Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

Published:Updated:
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்
 ##~##

'புதுசா ரிலீஸ் ஆகுற கார்லதான் கிரேட் எஸ்கேப் போவீங்களா? வாசகர்கள் கார்ல கிரேட் எஸ்கேப் வரமாட்டீங்களா?'' என ஹலோ விகடனில் (044-66802926) செல்லமாகக் கடிந்திருந்தார் மும்பையில் இருந்து திருப்பூரில் செட்டில் ஆன கேதார் அப்டே. 'அதுக்கென்ன... போகலாமே!’ என்று நாம் அவரைத் தேடி திருப்பூர் சென்றபோது, புத்தம் புது ரெனோ டஸ்ட்டரை, பயணத்துக்குத் தயாராக்கி வைத்திருந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பூரில் பிரபலமான டை அண்டு கெமிக்கல்ஸின் நிறுவனர், மும்பையில் தயாராகும் 'ஆட்டோ பேட்’ எனும் கார் - பைக் பேட்டரியின் டீலர் என பிசினஸில் பன்முகம் கொண்ட கேதாருக்கு, கார்களின் மீதும் - த்ரில்லிங்கான பயணங்களின் மீதும் கொள்ளை ஆசை!

''டஸ்ட்டருக்கு அறிமுகம் தேவையில்லை. எனவே, சொகுசான, த்ரில்லிங்கான, மறக்க முடியாத ஆஃப் ரோடு பயணத்துக்கு நான் கேரன்ட்டி!'' என்று 110 தீலீஜீ கொண்ட டீசல் இன்ஜின் டஸ்ட்டரின் சாவியை நம் கையில் கொடுத்தார் கேதார்.

திருப்பூரில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி, ஆழியாறு அணை, அட்டக்கட்டி, காடம்பாறை, வால்பாறை என மலைப் பகுதிகள் வழியாக, கேரள எல்லையை ஒட்டி இருக்கும் சோலையார் அணையை அடைவது எனத் திட்டமிட்டு இருந்தார் கேதார். மலைப் பயணங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களான பிரபு, ரமேஷ் என்று கேதாரின் நண்பர்களும் உடன் தயாராய் இருந்தனர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

நமது புகைப்படக் கலைஞரையும் சேர்த்து, 5 சீட்டர் டஸ்ட்டரில் இடம் சரியாக இருந்தது.  ரெனோ வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையாகப் புலம்பும் ஒரே விஷயம், ''டஸ்ட்டரில் 7 சீட்டர் இல்லாததுதான் மிகப் பெரிய மைனஸ்!'' - என்பதுதான். ஆனால், 7 சீட்டர் வசதி இருந்தால், 475 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி காணாமல் போயிருக்கும் என்கிறார் கேதார்.

இந்தியாவின் எடை குறைந்த லைட்டஸ்ட் எஸ்யூவியான டஸ்ட்டரை ஸ்டார்ட் செய்ததும், சிறுத்தையின் உறுமலுடன் புறப்பட ஆரம்பித்தது.

1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் கொண்ட டஸ்ட்டரில், ஆரம்ப வேகத்தில்... அதாவது 1500 ஆர்பிஎம் வரை கொஞ்சம் டர்போ லேக்-கைச் சமாளிக்கச் சிரமமாகத்தான் இருந்தது. 2000 ஆர்பிஎம்-ஐத் தாண்டி விட்டால் நாம்தான் சாலைகளின் ராஜா! விருட்டென்று 12 விநாடிகளில் ஆறாவது கியரில் 100 கி.மீ வேகத்தைத் தாண்டி இருந்தோம். பல்லடம் அருகே உள்ள தாசநாயக்கன் பாளையத்தில் டீசல் நிரப்பினோம்.

டஸ்ட்டரில் ஒரு மிக மிகப் பெரிய ப்ளஸ் - அதன் மைலேஜ்தான். கேதார், தனது டஸ்ட்டர் 17 கி.மீ மைலேஜ் தருவதாகச் சொன்னார். அதனால், நாம் திரும்பி வரும்வரை ஃபுல் டேங்க் டீசல் அவசியமில்லை என்றும் உறுதியளித்தார். அவர் சொன்னது போலவே, லிட்டருக்கு 17.5 கி.மீ மைலேஜ் தந்தது ஆச்சரியம்தான்! நாம் திருப்பூரில் இருந்து கேரளாவின் 'மளுக்குப் பாறை’ என்ற மலைப் பகுதி வரை கிட்டத்தட்ட 400 கி.மீ சென்று வந்ததற்கான டீசல் செலவு மொத்தம் 1,250 ரூபாய்தான்!

