Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

Published:Updated:
ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500
 ##~##

''என் குடும்பம், கோவையில் பெயின்ட் நிறுவனம் நடத்தி வருகிறது. எங்களிடம் ஏற்கெனவே மாருதி 800, செவர்லே ஸ்பார்க் போன்ற சின்ன கார்களும், மஹிந்திரா பொலேரோ ஜீப்பும் உள்ளன. தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியது இருந்ததால், கொஞ்சம் பெரிய கார் வாங்கலாம் எனத் திட்டமிட்டோம். பட்ஜெட் 18 லட்சம். எந்த கார் என்ற பொறுப்பை வீட்டில் என்னிடம் ஒப்படைத்து விட்டார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன கார்?

எங்கள் தேவை, பெரும்பாலும் வெளியூர் பயணங்கள் என்பதால், கொஞ்சம் வசதியான காராகவும், குடும்பத்தோடு பயணம் செய்வதற்கு ஏற்ற காராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நிஸான் சன்னி காரின் நீளம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதில் ஐந்து பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால் தவிர்த்து விட்டேன். ரெனோ டஸ்ட்டரின் தோற்றம் என்னைக் கவர்ந்தது. அதனால், அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். என் தேவைக்குச் சாதகமான பல அம்சங்கள் இதில் இருந்தாலும், இதிலும் ஐந்து பேருக்கு மேல் பயணிக்க முடியாது என்பதும், இன்ஜின் சக்தி எனக்குப் போதுமானதாக இல்லாததும் உறுத்தலாக இருந்தது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், சாலையில் அதை அதிகமாகக் காண்பதால் எனக்கு, அதன் மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால், எந்த கார் என முடிவெடுப்பதில் குழப்பம் நீடித்தது.

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

ஏன் இந்த கார்?

அப்போது, எனது நண்பரின் சித்தப்பா மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் வாங்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஒருமுறை பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம் எனப் புறப்பட்டேன். சாதாரணமாக ஒரு காரைப் பார்ப்பதற்கும், இதை வாங்கலாமா - வேண்டாமா எனப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை அந்தத் தருணத்தில் உணர்ந்தேன். முதல் பார்வையிலேயே என் மனதை மயக்கியது எக்ஸ்யூவி 500. காரின் இன்டீரியரில் இருந்த சிறப்பம்சங்கள், உடனடியாக இதுதான் நம் கார் என முடிவெடுக்க வைத்து விட்டது.

ஷோ ரூம் அனுபவம்

அடுத்த நாளே பணத்துடன் கோவை ஹோப் கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ மஹிந்திரா ஷோ ரூமுக்குச் சென்றேன். சேல்ஸ்மேனிடம் நான் கேட்ட முதல் கேள்வியே, 'அட்வான்ஸ் புக்கிங் எவ்வளவு கட்டணும்?’ என்பதுதான். அவர், 'காரை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டீர்களா?’ என்று கேட்டார். இல்லை என்றதும், 'டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு அதன் பின்பு பணம் கட்டுங்கள்’ என்றார்.

நான் நினைத்ததை விட மிகச் சிறப்பாக இருந்தது எக்ஸ்யூவி 500. உடனே 50,000 ரூபாய் செலுத்தி 'மூன் டஸ்ட் சில்வர் கலர்’ பதிவு செய்து விட்டேன். கார் டெலிவரியாக அதிகபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும் என்றார்கள். அங்கு தலையாட்டிவிட்டு வந்த என்னால், சும்மா இருக்க முடியவில்லை. அடிக்கடி ஷோ ரூமுக்கு போன் செய்து, 'எப்போது கார் வரும், சீக்கிரம் கிடைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கா?’ என விசாரித்துக் கொண்டேதான் இருந்தேன். ஏனெனில், காரை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு வந்த பிறகு, வேறு எந்த காரில் ஏறினாலும் எக்ஸ்யூவி 500 காரில் மிதப்பது போன்ற பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அந்த அளவுக்கு என்னை மிகவும் பாதித்துவிட்டது இந்த கார். என்னுடைய அதிர்ஷ்டம் - நாற்பது நாட்களிலேயே, 'கார் வந்துவிட்டது; டெலிவரி எடுத்துக் கொள்ளுங்கள்’ என தகவல் சொன்னதும் பறந்துபோய் காரை டெலிவரி எடுத்து விட்டேன்.  

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

ஃபர்ஸ்ட் டிரைவ்

குதிரையின் கடிவாளத்தை என் கையில் கொடுத்ததுபோல, அவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருந்தது எக்ஸ்யூவி 500 காரின்  ஓட்டுதல் அனுபவம். இதுவரை பெங்களூரு, ஊட்டி என பல ஊர்களைச் சுற்றிவிட்டு வந்துவிட்டது இந்தக் குதிரை.

