Published:Updated:

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

Published:Updated:
ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்
 ##~##

சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் காரை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. சென்னையின் புதிய ஹோட்டலான லீலா பேலஸில் நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்ததும், அரங்கத்தில் அரங்கேறிய காரை நம்மிடம் டெஸ்ட் செய்யச் சொல்லிக் கொடுத்தது மஹிந்திரா. கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், கடற்பரப்பிலும் அதிரவிட்டு டெஸ்ட் செய்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கொரியாவின் ஸாங்யாங் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிவிட்ட மஹிந்திரா நிறுவனம், ஸாங்யாங் பெயரிலேயே முதல் காராக ரெக்ஸ்ட்டனை விற்பனைக்குக் கொண்டுவந்து இருக்கிறது. புனேவில் உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலையில் கொரியாவில் இருந்து காரின் பாகங்கள் வந்திறங்க... அங்கே முழு காராக உருவாகிறது ரெக்ஸ்ட்டன்.

ரெக்ஸ்ட்டன் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, இதன் போட்டியாளரான ஃபார்ச்சூனர் பற்றிப் பார்ப்போம்.

ரெக்ஸ்ட்டன் நேரடியாக டொயோட்டா ஃபார்ச்சூனருடன் போட்டி போடும் கார். 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஃபார்ச்சூனரை விற்பனை செய்ய டொயோட்டா அதிகம் மெனக்கெடவில்லை. காரணம், வெயிட்டிங் பீரியட்! ஆறு மாதங்கள் வரை காத்திருந்து ஃபார்ச்சூனரை வாங்குபவர்களின் எண்ணிக்கை இன்றுவரை குறையவில்லை. மிரட்டலான தோற்றம், வலிமை வாய்ந்த இன்ஜின் மற்றும் டொயோட்டாவின் அசைக்க முடியாத நம்பகத்தன்மை என எஸ்யூவி கார்களில் நம்பர் ஒன்னாக இருக்கிறது ஃபார்ச்சூனர்.

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

காடு மேடுகளில் எல்லாம் ஓட்ட வேண்டாம். போதுமான பெர்ஃபாமென்ஸ், நகருக்குள் நெரிசல் இல்லாமல் ஓட்டுவதற்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்தால் போதும் என்பவர்களுக்காக, இந்த ஆண்டு 2-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது டொயோட்டா.

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

உண்மையைச் சொல்லப் போனால், இதுவரை ஃபார்ச்சூனருக்குப் பெரிய போட்டியே இல்லை. ஃபோர்டு எண்டேவரின் தோற்றம் ரொம்பவும் பழசாகிவிட்டது. எனவே, எண்டேவர் மக்களின் மனதில் இருந்து போய் நீண்ட காலம் ஆகி விட்டது.

ஃபார்ச்சூனருக்குச் சரியான போட்டி ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன். எஸ்யூவி மார்க்கெட்டில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்களைவிட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களுக்கான மவுசுதான் இப்போது அதிகம். அதனால், இரண்டு கார்களிலுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்கள் உண்டு. விலை குறைவு என்பதோடு, பல புதிய சிறப்பம்சங்களோடும் வந்திருக்கிறது ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன். உண்மையிலேயே ஃபார்ச்சூனரை ஓரங்கட்டுமா ரெக்ஸ்ட்டன்?

ஸ்டைல்...

ஸாங்யாங் என கூகுளில் அடித்துப் பார்த்தால், கண்களை உறுத்தும் எஸ்யூவி கார்கள் திரையில் வந்துவிழும். அந்த எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது, புதிய ரெக்ஸ்ட்டன் காரின் தோற்றம் உண்மையிலேயே ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பெரிய க்ரோம் கிரில், பானெட்டில் அழகாகப் பதிந்திருக்கும் ஹெட்லைட்ஸ், வழக்கத்தைவிட பெரிய இண்டிகேட்டர் விளக்குகள், அதனுடன் இணைந்த பனி விளக்குகள் என கண்களை உறுத்தாத வகையில் ரெக்ஸ்ட்டன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இது ஃபார்ச்சூனரைவிட மிரட்டலான தோற்றம் கொண்ட எஸ்யூவியாக இல்லாமல், கார் போன்று சாஃப்ட்டாக இருக்கிறது!

ஃபார்ச்சூனர் போலவே ரெக்ஸ்ட்டனிலும் காருக்கு அடியில்தான் ஸ்பேர் வீல் இருக்கிறது. பின் பக்கம் ஸ்பேர் வீல் இல்லாதது, தோற்றத்துக்கு நன்றாக இருந்தாலும் பஞ்சரானால், காருக்கு அடியில் இருந்து ஸ்பேர் வீலை எடுப்பதற்குள் மூச்சு வாங்கிவிடும்.