பொள்ளாச்சியில் மதிய உணவு அருந்தி விட்டு, அடுத்தபடியாக டஸ்ட்டர் நின்ற இடம் 'ஆழியாறு அணை’. ஆனைமலை அடிவாரத்தில் ஜம்மென்று பரந்து வீற்றிருக்கும் ஆழியாறு அணை, 1959-ல் கட்டப்பட்டது. 2002-ல் முதன் முதலாக ஆழியாறு அணையில் இருந்து ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் மூலமாக மின்சாரமும் தயாரித்து வருகிறார்கள். வனத் துறை அதிகாரிகளான கணேஷ் ராம், ஒயிட் சரவணன் ஆகியோரிடம் சிறப்பு அனுமதி பெற்று, டஸ்ட்டரை அணையின் மேலே கொண்டு சென்று, படம் எடுத்துவிட்டுத் திரும்பினோம்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

இந்த அணையின் ஆழம் கிட்டத்தட்ட 120 அடி என்கிறார்கள். குழந்தைகள் விளையாட பார்க், அக்வாரியம், தோட்டம், குரங்குகளின் சேட்டைகள் என்று எந்த நேரமும் ஆழியாறு அணை களை கட்டுகிறது. வழியில் குரங்குகளின் தொல்லைகளைச் சமாளிப்பதற்காக தின்பண்டங்களை வாங்கிவிட்டு, பயணத்தை ஆரம்பித்தோம்.

ஆழியாரில் இருந்து, குரங்கு அருவியைத் தாண்டி ஆரம்பிக்கிறது கொண்டை ஊசிகள் கொண்ட மலைப் பயணம். மொத்தம் 40 கொண்டை ஊசிகள் உடைய மலையில் ஏற ஆரம்பித்தது டஸ்ட்டர். ஏற்கெனவே டஸ்ட்டரில் டர்போ லேக் அதிகம். அதுவும் மலைப் பாதைகளில் சொல்லவே வேண்டாம்! காரின் வேகத்தைக் குறைத்து, 2000 ஆர்பிஎம்-முக்குக் கீழே இறங்கி விட்டால், பம்மிப் பம்மித்தான் நகர்கிறது டஸ்ட்டர். கியர்கள் நெருக்கமாக இருப்பதால், அடிக்கடி மாற்றுவதற்குக் கொஞ்சம் சுலபமாக இருப்பது ஆறுதலான விஷயம். மலை ஏறும்போது, இரண்டாவது கியரைத் தாண்ட முடியவில்லை என்பது நிஜம். ஆனால், ஹேர்பின் பெண்டுகளில் டஸ்ட்டரின் எலெக்ட்ரோ ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங், துவண்டு போன நம்மை உற்சாகப்படுத்தியது.

நாம் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 15-வது கொண்டை ஊசி வளைவின் போது, குரங்குகள் நம்மையும், நம் காரையும் சூழ்ந்து கொண்டு அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்து விட்டன. ஒரு வழியாக தின்பண்டங்களை இறைத்து குரங்குகளைச் சமாளித்து, நாம் எஸ்கேப் ஆகி கொஞ்சம் மேலேறி வால்பாறையை அடைந்தபோது... இருள் சூழ்ந்துவிட்டது.

வால்பாறை மலைப் பயணத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அனைத்துமே ஒற்றையடிப் பாதைகள்தான்! நாம் கொஞ்சம் கவனக்குறைவாய் பாதை மாறினால், வேறு மாநிலத்தில்தான் கார் லேண்ட் ஆகும். 'யு’ டர்ன் அடிக்கக்கூட போதுமான இட வசதி இல்லை. எனவே, மலைப் பாதைகளில் கார் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.

நாம் வால்பாறையை நோக்கிப் போன போது, பாதை மாறியதால் திகில் பயணமாய் அமைந்து விட்டிருந்தது. மேலும், இருளில் யானைகளின் தரிசனமும் கிடைத்தது. இருட்டில் புகைப்படங்கள் எடுத்தால், ஃப்ளாஷ் வெளிச்சத்தில் யானைகள் மிரளக் கூடும் என்று நமது கைடு ரமேஷ் எச்சரித்து இருந்ததால், புகைப்படங்களைத் தவிர்த்தோம். அந்த நேரம் யானைகளைப் பற்றி சில ஆச்சரியத் தகவல்களையும் சொன்னார் ரமேஷ்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