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

ஓட்டுதல் அனுபவம்

வாங்கிய நாளில் இருந்து இன்றுவரை 'என் முடிவு ரொம்ப ரொம்பச் சரி’ என்று எக்ஸ்யூவி 500 நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறது. எனக்கு ஏற்கெனவே இனோவா, பொலேரோ என எஸ்யூவி வகை வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருப்பதால், இந்த காரை ஓட்டும்போது எந்தவித பய உணர்வுகளும் இல்லை. டிரைவிங் கம்ஃபர்ட், இனோவைவிட சிறப்பாக இருக்கிறது. கையாளுமையைப் பொறுத்தவரை, ஒரு சாதாரண சின்ன காரை ஓட்டுகிற அளவுக்கு சௌகரியமாக இருக்கிறது. இந்த காரின் முக்கியமான ப்ளஸ் இதுதான் என்பேன். அதனால்தான் கல்லூரிக்கு மட்டும் இல்லாமல், வீட்டில் சொல்லும் சின்னச் சின்ன வேலைகளுக்குக்கூட இந்த காரைதான் எடுத்துக் கொண்டு செல்கிறேன். இந்த காரில் இதுவரை நீண்ட தூரப் பயணம் சென்றது, கோவையில் இருந்து பெங்களூரு சென்றதுதான். இந்த தூரத்தை நான்கு மணி நேரத்தில் கடந்தேன்.

உள்ளே!

எக்ஸ்யூவி 500 காரில் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி சிஸ்டம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இருக்கைக்கும் தனித் தனியாக ஏ.சி வென்ட் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு நான் பயன்படுத்திய கார்களைவிட மிகச் சிறப்பாக இருக்கிறது ஏ.சி.

இந்த காரில் எனக்கு மிக மிகப் பிடித்தமான விஷயம் எது என்று கேட்டால், தயக்கமே இல்லாமல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்தான் என்று சொல்வேன். காரணம், 3டி ஒளியில் ஜொலிக்கும் மீட்டர்கள் பிரமிக்க வைக்கின்றன. அதேபோல், காரில் எந்த இடத்தில் வசதி அதிகம் என்று கேட்டால், அது கடைசி இருக்கைகள்தான் என்று சொல்வேன். ஏனென்றால், மற்ற எஸ்யூவி கார்களில் இருப்பதுபோல காலை மடக்கி, அடக்கி உட்கார வேண்டிய அவசியம் இதில் இல்லை. காரின் பின் பக்கம் எகிறிக் குதிப்பதும் இல்லை. அதனால், கடைசி இருக்கைகளில் உட்காருபவர்களின் சுகமான பயணத்துக்கு நான் கேரன்ட்டி என்று சொல்லிவிட்டுத்தான் காரை எடுப்பேன்.

டேஷ் போர்டில் லேப் டாப், குடை, மொபைல், முக்கியமான பேப்பர்கள், டோல்கேட் பாஸ் என

ரீடர்ஸ் ரிவியூ - மஹிந்திரா எக்ஸ்யூவி - 500

இவற்றையெல்லாம் வைக்க தனித் தனி இடம் கொடுத்திருப்பது மிகவும் வசதியாக இருக்கிறது. அடுத்ததாக முக்கியமாகச் சொல்ல வேண்டியது இதன் லைட்டிங்தான். கதவு திறக்கும்போது ஒரு லைட், கீழே ஏதாவது கிடக்கிறதா எனப் பார்க்க ஒரு லைட், ஒவ்வொரு சீட்டுக்குக் கீழேயும் லைட் என அமர்க்களப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. அதேபோல், ஹெட் லைட்ஸில் உள்ள மூன்று தனித் தனி அமைப்பும் மலைப் பாதையில் ஓட்டுவதற்கு ஏற்ப மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அருமையை மலையேறும் போதுதான் தெரிந்துகொண்டேன்.

இன்ஜின்

2.2 டீசல் இன்ஜின் கொண்ட இந்த காரின் பவர் 148bhp. அதனால், பெர்ஃபாமென்ஸ் பற்றிச் சொல்லத் தேவையில்லை. எந்த நேரத்திலும் நம்பி ஓவர்டேக் எடுக்கலாம். ஆனால், கொஞ்சம் கவனம் தவறினால்கூட முன்னே செல்லும் வாகனத்தை இடித்துவிடும். பிக்-அப் அந்த அளவுக்குப் பிரமாதம். மஹிந்திராவின் ஸ்பெஷல் மைக்ரோ ஹை-பிரிட் இன்ஜின் 10 விநாடிகள் நின்றால், ஆஃப் ஆகி எரிபொருளைச் சேமிக்கிறது. கிளட்ச்சை மிதித்த உடனே மறுபடியும் உறும ஆரம்பிக்கும் வேகம் அபாரம்! என் ஓட்டுதல் முறைக்கு நகருக்குள் லிட்டருக்கு 11.2 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 14 கி.மீ-யும் மைலேஜ் கிடைக்கிறது.

பிடிக்காதது...

முழுக்க முழுக்கப் பிடித்துப்போய் இந்த காரை வாங்கியதால், என் காரில் என்ன குறை என்று சொல்லத் தெரியவில்லை. இவ்வளவு பெரிய காருக்கு ஏற்ற சஸ்பென்ஷன் சிஸ்டம் இதில் இல்லை. அதேபோல், கியர் மாற்றுவதற்கு கொஞ்சம் ரஃப்பாக இருக்கிறது. மேலும் 7 சீட்டர் என்பதால் டிக்கியில் லக்கேஜ் வைக்க இடம் குறைவு. அதேபோல், ஹாரன் சத்தமும் காருக்கு ஏற்ற கம்பீரத்துடன் இல்லை!

தொகுப்பு:  ரா.வசந்த்