Published:Updated:

சாம்பியன் லாரன்சோ!

சாம்பியன் லாரன்சோ!

சாம்பியன் லாரன்சோ!

சாம்பியன் லாரன்சோ!

Published:Updated:
 ##~##

மோட்டோ ஜீபி சாம்பியனாக, இரண்டாவது முறையாகப் பட்டம் வென்றுவிட்டார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ! இந்த ஆண்டுடன் மோட்டோ ஜீபியில் இருந்து ஓய்வு பெறுவதாக கேஸி ஸ்டோனர் அறிவிக்க, 'லாரன்சோவா, ஸ்டோனரா - யார் வெற்றி பெறுவார்கள்’ என்கிற பரபரப்பு எகிறியது. கேஸி ஸ்டோனர் விபத்தின் காரணமாக சில ரேஸ்களில் பங்கேற்க முடியாமல் போனாலும், லாரன்சோவுக்கு ஹோண்டாவின் மற்றொரு வீரரான டேனி பெட்ரோஸா கடுமையான போட்டியை ஏற்படுத்தினார். இருப்பினும், தனது அசுர வேகத்தைப் பயன்படுத்தி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயின் வீரர் லாரன்சோ.

 மலேசியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டோ ஜீபியின் 16-வது சுற்று, மலேசியாவின் செப்பாங் ரேஸ் மைதானத்தில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்த ரேஸ் டிராக்கில்தான், மார்க்கோ சைமன்செல்லி, ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். இந்த ஆண்டு, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிட‌க் கூடாது என வீரர்களைவிட ரசிகர்கள் அதிகம் வேண்டிக்கொண்டு இருந்தனர்.  

சாம்பியன் லாரன்சோ!

ஆனால், விபத்து நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்ற சூழ்நிலையில்தான் ரேஸ் துவங்கியது. காரணம், மலேசியாவில் பெய்த பயங்கர மழை. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற ஜார்ஜ் லாரன்சோ முதல் இடத்தில் இருந்தும், டேனி பெட்ரோஸா இரண்டாவது இடத்தில் இருந்தும், ஆன்ட்ரி டொவியிஸோஸோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

ரேஸ் டிராக் ஈரமாகவும், தொடர்ந்து மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டு இருந்ததால், லாரன்சோ ஈஸியாக வெற்றி பெற்றுவிடுவார் என்றே எதிர்பார்த்தனர். காரணம், ஈரமான ரேஸ் டிராக்கில் இதுவரை தனது ரேஸ் வரலாற்றில் டேனி பெட்ரோஸா வெற்றி பெற்றதே இல்லை. ஆனால், ரேஸில் கடுமையான சவாலை ஏற்படுத்தினார் டேனி பெட்ரோஸா. கடைசியாக நடைபெற்ற ஐந்து ரேஸ்களில் டேனி பெட்ரோஸா வெற்றி பெற்று இருந்ததால், லாரன்சோவும் உதறலுடனேயே ரேஸை ஆரம்பித்தார்.

சாம்பியன் லாரன்சோ!

முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஜார்ஜ் லாரன்சோ, தொடர்ந்து முன்னிலையில் இருக்க... அவரைப் பின் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தார் பெட்ரோஸா. இதற்கிடையே மைதானத்தின் ஈரத்தால் விபத்துகள் அரங்கேற ஆரம்பித்தன. மான்ஸ்ட்டர் யமஹா அணியின் கால் க்ரட்ச்லோ, ஆன்ட்ரி டொவிஸியோஸோ, ஸ்டீஃபன் பிராடில், ரான்டி, இவான் சில்வா, பென் ஸ்பீஸ் ஆகிய ஆறு ரேஸ் வீரர்கள் விபத்துகளில் சிக்கி ரேஸைவிட்டு வெளியேறினர்.

டொவிஸியோஸோ  ரேஸைவிட்டு வெளியேறியதால், நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் கேஸி ஸ்டோனர். இதற்கிடையே பத்தாவது லேப்பின்போது முதல் இடத்தில் இருந்த லாரன்சோவை லாவகமாக முந்தினார் பெட்ரோஸா. தொடர்ந்து எவ்வளவோ முயன்றும் லாரன்சோவால் பெட்ரோஸாவை முந்த முடியவில்லை. பலத்த மழையும் தொடர, பைக்கின் வேகத்தைக் கூட்டுவது ஆபத்து என்பதை உணர்ந்தார் லாரன்சோ. 'ரேஸைத் தொடர்வது ஆபத்து’ என சிவப்புக் கொடி காட்டப்பட்டு 13-வது லேப்பிலேயே ரேஸ் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரம் கழித்தும் மழை நிற்கவில்லை என்பதால், முதல் இடத்தில் இருந்த பெட்ரோஸா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முழுமையாக 25 புள்ளிகளுமே அவருக்கு வழங்கப்பட்டது. லாரன்சோ இரண்டாம் இடமும், ஸ்டோனர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

சாம்பியன் லாரன்சோ!