''பொதுவா, யானைங்களைப் பார்த்து பயப்படணும்னு அவசியம் இல்லீங்க! அதுங்களும் நம்மளைப் பார்த்து மிரளாது! நாம் எந்தத் தொந்தரவும் அதுங்களைப் பண்ணாம இருந்தோம்னா, நம்ம உசுருக்கு உத்தரவாதமுங்க! யார் வேணும்னாலும், அதை க்ராஸ் பண்ணிக்கூடப் போலாமுங்க! நாம் தொந்தரவு செஞ்சாலும்... யானை எடுத்த எடுப்பிலேயே நம்மளை அட்டாக் பண்ணிடாதுங்க! 'ப்ப்ஸ்ஸ்ஸ்’னு காது ரெண்டையும் விரிச்சு, ஒரு சவுண்டு விட்டு, 'தம்பி, நீ உன் வழியைப் பார்த்துப் போ... நான் என் வழியில போறேன்’ங்கற மாதிரி எச்சரிக்கும்! அதையும் மீறி நாம டிஸ்டர்ப் பண்ணிப் போட்டம்னாதான், பிரச்னை!'' என்றார்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

அதனால், மலைப் பயணங்களில் கூடுமானவரை ஹார்ன் அடிப்பது, ஹெட் லைட்டை ஆஃப் செய்து ஆன் செய்வது, ஆக்ஸிலரேட்டரை 'டர்புர்’ என மிதிப்பது என்று அனைத்தையும் தவிர்த்துவிடுதல் நலம்!

உடன் வந்த கேதாரின் நண்பர் ரமேஷ், ''வால்பாறையில் சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகமுங்க!'' என்று சொல்லி முடிப்பதற்குள், சிறுத்தை ஒன்று நம்முடைய டஸ்ட்டரை லாங் ஜம்ப்பில் கிராஸ் செய்தது, கொஞ்சம் 'டெர்ரர்’ ஆன அனுபவம்!

வால்பாறையில் தங்க வேண்டுமென்றால், நான்கைந்து நாட்களுக்கு முன்பே புக் செய்துவிட வேண்டும். ஏனென்றால், வால்பாறையில் இருப்பது மொத்தமே பத்துப் பதினைந்து காட்டேஜ்கள்தான்!

காலையில், டஸ்ட்டர் இருந்த இடம் தெரியாமல், அதன் மேல் அவ்வளவு பனிமூட்டம். வைப்பரின் உதவியுடன் பனியை விலக்கிவிட்டு, பூஞ்சோலை என்னும் கிராமத்தை வந்தடைந்தோம். வால்பாறையிலிருந்து சோலையார் அணைக்கு 24 கி.மீ.தான்! ஆனால், மலைப் பகுதியில் கொஞ்சம் ஆஃப் ரோடு பயணம் என்பதால், இது கிட்டத்தட்ட 150 கி.மீ.க்குச் சமம்! 24 கி.மீட்டரைக் கடக்க மூன்று மணி நேரம் ஆனது.

டஸ்ட்டரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மிமீ என்பதால், மேடு பள்ளங்களை அசால்ட்டாகச் சமாளித்தது. டஸ்ட்டரின் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கேதார் சொன்னபடியே, சொகுசான ஆஃப் ரோடு பயணத்தைச் சாத்தியமாக்கியது ரெனோ டஸ்ட்டர்.

ஆனால், டஸ்ட்டரில் ரிவர்ஸ் கியரில் இருந்து, இண்டிகேட்டர், ஹெட் லைட், வைப்பர் சுவிட்சுகள் என்று அனைத்துமே மற்ற கார்களிலிருந்து வேறுபட்டு, தலைகீழாக இருக்கிறது. ஆடியோ கன்ட்ரோல்களும், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டியும் கூட ஸ்டீயரிங் வீலுக்குப் பின் பக்கம் வைத்திருக்கிறார்கள். ரிவர்ஸ் எடுக்கும்போது, கியர் லீவரை மேலே இழுத்து, இடதுபுறத்தில் மேல் பக்கமாகத் தள்ளி மாற்ற வேண்டும். ரிவர்ஸ் சென்ஸாரும் டஸ்ட்டரில் உண்டு என்பதால் ரிவர்ஸ் எடுக்கும்போது பதறத் தேவையில்லை.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

டஸ்ட்டரில், டேஷ் போர்டு பிளாஸ்டிக்குகள் ரொம்பவும் சுமாராகத்தான் இருக்கின்றன. சுற்றுலா செல்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், டஸ்ட்டரில் சுற்றுலா சென்றால், பாட்டில்களைக் கையிலேயே வைத்துக் கொண்டுதான் பயணிக்க வேண்டும். போனால் போகட்டும் என்று ஒரு லிட்டர் பாட்டில் மட்டும் வைக்க, கப் ஹோல்டர் வசதி இருக்கிறது. டோர் பாக்கெட்டுகளிலும் வாட்டர் பாட்டில்களை வைக்க போதுமான இடம் இல்லை.

