Published:Updated:

பாஷ் நேவிகேஷன் சிஸ்டம்!

எங்கேயும்... எப்போதும்!

பாஷ் நேவிகேஷன் சிஸ்டம்!

எங்கேயும்... எப்போதும்!

Published:Updated:
 ##~##

சாலையில் செல்லும் ஏதாவது ஒரு ஆட்டோமொபைல் வாகனத்தை எடுத்துக் கொண்டால், அதில் நிச்சயமாக பாஷ் நிறுவனத்தின் தயாரிப்பு இடம் பெற்று இருக்கும். ஆட்டோமொபைல் சார்ந்த தொழில்நுட்ப உதிரி பாகங்கள் தயாரிப்பில், உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் இந்த பாஷ். தற்போது புதிதாக நேவிகேஷன் சாதன தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. 'மார்க்கெட்டில் ஏற்கெனவே ஏராளமான பிராண்டுகள் இருக்கின்றன. செல்போனில்கூட நேவிகேஷன் வந்துவிட்டது. இப்போது இதை பாஷ் தயாரித்து என்ன உபயோகம்...’ எனக் கேட்கத் தோன்றும். 

ஆம், நமக்கும் அப்படித்தான் தோன்றியது. இதே கேள்வியை பாஷ் நிறுவனத்திடம் முன்வைத்தபோது, ''பெங்களூருவில் இருக்கும் ராபர்ட் பாஷ் இன்ஜினீயரிங் அண்டு பிசினஸ் சொல்யூஷன் நிறுவனத்துக்கு வந்து, அந்த சாதனத்தை வைத்து டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்!'' என்றனர். மார்க்கெட்டில் ஏற்கெனவே உள்ள இந்த சாதனங்களில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் முக்கியமான குறைபாடு என்றால், அதிலுள்ள மேப். கூகுள் மற்றும் தனியார் மேப் நிறுவனங்களின் துணையோடு விற்பனையாகும் இவற்றில், முழுமையான திருப்தி கிடைக்கவில்லை என்பது வாடிக்கையாளர்களின் புகார். எனவே, பெங்களூரு போன்ற போக்குவரத்து நெருக்கடி, சிக்கலான ஒன் வே சாலைகள் நிரம்பிய நகரத்தில், டெஸ்ட் டிரைவ் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதால், உடனே புறப்பட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாஷ் நேவிகேஷன் சிஸ்டம்!
பாஷ் நேவிகேஷன் சிஸ்டம்!

பெங்களூரு பாஷ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் பொது மேலாளர் ஷிரிஸ் பச்சு, ஸ்கோடா லாரா காரில் தற்காலிகமாகப் பொருத்தப்பட்டு இருந்த நேவிகேஷன் சாதனத்தை, நம்மிடம் இயக்கிக் காட்டி விளக்கினார்.

''ஏற்கெனவே மார்க்கெட்டில் இருப்பவற்றில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான பிரச்னை இருக்கின்றன. ஆனால், நாங்கள் உருவாக்கியுள்ள இந்தப் புதிய சாதனத்தில், நீங்கள் குறை என எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், எல்லா பிரச்னைகளையும் களைந்து, பயன்படுத்த எளிதாகவும், சுலபமாகவும் இருக்க வேண்டும் என்பதால், மிகக் கவனமாக இந்தச் சாதனத்தை உருவாக்கி உள்ளோம். வெறும் நேவிகேஷனுக்கு மட்டுமே இதை உருவாக்கவில்லை. இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆடியோ சிஸ்டத்தில் என்னென்ன வசதிகள் உண்டோ, அவை அத்தனையும் இதில் இருக்கிறது. மேலும், பல புதிய வசதிகளையும் இதில் புதிதாக இணைத்துள்ளோம்.