இந்த வெற்றியின் மூலம் கடைசியாக நடந்த ஆறு ரேஸ்களில், ஐந்து ரேஸ்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் பெட்ரோஸா. சாம்பியன்ஷிப் பட்டியலில் லாரன்சோவுக்கும், பெட்ரோஸாவுக்குமான இடைவெளியும் குறைந்தது. வெறும் 23 புள்ளிகள் முன்னிலையில் இருந்தார் லாரன்சோ. இதனால், அடுத்த ரேஸான ஆஸ்திரேலிய ரேஸ் முடிவு தெரியும் ரேஸாக இருக்கும் என பரபரப்பு கூடியது.

ஆஸ்திரேலியா

மோட்டோ ஜீபியின் 17-வது சுற்று, அக்டோபர் 28-ம் தேதி ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய வீரரான கேஸி ஸ்டோனருக்கு, இது ஆஸ்திரேலியாவில் நடக்கும் கடைசிப் போட்டி என்பதால், ஸ்டோனர் ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். லாரன்சோ, பெட்ரோஸா, ஸ்டோனர் என மும்முனைப் போட்டி நிலவியது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில், தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தார் கேஸி ஸ்டோனர். தகுதிச் சுற்றில் விபத்தில் சிக்கி, பிறகு வேறு பைக்கை மாற்றிக் கொண்டு வந்து மீண்டும் ரேஸ் ஓட்டி தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தார் ஸ்டோனர். லாரன்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்க... பரபரப்பு கூடியது.

சாம்பியன் லாரன்சோ!

ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே ஸ்டோனரை முந்திச் சென்றார் டேனி பெட்ரோஸா. இதனால், லாரன்சோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதனால், தொடர்ந்து நான்காவது முறையாக பெட்ரோஸா வெற்றி பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவ... இரண்டாவது லேப்பில் விபத்தில் சிக்கினார் பெட்ரோஸா. வளைவில் திரும்பும் போது பைக் கட்டுப்பாட்டை இழக்க... ரேஸ் டிராக்கில் பெட்ரோஸா, அவரது ஹோண்டா பைக்குடன் உருண்டு புரண்டார். இந்த விபத்தினால் ரேஸை விட்டு வெளியேறினார் பெட்ரோஸா. நிம்மதியானார் லாரன்சோ. 'இந்த ரேஸில் வெறும் 3 புள்ளிகள் பெற்றாலே போதும்; சாம்பியன் பட்டம் நமக்குத்தான்’ என்கிற தெம்புடன் ரேஸ் ஓட்ட ஆரம்பித்தார் லாரன்சோ.

இதனால் முதல் இடத்தில் சென்றுகொண்டு இருந்த ஸ்டோனருக்கு அவர் போட்டியை ஏற்படுத்தவில்லை. விபத்தில் சிக்காமல் ரேஸ் ஓட்டி முடித்தாலே சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்பதால், மிகவும் கவனத்துடன் ரேஸ் ஓட்டினார் லாரன்சோ. இறுதியில் தனது சொந்த மண்ணில் வெற்றியுடன் விடைபெற்றார் கேஸி ஸ்டோனர். மேலும், ஆஸ்திரேலிய ரேஸில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்று சாதனை  படைத்தார் ஸ்டோனர். லாரன்சோ இரண்டாம் இடமும், மான்ஸ்ட்டர் யமஹாவின் கால் க்ரட்ச்லோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.

இரண்டாம் இடம் பிடித்தாலும், சாம்பியன்ஷிப் பட்டியலில் 350 புள்ளிகள் பெற்ற லாரன்சோ 2012-ம் ஆண்டின் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட் டது. அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த பெட்ரோஸா 307 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்ததால், இறுதி ரேஸான வாலன்சியா ரேஸில் வெற்றி பெற்றாலும், லாரன்சோவை முந்த முடியாது என்கிற சூழ்நிலையில், மிகவும் நொந்து போனார் பெட்ரோஸா.

சாம்பியன் பட்டம் வென்ற லாரன்சோ, இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ரேஸ் வரை நடைபெற்ற 17 ரேஸ்களில், ஒரே ஒரு ரேஸில், அதாவது நெதர்லாந்து ரேஸில் விபத்தில் சிக்கி ரேஸைவிட்டு வெளியேறினார். மற்ற 16 ரேஸ்களிலும் மாறி மாறி முதல் இரண்டு இடங்களையே பிடித்துவந்தார் லாரன்சோ.

