Published:Updated:

ராயல் பாண்டியர்கள்!

மதுரை புல்லட் கிளப்!

ராயல் பாண்டியர்கள்!
 ##~##

துரையில் ஏற்கெனவே சுந்தரபாண்டியன்களுக்குப் பஞ்சம் இல்லை. இதில், 'ராயல் பாண்டியாஸ்’ என்ற புல்லட் பைக் கிளப் புது வரவு! 

இந்த மதுர பாண்டியர்கள், அவ்வப்போது ஒன்றுகூடி தடதடவென ஜாலி டூர் கிளம்பிவிடுகிறார்கள். சமீபத்தில், ''எங்க கிளப்புல இருந்து கொடைக்கானலுக்கு நாற்பது பேருக்கு மேல புல்லட்டுல கிளம்புறோம். பில்லியன் ஃப்ரீயா இருக்கு... வர்றீகளா?'' என்று கேட்டதும், ஓடி ஏறித் தொற்றிக்கொண்டோம்.

ஸ்டாண்டர்டு, எலெக்ட்ரா, தண்டர்பேர்டு, கிளாசிக் 350, கிளாசிக் 500 என கலந்து கட்டி கொடைக்கானல் சாலையில் தடதடத்தனர் ராயல் பாண்டியர்கள். கைகளுக்கு க்ளவ்ஸ், கால்களுக்கு நீ பேட், ஹெல்மெட், ஷூ, ஜாக்கெட் என கனகச்சிதமான பாதுகாப்போடு பயணத்தை ஆரம்பித்தனர்.

ராயல் பாண்டியர்கள்!

''தங்களுக்குப் பிடித்தமான விஷயத்தோடு, ஒரே மனம் கொண்ட பலர் ஒன்று கூடினால் எப்படி இருக்கும்? அவர்களின் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அப்படிப்பட்ட பைக் ரைடர்ஸ் கிளப்தான் எங்கள் ராயல் பாண்டியாஸ் மதுரை என்ஃபீல்டர்ஸ் கிளப்!'' என்றார் இதன் செயலாளரான ஆதிலிங்கம்.

''ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஒன்று சேர்ந்து 'டுபு டுபு டுபு’ சப்தத்தில் ரைடிங் போனால் எப்படி இருக்கும்? பார்வையாளர்களின் மனதும் கண்களும் நம்மையே பார்க்கும். அந்தப் பார்வையே நம்மைக் கௌரவப்படுத்தும் விதமாக இருக்கும்!'' என்றவரிடம் பில்லியன் பேச்சைத் தொடர்ந்தேன்.

ராயல் பாண்டியர்கள்!

''எங்கள் கிளப்பில் டாக்டர்கள், இன்ஜினீயர்கள், பிசினஸ்மேன்கள், மாணவர்கள் என மொத்தம் 220 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தேனி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, அபுதாபி, சிங்கப்பூர் என பல இடங்களில் பணியாற்றும் நண்பர்கள்கூட எங்கள் கிளப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எங்கள் கிளப்பில் இணைந்தால் ரைடிங் ஸ்டைல், பைக்கைப் பராமரிக்கும் விதம், எப்படிக் கையாள்வது என்பதோடு, பைக் டூரை விரும்பும் மனிதராக மாற்றிவிடும் எங்களது புல்லட் பயணங்கள்.

கடந்த 2010-ல் ஒரு ஜாலி ரைடில் ஆரம்பித்த எங்களது கிளப், இன்று வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டைத் தொட்டு இருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ரைடிங் ட்ரிப் போயிருக்கிறோம். இதில் முக்கியமானது, 2011 நவம்பரில் சென்ற கோவா ட்ரிப்!. மொத்தம் 3000 கிலோ மீட்டர் தூரத்தை பைக்கில் பயணித்த அந்த அனுபவம் மறக்க முடியாதது'' என்றார் ஆதிலிங்கம்.

மதுரையைச் சேர்ந்த 64 வயதான ஜெயின், தனது கிளாசிக் 500 பைக்கில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்திக் கொண்டு - போகும் இடங்கள், சாலைகளின் நிலைமை, தற்போது இருக்கும் இடம், வளைவு நெளிவான பாதைகள், சிக்னல்கள், ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகள் என அனைத்தையும் கண்காணித்தபடி பைலட் போல செல்கிறார். இவரை கிளப்பின் மற்ற உறுப்பினர்கள் 'எனர்ஜி ரைடர்’ என்று பெருமையாகச் சொல்கிறார்கள்.

ராயல் பாண்டியர்கள்!

''மேகமலை, சிறுமலை, ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, மூணாறு, கோவளம்னு குரூப்பாக கிளம்பிவிடுவோம். எங்க கிளப்பில் டூர் ட்ரிப் போட்டதும், ஒரு சார்ட் ரெடி செய்வோம். அதில் லீடு கேப்டன், ஷிஃப்ட் கேப்டன், ரைடிங் ஸ்பாட் லைட், லோக்கல் இண்டிகேட்டர், மெக்கானிக், மெக்கானிக்கல் எக்யூப்மென்ட், கேரவேன், கேட்டரிங் என எல்லாம் பக்காவாக பிளான் செய்துதான் செல்வோம்!'' என்றார் ட்ரிப் மேனேஜர் காதர் மொகைதீன்.

கப்பலில் வேலை பார்க்கும் இன்ஜினீயரான கார்த்திக், ''ஆறு மாதங்கள் தொடர்ந்து கப்பலில் வேலை பார்ப்பேன். லீவு கிடைத்ததும் முதல் வேலையாக புல்லட்டில் டூர் கிளம்பி விடுவேன். இந்த கிளப்பில் இணைந்திருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. கிளப் உறுப்பினர்கள் அனைவரையும் மாமன், மச்சான் என நட்பு உறவு வட்டாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உறுப்பினர் வீட்டில் விசேஷம் என்றால், எல்லோரும் ஐக்கியமாகி விடுவோம்!'' என்றார் உணர்ச்சி பொங்க!

ராயல் பாண்டியர்கள்!

''இந்த கிளப்பில் இணைந்தால் டூர் செல்லும் ஒவ்வொரு முறையும் உறுப்பினர் பைக்குக்கு கண்டிப்பாக ஒரு ஓவர்ஆல் செக்கப் செய்து சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தருவோம். இந்த கிளப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பணம் போட்டு வாங்கிய பைக்கை, முழுவதுமாக அனுபவிக்க வேண்டும் என்பதே!'' என்றார் ஆதி.

கொடைக்கானல் சென்றடைந்த  பின்பு சங்க உறுப்பினர்கள் குரூப் குரூப்பாகப் பிரிந்தனர்.  ஸ்லோ ரேஸ், நான்கு பேர் சேர்ந்து கொண்டு புல்லட் பைக்கை தூக்கிக் கொண்டு ஓடும் ஓட்டப் பந்தயம், கால் ஊன்றாமல் வேகமாக 8 போடுவது, பைக்கை ஓட்டிக் கொண்டே போலோ விளையாடுவது... இப்படி விதவிதமாக போட்டிகள், பரிசுகள் என அமர்க்களப் படுத்தி விட்டு - அடுத்த நாள்தான் அத்தனை பேரும் கொடைக்கானல் மலையை விட்டு இறங்கினார்கள்!

சோலி முடிஞ்சதுறா சுந்தர பாண்டியா!

ராயல் பாண்டியர்கள்!