இரண்டாவது கியரிலேயே சென்று ஒரு வழியாக சோலையார் அணையை அடைந்தபோது, பகல் காணாமல் போயிருந்தது. இது மூணாறுக்குப் பிறகு, ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள் அதிகம் உலவும் இடம்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

அட்டைகளைப் பற்றிய திகில் கதை ஒன்றை சொன்னார் ரமேஷ். ''சுற்றுலாவாசி ஒருவர், மலைகளில் வழியும் நீர் சுத்தமாக இருக்கிறது என்று கைகளால் அள்ளிக் குடித்திருக்கிறார். அந்த நேரம் தண்ணீரில் உள்ள அட்டைப் பூச்சி ஒன்று, அவர் மூக்கு வழியாக உள்ளே செல்ல, எதுவுமே தெரியாமல் இருந்திருக்கிறார். நாள்  போகப் போக, மூக்கிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்து, கேன்சரோ என்று பயந்து, மூக்கில் ஆபரேஷன் செய்திருக்கிறார் அவர். அட்டை, மூக்கிலிருந்து காது வழியே பயணித்து அங்கேயும் தன் வேலையைக் காட்ட, இறுதியில் காதிலிருந்து ரத்தம் வழிய, அங்கேயும் ஆபரேஷன்! ஒரு வழியாய் அவர் உயிர் பிழைத்ததே அதிசயம்!'' என்றார் ரமேஷ்.

கடைசியில், நிஜமாகவே நமது புகைப்பட நிபுணருக்கும் காலிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பிக்க, வேறென்ன... அட்டையார்கள்தான்! கிராம மக்கள் சிகரெட் நெருப்பு கொண்டு அட்டைகளை வெளியேற்றினர். நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் தெரிந்தது - நமது டஸ்ட்டருக்கு உள்ளேயே அட்டைகள் உலவ ஆரம்பித்திருந்தன. ஒருவழியாய் காரிலிருந்து அட்டைகளை வெளியேற்றி, காரை முழுவதுமாய் செக் செய்துவிட்டு, பூஞ்சோலை கிராமத்திலிருந்து தண்ணீர் போகிற போக்கிலேயே 6 கி.மீ. பயணம் செய்து சோலையார் அணையைத் தொட்டிருந்தோம்.

வழக்கமான அணைகள் போல், சோலையார் அணையிலும் தண்ணீர் வரவே இல்லை. கதவு திறக்கப்படாமல்,  பிரம்மாண்டமாகவும், வறட்சியாகவும் இருந்தது சோலையார் அணை நுழைவு வாயில்! கிட்டத்தட்ட 160 அடி ஆழம் கொண்ட சோலையார் அணைக்கு ஒரு பெருமை உண்டு. ஆசியாவில் இரண்டாவது ஆழமான அணை இது. கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 1800 அடி உயரத்தில் இருந்தாலும், மலைகளிலிருந்து வழிந்து இயற்கையாகவே தண்ணீர் நிரம்பிய அணை இது. எனவே, இங்கு முதலைகள் எக்கச்சக்கமாக உலவுகிறதாம்! அணையில் தண்ணீர் வரவில்லை என்றாலும், ஏரியின் பிரம்மாண்டம் வாயடைக்க வைத்துவிடுகிறது. இங்கிருந்து கேரளாவின் சாலக்குடி 55 கி.மீ.தான்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

சோலையார் அணையில் இருந்து இரண்டு கி.மீ சென்றால், கேரள வனப் பாதுகாப்புத் துறையினரின் செக் போஸ்ட் வந்து விடுகிறது. இங்குதான் இயற்கையான முறையில் எடுக்கப்படும் தேன் கிடைக்கிறது. தீவிர வாகனப் பரிசோதனைக்குப் பிறகே நமக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது.

மாலைச் சூரியன், கேரளம், காடு அனைத்தும் கொள்ளை அழகு! இதில் டஸ்ட்டரும் சேர்ந்து கொள்ள... அழகோ அழகு! சூரியன் மலைகளில் இறங்கி மறைந்தபோது, நாமும் மலைகளில் இறங்க ஆரம்பித்து இருந்தோம்.

கேதார் நம்மைச் சந்தித்தபோது, முதன் முதலாகச் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்துபோயின. ''த்ரில்லிங்கான, மறக்க முடியாத பயணத்துக்கு நான் கேரன்ட்டி!''