ஆஸ்திரேலிய ரேஸிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றுவிடுவோம் என்று சற்றும் எதிர்பார்க்காத லாரன்சோ, யமஹா இருவருமே சாம்பியன்ஷிப் வெற்றியைக் கொண்டாட முன் ஏற்பாடுடன் வரவில்லை. இதனால், பைக்கில் ஸ்டன்ட் செய்து, துள்ளிக் குதித்து, ஷாம்பெய்ன் பாட்டிலைக் குலுக்கி வெற்றியைக் கொண்டாடினார் லாரன்சோ.

சாம்பியன் லாரன்சோ!

வாலன்சியா

மோட்டோ ஜீபி ரேஸ் பந்தயத்தின் கடைசி சுற்று, ஸ்பெயினின் வாலன்சியா நகரில் நவம்பர் 11-ம் தேதி நடந்தது. இந்த ஆண்டின் கடைசி ரேஸ் என்பதோடு, ஓய்வை அறிவித்திருக்கும் 2011-ம் ஆண்டின் சாம்பியன் கேஸி ஸ்டோனருக்கு இதுதான் கடைசி ரேஸ். யமஹாவுக்குத் தாவியிருக்கும் வாலன்டினோ ராஸிக்கு, டுகாட்டி அணியில் இதுதான் கடைசி ரேஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசி ரேஸ் என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும் ஸ்பெயினில் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டே இருந்ததால், ரேஸ் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இறுதியில் மழை விடை கொடுக்க, ரேஸ் நடந்தது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார் ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா. ஜார்ஜ் லாரன்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், ஸ்டோனர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

சாம்பியன் லாரன்சோ!

மைதானம் ஈரமாக இருந்ததால் பெட்ரோஸா, ஸ்டோனர், ராஸி உள்ளிட்ட வீரர்கள் 'வெட்’ டயர்களுடன் களம் இறங்க... சாம்பியன் லாரன்சோ மட்டும் 'ஸ்லிக்' டயர்களுடன் களம் இறங்கினார். யாருமே எதிர்பார்க்காத நிலையில் தனியார் அணியின் அலிக்ஸ் அஸ்பார்கரோ எனும் புதிய ரேஸ் வீரர் முதல் இடத்துக்கு முன்னேறினார். முதல் இரண்டு லேப்புகள் அவர் முன்னிலையில் இருக்க... மூன்றாவது லேப்பில் டொவிஸியோஸோ முதல் இடம் பிடித்தார். நான்காவது லேப்பின்போது தனது புயல் வேகத்தைக் காட்டி லாரன்சோ முதல் இடத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து ஸ்லிக் டயர்களுடனேயே ரேஸ் ஓட்டிய லாரன்சோவை விபத்து துரத்தியது.

கடைசி இடத்தில் சென்று கொண்டிருந்த தனியார் அணி வீரரை வேகமாக முந்தப் பார்த்த லாரன்சோவின் பைக், கட்டுப்பாட்டை இழந்தது. பைக்கில் இருந்து பறந்து அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்தார் லாரன்சோ. உடனடியாக ரேஸைவிட்டு வெளியேற்றப்பட்ட லாரன்சோ, பெரிய காயம் இல்லாமல் தப்பித்ததே அதிர்ஷ்டம்! லாரன்சோ வெளியேற, பெட்ரோஸா எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆண்டு கடைசியாக நடந்த எட்டு ரேஸ் போட்டிகளில், ஆறு ரேஸ் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளார் பெட்ரோஸா. இடையில் இரண்டு ரேஸ் போட்டிகளில் விபத்தில் சிக்கி வெளியேறினாரே தவிர, தோல்வியைத் தழுவவில்லை. யமஹா அணியின் கட்சுவாகி நகஸாகி இரண்டாம் இடம் பிடிக்க, இறுதி ரேஸில் மூன்றாம் இடம் பிடித்தார் ஸ்டோனர்.

அடுத்த ஆண்டு கேஸி ஸ்டோனர் இல்லை. பெட்ரோஸா தொடர்ந்து ஹோண்டாவில் இருப்பார் என்றாலும், அடுத்த ஆண்டு மீண்டும் வாலன்டினோ ராஸி, ஜார்ஜ் லாரன்சோ இருவருக்கும்தான் போட்டி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே யமஹா அணி என்பதால், ரேஸ் வீரரின் திறமையைப் பொருத்தே வெற்றி இருக்கிறது.

அடுத்து, த்ரில்லிங்கான ராஸி  - லாரன்சோ யுத்தத்துக்குக் காத்திருங்கள்!

- சுரேன்