த ரிவியூக்கள் பெருமைப் படும் படியாக இல்லை. சர்வீஸ், மெயின்டனன்ஸ் என நான் காசைக் கரைத்து விடுவேனோ என்ற பயத்தின் காரணமாக வீட்டில், ஹோண்டாவின் சர்வீஸ் நெட்வொர்க் தரமாக இருக்கும் என்றார்கள்.

CBR 250R - நான் ஏன் வாங்கினேன்?

அதனால், பைக்கை நேரில் பார்ப்போம் என கோவை டீலரான சந்திரா ஹோண்டா ஷோ ரூமுக்குச் சென்றேன். பைக்கைப் பார்த்ததுமே எனக்கேற்ற பைக் ஹோண்டா சிபிஆர் 250ஆர்தான் என முடிவு செய்துவிட்டேன். அந்த அளவுக்கு இதன் லுக் என்னை வசீகரித்தது. ஷோ ரூமில் என்னுடைய எல்லா சந்தேகங்களுக்கும் மிகப் பொறுமையாகப் பதில் சொன்னார்கள். ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஸ்டாண்டர்டு மாடல் பைக்கின் விலை 1,64,200 ரூபாய். நின்ஜா 250 ஆர் உடன் ஒப்பிட்டால், இது லட்ச ரூபாய் குறைவு! முழுத் தொகையும் செலுத்திய ஒரு வாரத்துக்கு பின்பு பைக்கை டெலிவரி கொடுத்தனர். ஆனால், சர்வீஸ் விஷயத்தில் கொஞ்சம் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

முதன்முறையாக எனக்குச் சொந்தமான ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கை ஓட்டிய பரவசத்தை மறக்கவே முடியாது. ஒரு சூப்பர் பைக்கை ஓட்டுவது போன்ற உணர்வை இது கொடுக்கிறது. பைக்கின் ஓட்டுதல் தரம் யமஹா ஆர்-15 மற்றும் கவாஸாகி நின்ஜா ஆகியவற்றைவிட மிக நன்றாக இருக்கிறது. பைக்கில் உட்காரும்போது சீட் மிக வசதியாக இருக்கிறது. டிராஃபிக்கில் வளைத்து கட் அடித்து ஓட்டுவது ஈஸி. பின் சீட் ஸ்ப்ளிட் டைப் என்பதால், பில்லியனில் உட்கார்ந்து வருபவர் சௌகரியமாக உட்கார முடிகிறது. மேலும், பின் பக்கம் உள்ள ப்ரோ-லிங்க் சஸ்பென்ஷன் சொகுசான பயண அனுபவத்தைத் தருகிறது.

பவர்ஃபுல்லான பைக் என்பதால், வேகமாகச் செல்லும்போது பிரேக் அடித்தால், ஸ்கிட் ஆகி விடுமோ என்ற பயம் இல்லை. ஆனால், நான் வாங்கிய பைக்கில் ஏபிஎஸ் பிரேக்ஸ் கிடையாது. அதனால், முன் பக்க பிரேக் அளவுக்கு, பின் பக்க பிரேக்கின் செயல்பாடு திருப்தியாக இல்லை.

மைலேஜைப் பொறுத்தவரை என் மனநிலைக்கு ஏற்ப மாறுகிறது. ஆம், நான் எந்த மாதிரி ஓட்டுகிறேனோ, அதற்கேற்றவாறுதான் மைலேஜ் கிடைக்கிறது. எனக்கு ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு 34 - 35 கி.மீ மைலேஜ் தருகிறது. ஆனால், நெடுஞ்சாலையில் 80 - 85 கி.மீ வேகத்தில் சென்றால், கிட்டத்தட்ட லிட்டருக்கு 38 கி.மீ வரை கிடைக்கும்!

CBR 250R - நான் ஏன் வாங்கினேன்?

என் குடும்பத்தினருக்கும் பிடித்த பைக்காக இருக்கிறது ஹோண்டா சிபிஆர் 250 ஆர். கொடுத்த காசுக்கு அதிகப்படியான திருப்தியை அளிக்கிறது! நான் எதிர்பார்த்த ஸ்போர்ட்டி ஃபீலிங், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், லுக் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறது என் பைக்!

 வாசகர்களே,

நீங்களும் உங்கள் புது பைக் பற்றிய நிறை, குறைகளை மோட்டார் விகடனில் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? உங்கள் தொலைபேசி, முகவரி, இமெயில் போன்றவற்றுடன் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!