இதில், ரேடியோ மற்றும் சிடி, செல்போன், ஐ-பாட், சிப், பென் டிரைவ், ஆக்ஸ் என அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும், காரில் ரிவர்ஸ் கேமரா, ரிவர்ஸ் சென்ஸார் போன்றவற்றையும் இதில் இணைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல், இது ஒரு டச் ஸ்கிரீனும்கூட! மொத்தத்தில் பாஷ் நிறுவனத்தின் இந்தத் தயாரிப்பு, உங்களுக்கு முற்றிலும் ஓர் புதிய அனுபவத்தைத் தரும். உதாரணத்துக்கு, எஃப்எம் ரேடியோ இன்று எல்லா நகரங்களிலும் பிரபலமாக இருக்கிறது. காரில் பயணிக்கும் போது இதைத் தெளிவாகக் கேட்பதில் சில குறைபாடுகள் உண்டு. அதைச் சுத்தமாக இதில் களைந்துள்ளோம். எந்த நகரத்துக்குச் சென்றாலும் அங்குள்ள ரேடியோ ஸ்டேஷனை சர்ச் செய்து பட்டியல் காட்டும். ப்ளூடூத் மூலம் போனை இணைத்துவிட்டால், நீங்கள் போனில் செய்யும் எல்லா விஷயங்களையும் இதில் செய்ய முடியும். அதேபோல், இசையின் துல்லியமான தரத்தை இதில் உணர முடியும். பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக டச் ஸ்கிரீன் மட்டுமல்லாது, திருகுகளையும் கொடுத்துள்ளோம். இது பயணத்தின் போது உபயோகப்படுத்த வசதியாக இருக்கும்.

பாஷ் நேவிகேஷன் சிஸ்டம்!

இந்தியாவில் இருக்கும் கிராம - நகரச் சாலைகள், முக்கியமான இடங்கள், பெட்ரோல் பங்க்குகள், பிரபலமான கடைகள், சாலை சந்திப்புகள் என கிட்டத்தட்ட அனைத்தையும் இதில் இருக்கும் நேவிகேஷன் சிஸ்டத்தில் இணைத்துவிட்டோம். புதிதாக உருவாகும் ஒன் வே, இணைப்புச் சாலைகள் போன்றவற்றை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்வது என திட்டமிட்டு இருக்கிறோம். எனவே, வாடிக்கையாளர்களுக்கு இதில் குறை என்று சொல்ல எதுவுமே இருக்காது'' என்றவரிடம், ''டெஸ்ட் டிரைவ் செய்துவிடுவோமா?'' எனக் கேட்கவும், புறப்படத் தயாரானர்.

பெங்களூருவில் உள்ள கோரமங்களா எனும் இடத்தில் இருக்கும் பாஷ் நிறுவனத்தில் இருந்து மெக்டொனால்ட்ஸ் என தட்ட... பெங்களூருவில் இருக்கும் அத்தனை மெக்டொனால்ட்ஸ் கடைகளும் வரிசையாக நின்றன. அதில் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்துப் புறப்பட்டோம். அது எத்தனை கி.மீ தூரத்தில் இருக்கிறது; சாலையில் உள்ள டிராஃபிக் நிலைமைக்கு ஏற்ப எவ்வளவு நேரம் ஆகும் என்பது வரை காட்டியது அந்தத் திரை. சாலையில் செல்லும்போது திரும்ப வேண்டிய சாலைக்கு முன்பாக 500 மீட்டர் இருக்கும்போதே குரல் ஒலி மூலம் திரும்ப வேண்டிய சாலையை சொல்ல ஆரம்பித்தது. அதில் திரும்பாமல் நேராகச் சென்றதும், அடுத்த சாலையில் திரும்பி அந்த இடத்துக்கு செல்லும் வழியை திரையில் காட்டியது.

ஒன் வே சாலையை கச்சிதமாக சுட்டிக் காட்டி, எவ்வளவு தூரம் சுற்றி வர வேண்டும் என்பதையும் காட்டியது. பெங்களூரு நகரத்தின் போக்குவரத்து இடர்பாடுகளை நினைத்தாலே தலை சுற்றும். ஆனால், இதில் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல், குறிப்பிட்ட வழிதான் என்றில்லாமல் வேறு வேறு பாதைகளில் புகுந்து புறப்பட... நேவிகேஷன், செல்ல வேண்டிய இடத்தின் சாலைகளை அத்துடன் இணைத்துக்கொண்டே வந்தது ஆச்சரியம் தான்.

சரி, என்ன விலை, எங்கு கிடைக்கும்? அதுதான் கிடையாது. இது கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சப்ளை செய்யும் ஒரிஜினல் ஃபிட்மென்ட் (ஓஇ). இது வெளி மார்க்கெட்டில் கிடைக்காது. இந்த சாதனம் வேண்டும் என்றால்? அடுத்து வர இருக்கும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார்களிலும், ஓராண்டுக்குப் பின்னர் நிஸான் கார்களிலும் இந்த சாதனம் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. எனவே, இந்த சாதனம்தான் வேண்டும் என்றால், இந்த கார்களைத்தான் நீங்கள் வாங்க வேண்டும்!

- கா.பாலமுருகன்>> ந.வசந்தகுமார்