சென்னையின் மேடு பள்ளங்கள், ஸ்பீடு பிரேக்கர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ரெக்ஸ்ட்டனில் பறக்கலாம். காரணம், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் தான். டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட (220மிமீ) ரெக்ஸ்ட்டனின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 32 மிமீ (252மிமீ) அதிகம். மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றாலும், காருக்கு உள்ளே ஏறி இறங்க வயதானவர்கள் சிரமப்படுவார்கள்.  

நீள அகல உயர அளவுகளைப் பொறுத்தவரை, பார்ச்சூனரைவிட ரெக்ஸ்ட்டன் காரின் அகலம் அதிகம். அதனால், உங்கள் வீட்டில் இருக்கும் பார்க்கிங் இடத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், ஃபார்ச்சூனரைவிட ரெக்ஸ்ட்டனின் எடை 101 கிலோ அதிகம்!

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

உள்பக்கம்...

டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட ஸாங்யாங் ரெக்ஸ்ட்டனின் உள்பக்கம் மெத் மெத்தென இருக்கிறது. டொயோட்டா இனோவாவில் இருக்கும் அதே டேஷ் போர்டையே ஃபார்ச்சூனரில் பொருத்தி இருப்பதால், 26 லட்ச ரூபாய்க்கு ஏற்றதாக இல்லை ஃபார்ச்சூனர். ரெக்ஸ்ட்டனில் இருக்கும் ஈஸி ஆக்ஸஸ் பட்டனைத் தட்டினால், ஸ்டீயரிங் வீலும், சீட்டும் விலகிச் சென்று சீட்டில் வசதியாக ஏறி உட்கார வழி செய்கிறது. டேஷ் போர்டு உறுத்தலாக இல்லை என்றாலும், அசரடிக்கும் வகையில் இல்லை. ரெக்ஸ்ட்டனில் இருக்கும் சிறிய திரை ஏதோ லோக்கல் மார்க்கெட்டில் வாங்கிப் பொருத்தியது போல காரோடு பொருந்தாமல் இருக்கிறது. ரெக்ஸ்ட்டனின் நடுவரிசை இருக்கைகள் வசதியாகவும், சொகுசாகவும் இருக்கின்றன. ஆனால், சீட் உயரம் குறைவாக இருப்பதால், வெளியே வேடிக்கை பார்க்க வசதியாக இல்லை.

ரெக்ஸ்ட்டனின் மூன்றாவது வரிசை இருக்கைகள் செம காமெடி. 'இருக்கு... ஆனா இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றாவது இருக்கையை ஃப்ளாட்டாக தரையிலேயே வைத்திருப்பதோடு, சீட்டுக்கு முன்னாலும் இடம் இல்லை, சீட்டைப் பின் பக்கம் தள்ளவும் வழி இல்லை. மூன்றாவது வரிசையில் உட்காருபவர்களுக்கு ஹெட் ரெஸ்ட்டும் இல்லை. குழந்தைகள்கூட இந்த இருக்கையில் வசதியாக உட்கார முடியாது. மூன்று வரிசையிலும் ஆட்கள் உட்கார்ந்துவிட்டால், பொருட்கள் வைக்க சுத்தமாக இடம் கிடையாது.

ஸ்டீயரிங் வீல், பிளாஸ்ட்டிக் ஃபினிஷிங்கில் இருப்பது சிலருக்கு நிச்சயம் பிடிக்காது.

ஃபார்ச்சூனருடன் ஒப்பிடும்போது ரெக்ஸ்ட்டனின் பலம் சிறப்பம்சங்கள்தான். ஜிபிஎஸ், சீட் பொசிஷன் மெமரி, சன் ரூஃப், கியர் லீவரிலேயே கியர் ஷிஃப்ட் பட்டன் (ஆட்டோமேட்டிக் மாடலில் மேனுவலில் ஓட்டுவது போன்று), கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, எட்டு விதங்களில் சீட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, ப்ளூ-டூத் என ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா, ட்ரிப் கம்ப்யூட்டர் மட்டுமே ஃபார்ச்சூனரில் இருக்கும் சிறப்பம்சங்கள். ரெக்ஸ்ட்டனில் ரிவர்ஸ் கேமராவுக்குப் பதில் ரிவர்ஸ் அலாரம் உள்ளது. பொருட்கள் அருகே வரும்போது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.

