Published:Updated:

பாரீஸ் ஆட்டோ ஷோ

பாரீஸ் ஆட்டோ ஷோ

ரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பாரீஸ் மோட்டார் ஷோவில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய ஐரோப்பிய கார் நிறுவனங்களிடையே பெரும் போட்டியே நடக்கும். 2012 பாரீஸ் ஆட்டோ ஷோவில், தங்களுடைய புதிய டிசைன்கள், கான்செப்ட் கார்களை அரங்கேற்ற, இந்த ஷோவைப் பயன்படுத்திக் கொண்டன பல கார் நிறுவனங்கள். அவற்றில் நம் நாட்டுக்குச் சம்பந்தப்பட்ட கார்கள் இங்கே! 

பாரீஸ் ஆட்டோ ஷோ

செவர்லே பீட் - பேஸ் லிஃப்ட்

நம்மூர் செவர்லே பீட் கார்தான், பிற நாடுகளில் செவர்லே ஸ்பார்க். பாரீஸ் ஆட்டோ ஷோவில் புதிய பீட் காரை அறிமுகப்படுத்தியது செவர்லே. ஆனால், இது ஐரோப்பிய சந்தைக்குரிய மாடல். அமெரிக்காவில் இது ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டது. புதிய பீட்டில் செவர்லேவின் டிரேட் மார்க் 'பவ்-டை’ க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. முன் பக்க பம்பர், பனி விளக்குகள், ஹெட் லைட்ஸ் கிளஸ்டர் போன்றவற்றில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். இதில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செவர்லே டிராக்ஸ்

செவர்லேவின் காம்பேக்ட் எஸ்யூவியான டிராக்ஸ், பாரீஸ் ஆட்டோ ஷோவில்தான் முதன் முறையாகக் காண்பிக்கப்பட்டது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டிராக்ஸ், மிக விரைவில் பிரேசிலில் விற்பனைக்கு வருகிறது. பிரேசில் மற்றும் இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காருடன் மோதுகிறது இந்த டிராக்ஸ். இதில் 1.6 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.7 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. இந்தியாவில் இதன் பெயர் டிராக்ஸ் என்று இருக்காது.

பாரீஸ் ஆட்டோ ஷோ

டேசியா லோகன்

டேசியா என்பது ரெனோவின் குறைந்த விலை கார்களுக்கான பிராண்ட்! டேசியாவின் லோகன்தான் நம்மூர் ரெனோ லோகன். இது தன்னுடைய புதிய லோகன் காரை பாரீஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது. இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமான லோகன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. பழைய லோகனுக்கும் புதிய லோகனுக்கும் நிறைய வேறுபாடுகள். உள்ளேயும் வெளியேயும் ஏராளமான மாற்றங்கள் தெரிகின்றன. புதிய லோகனில் 0.9 லிட்டர் டர்போ பெட்ரோல் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ரெனோவில் இருந்து பெறப்பட்ட இந்த இன்ஜின் 88 bhp சக்தியை அளிக்கிறது. புதிய லோகனை நம் நாட்டில் அறிமுகப்படுத்த ரெனோவிடம் எந்தத் திட்டமும் இல்லை!  

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

அடுத்த ஆண்டு நம் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், பாரீஸ் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருப்பதால், பாரீஸில் ஈக்கோஸ்போர்ட் சிறப்பு கவனம் பெற்றது. இந்த காரிலும் ஃபோர்டின் பிரபலமான 1 லிட்டர் ஈக்கோபூஸ்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 'சின்க்-இன் வாய்ஸ் ஆக்டிவேஷன்’ டெக்னாலஜி ஈக்கோஸ்போர்ட்டில் இருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஏற்கெனவே பிரேசிலில் செம ஹாட்டாக விற்பனையாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் ஆட்டோ ஷோ

ஃபோர்டு மாண்டியோ

ஃபோர்டு மாண்டியோவை ஞாபகம் இருக்கிறதா? ஃபோர்டு தன்னுடைய கைனடிக் டிசைனில் பழைய மாண்டியோவை முக்கியெடுத்து செம ஸ்டைலிஷாக புதிய மாண்டியோவைக் களமிறக்கி இருக்கிறது. 1 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடனும், 1.6 லிட்டர் ஈக்கோனெட்டிக் டெக்னாலஜி கொண்ட டீசல் இன்ஜினுடனும் களம் இறக்குகிறது. மாண்டியோவின் மாடல்களில் முதன்முறையாக ஹைபிரிட் மாடலும் வர இருக்கிறது. இதற்கு 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 35 கிலோ வாட் லித்தியம் - ஐயான் பேட்டரி இணைந்து 88 bhp அளிக்கிறது.

பாரீஸ் ஆட்டோ ஷோ

ஜாகுவார் எஃப்-டைப்

ஜாகுவார் எஃப்-டைப்தான் பாரீஸ் ஆட்டோ ஷோவின் சூப்பர் ஸ்டார். சி-எக்ஸ் 16 என்ற கான்செப்ட்தான் எஃப் மாடலின் அடிப்படை! இந்த ஸ்போர்ட்ஸ் காரில் முடிந்தவரை எடையைக் குறைக்க சேஸியும், பாடியும் அலுமினியத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மூன்று வேரியன்ட்டுகளில் வருகிறது. அவை எஃப்-டைப், எஃப்-டைப் எஸ், எஃப்-டைப் வி-8 எஸ். முதல் இரண்டு வேரியன்ட்டுகளில் சூப்பர் சார்ஜ்டு 3 லிட்டர் வி-6 இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. எஃப்-டைப் வி-8 எஸ் மாடலில் சக்தி வாய்ந்த 5 லிட்டர் வி-8 இன்ஜின் கொண்டது. இது 488 bhp சக்தியை அளிக்கும். ஜாகுவார் எஃப் மாடல் நமக்கு மிகவும் நெருக்கமான கார். காரணம், இந்த எஃப் மாடல் ரத்தன் டாடாவின் மேற்பார்வையில் வளர்ந்த கார்!  

ஃபெராரி எஃப்-70 சேஸி

ஃபெராரி தயார் செய்த கார்களிலேயே மிகப் பிரபலமானது ஃபெராரி என்ஸோ. வெறும் 400 கார்களையே தயார் செய்தது ஃபெராரி. உற்பத்தி செய்யப்பட்ட அதே வேகத்தில் அத்தனை கார்களும்  விற்றுத் தீர்ந்துவிட்டன. என்ஸோவுக்குப் பிறகு அப்படி ஒரு கார் வரவில்லை என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைக்க வருகிறது ஃபெராரியின் எஃப்-70. பாரீஸ் ஆட்டோ ஷோவில் வெறும் எஃப்-70 சேஸியை மட்டுமே காண்பித்தது ஃபெராரி. இதன் சேஸியே ஸ்பெஷல்தான். ஃபெராரியின் எஃப்-1 அணியான ஸ்குடரியாவின் உதவியுடன் நான்கு விதமான கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டது இந்த சேஸி. இதில், ஃபெராரியின் ஹை-ப்ரிட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வி-12 இன்ஜினுடன் பேட்டரி பேக்கும் இணைந்துள்ளது. இதனால், இதன் சக்தி 1000 bhp ஐத் தாண்டும். ஃபெராரி எஃப்-70, 2013-ம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தப்படும்.

பாரீஸ் ஆட்டோ ஷோ

மெக்லாரன் பி-1

மெக்லாரனின் அடுத்த எஃப்-1 கார்தான் மெக்லாரன் பி-1. 'ஓட்டுதலுக்குச் சிறந்த கார்  என்ற பெயர் எடுப்பதுதான் எங்கள் நோக்கம்’ எனக் கூறுகிறது மெக்லாரன். மெக்லாரன் பி-1 வடிவமைப்பு இயக்குனர் ஃப்ராங்க் ஸ்டீபன்சன், ஏற்கெனவே ஃபியட் 500, ஃபெராரி எஃப் 430 போன்ற பிரபல கார்களை வடிவமைத்தவர். இது வெறும் கான்செப்ட்தான். கான்செப்டே கண்ணக் கட்டுதே!

பாரீஸ் ஆட்டோ ஷோ

சுஸுகி எஸ்-க்ராஸ்

சுஸுகி எஸ்-க்ராஸ் கான்செப்ட் நமக்கு ஏன் முக்கியம் என்றால், இதை அடிப்படையாக வைத்தே அடுத்த தலைமுறை சுஸுகி எஸ்எக்ஸ்-4 தயாரிக்கப்படும். ஏற்கெனவே பலமுறை வெளிநாடுகளில் புதிய எஸ்எக்ஸ்-4 டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இது 2013-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ராஜா ராமமூர்த்தி