Published:Updated:

புல்லட் கோவில்!

புல்லட் கோவில்!

 ##~##

தை நம்புவது சற்று சிரமமான காரியம்தான்! புல்லட் பைக்குக்கு வட இந்தியாவில் ஒரு கோயில் உள்ளது என்றால், யார்தான் நம்புவார்கள்? கேள்விப்பட்ட நாமும் நேரில் சென்று பார்த்த பின்புதான் நம்பினோம். 

ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் ஜோத்பூர். அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை-65 பாலி சாலையில் 45 கி.மீ பயணம் செய்தால் வருவது, 'ஓம் பனா மந்திர்’ என அழைக்கப்படும் புல்லட் கோயில்.

பல்வேறு வேண்டுதல்களுக்காக பல வண்ணங்களில் கட்டப்பட்ட கயிறுகள் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதன் பின்னால் கர்ப்பக்கிரஹமாக ஒரு உயர்ந்த மேடை. அதன் மீது 'ஓம் பனா’வின் பாதி அளவுள்ள மார்பிள் சிலை மற்றும் அவருடைய பெரிய புகைப்படமும் வைத்து மாலைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதன் முன் அமர்ந்திருந்த பூசாரி, பக்தர்கள் கொடுக்கும் கொப்பரைத் தேங்காய், ஊதுபத்தி மற்றும் பூ மாலைகளை வாங்கி பூஜை செய்து கொண்டிருந்தார். இதற்குப் பின்னதாக நிறுத்தப்பட்ட 1985 மாடல் ராயல் என்ஃபீல்டு 350 சிசி புல்லட்டுக்கு ஒரு கண்ணாடிக் கூண்டு செய்து பாதுகாத்து வைத்துள்ளனர். சரி, இந்த கோயிலின் ஹிஸ்ட்ரி என்ன?

புல்லட் கோவில்!

டிசம்பர் 1988 நள்ளிரவு. இந்த பாலி நெடுஞ்சாலையில் ஒரு புல்லட் சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டி வந்த ஓம் சிங் ராத்தோர் எனும் 26 வயது இளைஞர், அருகிலுள்ள தனது ஜோட்டிலா கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது  புல்லட் மண் ரோட்டில் இறங்கியதால் திடீர் என சறுக்கி, அங்கிருந்த மரத்தில் மோதியது. ஓம் சிங், அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்திருக்கிறார். விழுந்த வேகத்தில் அவரது தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். வழக்குப் பதிவு செய்த போலீசார், பைக்கை காவல் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அந்தக் கோயிலில் மேளம் வாசிக்கும்  ஈஷ§ தமாமி, உணர்ச்சி பொங்கக் கூறினார்.

புல்லட் கோவில்!

''காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்த புல்லட் திடீர் என ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டிருக்கிறது. அதை யாரோ திருட முயல்கிறார்கள் என வெளியில் வந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், புல்லட் ஸ்டாண்ட் போட்டபடி இருக்க, இன்ஜின் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. அருகில் யாரும் இல்லை. இதைப் பார்த்து பயந்து போனவர்களுக்கு, மறுநாளும் அதேபோல் இந்த புல்லட் ஸ்டார்ட் ஆகி அதிர்ச்சி அளித்திருக்கிறது. பிறகு ஓம் சிங் ராத்தோரின் வீட்டாரை அழைத்து புல்லட்டைக் கொடுத்து அனுப்பி விட்டனர். ஓம் பனாவின் ('பனா’ என்பது ராஜபுத் இளைஞர்களைக் குறிக்கும் மரியாதையான வார்த்தை) வீட்டிலும் அதேபோல் இரவு நேரத்தில் புல்லட் தானாகவே ஸ்டார்ட் ஆனது.

இது எப்படி என அவரது வீட்டார் குழம்பிக் கொண்டிருக்க, ஓம் பனாவின் பாட்டியின் கனவில் அவர் வந்து, 'எனக்காக விபத்து நடந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி விடுங்கள். சரியாகப் போய்விடும்’ எனக் கூறினாராம்.

இதைக் கேள்விப்பட்ட ஜோட்டிலா கிராமத்தினர், அந்த புல்லட்டை - விபத்து நடந்த மரத்தின் அருகில் நிறுத்தி, 'ஓம் பனா மந்திர்’ என அதை ஒரு கோயிலாக்கி விட்டனர். வருடம் ஒரு முறை அந்த புல்லட்டை ஓம் பனாவின் கிராமம் வரை ஊர்வலமாகக் கொண்டு சென்று நடத்தப்படும் திருவிழாவில், ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த சம்பவம் நடந்தது உண்மையா, இல்லையா? என்பது பிரச்சனை இல்லை. இது இங்குள்ள மக்களின் தெய்வீக நம்பிக்கை!'' என்றார் ஈஷ§ தமாமி.

ஒரு காலத்தில் வெறிச்சோடிக் கிடந்த இந்தப் பகுதி, புல்லட் கோயில் வந்த பின் மிகவும் புகழ் பெற்று ஒரு 'லேண்ட் மார்க்’ போல் ஆகி விட்டது. இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் கூட்டத்தை நம்பி பூஜை பொருட்கள், பேன்ஸி ஸ்டோர்ஸ், ஓட்டல்கள் என ஒரு புதிய மார்க்கெட்டும் அதன் எதிரில் உருவாகிவிட்டது.

புல்லட் கோவில்!