பெர்ஃபாமென்ஸ்

ரெக்ஸ்ட்டனை ஐந்து நிமிடங்கள் ஓட்டினால் போதும்; காரின் பெர்ஃபாமென்ஸ் எப்படி என்பது புரிந்துவிடும். மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2.7 லிட்டர் டீசல் இன்ஜின்தான் ரெக்ஸ்ட்டனில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக 184bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட ரெக்ஸ்ட்டனின் ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தால், பெர்ஃபாமென்ஸ் ஏமாற்றுகிறது. ஆக்ஸிலரேட்டரை அழுத்தி மிதித்த பிறகு வேகம் எடுத்தாலும், கியர்கள் மாற நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதோடு, சீக்கிரத்திலேயே வேகம் தீர்ந்து போய் விடுகிறது.

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

ஆக்ஸிலரேட்டரை மிதித்து 2-3 விநாடிகள் கழித்துத்தான் இன்ஜின் வேகம் எடுப்பதால், டிராஃபிக் சிக்னலில் இருந்து புறப்படும் போது நீங்கள் யாருடனும் போட்டி போட முடியாது. அதே சமயம், ஆக்ஸிலரேட்டரை மிதித்துக் கொண்டே இருக்கும்போது, திடீரென எக்ஸ்ட்ரா பவர் வந்து பயமுறுத்துவதால், எந்த நேரமும் பிரேக்கில் கால் வைக்க உஷாராக இருக்க வேண்டும்.

கியர் லீவரை மேனுவல் மோடில் வைத்துவிட்டு, லீவரில் இருக்கும் பட்டன்கள் மூலம் முதல் கியர், இரண்டாவது கியர் மாற்றி ஓட்டினால், கார் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், வேகம் இல்லை. 0 - 100 கி.மீ வேகத்தை 10.63 விநாடிகளில் கடக்கிறது ரெக்ஸ்ட்டன். ஃபார்ச்சூனருடன் ஒப்பிடும் போது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே இருந்தாலும், ரெக்ஸ்ட்டனைவிட பெர்ஃபாமென்ஸில் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ரெக்ஸ்ட்டனைவிட ஃபார்ச்சூனரின் டார்க் வலிமை குறைவு என்பதால், 0 - 100 கி.மீ வேகத்தைக் கடக்க ரெக்ஸ்ட்டனை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டனில் இன்ஜின் சத்தம் அதிகம். ஆனால், ஃபார்ச்சூனரைவிட சத்தம் குறைவாகவே கேட்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டனின் வீக்னஸ் அதிகமாகத் தென்படும் ஏரியா இதுதான்! சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்டிங் கொண்டிருப்பதால், சின்ன மேடு பள்ளங்களில் அலுங்கல், குலுங்கல் இல்லாமல் ஏறி இறங்குகிறது. ஃபார்ச்சூனரைவிடப் பரவாயில்லை. ஆனால், வேகமாகப் போக ஆரம்பித்தால், ரெக்ஸ்ட்டன் ஏறிக் குதிக்கிறது. அதேபோல், வேகமாகச் சென்று பிரேக் அடிக்கும்போது ஸ்டெபிளிட்டி சிறப்பாக இல்லை. பிரேக்ஸ் மிகவும் வீக்காக இருக்கிறது. வளைத்து நெளித்து ஓட்டுவதற்கும் சிறந்த காராக இல்லை ரெக்ஸ்ட்டன். பார்ச்சூனர்தான் இந்த ஏரியாவில் பெஸ்ட்!

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

மைலேஜ்

ஃபார்ச்சூனர் நகருக்குள் லிட்டருக்கு 7.8 கிமீ-யும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 12.7 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. மாறாக, எடை அதிகமான ரெக்ஸ்ட்டன், நகருக்குள் 7.2 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 11.8 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது!

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்
ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்

நகர டிராஃபிக் நெருக்கடிகளுக்குள் பதற்றம் இல்லாமல் பயணிக்க, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட எஸ்யூவியைத் தேடுபவர்கள் ரெக்ஸ்ட்டனை சாய்ஸில் வைக்கலாம். அதிக சிறப்பம்சங்கள், சொகுசான முன் மற்றும் நடுவரிசை இருக்கைகளோடு 4-வீல் டிரைவ் ஆப்ஷனும் இருக்கிறது. ஃபார்ச்சூனருடன் ஒப்பிடும்போது 2.60 லட்சம் குறைவு என்பது மிகப் பெரிய ப்ளஸ். மேலும், அதிக சிறப்பம்சங்களும் இருப்பதால், ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் நல்ல சாய்ஸ் போன்று தோன்றலாம். ஆனால், மிரட்டலான தோற்றம், நகரம் - நெடுஞ்சாலை என இரண்டுவிதமான சாலைகளிலும் பயணிக்கப் போதுமான பெர்ஃபாமென்ஸோடு பாதுகாப்பான காராகவும் இருக்கிறது ஃபார்ச்சூனர்.

விலை குறைவான எஸ்யூவி வேண்டும் என்று விரும்பினால், ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் வாங்கலாம்!

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன்